Friday, February 5, 2016

என்ன வரம்?

நேற்று இரவு தூங்கச் செல்லுமுன் மூன்று படங்களின் இறுதிக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்:

அ. பூம்புகார்
ஆ. ஒளவையார்
இ. கந்தன் கருணை

(ஒளவையாரின் சுட்ட பழம்-சுடாத பழம் கதை தெரியுமா?

அதன் இறுதியில் அழகிய இந்தப் பாடல் வரும்:

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்

அதாவது, பெரிய மரத்தை வெட்டும்போது வளையாத கோடரி, மெல்லிய வாழைத்தண்டை வெட்டியபோது வளைந்தது. மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் நான் தோற்றேன். இரண்டு இரவுகள் என் கண்கள் துயில் கொள்ளாது!)

பூம்புகாரின் கண்ணகிதான் இன்னும் என் கண்முன் நிற்கின்றாள். தன் கணவன் வஞ்சகமாய் அல்லது தவறுதலாய் கொல்லப்பட்டான் என்று கொதித்தெழுந்த கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் முறையிடுகிறாள். அவளின் முறையீட்டில் ஒரு இடத்தில், 'ஞானமாக செயல்பட வேண்டிய நீர் அறிவோடு கூட செயல்படவில்லையே!' என்பாள்.

ஆக, ஞானம் வேறு. அறிவு வேறு.

நாளைய முதல் வாசகத்தில் (1 அரச 3:4-13) கடவுள் சாலமோனிடம், 'என்ன வரம் வேண்டும்? கேள்!' என்கிறார்.

'என்ன வரம் வேண்டும்?' என்ற கேள்விக்கு பல இலக்கியங்களில் கண்ணீரும், செந்நீரும்தான் மிஞ்சியிருக்கிறது.

கைகேயி கேட்ட வரத்தால் ராமன் காடு செல்கிறார்.

திரௌபதி கேட்ட வரத்தால் கர்ணன் போரில் அழிகிறார்.

சலோமி கேட்ட வரத்தால் திருமுழுக்கு யோவான் கொல்லப்படுகின்றார்.

ஆனால், புத்திசாலி இளவல் சாலமோன் ஞானம் கேட்கிறார்.

'நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை.
உன் எதிரிகளின் சாவையும் விரும்பவில்லை.
நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்...' என ஆண்டவரும் உள்ளம் குளிர்கிறார்.

சாலமோனின் ஞானத்திற்கு உதாரணமாக இரண்டு நிகழ்வுகளை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம்: (அ) தன் முன் வைக்கப்பட்ட பூச்செடிகளில் எது உண்மையானது எனக் கண்டறிகின்றார், (ஆ) ஒரே குழந்தைக்கு இரண்டு பெண்கள் போட்டியிட்டபோது யார் உண்மையான தாய் என்பதைக் கண்டறிகின்றார்.

வாழ்த்துக்கள் சாலமோன்!

ஆக, உண்மையைக் கண்டறிவதுதான் ஞானம்.

'ஞானம் கடவுளின் கொடை' என்றும், 'கடவுளே ஞானத்தின் ஊற்று!' என்றும் எல்லா நேரமும் சொல்கிறது முதல் ஏற்பாடு.

ஏனெனில் அறிவின் ஊற்று ஏதேன் தோட்டத்து பாம்பு.

ஏவாளிடம் பேசுகிற பாம்பு என்ன சொல்கிறது?

'...நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்...நீங்கள் நன்மை-தீமை அறியும் அறிவு பெறுவீர்கள்!'

ஆக, அறிவு என்பது நன்மை-தீமையை அறிவது, ஞானம் என்பது உண்மையை அறிவது.

இன்று அறிவுக்கு நமக்கு நிறைய வாய்க்கால்கள் இருக்கின்றன. அறிவு ஆக்ச்சுவலா கொட்டி கிடக்கிறது. இதுவா, அதுவா என நாம்தான் கண்டடைய முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்று நாம் கைகளில் வைத்திருக்கும் அதிவேக இணையதள சேவைகள் நம்முன் அறிவை அள்ளிவந்து கொட்டுகின்றன.

ஆனால், நாம் தான் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றோம். எல்லா வாக்கியங்களும் புரிந்தாலும், கதை புரியவில்லையே என்று நாம் கலங்கி நிற்கும் ஒரு காம்ப்ளிகேடட் நாவல் போல ஆகிவிட்டது வாழ்க்கை.

இந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஓடி மூச்சிரைக்கும் நாமும் ஒரு கட்டத்தில் பிலாத்துபோல, 'உண்மையா! அது என்ன?' என வியக்கிறோம்.

இன்று நம் கல்வி, கேள்வியும் கூட நம் அறிவைத்தான் அளவிடுகின்றனவே தவிர யாரும் ஞானத்தைக் கண்டுகொள்வதாக இல்லை.

எல்லாம் இருந்து ஞானம் இல்லையென்றால் என்ன பயன்?

எதுவுமே இல்லாமல் இருந்து ஞானம் மட்டும் இருந்தால் என்ன இழப்பு?

2 comments:

  1. 'விவேகத்திற்கான' விளக்கத்தின் மறு பிரதியோ எனச் சொல்லுமளவுக்கு இருக்கிறது இன்றையப்பதிவு.பள்ளி நாட்களிலேயே சாலமோனின் ஞானத்தை ' இயற்கைப்பூ- செயற்கைப்பூ மற்றும் பிள்ளையைப் பெற்ற தாய்- பிள்ளைக்குச் சொந்தம் கொண்டாடும் பொய்யான தாய் .....இவை குறித்த நாடகங்களின் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் தந்தை இன்று ஞானத்திற்கும்,அறிவிற்குமுள்ள மயிரிழை வித்தியாசத்தைக் காட்டி ஞானம் என்பது 'கடவுளின் கொடை' என்கிறார். தாங்கள் கேட்ட வரத்தால் தங்களையே அழித்துக்கொண்ட கைகேயி,திரௌபதி,சலோமி...இவர்களுக்கு மத்தியில் நீடிய ஆயுளையோ,செல்வத்தையோ,எதிரிகளின் அழிவையோ கேட்காமல் நீதி வழங்கத்தேவையான 'ஞானத்தை'மட்டுமே கேட்கும் சாலோமோனைக்கண்டு உள்ளம் குளிரும் விண்ணகத்தந்தை தங்களை அறிவுஜீவிகளாக்க் காட்டிக்கொள்ளும் நம்மில் பலருடைய காம்ப்ளிக்கேட்டட் நாவல் போன்ற வாழ்க்கை கண்டு கண்கலங்குகிறார்.அறிவுக்கும்,ஞானத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் " ஞானம் இல்லாத எல்லாம்" மற்றும் "எதுவுமே இல்லாத ஞானம்".... எதற்காக எதை இழக்கலாம் என்ற கேள்வியை நம்முள் எழவிட்டு அறிவோடு செயல்படாமல் போயினும் ஞானத்தோடு செயல்பட முயலுங்கள்" என்று கூறும் ' கண்ணகிகளாக்க' நம்மைத் தட்டி எழுப்பும் தந்தை பாராட்டுதற்குரியவரே என்பதில் ஐயமில்லை. 'ஞானத்தின் தேவையறிந்து வந்த சிறந்த பதிவு'....பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,very beautiful message.Congrats.May God inspire you more and more.

    ReplyDelete