Saturday, February 6, 2016

கச்சியேகம்பன்

பட்டினத்தாரின் பாடல் திரட்டில் ஒன்று திருவேகம்பாலை.

இந்தப் பாடலில் மொத்தம் 42 அடிகள். இந்த 42 அடிகளையும் பட்டினத்தார் அருட்புலம்பலாக சிவபெருமானை நோக்கி பாடுகின்றார்.

14 அடிகளாக மூன்று வாரங்களுக்குப் பிரித்துக்கொள்வோம்.

முதல் 14 அடிகளில் என்னைக் கவர்ந்த சில பாடல்களையும், அந்தப் பாடல்களில் நான் இரசித்தவற்றையும் இங்கே பகிர்கிறேன்.

1. 'கட்டியணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானமங் குறுகியப்பால்
எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சியேகம்பனே.' (2)

அ. உடலை மரத்திற்கு ஒப்பிட்டு, இறப்பை காலத்தச்சன் வெட்டிமுறித்தல் என்கிறார். பிறப்பில் நாம் நேரத்தில் நுழைகிறோம். இறப்பில் நாம் நேரத்தைவிட்டு மறைகிறோம்.

ஆ. கச்சியேகம்பன். சிவபெருமானின் பல பெயர்களில் ஒன்று. நம்ம மாதாவை வேளாங்கண்ணி மாதா, லூர்து மாதா, பாத்திமா மாதா என்று ஊர்ப் பெயர்களை அடைமொழியாக வைத்திருக்கின்றோம். அதாவது, மாதா காட்சி தந்த ஊரைக் கொண்டு மாதாவை அடையாளப்படுத்துகிறோம். ஆனால் மாதா ஒன்றுதான். சைவ மரபில், சிவனடியார்கள் எங்கெல்லாம் இறைவனின் பாடல் அருளப்பெற்றார்களோ. அந்த இடத்தை அடைமொழியாக வைத்து சிவனை அழைக்கின்றனர். உதாரணத்திற்கு, தில்லைஏகம்பன் - தில்லையில் வீற்றிருக்கும் சிவன். காஞ்சி ஏகாம்பரநாதரைத்தான் 'கச்சிஏகம்பன்' என அழைக்கிறார் பட்டினத்தார். சிவனுக்கு முக்கியமான ஆலயங்கள் என ஐந்து உண்டு. இந்த ஐந்தும் ஐம்பூதங்களைக் குறிக்கின்றன. இந்த ஐந்து ஆலயங்களில் உள்ள ஐந்து லிங்கங்களில் ஐந்து பூதங்கள் குடியிருக்கின்றன: காஞ்சியில் பிரித்வி லிங்கம் (நிலம்). திருவானைக்காவலில் அப்பு லிங்கம் (நீர்). தில்லையில் ஆகாய லிங்கம் (ஆகாயம்). திருவண்ணாமலையில் அக்னி லிங்கம் (நெருப்பு). கலகஸ்தி நகரில் வாயு லிங்கம் (காற்று)

2. 'நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள்ளதோ? அகமும் பொருளும்
இல்லாளும் சுற்றத்தாரும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சியேகம்பனே!' (4)

வாழ்விற்கு தேவையானவை எவை? மூன்றுதாம் என்கிறார் பட்டினத்தார். (அ) நல்லவர்களுடன் நாம் கொள்ளும் நட்பு, (ஆ) இறைவனின் திருவடிகள் மேல் ஆர்வம், (இ) ஞானம்

இதே கருத்து இதற்கு அடுத்த பாடலிலும் உள்ளது:

'பொல்லாதவன் நெறிநில்லாதவன் ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர்பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின்திருவடிக்குஅன்பு
இல்லாதவன் மண்ணிலேன்பிறந்தேன் கச்சியேகம்பனே!' (5)

இவை தவிர, நம் உள்ளிருப்பது, வெளியிலிருப்பது, மனைவி, உற்றார்-உறவு, பிள்ளைகள், வாழ்வு, அழகிய உடல் - இவை அனைத்தும் மாயை.

இதையொத்த கருத்தை பின்வரும் பாடலிலும் பார்க்கலாம்:

'ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல உற்றுப்பெற்ற
பேரும் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்தாள் சதம் கச்சியேகம்பனே!' (13)

3. 'அன்னவிசாரம் அதுவே விசாரம் அதுஒழிந்தால்
சொன்னவிசாரம் தொலையா விசாரம்நல் தோகையரை
பன்னவிசாரம் பலகால் விசாரம் பாவிநெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா கச்சியேகம்பனே!' (8)

'விசாரம்' என்றால் 'கவலை' அல்லது 'தேவை.' 'அன்னம்' என்றால் சோறு. 'சொன்னம்', 'சொர்ணம்' என்றால் 'செல்வம்' அல்லது 'தங்கம்.' 'தோகையர்' என்றால் 'பெண்கள்.' 'பன்னல்' என்றால் 'நெருங்குதல்.' 'பலகால்' என்றால் 'நெடுங்காலம்.'

மனிதருக்கு இருக்கும் முதல் தேவை அல்லது கவலை உணவு. அந்த தேவை நிறைவு பெற்றவுடன் பணம் சேர்க்க வேண்டும் என்ற தேவை அல்லது கவலை வருகிறது. அதுவும் நிறைவு பெற்றவுடன் பெண்கள்மேல் அல்லது (ஆண்கள்மேல்) நெருக்கம்கொள்ளும் தேவை வருகிறது. இதில் உணவு தேவை ஒழிந்தாலும், செல்வத்தின் தேவை 'தொலையாது' என்றும், உறவுத்தேவை 'பலகாலம்' இருக்கும் எனவும் சொல்கிறார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உளவியல் அறிஞர் மாஸ்லோ மனிதர்களின் தேவையை, (அ) உடல் (physiological),  (ஆ) பாதுகாப்பு (security,) (இ) அன்பு (love), (ஈ) தன்மதிப்பு (self-esteem), (உ) சுயநிர்ணயம் (self-actualization) என பிரிப்பதை நினைவுகூர்வோம்.


4 comments:

  1. தான் எடுத்த ஒரு வேலையை ஏனோ தானோ என்று அணுகாமல் அதில் தன் முழுத்திறனையும்,தேடலையும் கொட்டிக் கொடுக்கும் தந்தையின் பெருமுயற்சியாகப் பார்க்கிறேன் இன்றையப்பதிவை. இதை வாசிப்போருக்கு இந்து சமயத்தைப் பற்றிப் பெரிதாக என்ன தெரியப்போகிறது என யாரையும் குறைவாக மதிப்பிடாமல் பட்டினத்தார் பாடல் தொகுப்பை அதன் வேர்வரை சென்று அர்த்தம் கண்டு அதை நமக்குப்படைத்திருக்கும் பாங்கே ஒரு அழகு. மனிதனின் பல தேவைகளையும்,அவற்றில் ஒன்று நிறைவுக்கு வருகையில் அடுத்து வரும் பேராசைக்கு மேல் பேராசைகளையும்,தேவை என்ற பெயரில் நமக்கு வரும் அடுத்தடுத்த கவலைகளையும் அழகாக்க் கையாண்டுள்ளார் தந்தை. தான் சொல்ல வந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்க உளவியல் அறிஞர் மாஸ்லோ அவர்களின் கருத்துக்களையும் முன் வைக்கிறார். தவக்காலத்தில் நுழைய இருக்கும் நமக்கு தந்தை தரும் இன்றையக் கருத்துகளை காலத்தின் தேவையறிந்து, நோய்வாய்ப்பட்டோரின் நிலை தெரிந்து கொடுக்கும் மருந்தாக எண்ணி எடுத்தோமேயானால் வரப்போகும் நாட்கள் நமக்கு வரங்களை அள்ளித்தரும்.தந்தையின் பெருமுயற்சிக்குப் பாராட்டுக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. Anonymous1/30/2023

      உண்மை நன்றி

      Delete
  2. Thanks for your information

    ReplyDelete