Tuesday, November 17, 2015

முந்தியின் முடிச்சு

'நான் என்ன முந்தியிலயா முடிச்சு வச்சிருக்கிறேன்!'

என் அய்யாமை லட்சுமி அம்மாவிடம் காசு கேட்கும்போதெல்லாம் அவர் இப்படித்தான் சொல்வார். ஆனால், தன் முந்தியின் நுனி முடிச்சை அவிழ்த்துக் காசைக் கொடுத்துவிடுவார்.

அவர் காசை முடிந்து வைத்தே அவரின் முந்தி நுனி சுருக்கமாக இருக்கும். முந்தியில் முடிய வெட்கப்படும் சிலர் கைக்குட்டையில் முடிந்து அதைத் தங்களின் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்கள் - குறிப்பாக ஆண்கள். முந்தியில் நாணயங்களைத்தான் முடிய முடியும். நோட்டுக்களை முடிந்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. மேலும் உடலின் வியர்வையால் நோட்டுக்கள் நனைந்துவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
முந்தியின் முடிச்சு - ஒரு பாதுகாப்பு பெட்டகம்.

நெல்வயலில் இறங்குமுன் கழற்றப்படும் மெட்டி, கைவிரலின் மோதிரம், வீட்டுச் சாவி, புகையிலை, பாக்கு, பணம் என எல்லாம் முடியப்படுவது முந்தியில்தான்.

முந்தியின் முடிச்சு எளிதாக அவிழ்வதில்லை. மேலும், அவை நம் உடலை உரசிக்கொண்டே இருப்பதால் அவைகள் தவறவும் வாய்ப்பில்லை.

'உன் வீட்டுக்காரரை உன் முந்தியில் முடிசு;சுக்கோ!' என்று தாய் தன் மகளுக்கு அறிவுரை கொடுப்பதும் இதனால்தான்.

மனிதர்கள் காசை சேகரித்து வைக்கத் தொடங்கியதின் முதற்படி இதுவாகத்தான் இருக்கும். முதலில் முந்தி, அடுத்து சுருக்குப் பை, அடுத்து பர்ஸ், அடுத்து ஏடிஎம் அட்டை என வளர்ந்து கொண்டிருக்கிறது.

முந்தியோடு நிறுத்திக் கொள்தல் பொருளாதாரத்தின் முதல்படியே.

அப்படி முந்தியோடு முடிந்து வைத்து, தன் பொருளாதார வளர்ச்சியை தானே நிறுத்திக் கொண்ட ஒருவரைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:11-28) நாம் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் தாலந்து எடுத்துக்காட்டுக்கும் (25:14-30) மூன்று முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன:

1. மத்தேயு, 'தாலந்து' என குறிப்பிடுவதை, லூக்கா 'மினா' எனக் குறிப்பிடுகிறார். 60 மினாக்கள் சேர்ந்ததுதான் ஒரு தாலந்து.

2. மத்தேயுவில் மூன்று பேருக்கு, ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. லூக்காவில் பத்து பேருக்கு, ஆளுக்கு ஒன்று வீதம் பத்து மினாக்கள் கொடுக்கப்படுகின்றன.

3. மத்தேயுவில் மூன்றாம் நபர் தாலந்தை நிலத்தில் புதைக்கிறார். லூக்காவில் மூன்றாம் நபர் கைக்குட்டையில் முடிகிறார். மேலும் முதல் நபர் ஒன்றை பத்தாகவும், இரண்டாம் நபர் ஒன்றை ஐந்தாகவும் பெருக்குகின்றார். மற்ற ஏழுபேர் தங்கள் மினாக்களை என்ன செய்தார்கள் என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களில் எது இயேசு சொன்னது என்பது குழப்பமாக இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களிலும், மூன்றாம் நபர் கண்டிக்கப்படுகிறார்.

எதற்காக? அவரின் சோம்பலுக்காகவும், அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பெருக்காததற்காகவும்.

டாடா மோட்டார்ஸ் விளம்பரத்தில் அழகாக ஒரு வரி வரும்:

'நமக்கு உள்ளிருந்து நம்மை இயக்குவதே நம்மை மேன்மையானவராக்குகிறது!'

அதாவது, நம் கைகளில் எத்தனை மினாக்கள் இருப்பதைப் பொறுத்து அல்ல நம் மேன்மை. மாறாக, அந்த மினாக்களைப் பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் இருக்கவும் வைக்கின்ற நம் உள்மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்.

ரூபிக்ஸ் க்யூப் பார்த்திருப்பீர்கள்.

இதில் உள்ள நிறங்களை அந்தந்த பகுதியில் சரியாகச் சேர்க்க 43,252,003,274,489,856,000 வழிமுறைகள் உள்ளன.

ஒரு கையடக்க க்யூபே இத்தனை வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றால், கைக்குள் அடங்காத நம் மனித வாழ்க்கைக்கு எத்துணை வழிமுறைகள் இருக்கும்.

ஒரு வழிமுறை தவறாய்ப்போனாலும், அல்லது ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டாலும், அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே.


3 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."முந்தியின் முடிச்சு" என்ன ஒரு அழகான படைப்பு.உங்கள் பதிவில் மிக அழகாக எங்கள் எல்லோரையும் கீழ்காணும் வார்த்தைகள் மூலம் உற்ச்சாகப்படுத்தியிருக்கீர்கள் அதாவது ஒரு வழிமுறை தவறாய்ப்போனாலும், அல்லது ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டாலும், அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே.கண்டிப்பாக முயற்சிக்கலாம்.நீங்கள் தந்த இந்த முயற்சி என்கிற டானிக்கிக்கு தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. ஆண்கள் தங்கள் கைக்குட்டையிலும்,பெண்கள் தங்கள் முந்தியின் நுனியிலும் காசு முடிந்து வைக்கும் வித்த்தை தந்தை விவரித்துள்ள அழகு அவருடைய 'ந்த்தம்பட்டியான்' எனும் பட்டத்திற்கு நியாயம் செய்கிறது. எதற்குடா இவ்வளவு பீடிகை என்று பார்த்தால் கடைசியில் அதை 'முந்தியோடு முடிந்து வைத்துத் தானே தன் பொருளாதாரத்தை தானே நிறுத்திக் கொண்ட ஒருவரோடு' முடிச்சுப் போடுகிறார்.அருமை.நான் சிறிது நாட்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மூன்றாமவர் " நீர் விதைக்காத்தை அறுப்பவர் எனவும், வைக்காத்தை எடுப்பவர் எனவும் தெரிந்ததால் அதைப்புதைத்து வைத்தேன்" என்று சொல்வதை நியாயப்படுத்திக் கொண்டிருந்தேன்.அதிலுள்ள உண்மைப்பொருள் மிக மிக்க் காலங்கடந்தே எனக்கு உரைத்தது.டார்வினின் கோட்பாட்டின்படி உபயோகத்துக்குட்படுத்தாத எந்தப் பொருளுமே விரைவில் துரு பிடித்து தூக்கி எறியப்படும்.இறைவன் நமக்குக் கொடுக்கும் கொடைகளும் அப்படித்தான்.எல்லோருக்கும் ஒன்று போல இல்லையெனினும் கண்டிப்பாக நம் தகுதி தெரிந்து கொடுக்கிறார்.அதை என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவரவர் விருப்பத்திற்கே விட்டு விடுகிறார்.நாம் என்ன செய்யப்போகிறோம்? நமக்குள ளிருந்து வருவதைக்கொண்டு மேன்மையானவரகப் போகிறோமா? நம்மையே கேள்வி கேட்கும் தருணமிது.ஒரு கையடக்க க்யூபே அதன் நிறங்களைச் சேர்க்க எத்தனையோ வழி முறைகளைக் கொண்டுள்ளபோது நமது நிலையை நாம் யோசிக்க வேண்டாமா? " ஒருமுறை தவறிப்போனாலும்,அல்லது ஒருவழியைத் தவற விட்டாலும் அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே!... அர்த்தமுள்ளதொரு பதிவிற்காகத் தந்தையைப் பாராட்டியே தீர வேண்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. Anonymous11/18/2015

      நத்தம்பட்டிக்கு வாங்க...

      முந்தியில நிறைய முடிச்சிட்டு வாங்க...

      சரியா...?

      Delete