'இன்று மதியம் முதல் நாளை இரவு வரை ஒப்புரவு அருளடையாளம் பெற்று, நம்பிக்கை அறிக்கை சொல்லி, நற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துக்காக செபித்து, கல்லறையை சந்திப்பவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஒரு ஆன்மாவை மோட்சத்திற்கு விடுவிக்கலாம்'
இன்று காலை 8 மணி திருப்பலியை நிறைவேற்ற வந்த அருட்தந்தை இப்படித்தான் அறிவித்தார்.
எம். ஆர். ராதா வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தது: 'கடவுளோட செக்ரட்டரி மாதிரி பேசுவாணுக!'
'உத்தரிக்கிற நிலை' என நானும் கொஞ்ச நேரம் நம்பினேன்.
அந்த நம்பிக்கை என்னுள் அவர்கள் மேல் பரிவு என்னும் உணர்வை எழுப்பியது.
1. உத்தரிக்கிற நிலையில் இருப்பவர்கள் இறந்துவிட்டார்கள். ஆக, இனி அவர்களுக்கென்று யாருமில்லை. வாழும்போதே சிலர் தங்களுக்கென்று யாருமில்லை என்று வாழ்வது இதைவிட கொடிய உணர்வு. உயிரான மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், ஊர், படிப்பு, பட்டம் எதுவும் இல்லாமல் போகிறார்கள் இறந்தவர்கள். ஒன்றும் இல்லாமல் வந்தவர்கள் ஒன்றும் இல்லாமல்தான் போக வேண்டும் என்பது இயற்கையின் நீதி.
2. இவர்கள் கடவுளைக் கண்டவர்கள். அதாவது, கடவுளைப் பார்த்தபின்தான் 'இன்னும் கொஞ்சம் துன்பம் அனுபவிக்க வேண்டும்' என்று உத்தரிக்கிற நிலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதாவது, பசியோடு வந்தவர்களுக்கு தட்டு நிறைய பிரியாணியைக் காட்டிவிட்டு, 'இப்போ சாப்பிடக் கூடாது' என்று வெளியே அனுப்பப்பட்டவர்கள் இவர்கள்.
3. பாதி வழி வந்தவர்கள். மோட்சத்திற்கான பாதி வழியைக் கடந்துவிட்டவர்கள். இவர்கள் மீதி வழியைக் கடக்க தங்களால் முடியாது. மற்றவர்கள்தாம் உதவி செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் யார்? மகிமை பெற்ற திருச்சபையில் இருக்கும் புனிதர்களா? அல்லது பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நாமா? நாம்தான். எப்படி? நம் செபத்தினாலும், பிறரன்பு செயல்களினாலும் அவர்களின் குற்றங்களுக்கு நாம் பரிகாரம் செய்வது. இப்படி அடுத்தவரின் மீட்புக்காக பரிகாரம் செய்பவர்கள் புத்த மதத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் 'போதிசத்துவா'. ஆன்மாக்களின் மீட்புக்கு நாம் செபித்தால் நாமும் 'போதிசத்துவாக்களே'.
இப்ப இரண்டு பிரச்சினைகள்:
1. ஒரே ஆன்மாவுக்காக நிறைய பேர் செபித்தால் என்ன நடக்கும்? அதற்கும் திருச்சபை ஆப்ஷன் கொடுக்கிறது: 'யாரும் நினையாத ஆன்மாக்களுக்கு செபிக்கலாம்.'
2. நான் வேண்டும் ஆன்மா மோட்சத்தில் இருக்கிறதா அல்லது நரகத்தில் இருக்கிறதா என்று எனக்கு எப்படித் தெரியும். இது நமக்கு தெரியாது என்பதால்தான் நாம் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செபித்துக் கொண்டே இருக்கின்றோம். இன்று நான் என் அப்பாவை புனிதர் என நினைத்துக் கொண்டாடிவிட்டு, நாளை அவர் உத்தரிக்கிற நிலையில் இருப்பதாகக் கொண்டாடினால் என்னையே நான் முரண்படுத்துவது போல இல்லையா?
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் மூளை சார்ந்தவை. மனம் ஒன்று இருக்கிறது.
வாழ்வின் மேலானவைகள் இந்த மூளைக்குத் தெரிவதில்லை. மனதிற்குத்தான் தெரியும்.
'புனித உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!'
என்று இன்றைய திருப்பலி நிறைவுபெற்றது.
இவர்கள் புனிதர்கள். ஏனெனில், கடவுளைக் கண்டவர்கள்.
பாதிவழி வந்த இவர்கள் இன்னும் கொஞ்சம் மீதி வழி போக நாம் உதவலாம்.
இதிலும் ஒரு சுயநலம் இருக்கிறது.
நாளை நாம் பாதி வழி நின்றால் வேறு யாராவது நம்மை மீதி வழி நகர்த்துவார்கள்.
இன்றையக் காலைத்திருப்பலியில் கேட்ட பிரசங்கத்தின் மையக்கருத்து "' கிறித்துவர்கள் இறந்தபின் விண்ணகம் செல்வதாகத் திருச்சபை கூறிடினும் இறந்த ஒருவனுக்கு என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாத ஒன்று." இன்று தந்தையின் " உத்தரிக்கிற நிலை" பற்றிய வலைப்பதிவும் குழப்பத்தின் உச்சமாகவே இருக்கிறது.இக்குழப்பத்தின் இறுதியில் என் மனதுக்குப் பட்டது..." விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை."ஆனால் இந்த மாறுபட்ட வாழ்வு எப்படி இருக்கும்? பதிலில்லை.தந்தையின் கூற்றுப்படி இத்தகைய மேலான விஷயங்களை மூளையின் துணைகொண்டு அலசி ஆராயாமல் மனதின் முடிவிற்கே விட்டுவிட வேண்டுமெனத் தோன்றுகிறது. ஆம், பாதிவழி வந்த புனிதர்களுக்காக நாம் வேண்டுவதில் தவறொன்றுமில்லை...அதன் பின்னனியில் ' சுயநலம்' என்ற ஒன்று இருப்பினும் கூட.
ReplyDeleteநிதர்சனமான உண்மை!
Deleteகுழப்பத்தின் மத்தியிலும் தன்னை நம்புபவர்களுக்கு நல்லதொரு 'பதிவு' தர தந்தை எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் நன்றிகள்! பாராட்டுக்கள்!!!
ReplyDeleteDear Father,Thank you for your beautiful post and for good points on that.
ReplyDeleteக
ReplyDelete