Thursday, February 11, 2016

கதைச்சுருக்கம்

'இது தோபித்தின் கதை' என்று தொடங்கும் இந்த நூல் தோபித்து மற்றும் அவரது மகன் தோபியாவைப் பற்றியது. 'தோபி' (Tov-i) என்றால் எபிரேயத்தில் 'நான் நல்லவன்' என்றும், 'தோபியா' (Tov-ya) என்றால் 'ஆண்டவர் நல்லவர்' என்பதும் பொருள்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேல், சாலமோன் அரசனின் ஆட்சிக்குப் பின், வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என இரண்டாகப் பிரிகிறது. கி.மு. 722ஆம் ஆண்டில், இரண்டாம் சார்கனின் மகனாகிய சென்னாகெரிப்பின் தலைமையில் இஸ்ரயேலை முற்றுகையிடும் அசீரியர்கள், வெற்றி கொண்டு இஸ்ரயேல்வாழ் மக்களை அசீரியாவின் தலைமையிடமான நினிவே நகருக்கு நாடுகடத்திச் செல்கின்றனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையே இந்நூல்.

நாடுகடத்தப்பட்ட சூழலிலும், இறைவன் நன்மையற்றவர், கைவிட்டுவிட்டார் என கலங்கி நிற்கும் நேரத்திலும், இறைவனின் நன்மைத்தனத்தை மக்கள் எண்ணிப்பார்த்து வாழ்வதற்காக எழுதப்பட்ட பாடம் இது. ஒரு கதை அல்லது நாவல்லா போல இதை எழுதக் காரணம், மனிதர்களுக்கு இயல்பாகவே கதைமேலும், கதைமாந்தர் மேலும் இருக்கும் நாட்டமே.

பக்தி, பெற்றோருக்கு கீழ்ப்படிதல், தர்மம் செய்தல், செபித்தல், திருமணத்தின் தூய்மை, சட்டங்களைக் கடைப்பிடித்தல் என ஒவ்வொன்றையும் பற்றி கட்டுரை எழுதி அல்லது போதித்து போரடிக்காமல், மிக அழகாக இவை எல்லாவற்றையும் ஒரு கதையாகச் சொல்லிவிடுகின்றார் இதன் ஆசிரியர்.

நூலில் மொத்தம் 15 பிரிவுகள். 1:3-3:6 வரை உள்ள பகுதி, தோபித்தே தன்வரலாறு கூறுவதாகவும், தொடர்ந்து வருபவை, மூன்றாமவர் பதிவுசெய்வதுபோலவும் கொடுக்கப்பட்டுள்ளது.

தோபித்து-அன்னா குடும்பம் நினிவேயில் வாழ்ந்து வருகிறது. இவர்களுக்கு ஒரே மகன் தோபியா.

இந்த நூல் எழுதப்பட்ட காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம். இது முதலில் அரமேயத்தில் எழுதப்பட்டு, அரமேயம் நமக்கு கிடைக்கப்பெறாமல் இதன் கிரேக்க மொழிபெயர்ப்பே நம்மிடம் உள்ளது.

கதைச்சுருக்கம்

தோபித்து ஒரு நேர்மையாளர். நாடுகடத்தப்பட்டு அந்நிய நாட்டில் இருந்தால், தன் யூத சட்டதிட்டங்களுக்கும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்பவர். மற்ற தெய்வங்களை மனதாலும் நாடாதவர். நிறைய செல்வங்களைக் கொண்டிருந்தவர். இறந்தவர்களை அடக்கம் செய்வது, இரந்தோருக்கு தர்மம் செய்வது என இவரின் வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. ஒரு வெப்பமான இரவில், இறந்த ஒருவரை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பி, தன் வீட்டுத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருக்க, குருவிகளின் எச்சம் கண்களில் விழ, கண்பார்வை இழக்கின்றார். வெறுமையின், தவிப்பின் வெளிப்பாடாய், 'நான் சாவதே மேல்' என கடவுளிடம் செபிக்கிறார். அதே நாளில் மேதியா நாட்டு எக்பத்தானா நகரில் உள்ள சாராவும், தோபித்தின் உறவுக்காரரின் மகள், ஏழுமுறை திருமணம் நடைபெற்று அண்டை அயலாரின் கேலிப்பேச்சுக்கு ஆளானதாலும், ஒவ்வொரு முறை திருமணம் நடைபெற்ற முதல் இரவில் தன் கணவனைத் தழுவும்வேளையில் அசுமதேயு என்ற அலகை அவர்களைக் கொன்றுவிட, மனவிரக்தியில் இறைவனை நோக்கி மன்றாடுகிறாள்.

தோபித்துக்கு கண் பார்வை கிடைக்குமா? சாராவுக்கு திருமணம் நடக்குமா? - இந்த இரண்டும்தான் இந்த இடத்தில் நமக்கு வருகின்ற கேள்விகள். இந்த கேள்விக்கு விடைகொடுக்க வானிலிருந்து இறங்கி வருகின்றார் ரபேல் என்னும் தேவதூதர்.

தான் இறக்கும் தருவாயில் இருப்பதாக உணர்கின்ற தோபித்து, தன்னிடம் கடன்பெற்றிந்த தன் தூரத்து உறவினர் இரகுவேலிடம் பணத்தை பெற்று வருமாறு மேதியா நாட்டுக்கு தன் ஒரே மகன் தோபியாவை அனுப்புகிறார். இந்த பயணத்தில் யார் உடன் செல்வார் என தோபியாவின் தாய் அன்னா கலங்கி நிற்க, அங்கே வருகின்றார் இரபேல். வந்திருப்பவர் வானதூதர் என்று தெரியாமலேயே உடன் நடக்கிறார் தோபியா. போகின்ற வழியில் தோபியா தன் பாதங்களைக் கழுவ திக்ரீசு ஆற்றில் இறங்குகிறார். அவரின் பாதங்களை மீன் ஒன்று கவ்விக்கொள்கிறது. அந்த மீனைக் கொல்லுமாறு இரபேல் கட்டளையிட, அதைக் கொன்று, அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து 'மருந்துப்பொருட்களாக பயன்படும்' என எடுத்துவைத்துக்கொள்கின்றார் தோபியா. மேதியாவில் இரபேல் சொன்னவாறு சாராவை மணம் முடிக்கிறார். மீனின் இதயமும், ஈரலும் அந்த இரவில் சுட்டெரிக்கப்பட அலகை அழிகின்றான். திருமணம் நடந்தேறுகிறது. சாராவுடன் தன் வீடு திரும்பும் தோபியா, மீனின் பித்தப்பையை வைத்து தன் தந்தையின் பார்வையை திரும்பச் செய்கின்றார். இரபேல் தான் யார் என அவர்களுக்கு வெளிப்படுத்த டக்கென மறைந்துபோகின்றார்.

தோபித்தின் புகழ்ப்பாடலோடு நிறைவுபெறுகிறது நூல்.

புலம்பல் பாடலோடு தொடங்கும் நூல் புகழ்ப்பாடலோடு முடிகிறது - இதுதான் நூலின் ஒற்றை வாக்கியம்.

2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.தோபித்தின் கதைச்சுருக்கத்திற்கு நன்றி.தோபித்தை பற்றி உங்களின் கருத்துக்கணிப்பு மிக மிக அருமை.

    இன்பம் / துன்பம்

    பகல் / இரவு

    வெயில் / குளிர்

    இனிப்பு / கசப்பு

    பள்ளம் / மேடு

    நல்லது / கெட்டது

    பிறப்பு / இறப்பு - இதனைத் தொடர்ந்து நீங்கள் உங்களின் பதிவில் குறிப்பிட்டு இருக்கும்

    புலம்பல் / புகழ்

    இது எல்லாமே நாம் வாழும் வாழ்க்கையில் சகஜம்.

    இவைகள் எல்லாம் வாழ்வில் தொடர்ந்து வந்தாலும் இறைவனின் மக்களை இறைவன் மலர் பதித்த பாதையில் வழிநடத்துவார்.

    அதையே நாம் இங்கு பார்க்கிறோம்.கடவுள் தேவதூதரை அனுப்பி அவர் பிள்ளைகளை கண்ணின்மணி போல் பாதுகாக்கிறார்.

    ஆக, கடவுளின் பாதுகாப்பில் நம் முழு நம்பிக்கை வைப்போம்.அப்போது நாம் எப்படி புலம்பினாலும் கண்டிப்பாக கடவுள் நம் புலம்பலை சந்தோசம் அடையும் அளவுக்கு புகழ் அடைய செய்வார் என்பதில் தெளிவு கொள்வோம். தந்தைக்கு நன்றியும், பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. அழகானதொரு நாவல் படித்த உணர்வு.சில நாட்களுக்குமுன் தந்தை சில நாட்கள் எடுத்துக் கூறுகளாகச் சொன்னதொரு கதையை இன்று அதன் சாரம் சற்றும் குறையாமல் ஒரே மூச்சில் சொல்லியுள்ளார்.இந்தக் கதையைக் கூர்ந்து கவனித்தால் சம்பவங்களின் சங்கம்மாகவும்,உணர்ச்சிகளின் கலவையாகவும்,மேல் உள்ளதைக் கீழாகவும்,கீழ் உள்ளதை மேலாகவும் மாற்றிப்போடும் ஒரு சக்கரம் போலவும் உள்ளதுதான் வாழ்க்கை என உணரமுடிகிறது. ஒரு குருவியின் எச்சத்தால் பார்வையை இழந்து விரக்தியின் உச்சத்தில் உள்ள நேர்மையாளர் தோபித்தாகட்டும், அவரது இறை பக்தி மிகுந்த மனைவி அன்னாவாகட்டும்,பல கணவர்களை மணந்து யாரையும் தீண்ட முடியாது நிற்கும் சாராவாகட்டும்,கொடுத்த கடனை வாங்கிவரத் தந்தையால் அனுப்பப்படும் மகன் தோபியாவாகட்டும்,அவருக்குத் துணையாகச் செல்லும் இளவல் இரஃபேலாகட்டும்....இவர்கள் அத்தனை பேரிலும் நாம் பார்ப்பது ' இறை வேண்டலும்' 'இறைவனின் உடனிருப்புமே' தந்தை தோபித்தைக்குறித்து கூறும் வரிகள்..." இறந்தவர்களை அடக்கம் செய்வதும்,தன்னிடம் இரந்து வருபவர்களுக்கு தர்மம் செய்வதுமே அவரின் வேலை." தவக்காலத்தில் நுழைந்துள்ள நமக்கு சவாலாக அமைகிறது. முதல் நாளே நல்லதொரு " தோபித்தின் கதையை" அசத்தலாக்க் கூறியுள்ள தந்தைக்கு வாழ்த்துக்கள்.! இன்னும் எதிர்பார்க்கிறோம்!! நன்றிகள்!!!

    ReplyDelete