Tuesday, February 9, 2016

துறவுநிலை

நம் இந்திய மண் துறவுநிலையை போற்றும் மண். துறவு நிலையை அடைய முடியாதவர்கள் கூட சாமிக்கு மாலை போடும் அந்த 40 நாட்கள் சாமியாகிவிடுகிறார்கள். சபரிமலையோ, பழனியோ, திருப்பரங்குன்றமோ, ஐயப்பனோ, முருகனோ, எல்லாரும் மாலையணிந்து பகுதிநேர துறவியாகிவிடுகிறார்கள். ஒட்டி ஒட்டித் தூங்கும் மனைவியும் இந்த 40 நாட்கள் எட்டி நிற்கிறாள். காலுக்கு மிதியடி இல்லை. காலையில் உணவு இல்லை. இறைச்சி இல்லை. மது இல்லை. புகையிலை இல்லை. 'டேய், ராஜா! அந்த ஃபைலை எடுத்துட்டுவா!' என்று சொல்லும் அவனின் மேலதிகாரிகூட, இந்த நாற்பது நாட்கள், 'ராஜா சாமி அந்த ஃபைலை எடுத்துட்டு வாங்க!' என்கிறார்.

துறவுநிலையை நம் வாழ்வின் ஒரு பகுதியாக நாம் அனுபவித்துப் பார்க்க எல்லா மதங்களும் இடம் கொடுக்கின்றன. சைவ மரபில் மாலை அணிவது, இசுலாம் மரபில் ரமலான் நோன்பு, கிறிஸ்தவ மரபில் தவக்காலம்.

நாளை தவக்காலத்தை தொடங்குகிறோம்.

தவக்காலமும், சாமிக்கு மாலைபோடுவதும் ஒன்று என்று நான் சொல்ல வரவில்லை.

தவக்காலம் நமக்கு சொல்வது என்ன?

1. நம் கடவுள் இரண்டாம் வாய்ப்புக்களின் கடவுள். முதல் ஏற்பாட்டில் யாக்கோபு, இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் ஏற்பாட்டில் சக்கேயு, ஊதாரி மகன் என நமக்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. 'ஐயோ, என் வாழ்க்கை முழுவதும் வீணாயிற்றே!' என்று இறப்பின் தருணத்திலும் இருந்த கள்வனுக்கும் இரண்டாம் வாய்ப்பு தரப்படுகிறது. ஆக, இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும், எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இறைவனை நெருங்கி வரலாம். அவர் நம் சிலேட்டைத் துடைக்கக் காத்திருக்கிறார்.

2. இது அன்பின் காலம். 'இதைச் செய்ய மாட்டேன். அதைச் செய்ய மாட்டேன்' என முடிவெடுக்கும் காலம் மட்டுமல்ல இது. 'இதைச் செய்வேன். அதைச் செய்வேன்.' என உறுதிசெய்யும் காலமும் இது. 'அடுத்தவரிடம் சண்டையிட மாட்டேன், கோபப்பட மாட்டேன்' என்று நினைப்பதுபோல, 'புதிய நபர்களை சந்தித்து பேசுவேன், புதிய நண்பர்களை சேர்த்துக்கொள்வேன், பழைய நட்பை புதுப்பிப்பேன், அடுத்தவரை தேடிச்செல்வேன்' என நேர்முகமாகவும் யோசிக்க வேண்டிய காலம் இது.

3. இல்லாமை. பீடத்தில் இந்த நாட்களில் பூ வைப்பதில்லை. பீடம் வெறுமையாக இருக்கும். இயேசுவின் இறப்பை பற்றியே சிந்தனைகள் இருக்கும். எதற்காக? நாம் வாழ்வதே இறப்பதற்குப் பழகத்தான் என்பது என் நம்பிக்கை. நல்ல இறப்பு என்பது நல்ல சிற்பம் போல. ஒரே நாளில் சிற்பம் உருவாகிவிடுவதில்லை. பல அனுபவங்களால் நம்மை நாமே பக்குவப்படுத்தி இறக்கத் தயாராகிறோம். ஆனால். இறப்பு என்னும் சுரங்கப்பாதையின் முடிவில் உயிர்ப்பு என்னும் வெளிச்சம் இருக்கிறது என்பது தவக்காலத்தின் முடிவில் நாம் கொண்டாடும் உயிர்ப்பு விழா தரும் நம்பிக்கை.

4. கடவுளே மகிழ்ச்சி. இந்த நாட்களில் சில பெண்கள் பொட்டணவதில்லை. பூ அணிவதில்லை. சிலர் செருப்புகள் அணிவதில்லை. சிலர் முகச்சவரம் செய்வதில்லை. இவை எல்லாம் வெறும் அடையாளங்களே. ஆனால் அடையாளத்தையும் தாண்டி உட்பொருளை நாம் உணரவேண்டும். எனக்கு இன்பம் தருபவை இவைகளாக இருந்தாலும், மகிழ்ச்சி தருபவர் இறைவனே என உணர்கின்ற காலம் இக்காலம். நம் இறைவன் நாம் இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என நினைக்கின்ற இறைவன் அல்லர். கொஞ்ச நேர இன்பத்தை விற்கும் வியாபாரிகளிடம் நம்மை நாமே விற்றுவிடக்கூடாது என்கிறார் அவர்.

5. ஒறுத்தல். இது எதற்காக? வாழ்வின் எந்தவொரு வளர்ச்சியும் ஒருவித தியாகம் மற்றும் வலியில்தான் நடக்கிறது. தியாகமும், வலியும், வசதியின்மையும்தான் நாம் வளர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. புதிய மொழி கற்பதாலும் சரி, புதிய திறனை வளர்ப்பதாலும் சரி, நமக்கு வலிக்கத்தான் செய்யும். வலியில்லாமல் வருவது நீண்ட காலம் நிலைப்பதில்லை. அதில் நம் மனம் லயிப்பதில்லை. வலியோடு வருவது நம்மை விட்டு எளிதில் நீங்குவதில்லை. ஒருவேளை நோன்பு இருக்கிறோம் என்றால், அந்த நோன்பு நம் மனித வலுவின்மையை நமக்கு நினைவூட்டுகிறது. நம் நோன்பால் எல்லாரும் பசியாறிப்போவதில்லைதான். ஆனால், மனிதரின் நிர்வாணத்தை மனிதருக்கு தோலுரிப்பது ஒரு வேளை விரதம்தான்.

இந்த தவக்காலம் நமக்கு அருளின் காலமாக அமைவதாக!

(இப்பதிவில் உள்ள சில கருத்துக்கள் பழ. கருப்பையா மற்றும் பேராயர் ஃபுல்டன் ஷீனுக்கு சொந்தமானவை)



3 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."துறவுநிலை" நல்ல ஒரு பதிவு.துறவுநிலை எனற தலைப்பில் தொடங்கி தவக்காலத்திற்கு சொல்ல வேண்டியதை சொல்லும் விதத்தில் அருமையாக கூறியிருக்குறீர்கள்.மிக்க நன்றி.

    மேலும் இறைவேண்டல், தர்மம் செய்தல் போன்ற அன்பு, அறப் பணிகள், நோன்பிருத்தல்... இவை மூன்றும் அனைத்து சமயங்களிலும் முதன்மை பெற்ற ஆன்மீகச் செயல்பாடுகளாக அமைந்திருக்கின்றன. ஆண்டவர் இயேசுவும் தம் சீடர்களிடமும், தம்மைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்திடமும் இவற்றை வலியுறுத்துகிறார்.

    ஆனால், முகாமையான ஒரு வன்கட்டோடு, அதாவது நிபந்தனையோடு... வேண்டுதல், தர்மம், நோன்பு - மூன்றும் வெளிவேடமின்றி நிகழவேண்டும். பிறர் பார்க்க வேண்டும், பிறரின் பாராட்டைப் பெறவேண்டும், நல்ல பெயர் வாங்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இவற்றைச் செய்யும்போது, அங்கே வெளிவேடம் புகுந்துவிடுகிறது. உள்நோக்கம் நுழைந்துவிடுகிறது. பாராட்டும், நற்பெயரும் கிடைக்கும்போது, உள்நோக்கம் நிறைவேறிவிடுகிறது. எனவே, இறையாசி தவறிவிடுகிறது.

    எனவே, இவை மூன்றையும் மறைவாக, பிறருக்குத் தெரியாமல், இறைவனுக்கு மட்டுமே உணர்கின்ற வகையில் ஆற்றுவோம். இறைவனின் பாராட்டை, ஆசிகளைப் பரிசாகப் பெறுவோம்.

    தவக்காலத்தை அன்பாகவும்,அமைதியாகவும் தொடங்க நம்மை ஆசீர்வதித்திருக்கும் தந்தைக்கு என் பாராட்டுக்களும்,நன்றியும்!!!

    ReplyDelete
  2. "தவக்கால்ம்"... பல விதமான எடுத்துக்காட்டுகளின் வழியாக நம் கடவுள்
    இரண்டாம் வாய்ப்புக்களின் கடவுள் என்பதை அழகாக,ஆறுதலாகத் தந்திருக்கிறார் தந்தை.'வேண்டாம் ' என்று சொல்பவற்றை விடுத்து எதெல்லாம் இக்காலத்தில் வேண்டும் என்பதன் பட்டியலை நின்று நிதானமாக யோசித்து செயல்பட அழைக்கிறது இன்றையப் பதிவு.நம் இறப்புக்கு நம்மைத் தயார்படுத்திடினும் இந்த 'இறப்பு' எனும் சுரங்கப்பாதையின் முடிவில் நமக்கு 'உயிர்ப்பு' எனும் ஒளி இருக்கிறது எனும் நம்பிக்கை விதைகளைத் தூவுகிறார் தந்தை.வலியோடு வரும் எதுவுமே வரவேற்கப்பட வேண்டியது எனக்கூறும் தந்தை" மனிதரின் நிர்வாணத்தை மனிதருக்குத் தோலுரிப்பது ஒரு வேளை விரதம் தான்" என்று உண்டி சுறுக்குதலின் மேன்மையை ஆணித்தரமாக முன் வைக்கிறார்.அது மட்டுமா? இறுதியில் தனக்கே உரித்தான பெருந்தன்மையுடன் 'இந்தப் பதிவின் சில கருத்துக்கள் பழ.கருப்பையாவுக்கும்,பேராயர் ஃபுல்டன் ஷீனுக்கும் சொந்தமானவை என்று வெளிச்சம் போட்டுச் சொல்கிறார்.இந்தப் பதிவில் வரும் அத்தனையையும் இல்லாவிடினும், ஓரிரு கருத்துக்களையாவது நமக்குரித்தானதாக எடுத்துப் பின்பற்றினால் கண்டிப்பாக இந்தத் ' தவக்காலம் ' நமக்கு அருளின் காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.தேவையான கருத்துக்களைத் தேவையான நேரத்தில் தூவிய தந்தைக்கும்,இந்தத் 'தூவலை மனத்திலிறுத்தி தவக்காலத்தை அருளின் காலமாக்க முயற்சிக்கத் துடிக்கும் என் போன்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இறைவன் நம்மை....நம் முயற்சியை ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  3. God of second chances....
    thanks for this reflection....
    He has truly given another chance to everyone who enters this lent....

    ReplyDelete