Monday, November 9, 2015

அரிதாள்

'கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்.
அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்'
(காண். சாஞா 2:23-3:9)

நாளை நாம் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

பருப்பு விலை ஏறிப்போச்சு. இட்லி, பலகாரம் செய்யும் ஆர்வம் இறங்கிப் போச்சு.

சீனப் பட்டாசுக்களால் சிவகாசி பட்டாசு மார்க்கெட் சரிஞ்சு போச்சு.

பட்டாசு வாங்கி வந்தாலும் இடைவிடாத மழையும், காற்றும், புயலும் நம் கனவுகளையெல்லாம் 'டமால்' ஆக்கிடுச்சு.

கார்த்தி 'சென்னை சில்க்ஸ்'க்கு கூப்பிடுறாரு. கமல் 'போத்தீஸ்'க்கு வாங்க, 'அபிமானம்' அப்படி, இப்படி என பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் சொல்றாரு. இவங்கள நம்பி போனா, ரெண்டாயிரம், மூவாயிரம் கையில் இல்லாம டிரஸ் எடுக்க முடியாது.

இதையெல்லாம் பார்க்குறப்ப, பேசாம கிருஷ்ணன் நரகாசுரனை கொல்லாமல் கொஞ்சம் கருணை காட்டி மன்னிச்சு விட்டிருக்கலாம் என்றே தோணுது.

நாளைய முதல் வாசகத்தின் மையமும் 'ஒளி' என்ற வார்த்தைதான்.

நாளைய வாசகம்தான் அடக்கத் திருப்பலிகளில் வழக்கமாக வாசிக்கப்படும் முதல்வாசகம். ஒட்டுமொத்த மனித வாழ்வையும் பெறும் 10 வசனங்களில் சொல்லி விடுகிறார் சாலமோன். இறவாமைக்கு கடவுள் மனிதர்களைப் படைக்கிறார். ஆனால் பாவத்தால் இறப்பு வந்துவிடுகிறது. இருந்தாலும், நம் நல்வாழ்வால் மீண்டும் நாம் இறவாமையை அடைந்துவிடலாம்.

வாழ்விற்கும், சாவிற்குமான, ஒளிக்கும், இருளுக்குமான போராட்டத்தில், வாழ்வு மற்றும் ஒளி வெற்றிபெறவதையே தீபஒளித் திருநாளும் நமக்குச் சொல்கிறது.

இந்த வெற்றி கடவுளர்களுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே சாத்தியம்.

'அரிதாள் நடுவே தீப்பொறி போல பரந்து சுடர்விடுவார்கள்' என்னும் சொற்றொடர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

அரிதாள் என்பது நன்றாகக் காய்ந்த வைக்கோல் அல்லது அரியப்பட்ட புல் அல்லது அரியப்பட்ட சோளம் அல்லது கம்பந்தட்டை. கேஸ் அடுப்பு வராத அந்த நாட்களில் இவைதான் அடுப்பின் நெருப்புக்கு ஸ்டார்ட்டர். இவைகள் எரியத் தொடங்கியபின்தான் பெரிய விறகு மற்றும் சுள்ளிகளை வைப்பார்கள். இந்த அரிதாள் எளிதில் தீப்பிடிக்கக் காரணம் அவைகளின் மென்மை மற்றும் வறட்சி. மென்மையாய் மட்டும் இருந்து காய்ந்து போகாமல் இருந்தால் வெறும் புகைதான் வரும். நெருப்பு வராது. மேலும் அரிதாள்கள் அடுப்பில் தாங்கள் எரிந்தாலும் தங்களுக்குப் பின் வரும் விறகுகளுக்கு தங்கள் நெருப்பை விட்டுச் செல்கிறார்கள். நம்மைவிட்டு நமக்கு முன் செல்லும் நம் அன்பிற்குரியவர்களும் அவர்களின் நெருப்பை நம்மிடம் விட்டுத்தானே சென்றிருக்கிறார்கள்.

விவிலியம் ஒரு இலக்கியம் என்ற அடிப்படையிலும்கூட மேலோங்கியே நிற்கிறது. சின்ன உருவகம் எவ்வளவு அழகான பொருளை உள்ளடக்கியுள்ளது!

இறப்பில் கூட நம் பண்பு இவைதாமே: மென்மை மற்றும் வறட்சி. மென்மை ஏனென்றால் வன்மையான நம் உடலைவிட்டு நாம் பிரிகின்றோம். வறட்சி ஏனென்றால் நாம் எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றோம்.

'இறப்பிற்குப் பின் மறுவாழ்வு இல்லை' என்று நான் அடிக்கடி வாதாடுவதுண்டு. ஆனால் இந்த நாட்களில் நான் வாதாடியது தவறு என்றே உணர்கிறேன். இந்த நாட்களில் நிலைவாழ்வின் மேலுள்ள நம்பிக்கை அதிமாகவே இருக்கிறது. நம் உடல்தான் அழியக்கூடியதே தவிர, நம் ஆன்மா அழிவதில்லை. ஏனெனில் நம் மனம் அல்லது உயிர் அல்லது ஆன்மா உடலையும் தாண்டிச் செல்ல வல்லது.

இறப்பிற்குப் பின் வரும் மென்மை மற்றும் வறட்சி என்ற பண்புகளை நாம் இருக்கும்போதே பெறுவது எப்படி? என்ற கேள்விக்கு விடையாக வருவதுதான் நாளைய நற்செய்தி வாசகம் (லூக் 17:7-10). நாம் பணியாளர்கள். அதுவும் பயனற்ற பணியாளர்கள்.

இந்த உலகில் நாம் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ, வயல்வெளியிலிருந்தோ திரும்பினாலும், நாம் நம் களைப்பை முன்வைக்கக் கூடாது. தொடர்ந்து பணி செய்ய வேண்டும். இது கொஞ்சம் முதலாளித்துவ சிந்தனையாக இருந்தாலும், இதுதான் நம் வாழ்வின் நிதர்சனமான உண்மை.

பருப்பு விலை ஏறினாலும், இறங்கினாலும்,
மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும்,
நம் உள்ளத்தில் ஒளி அணைந்துவிடவேண்டாம்!

நம் வாழ்வின் அன்றாட இருள் களையவும்,
வாழ்ந்தபின் நிலையான இருள் கலையவும்
இறைவன் அருள்கூர்வாராக!

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

3 comments:

  1. இன்றையப் பதிவின் மூலம் ஒரு சுகமான செய்தியைத்தந்த தந்தைக்கு நன்றிகள்! ஆம், பல சமயங்களில் நிலையான வாழ்வு பற்றி அவரிடம் வாதிட்டுத் தோற்றவள் நான்.இன்று அவரே உடலுக்குத் தான் அழிவே தவிர ஆன்மாவிற்கு இல்லை எனவும்,நம் ஆன்மா உடலையும் தாண்டிச் செல்லக்கூடியது என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது ஏதோ ஒரு மைசூர்பாகு சாப்பிட்ட சுகத்தைத் தருகிறது.சரி...விஷயத்திற்கு வருவோம்.வாழ்விற்கும் சாவிற்குமான,ஒளிக்கும் இருளுக்குமான போராட்டத்தில் சாவின் மேல் வாழ்வும்,இருளின் மேல் ஒளியும் வெற்றி கொள்வதே தீப ஒளித் திருநாள் எனில் எப்போதெல்லாம் நன்மை தீமையை வதம்செயகிறோதோ அப்போதெல்லாமே நமக்குத் திருவிழா தான்; கொண்டாட்டம் தான்.இதைப்பின்னனியில் கொண்டுதான் நம் ஆதிப்பெற்றோரின் பாவம் நம்மை சாவிற்கு இட்டுச் சென்றாலும் நம் நல்வாழ்வால் மீண்டும் இறவாமையை அடைந்துவிடலாம் என்பது இந்தத் தீபத்திருநாளில் நம் செவிகளை ஈர்க்கும் ஆறுதலான வார்த்தைகள்.இதை விளக்க வரும் " அரிதாள் நடுவே தீப்பொறி போல பரந்து சுடர்விடுவார்கள்" எனும் வரியும் அதக்குதல் தந்தை தந்திருக்கும் விளக்கமும் புதிதாக இருப்பினும் கூட எனக்கும் ரொம்பப் பிடித்திருக்கிறது.இந்த அரிதாள்கள் பின்னால் வருபவரின் பயன்பாட்டுக்காக நெருப்பை அடுப்பில் விட்டுச் செல்வது போல நம் அன்பிற்குரியவர்களும் அவர்களின் நெருப்பை ( நினைவை) நம்மிடம் விட்டுத்தான் சென்றுள்ளார்கள் என்பது இறந்தவரின் நினைவைக் கொண்டாடும் இந்நாட்களில் நமக்கு ஆறுதலும்,தேறுதலும் தரும் வார்த்தைகள். எப்பணி செய்துவிட்டு வந்திடினும் நம் களைப்பை முன்வைக்காமல் தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்பது கொஞ்சம் நம் நெற்றியை சுருங்கச் செய்தாலும் தீபாவளி இனிப்புகளுக்குப்பின் சீரணம் கருதி நாம் விழுங்கும் 'இலேகியம்'போன்றது.இறுதியாக வரும் தந்தையின் வார்த்தைகள் நெத்தியடி..." பருப்பு விலை ஏறினாலும்,இறங்கினாலும்,மழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் கார்த்தியும் கமலஹாசனும் அவர்கள் பிழைப்பிற்காக எதையோ காட்டுக்கத்தாய் கத்தினாலும் நமக்குக் கவலை இல்லை.ஏனெனில் "நம் வாழ்வின் அன்றாட இருள் கலையவும்,இறந்த பின் நிலையான இருள் கலையவும் நம் தேவன் நம்மோடு இருக்கிறார்" என்ற திண்ணமான நம்பிக்கை நமக்குண்டு. தீபத்திருநாளாம் இன்று நம்பிக்கையின் விதைகளை எம் உள்ளத்திலும்,இல்லத்திலும் தூவிய தந்தைக்கு என் மனத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்.தங்களுக்கும்,மற்ற அனைவருக்கும் தீபத்திருநாள் சுடர்விட்டு ஒளிர்ந்திட என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."அரிதாள்" மிக அழகான பதிவு.நீங்கள் தமிழ் அகராதியின் பிறப்பிடம்.உங்களின் இன்றைய பதிவில் எனக்கு தெளிவை கொடுத்த வார்த்தைகள் நம்மைவிட்டு நமக்கு முன் செல்லும் நம் அன்பிற்குரியவர்களும் அவர்களின் நெருப்பை நம்மிடம் விட்டுத்தானே சென்றிருக்கிறார்கள்.ஆம் இதை ஏற்றுக்கொள்ள எனக்கு தயக்கமே இல்லை . எழுந்து ஒளிவீச உங்களின் தைரியப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி . தந்தைக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.என் பாச தந்தைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete