Friday, February 26, 2016

தோபித்து நூல் இறையியல்

தோபித்து நூல் 13ஆம் பிரிவில் ஒரு பெரிய இடைநில் பாடலை வாசிக்கின்றோம். இந்த இடைநில்பாடல் பிற்காலத்தில் எழுதப்பட்டு, இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சொல்வதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன:

அ. தோபித்து நூல் 12:22ஐ வாசித்துவிட்டு, அப்படியே ஒரு ஜம்ப் பண்ணி 14:2க்குப் போனால் கதை எந்தவொரு இடைவெளியும் இன்றி தொடர்கிறது.

ஆ. தோபித்து நூலின் உரைநடைப் பகுதியில் அதிகமாக முன்வைக்கப்பட்ட 'தர்மம்,' 'நீதி,' மற்றும் 'உண்மை' என்ற வார்த்தைகள் இந்தப் பாடலில் பயன்படுத்தப்படவே இல்லை.

இ. உரைநடைப் பகுதியில் மேலோங்கி நின்ற குடும்பம், நோய், திருமணம், கடன், உதவி, வானதூதர், வழிப்போக்கர் பற்றிய எந்த குறிப்பும் இந்த பாடலில் இல்லை. மாறாக, இந்தப் பாடலில் சொல்லப்பட்டவை இரண்டு கருத்துருக்கள்: (1) கடவுளின் இயல்பு, (2) மக்களின் நாடுகடத்தல், (3) எருசலேமின் மீட்பும், மறுஉருவும்.

விவிலியத்தின் எந்தவொரு பகுதியை வாசித்தாலும் நாம் மூன்று கேள்விகளைப் பின்புலத்தில் கொண்டு வாசிக்க வேண்டும்:

1. கடவுளைப் பற்றி என்ன சொல்கின்றது?
2. மனிதர்களைப் பற்றி என்ன சொல்கின்றது?
3. உலகத்தைப் பற்றி என்ன சொல்கிறது?

1. கடவுள்பற்றிய தோபித்து நூலின் புரிதல்

அ. கடவுள் இரக்கமுள்ளவர் (13:2). தான் தள்ளிவிட்ட மக்களையும் அரவணைத்துக்கொள்ளக் கூடியவர்.
ஆ. கடவுள் நீதியுள்ளவர் (13:7). மக்களின் செயல்களுக்கேற்ற தண்டனையை அவர்களுக்கு வழங்குபவர்.
இ. கடவுள் அரசர் (13:17). அனைத்தின்மேலும் அதிகாரம் கொண்டவர்.
ஈ. கடவுள் தந்தை (13:4). எல்லா உயிர்களும் அவரின் குழந்தைகள்.

2. மனிதர்கள் யார்?

அ. நெறிகெட்ட செயல்களைச் செய்யக்கூடியவர்கள் (13:5)
ஆ. கடவுளைப் புகழ்பவர்கள் (13:8)

3. உலகம் எப்படி இருக்கிறது?

அசீரியப் படையெடுப்பைப் பின்புலமாக கதை கொண்டிருந்தாலும், இந்த நூல் எழுதப்பட்ட நேரம் பாபிலோனிய படையெடுப்பு நிகழ்ந்திருந்தது. இந்தப் படையெடுப்பால் தரைமட்டமான ஆண்டவரின் நகர் எருசலேமும், அதன் இதயமான ஆலயமும் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், பல நாடுகளுக்கு அடிமைகளாக, குடியேற்றதாரர்களால் சிதறடிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூட்டுப்படுவர் என்ற நம்பிக்கையின் செய்தியைத் தருகிறது தோபித்து நூல்.

இறையியல் பிரச்சினைகள்

அ. நம்பிக்கையா? செயல்களா?

ஒருவர் மீட்படைவது நம்பிக்கையினாலா அல்லது செயல்களினாலா? இந்தக் கேள்விதான் கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து, சீர்திருத்த சபையினர் பிரிந்து செல்லக் காரணமாக இருந்தது. தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் 'நம்பிக்கையினால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகின்றார்,' என்றும், தூய யாக்கோபு தன் மடலில், 'செயல்கள் இல்லாத நம்பிக்கை இறந்துபோனது' என்றும் சொல்கின்றனர். இரு வேறுபட்ட கருத்துக்கள் விவிலியத்திலேயே இருப்பதால் நம்மால் ஒருங்கிணைந்த புரிதலுக்கு வருவது இயலாது. தோபித்து நூல் செயல்களினால்தான் ஒருவர் மீட்படைய முடியும் என்று சொல்கிறது. அதாவது, தர்மச் செயல்கள், நீதியான வாழ்வு, நடத்தையில் உண்மை இந்த மூன்றும் இருந்தால் ஒருவர் மீட்பு பெற முடியும். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த மூன்றும் இருந்தால் போதும். கடவுளின்மேல் நம்பிக்கை கொண்டிராதவர்களும் இந்த மூன்று செயல்களை மட்டும் செய்தால் அவர்கள் மீட்பு பெற்றுவிடுவார்களா?

ஆ. கேரட்டும், குச்சியும்

ஆங்கிலத்தில் 'the carrot and stick approach' என்ற ஒரு சொலவடை உண்டு. நல்லது செய்தால் கேரட். கெட்டது செய்தால் குச்சி. 'கண்ணுக்குக் கண்,' 'பல்லுக்குப் பல்,' 'காசுக்கு தோசை,' 'பாவத்திற்கு மரணம்' - ஆக, நாம் நல்லது செய்தால் கடவுள் நம்மை பரிசுகளால் நிரப்புவார். கெட்டது செய்தால் நம்மைத் தண்டிப்பார். இந்த வகை இறையியலில் மனிதர்கள் கடவுளை கைப்பொம்மையாக்கிவிட முடியும். அதாவது, தங்கள் செயல்களால் கடவுளை சிரிக்க வைக்கவும், கோபப்பட வைக்கவும் முடியும். நம் இயல்பிற்கேற்ப அவரின் இயல்பும் மாறுகிறது என்றால், அவரை 'மாறாத தெய்வம்' என நாம் எப்படி அழைக்க முடியும்?

இ. பொய்யும் உண்மையே

'உண்மையாயிரு!' என வசனத்திற்கு, வசனம் தோபித்து நூல் சொன்னாலும், இங்கே பொய் சொல்லும் ஒருவரையும் நாம் பார்க்கின்றோம். அவர்தான் இரபேல் வானதூதர். கடவுளின் திருமுன் பணி செய்யும் வானதூதரே பொய் சொல்லலாமா? இரபேல் இரண்டு முறை பொய் சொல்கின்றார்:

(1) 'நீ யார்? உன் குடும்ப பின்புலம் என்ன?' என்று தோபித்து கேட்டபோது, என் பெயர் அசரியேல், என் இனம் இஸ்ரயேல் இனம், என் குலமுதுவர் வழி அனனியா என்கிறார் இரபேல் (காண். 5:5, 13). வாசகர்களுக்குத் தெரியும் இது ஒரு பச்சைப் பொய் என்று.

(2) 'நீங்கள் யார்?' என்று இரகுவேலின் வீட்டில் எதினா கேட்டபோது, தோபித்துடன் தன்னையும் இணைத்துக்கொண்டு, 'நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள் நாங்கள்' (7:3) என்கிறார் இரபேல்.

இரண்டு பொய்கள் சொன்னாலும், இறுதியில் தோபித்துக்கும், தோபியாவுக்கும் தான் யார் என்று வெளிப்படுத்துகின்றார் (காண். 12:15).

இரபேலின் பொய்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

பின் வரும் காரணங்களுக்காக இவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர் விவிலிய ஆசிரியர்கள்:

அ. 'இரபேல்' என்பவர் ஒரு கதை மாந்தர். கதைமாந்தரையும் உண்மையான மாந்தரையும் ஒப்பிடுவது தவறு. 'இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே...' என்று திரைப்படத்தின் தொடக்கத்தில் போடுவதுபோல, நாமும் இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் எழுதிக்கொள்ள வேண்டும்.

ஆ. இரபேலின் வார்த்தைகள் வெளிப்புறத்தில் பொய் எனத் தோன்றினாலும், உள்ளார்ந்த அர்த்தத்ததில் உண்மையாகவே இருக்கின்றன. 'அசரியேல்' என்றார் 'கடவுளே உதவி' என்று பொருள். இரபேல் இங்கே செய்வதும் 'உதவிதானே.' 'அனனியா' என்றால் 'யாவே இரக்கமுள்ளவர்' என்று பொருள்.இரபேல் இங்கே கடவுளின் இரக்கத்தைக் காட்டத்தானே வருகின்றார். மக்கள் நாடுகடத்தப்படுகிறார்கள் என்றால் அங்கே கடவுளும் அவர்களுடன் செல்கிறார். ஆக, இரபேலும் நப்தலிக்கு நாடுகடத்தப்பட்டவர் என்று சொல்வது உண்மையே.

இ. 'ஏமாற்றுதல்' என்னும் இலக்கியக்கூறு. 'தன் பக்தர்களை சோதிக்க கடவுள் அவர்களை ஏமாற்றும் உருவில் வருதல்' என்பது பல சமய இலக்கியங்களில் உள்ள ஒரு கூறு. சிவபெருமானின் திருவிளையாடல்களில்கூட இதை நாம் பார்க்கின்றோம். இங்கே இரபேல் உதவி செய்வதற்காக வந்தாலும், தோபித்து குடும்பத்தில் துலங்கிய உண்மையையும், நீதியையும் சோதிக்க வருகின்றார்.

என்னதான் காரணம் சொன்னாலும், பேசுபவரின் நோக்கத்தையும், இடத்தையும் பொறுத்து பொய்யும் உண்மையாகலாமா? என்பது கேள்விக்குறியே.


1 comment:

  1. அழகானதொரு நதியாய் ஓடிக்கொண்டிருந்த தோபித்து ஆகமம் அதன் நதி மூலம் பார்க்க ஆரம்பித்து விட்டது. நமது வாழ்வின் ஆதாரமாக நம்மைத்தாங்கி நிற்கும் விஷயங்கள் மட்டுமே போதும் என்று எடுத்துக்கொண்டால் " ஒருவர் மீட்படைவது நம்பிக்கையினாலா அல்லது செயல்களினாலா" எனும் கேள்வி நம்மை சிந்திக்க வைக்கிறது." செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்" எனக் கூறுகிறது விவிலியம்.ஆனால் 'கிறிஸ்து, மீட்பு ...' என்றது போன்ற வார்த்தைகளைக் கேட்டறியாத பிற மதத்தினர் கண்டிப்பாக "தர்மச்செயல்கள்,நீதியான வாழ்வு, நடத்தையில் உண்மை" போன்றவற்றைக் கடைபிடித்தால் அவர்கள் மீட்படைய மாட்டார்கள் எனச் சொல்லுவதற்கு நாம் யார்? கிறிஸ்துவைப்பற்றித் தெரிந்து கொள்ளாதது அவர்கள் குற்றம் அல்லவே! அடுத்து தேவையான விஷயங்களுக்குப் பொய் சொல்லலாமா? " Anything is right if the end justifies the means" .. என்ற கட்சியைச் சேர்ந்தவள் நான். பலபேர் பலவிதமாகச் சிந்தித்திடினும் 'பேசுபவரின் நோக்கத்தையும்,இடத்தையும் பொறுத்துப் பொய்யும் உண்மையாகலாமா?' ....தந்தையின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே படுகிறது.சிந்திக்கத்தூண்டும் விஷயங்களைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete