'அறைக்குள் சடலம் -முற்றத்தில் குருவிகள் -
இடுப்பில் ஆட்டுக்குட்டி'
இந்த மூன்று சொல்லாடல்களுக்குள் அடக்கிவிடலாம் தோபித்து நூல் பிரிவு இரண்டை.
அ. அறைக்குள் சடலம் (2:1-8)
தோபித்து விருந்துண்ண அமர்கிறார். தனியாக அமர்ந்து சாப்பிட மனம் ஒப்பவில்லை. 'வெளியே போய் ஏழை யாரையாவது அழைத்து வா!' என தன் மகனை அனுப்புகிறார். இந்த நிகழ்வு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனெனில் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' (லூக் 14:13-14) என்னும் இயேசுவின் வார்த்தைகளை தோபித்து ஏற்கனவே வாழ்ந்துகாட்டினார் என்று சொல்கிறது. ஏழையைத் தேடிப்போன மகன் தோபியா, வழியில் ஒரு சடலம் காணக் கண்டு வீடு திரும்பி தன் தந்தையிடம் சொல்கிறான். தோபித்து உடனே மேசையை விட்டு எழுந்து, சென்று, சடலத்தை மீட்டு, தன் அறைக்குள் ஒளித்துவிட்டு, குளித்துவிட்டு, விருந்துண்ண அமர்கிறார். தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. 'உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்' என்ற ஆமோசின் இறைவாக்கை நினைவுகூர்கிறார். கதிரவன் இறந்தபின் சடலத்தை அடக்கம் செய்கிறார்.
ஆ. முற்றத்தில் குருவிகள் (2:9-10)
'நல்ல காரியம் ஒன்றைச் செய்துவிட்டோம்!' என்ற பெருமிதத்தில் குளித்துவிட்டு, முற்றத்துத் திண்ணையில் படுக்க, பரண்மேலிருந்த குருவிகளின் எச்சங்கள் கண்களில் பட, வெண்புள்ளிகள் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழக்கின்றார் தோபித்து. நான்கு ஆண்டுகள் பார்வையில்லாமல் இருக்கிறார்.
இ. இடுப்பில் ஆட்டுக்குட்டி (2:11-14)
தொடர்ந்து தோபித்து தன் மனைவி அன்னாவைப் பற்றிச் சொல்கின்றார். அன்னாவின் கைவேலைப்பாடுகளை வாங்கும் உரிமையாளர், அவளின் கூலியோடு சேர்த்து அவளுக்கு ஓர் ஆட்டையும் பரிசாகக் கொடுக்கின்றனர். கையில் சம்பளமும், இடுப்பில் ஆட்டுக்குட்டியுமாய் வீடு வந்து சேர்கிறாள் அன்னா. ஆட்டுக்குட்டியை முற்றத்தில் கட்டிப்போடுகின்றார். ஆடு கத்தக் கேட்டு, 'என்ன இது புது சத்தம்!' என ஆச்சர்யப்படுகிறார் தோபித்து. 'ஆட்டைத் திருடிக்கொண்டு வந்தாயா?' என தன் மனைவி மேல் கோபம் கொள்கிறார். தன் நேர்மையை சந்தேகிக்கும் தன் கணவரை கடிந்து கொள்கிறார் அன்னா. தோபித்தும் தன் சந்தேகத்திற்காக மன்னிப்பு கேட்கின்றார்.
1. நல்லதொரு குடும்பம். சுவையாக உணவு சமைக்கும் மனைவி. மனைவி என்ற சொல்லைக் குறிக்கும் 'bride' என்னும் ஆங்கிலச் சொல்லின் ஜெர்மானிய பதம் 'Braut' (இதன் வேர்ச்சொல் 'Brühen' (= to make broth or soup)
என்பதற்கு சமைப்பவர் என்பது பொருள். சுவையை ருசித்து அனுபவித்து, பகிர்ந்து உண்ணும் கணவன். சாப்பிட உட்கார்ந்தாலும், வேலை சொன்னவுடன், கீழ்ப்படிந்து ஓடிய மகன்.
2. அறையில் சடலம், மேசையில் உணவு. தன் அறையில் மாற்றானின் உயிரற்ற சடலம் இருக்க, தன் கையில் உணவை எடுக்கும் தோபித்து எவ்வளவு பெரிய மனத்துயரை அனுபவித்திருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும். மேலும், மாற்றானின் உயிரற்ற உடலை தன் வீட்டில் வைப்பதன் மூலம், தன் வீட்டிற்கே தீட்டுப்பட்டாலும் பரவாயில்லை என்றவராய், நல்ல காரியம் செய்வதில் கருத்தாய் இருக்கிறார்.
3. முற்றத்தில் வந்த சோதனை. இவ்வளவு முயற்சிகள் எடுத்து நல்லது செய்ய நினைக்கும் தோபித்து சின்ன சிட்டுக்குருவியின் வடிவில் வருகிறது சோதனை. மேலும் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தன் வீட்டு முற்றத்தை சிட்டுக்குருவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டார் தோபித்து. குருவிகளின் எச்சம் விழுந்து பார்வையற்றுப் போனதால் இவரின் நல்ல செயல்களுக்கு பெரிய தடை வந்துவிட்டது. பார்வையற்ற ஒருவர் இனி எப்படி குழி வெட்டி இறந்தோரை அடக்கம் செய்வார்? இனி எப்படி திருப்பயணம் செய்வார்? இனி எப்படி வேலை செய்து பத்திலொரு பாகம் கொடுப்பார்? ஆனால், சோதனைகள்தாம் நாம் யாரென்று நமக்கே காட்டுகின்றன. அகுஸ்தினார் அழகாக எழுதுவார்: 'சோதிக்கப்படாத ஒருவர் தன்னை எப்படி முழுமையாக அறிந்து கொள்வார்? வெற்றிபெறாத ஒருவர் எப்படி மகுடம் சூடுவார்? போராடாத ஒருவர் எப்படி வெற்றி பெறுவார்?'
4. அன்னாவின் கைவேலைப்பாடு. தொடக்ககால எபிரேய சமூகத்தில் பெண்களும் வேலை செய்திருக்கிறார்கள். வேலை வழியாக ஒருவர் தன்னையே அறிந்து கொள்கிறார். ஆக, வேலை மனித அடையாளத்தில் மிக முக்கியமானது. அன்னாவின் கைவேலைப்பாடு எந்த அளவிற்கு அழகாக இருக்கிறது என்றால், அதை வாங்கும் உரிமையாளர் ஓர் ஆட்டுக்குட்டியை போனஸாக கொடுக்கிறார். இன்று நாம் செய்யும் வேலையை உணர்ந்து, இரசித்து, அர்ப்பணத்தோடு செய்ய நம்மை தூண்டுகிறார் அன்னா.
5. 'உம்முடைய தருமங்கள் எங்கே?' அன்னாவின் இடுப்பிலிருந்து ஆட்டுக்குட்டி கத்துவதை வைத்து அவர் ஆட்டைத் திருடிவிட்டார் என தவறாகப் புரிந்துகொள்கிறார் தோபித்து. ரொம்ப நல்லவரா இருப்பதில் வரும் பிரச்சினை இதுதான். தங்களை நல்லவராக நினைக்கும் சிலர், தாங்கள் மட்டும்தான் நல்லவராக இருக்க முடியும் என்று நினைப்பது மட்டுமல்லாமல், மற்ற எல்லாரையும் கெட்டவராகவே நினைக்கின்றனர். இந்த அணுகுமுறை தவறானது. எல்லாருக்கும் சட்டங்கள் தெரியும். எல்லாருக்குள்ளும் நல்ல குணம் இருக்கிறது. நல்ல தரும காரியங்கள் செய்துவிட்டு, நம் மனம் இப்படி குறுகிவிட்டால் என்ன பயன்? இதைச் சரியான நேரத்தில் துணிச்சலோடு தோபித்துக்குச் சுட்டிக்காட்டுகிறார் அன்னா.
நாளுக்கு நாள் மெருகு கூடுகிறது தந்தையின் எழுத்தில்.இன்றையப் பதிவின் சம்பவங்கள் அத்தனையையும் 'அறைக்குள் சடலம்', ' முற்றத்தில் குருவிகள்', இடுப்பில் ஆட்டுக்குட்டி என்ற மூன்று சொல்லாடல்களுக்குள் அடக்குவதிலிருந்து இவை மூன்றிலுமே நாம் பார்த்துப் பயனுற வேண்டிய விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது தெரிகிறது.தான் விருந்துண்ண அமர்ந்த வேளையிலும் இறந்த சடலத்தை வைக்கவும் முடியாமல்,அடக்கம் செய்யவும் இயலாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் தோபித்து,சுவையான உணவைப் பரிமாறிய தன்னைப் பாராட்டாவிடினும் பரவாயில்லை...ஆனால் தனக்குக் கிடைத்த ஆட்டுக்குட்டியின் ந்திமூலத்தையே சந்தேகிக்கிறாரே என்ற ஆதங்கம் இருப்பினும்,கணவனை மன்னிக்கத் தயாராயிருக்கும் அன்னா,'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற சொல்லாடலுக்கு அர்த்தம் தரும் மைந்தன்.......'இதுவல்லவோ குடும்பம்' என நம்மை ஏங்க வைக்கின்றனர்.முற்றத்துக் குருவிகளால் தன் பார்வை பறிபோன நேரத்திலும் தான் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்யும் வழி தெரியாது கலங்கும் தந்தை....புனித அகுஸ்தினாரின் வார்த்தைகள் " சோதிக்கப்படாத ஒருவர் தன்னை எப்படி முழுமையாகத் தெரிந்து கொள்வார்? வெற்றி பெறாத ஒருவர் எப்படி மகுடம் சூடுவார்?போரிடாத ஒருவர் எப்படி வெற்றி பெறுவார்?"இவரில் மெய்யாவதை உணர்கின்றோம். எத்தனைதான் தோபித்து தன் குணத்தின் உச்சங்களைத் தொடுபவராக இருப்பினும் இன்றையப் பதிவின் படி நம் மனத்தைத் திருடுபவர் " எல்லோருக்குள்ளும் நல்ல குணம் இருக்கிறது " என்பதைத் தன் கணவனுக்குச் சரியான நேரத்தில் உறக்கச் சொன்ன அன்னாதான்! இந்நாட்களில் யாரும் மனத்திலிருத்திப் பின்பற்றக்கூடிய நல்ல விஷயங்களைப் பதிவாகத் தரும் தந்தைக்கு நன்றிகள்! இந்த வாரம் இனிய வாரமாகட்டும்!!!
ReplyDeleteDear Father, A great person always share great things what he knew,experienced and so on,...
ReplyDeleteI really appreciate you for great work on which you started journey.Congrats!!!!!!!!!