Thursday, February 25, 2016

நலமே சென்று வருக!

'தோபியாவின் பயணத்தைப் பாதுகாத்த, சாராவின் பேயை ஓட்டிய, தோபித்து பார்வை பெற உதவிய அந்த இளம் வழிப்போக்கன் யார்?' என்ற கேள்விக்கான விடையாக இருக்கிறது தோபித்து நூல் பிரிவு 12.

1. எவ்வளவு சம்பளம்?

நூல் முழுவதும் தோபித்து நீதியானவராகக் காட்டப்படுகிறார். நீதி என்பது 'அவரவருக்கு உரியதை அவரவருக்கு கொடுப்பது.' உதாரணத்திற்கு, என் அலுவலகத்தில் அல்லது வீட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு, அவரின் திறமை மற்றும் அவர் செலவழித்த ஆற்றல், நேரத்திற்கு ஏற்ப அவருக்கான கூலியை நான் கொடுக்க வேண்டும். குறைவான கூலி கொடுத்துவிட்டு, அதிகமாக வேலை வாங்குகிறேன் என்றால், அவருக்குரியதை நான் அவருக்கு கொடுக்கவில்லை என்றே அர்த்தம்.

இரபேல் வெறும் வழித்துணையாக மட்டும் இல்லாமல், தோபியாவின் திருமணம் நடைபெறவும், தோபித்து பார்வை பெறவும் காரணமாக இருந்திருக்கிறார்.

அவருக்குரியது அவர் கொண்டு வந்ததில் பாதி. அதாவது, ஐந்து தாலந்து (காண். 4:20).

2. நான் யார்?

'கடவுளின் தூதருக்கே இந்த மனிதர்கூட்டம் சம்பளம் பேசுகிறதே!' என மனதிற்குள் சிரித்திருப்பார் இரபேல். தோபித்தையும், தோபியாவைம் தனியே அழைத்து தான் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அன்னா மற்றும் சாரா இந்தக் காட்சிக்குள் வரவில்லை. 'பெண்கள் இறைவனின் வெளிப்பாட்டை ஏற்கத் தகுதியில்லாதவர்கள்' என்பது இந்த நூல் எழுதப்பட்டபோது இருந்த '(மூட)நம்பிக்கை.' (ஆனால், சிம்சோனின் பிறப்பு பற்றிய அறிவிப்பு மனோவாகுவின் மனைவிக்குதான் அருளப்படுகிறது - நீத 13:3) ஆகையால், அன்னாவையும், சாராவையும் ஓரங்கட்டிவிடுகின்றார் ஆசிரியர்.

இரபேலின் வெளிப்பாடை இரண்டு பகுதிகாளப் பிரிக்கலாம்:

அ. அறிவுரைப் பகுதி
'நான்தான் தூதர்' என முதலில் சொல்லாமல், அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறார் இரபேல். அவர் சொல்லும் அறிவுரைகள் நான்கு:

- கடவுளைப் போற்றிப் புகழுங்கள். அவரின் பெயரை அறிக்கையிடுங்கள்
- நல்லது செய்யுங்கள். தீமை உங்களை அணுகாது
- செல்வத்தைவிட செபம் மேலானது
- நீதியைவிட தர்மம் மேலானது

ஆ. வெளிப்பாட்டுப் பகுதி

தொடர்ந்து தன் இயல்பு மற்றும் குணத்தை நான்கு வாக்கியங்களில் வெளிப்படுத்துகின்றார் இரபேல்:

- நான் வேண்டுதல்களை கடவுளிடம் எடுத்துச் செல்பவர்
- மனிதர்களைச் சோதிப்பவர்
- நலம் அருள்பவர்
- கடவுளின் திருமுன் நிற்கும் ஏழு வானதூதர்களில் ஒருவர்

(யூதர்கள் ஏழு அதிதூதர்கள் இருப்பதாக நம்பினர். மற்ற ஆறு பேரின் பெயர்கள்: 'கபிரியேல், மிக்கேல், உரியேல், இரகுவேல், ரமியேல், சரியேல்.' இந்த ஏழுபேரின் பெயர்களும் 'முதலாம் ஏனோக்கு' என்ற நூலில் வழங்கப்பட்டுள்ளன)

('தூபம் போல் என் செபம் உன் திருமுன் எழுவதாக' - திபா 141:2 என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார். வேளாங்கண்ணி மாதாவின் ஃபோட்டோக்களில் தூபத்தோடு வானதூதர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். தூபம் இங்கே செபங்களைக் குறிக்கின்றது. இரபேல் தூதரும் செபங்களை தூபமாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்)

3. 'நீங்கள் கண்டதெல்லாம் காட்சியே'

'நான் உண்டதுகூட காட்சியே!' என்கிறார் இரபேல். காணுகின்ற எல்லாவற்றையும் 'காட்சிப்பிழை' என்று பாரதியாரும், 'கண்ணாடியில் காண்பது போல மங்கலாகக் காண்கிறோம்' என்று பவுலடியாரும் சொல்கின்றனர். வாழ்வின் எதார்த்தங்கள் நம் உடல்கண்களுக்கு புலப்படுபவை அல்ல. அல்லது உடல்கண்களுக்கு புலப்படுபவை மட்டுமே எதார்த்தங்கள் அல்ல. நாம் காணமுடியாத உணர்வுகளும், எதார்த்தங்களுமே நம் வாழ்விற்கு அதிக அர்த்தங்கள் தருகின்றன.

4. 'இரபேலைக் காணமுடியவில்லை'

ஆம். இரபேல் மறைந்துவிட்டார். இனி தோபித்தும், தோபியாவும் ஒருவர் மற்றவரில் அந்த தூதரைக் காணவேண்டும். நாம் பிறந்தபோது ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு காவல்தூதரை தந்து நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகிறார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இந்த தூதர்கள் சில நேரங்களில் காணக்கூடிய நம் உறவுகளாகவும் இருக்கின்றார்கள்.

5. 'நலமே சென்று வருக!'

தோபியா இரபேலைப் பார்த்துச் சொல்லும் இந்த வாக்கியத்திற்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம்: (அ) பத்திரமாய் போய் வருக! (ஆ) இரபேல் என்னும் நலமே, சென்று வருக! - இரபேல் என்றால் நலம் என்றுதானே அர்த்தம்.


2 comments:

  1. பல உள்ளங்களின்,உணர்ச்சிகளின் கலவையாக அமைந்துள்ளது இந்த தோபித்து ஆகம்ம்.தோபியாவின் பயணத்துக்கு வழித்துணையாக,சாராவை மணமுடிக்க உதவி செய்த தோழனாக, வரவேண்டிய பணத்தை வசூல் செய்ய உதவிய ஆபத்பாந்தவனாக, தோபித்து தன் பார்வையைத் திரும்பப் பெற ஒரு காரணியாக இருந்த நம் இளவலுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டிய நேரம்.என்ன வென்று சம்பளம்? எதற்கென்று சம்பளம்? பல நேரங்களில் நமக்குக் கீழ் உள்ளவர்கள் நமக்கு செய்யும் சேவையை இப்படித்தான் குறைத்து மதிப்பிடுகிறோம்; சில பல ரூபாய் நோட்டுக்களில் அவர்களின் அத்தனை உழைப்பையும் ஒளித்து விடுகிறோம்.அவர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்ட வந்த ரபேல்களாக்க் கூட இருக்கலாம்.உணர வேண்டிய நேரமிது. ரபேல் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து வைக்கும் பொழுது, தான் நலம் தருபவர் எனவும்,நம் வேண்டுதல்களைக் கடவுளிடம் எடுத்துச் செல்பவர் எனவும் சொல்கிறார்.இப்படி நம் ஒவ்வொருவர் அருகிலும் நாம் கண்ணால் காண முடியாத வான தூதர் ஒருவர் துணைக்கு வருகிறார் எனில் அது நமக்கு எத்தனை பலம் தருவதான விஷயம்? இந்த தூதர்கள் நம்மைக்கண்டு வெட்கும்படியான காரியங்களை நாம் செய்யக்கூடாது என்பதை உணர்ந்தால் நாமும் கூட நம்மைச் சுற்றி நிற்கும் உயிர்களுக்கு,உறவுகளுக்கு ஒரு வான தூதராக இருக்கலாமே! நல்ல தொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி ...

      Delete