Wednesday, February 24, 2016

என் கண்ணின் ஒளியே

தோபியா நினிவே திரும்புவதையும், தோபித்துக்குப் பார்வை திரும்புவதையும் நமக்குச் சொல்கிறது தோபித்து நூல் பிரிவு 11.

அல்லது தோபியா நினிவே திரும்பியதால், தோபித்துக்கு பார்வை திரும்பியது என்றும்,

அல்லது தோபித்தின் கண்களின் ஒளியான தோபியா தன் இல்லம் திரும்பியது என்றும் சொல்லலாம்.

1. 'வீட்டை ஒழுங்குபடுத்துவோம்!'

இரகுவேல்-எதினா கண்ணீர் மல்க, தன் மகளையும்-மருமகனையும் வழியனுப்புகின்றனர். இரபேலும், அவர்களோடு சென்ற நாய்க்குட்டியும் உடன் சென்றது என்று குறிப்பிடுவதன் வழியாக, கொண்டு சென்றதில் எதுவும் குறைவுபடவில்லை என்கிறார் ஆசிரியர். இரபேல் தூதர் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியும், அடுத்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியுமே எண்ணிக்கொண்டிருக்கிறார். சாரா தோபியாவின் இல்லத்திற்குள் நுழையும் போது, அவரின் தந்தை பார்வையற்றவராக இருந்தால் மனம் வருந்துவார் எனவும், மேலும் தோபித்து பார்வை அற்று இருந்ததாலும், அன்னா நகரத்தின் வாயிலிலேயே காத்துக்கிடந்ததாலும், வீடு ஒழுங்கற்று இருக்கும் என எண்ணுகின்ற இரபேல், 'வீட்டை ஒழுங்குபடுத்துவோம்!' என தோபித்தை மட்டும் கூட்டிக்கொண்டு விரைகிறார். சாரா அன்னநடை போட்டு மெதுவாக வருகின்றார்.

நம் வாழ்விலும் 'வீட்டை ஒழுங்குபடுத்துதல்' அவசியம். நாம் இருக்கும் வீடு, பணிசெய்யும் அறை, என வெளிப்புற வீடு மட்டும் இல்லாமல், நம் மனம் என்னும் வீட்டையும் அடிக்கடி ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையானதை தக்கவைத்துக்கொண்டு, தேவையற்றதை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்றுக் கிடப்பதை முறைப்படுத்த வேண்டும்.

2. 'மகன் வருகிறான். உடன் சென்றவரும் வருகிறார்!'

தன் மகன் வருவதை தூரத்திலேயே பார்த்துவிடும் அன்னா ஓடிச்சென்று தன் கணவனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மீண்டும் தன் மகனை நோக்கி ஓடிச்சென்று, ஆரத்தழுவிக்கொள்கின்றார். 'மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்!' என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார்.

3. 'முற்றத்தில் மீண்டும்'

தோபித்து தட்டுத்தடுமாறி முற்றத்திற்கு வருகின்றார். எங்கே அவருக்கு பார்வை பறிபோனதோ, அங்கேயே அவருக்கு பார்வை கிடைக்க இறைவன் திருவுளம் கொள்கிறார். இரபேல் சொன்னதுபோல, மீனின் பித்தப்பையை தோபியா தன் தந்தையின் கண்களில் வைக்கிறார். 'கண்களின் ஓரத்திலிருந்த படலைத்தை அப்படியே,' கேடராக்ட் அறுவைச்சிகிச்சை செய்வது போல உரித்தெடுக்கிறார். தோபித்தின் கண்கள் முதலில் பார்த்தது தோபியாவைத்தான். 'என் மகனே! என் கண்ணின் ஒளியே! உன்னைப் பார்த்துவிட்டேன்!' என்று பூரிப்படைகின்றார். தொடர்ந்து கடவுளைப் போற்றுகின்றார். அவரின் புகழ்ப்பாடலில் 'வானதூதர்' என்ற பெயரை இரண்டுமுறை குறிப்பிடுகின்றார்.

4. 'வெற்றித்திருமகள்'

பயணம் வெற்றியானது, பணம் திரும்ப கிடைத்தது என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து தான் இரகுவேலின் மகள் சாராவை மணம் முடித்ததையும் தன் தந்தையிடம் சொல்கிறார் தோபியா.

5. 'மணமகளே! மருமகளே வா!'

தோபித்து கண்பார்வை பெற்றவராக, யாருடைய துணையுமின்றி நடப்பதைக் காண்கின்ற மக்கள் வியந்தபோது, அவர்களிடம் கடவுளின் இரக்கத்திற்குச் சான்ற பகர்கின்றார். 'உன் வீட்டிற்குள் வா!' என்று தன் வீட்டை, தன் மருமகளின் வீடாக்குகின்றார். 'நலம், பேறு, மகிழ்ச்சி!' - இம்மூன்றும் உன்னோடு வரட்டும் என்று வரவேற்கின்றார்.

'இந்த நாள் இனிய நாள்'

சாராவுக்கு திருமணம் நடந்துவிட்டது.
தோபித்துக்கு பார்வை கிடைத்துவிட்டது.
'சுபம்' என்று நூல் இங்கே முடிந்தாலும், இன்னும் வாசகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி மனத்தில் இருக்கிறது: 'யார் இந்த வழிப்போக்கன்?'


1 comment:

  1. அழகான பதிவுகளின் தொகுப்பிற்கு அழகான தொரு முடிவு." இனியதை மட்டுமே எண்ணுபவர்களுக்கு எல்லாமே இனிமையாகத்தான் முடியும்" என்பதற்கு தோபித்து நூல் ஒரு எடுத்துக்காட்டு.தொடக்கத்தில் நீதிமான்களான தோபித்துக்கும் ,அன்னாவுக்கும் எத்தனையோ இடர்பாடுகள் வரினும் அத்தனையுமே இறைவனின் நாம்ம் இவர்களின் வழியாக மாட்சிமை பெறுவதற்காகவே நடைபெற்றது போல் தோன்றுகிறது.ரஜினியின் வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் " இறைவன் நல்லவர்களை சோதிக்கிறார்; ஆனால் கைவிடுவதில்லை." இன்றைப்பதிவில் மங்கலச் சொற்களின் கூட்டணியைப் பார்க்க முடிகிறது. " என் கண்ணின் ஒளியே உன்னைப்பார்த்து விட்டேன்" என மகனை ஆரத்தழுவும் தந்தையும்,"மகனே ! உன்னைப் பார்த்து விட்டேன்.இனி நான் இறக்கலாம்" என ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் தாயும் , தங்களின் வீட்டை மருமகளின் வீடாக விட்டுக்கொடுக்கும் இந்த மூவரும் இறைவனின் இரக்கத்திற்கும், அன்புக்கும் சாட்சி பகர்கின்றனர்.அனேகமாக தந்தை 'இந்த வழிப்போக்கனை'நாளய பதிவுக்கு விட்டு வைத்துள்ளார் என நினைக்கிறேன். எப்படி இருப்பினும் தோபித்து தன் மறுமகளைப் பார்த்துக் கூறும் " நலம்,பேறு, மகிழ்ச்சி" இம்மூன்றும் நமது இல்லங்களுக்குள்ளும் வரட்டும்.அருமையானதொரு வைபவத்தை மங்கலகரமாக நடத்தி முடித்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete