Saturday, February 27, 2016

முடிவுரை

தோபித்து நூல் 14ஆம் பிரிவு, (அ) தோபித்தின் இறைவாக்கு, (ஆ) தோபித்தின் இறுதி அறிவுரை, (இ) கதைமாந்தர்களின் இறப்பு என்று மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது.

அ. தோபித்தின் இறைவாக்கு

நினிவே நகரம் நாகூம் இறைவாக்கினர் சொன்னதுபோலவே (1:1-3:19) அழிவுறும் என்கிறார் தோபித்து. நாகூம் நூல் எழுதப்பட்ட பின்தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும், தோபித்தை சட்டமும், இறைவாக்குகளும் தெரிந்த ஒரு மனிதராக இங்கே முன்வைக்கின்றார் ஆசிரியர். 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்!' (ஆமா! எதுக்காக பாஸ் உப்பைத் திங்கணும்?) என்பதுபோல, பிறர்க்கின்னா முற்பகல் செய்த நினிவேக்கு, பிற்பகல் தானே வந்து சேருகிறது இன்னல். மேலும், எருசலேம் நகரின் மக்கள் திரும்பி வருவதையும், வந்தவர்கள் தங்கள் நகரையும், ஆண்டவரின் ஆலயத்தையும் புதுப்பிப்பார்கள் என்றும் இறைவாக்குரைக்கின்றார்.

ஆ. தோபித்தின் இறுதி அறிவுரை

தான் இறக்குமுன் தன் மகனை தன்னிடம் அழைக்கின்ற தோபித்து, ஏற்கனவே அவருக்கு சொன்ன, 'தர்மம் செய்தல், நேர்மையாய் இருத்தல், உண்மை பேசுதல், இறைவனைப் புகழ்தல்' என்ற அறிவுரைகளைச் சொல்கின்றார். புதியதாக, 'இவற்றையெல்லாம் செய்ய உங்கள் குழந்தைகளுக்கும் பயிற்சி அளியுங்கள்!' என்கிறார்.

இங்கே இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும்:

1. குழந்தைகள். பெற்றோர்களின் மதிப்பீடுகள் குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டும். 'இதை உன் குழந்தைகளுக்குச் சொல்!' என்னும் சொல்லாடல் இணைச்சட்ட நூலில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறைவனின் இரக்கச் செயல்களும், அதை பெற்றோர்கள் அனுபவித்த விதமும், அவர்களோடு முடிந்துவிடக்கூடியவை அல்ல. மாறாக, வாழையடி வாழையாக குழந்தைகளோடு. குழந்தைகளின் குழந்தைகளோடு என பயிற்றுவிக்கப்பட வேண்டியவை.

2. பயிற்சி. நல்ல குணங்கள் நம்மில் வர பயிற்சி தேவை. தோபித்து சொல்லும் நற்குணங்கள் ஒரே இரவில் ஒருவருக்கு வந்துவிடக்கூடியவை அல்ல. ஒவ்வொன்றையும் வாழ்ந்து காட்ட பயிற்சி தேவை. உடலைப் பக்குவப்படுத்தப் பயிற்சி தேவை போல, உள்ளத்தையும், வாழ்வையும் பக்குவப்படுத்த பயிற்சி தேவை. பயிற்சியும், நேரமும் ஒன்று சேர்ந்து செல்லக்கூடியவை. எந்த அளவிற்கு ஒன்றோடு நாம் நேரம் செலவழிக்கின்றோமோ, அந்த அளவிற்கு அதில் நாம் பயிற்சி பெறுகிறோம்.

இ. கதைமாந்தர்களின் இறப்பு

தோபித்து 112 வயதிலும், தோபியா 117 வயதிலும் இறக்கின்றனர். தோபித்து பார்வை பெற்றபின் 50 ஆண்டுகள் வாழ்கின்றார். இந்த எண்கள் எல்லாம் நிறைவைக் குறிப்பவை. அன்னா, இரகுவேல் மற்றும் எதினாவும் இறந்துபோகின்றனர். இவர்கள் எல்லாரையும் நல்லடக்கம் செய்கின்றார் தோபியா.

சிந்தனையின் இறுதியாக,

1. எல்லாம் கடந்து போகும். போர், சண்டை, வன்முறை, இழப்பு, பார்வையற்ற நிலை, திருமணம் தள்ளிப்போதல், பேய், பயம், வறுமை எல்லாம் கடந்து போகும். அமைதி, பார்வை, திருமண விருந்து, திரும்பப் பெற்ற பணம், வழித்துணை, நண்பர்கள், நட்பு, பெற்றோர் - இதுவும் கடந்து போகும். 'ஒரு தலைமுறை மறைகின்றது. மறு தலைமுறை தோன்றுகின்றது' (சஉ 1:4).

2. திருமணம். சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகம் இருக்கும்: 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு.' இந்த வாசகத்தை திருமணத்திற்கு ஒப்பிட்டு, இந்நாட்களில் இத்தாலியன் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது:

'திருமணம் உடல்நலத்திற்குக் கேடு'. Ingredients: பணம் 55%, செக்ஸ் 23%, பொய் 22%

திருமணத்தை, குடும்ப வாழ்வை நமக்கேற்றாற்போல மாற்றிக்கொண்டு, முன்னேற்றம் என்று சொல்லி, எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் நமக்கு, தோபித்து-அன்னா, இரகுவேல்-எதினா, தோபியா-சாரா குடும்பங்கள் எதிர்சான்றாக இருக்கின்றன. நல்ல நட்பின் வழித்துணையின் அடையாளமாக இரபேலும் இருக்கிறார்.

3. எதை விட்டுச் செல்வோம்? இந்த உலகத்திற்கு நாம் வரும்முன்பு இந்த உலகம் இருந்தது. இந்த உலகை விட்டு நாம் சென்றபின்னும் இந்த உலகம் இருக்கும். நமக்கு முன் இருப்பவற்றையெல்லாம் பயன்படுத்துகிறோம். நாம் எடுத்த அனைத்திற்கும் பதிலாக எதை திரும்பக் கொடுக்கப் போகிறோம்? நாம் எதைப் பெற்றோம் என்பதைப் பொறுத்து அல்ல, எதை கொடுத்தோம் என்றே நாளை நாம் அறியப்படுவோம். இல்லையா?

தோபித்து நூல் - நல்வாழ்வின் டைரி


5 comments:

  1. என்னதான் சிறு பிராயத்திலிருந்தே விவிலியத்தின் பக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், பழைய ஏற்பாட்டின் ஒரு முழு தொகுப்பினை அக்குவேறு,ஆணிவேறாக அலசியது புது அனுபவம்.இந்த முழுப்பெருமைக்கும் உரியவர் தந்தை அவர்களே! ஒரு பண்பட்ட கிறிஸ்துவ மதிப்பீடுகள் நிறைந்த வாழ்வுக்கு கட்டியம் கூறுகின்றனர் இந்த தோபித்து நூலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே! தர்மம் செய்தல்,நேர்மையாய் இருத்தல்,உண்மைபேசுதல்,இறைவனைப்புகழ்தல் போன்ற மதிப்பீடுகளை நாம் கொண்டிருப்பதோடு நம் சந்ததிகளும் அவற்றைப் பின்பற்றச் செய்வது அவை வாழையடி வாழையாக விருத்தியாக வழிவிடுவதாகும். நம் வாழ்க்கையில் வரும் நிகழ்வுகள் எதுவுமே சாசுவதம் இல்லை என்பதும், நாம் அனுபவப்படும் எல்லாமே கடந்து போக்க்கூடியவை என்பதும் வாழ்வின் நிதர்சனம் என உணர்த்தப்படுகிறோம்.இங்கு வரும் தோபித்து- அன்னா,இரகுவேல்- எதினா,தோபியா- சாரா இவர்களின் திருமணவாழ்க்கை முறை, முன்னேற்றம் என்ற பெயரில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல; எச்சரிக்கையும் கூட.தந்தையின் முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதோடு அடுத்த பகுதியை விரைவில் ஆரம்பிக்க வேண்டுகள் வைக்கிறேன்.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்முக்கள்!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அருட்தந்தை அவர்களின் எழுத்துக்களை விமர்சிக்கும் தங்கள் பாங்கு, என்னை வியக்க வைக்கிறது...
      திருவிவிலியத்தின்பால் தாங்கள் கொண்டுள்ள ஈடுபாடும் அறிவும் என்னை மேலும் வியக்க வைக்கிறது...
      நல்லதொரு கத்தோலிக்க சகோதரி அருளிய இறைவனுக்கு நன்றிகள் - உங்களுக்கும்!

      Delete
  3. சகோதரர் புஷ்பராஜா அவர்களுக்கு வணக்கம்! தங்களின் நல்ல உள்ளத்துக்கும்,வார்த்தைகளுக்கும் என் நன்றிகள்."இறைவன் பலருக்குப் பலவிதமான வழிகளில் தன் அழைத்தலைக் கொடுக்கிறார்."அழைக்கப்பட்டவர் பலர்; தெரிந்து கொள்ளப்பட்வர் சிலர்" என வாசிக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு தெரிந்து கொள்ளப்பட்டவரின் ஆர்வத்துக்கும்,முயற்சிக்கும் முட்டுக்கொடுக்க ஆரம்பித்த என் சிறு முயற்சி என்னுள் இன்று வளர்ந்து,அது என்னையும் வளர்த்திருப்பதை உணருகிறேன்.தங்களுடைய பதிவுகளையும்,பின்னூட்டத்தையும் நானும் வாசித்து இரசித்துள்ளேன்.யாருக்கும் சோடை போனவரல்ல நீங்கள்.தொடர்ந்து இறைவன் வார்த்தையை வாழ்வாக்க நம்மால் இயன்றதைச் செய்வோம்.இறைவன் நம்மையும்,நம் அனைத்து முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக! அன்புடன்.....


    ReplyDelete
  4. Dear Father,Congrats for finishing Book of Tobit.All your explanations were very good on the book of Tobit.A great applause to you dear Father.

    ReplyDelete