Sunday, November 8, 2015

கோவில்

நாளை உரோமையின் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உலக மீட்பர் ஆலயம் எனப்பெயரிடப்பட்டு, திருமுழுக்கு யோவான் மற்றும் திருத்தூதர் யோவான் என்ற இரு யோவான்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது இந்த ஆலயம்.

இதுதான் கத்தோலிக்க திருஅவையின் தாய் ஆலயம். முதன்மை ஆலயம். உலகின் எல்லா ஆலயங்களுக்கும் தலைமை ஆலயம். திருத்தந்தை விசுவாச பிரகடனம் செய்யும் சிறப்பு இருக்கை இங்குதான் இருக்கிறது.

பண்டைக்கால உரோமையில் சுற்றுச்சுவர் இருந்து, அதில் 12 நுழைவாயில்கள் இருந்திருக்கின்றன. நான்கு முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான யோவான் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில். இந்நுழைவாயில் வழியாக வரும் அனைவரும் இந்த ஆலயத்தைப் பார்க்காமல் உரோமிற்குள் செல்லவே முடியாத என்பது போல இதன் அமைப்பு இருக்கிறது. பல நூற்றாண்டு இடைவெளிகளில் இதில் பல பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டாலும், காலத்தின் கன்னத்தில் வடிந்த கண்ணீர்த் துளியாக, வானிலிருந்து விழுந்து குட்டி நிலாவாக இன்றும் மின்னிக் கொண்டிருக்கிறது.

கோவில் கட்டுவது என்பது மனிதர்களின் தொடக்க காலம் முதல் இருக்கிறது. ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் நமக்கு முந்தைய மனித இனம்கூட கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தது எனவும், அதற்கான ஆதராங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைப்பதாகவும் ஜெர்மனியின் பான் நகர மியூசியத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எல்லா இடத்திலும் கடவுளைப் பார்க்கலாம் என்பதெல்லாம் இன்று நாம் சொல்லிக் கொள்ளும் பொய்ச்சாக்கு. அல்லது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் போலிச்சாக்கு.

ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறதுதானே.

நாம் சாப்பிட்ட இடத்திலே என்றாவது பாத்திரம் கழுவுகிறோமா?

அல்லது

எல்லாம் என் வீடுதான் என்று சமையலறையில் நாம் குளிக்கிறோமா?

இல்லை.

கோவில் என்பது முதலில் ஒரு இடம். இடத்தை நாம் தூய்மை என்ற வார்த்தையைக் கொண்டே பிரிக்கிறோம். மாடுகள், நாய்கள், கோழிகள் வாழ்வதற்கான இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏன்? அவற்றின் தூய்மை நம் தூய்மையை விட குறைந்தது. (மாடு தூய்மை குறைவு என்று சொல்வது மோடி அரசில் தேசத்துரோகம் என்றும் கண்டிக்கப்படலாம்!) கடவுள் இருக்கும் இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏனெனில் அவரின் தூய்மையைவிட நம் தூய்மை குறைந்தது. (அப்படியென்றால் கடவுளின் இல்லத்தில் வாழ்வோர் பெற்றிருக்க வேண்டிய தூய்மை அவர்கள்மேல் சுமத்தப்படும் பெரிய பொறுப்பு).

கோவில் - எந்தக் கோவில் என்றாலும், இலாத்தரன் என்றாலும், மீனாட்சி என்றாலும் நமக்கு நினைவுபடுத்துவது மூன்று:

அ. எது எதற்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமோ, அது அதற்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆ. கோபுரம் உயர்ந்திருப்பது போல நம் எண்ணம் உயர வேண்டும்.

இ. நம் வேர்களை மறக்கக் கூடாது - ஒவ்வொரு கோவிலும் நமக்கு முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற பாதச் சுவடு. அந்தச் சுவட்டில் ஏறி நின்றுதான் நாம் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு கோடும் கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்குமான இணைப்புக் கோடு.


2 comments:

  1. என் பாச தந்தைக்கு வணக்கம். உங்கள் கோவில் பதிவிற்கு வாழ்த்துக்கள் . கோவில் - எந்தக் கோவில் என்றாலும், இலாத்தரன் என்றாலும், மீனாட்சி என்றாலும் நமக்கு நினைவுபடுத்துவது மூன்று இதில் தந்தை கூறியிருக்கும் இரண்டாவது கோபுரம் உயர்ந்திருப்பது போல நம் எண்ணம் உயர வேண்டும் ரொம்ப அழகான கருத்து மற்றும் ஆழமாக யோசிக்க வேண்டியது. ஏனென்றால், நாம் கோவிலுக்கு செல்வதே நம் எண்ணங்களாகிய நமது குணநலன்களை நல்லவைகளில் வளர்த்து கொள்வதற்கே.அந்த குணநலன்களை உயர்ந்த எண்ணங்களாக நாம் பிறரிடம் பிரதிபலிக்க வேண்டும். இதெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்றால் நாமே கோவிலாக மாறினால்தான் .நாமே கோவிலாக மாற நம்மையும் நம் எண்ணங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் தந்தை அவர்கள் கோவிலை பற்றி மிக அழகாக கூறியிருக்கிறார்கள்.ஆக, எது எதற்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமோ, அது அதற்கு அந்த இடத்தைக் கொடுப்போம்.தந்தைக்கு நாளை கொண்டாடப்போகும் உரோமையின் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருநாள் வாழ்த்துக்கள்.
    தந்தைக்கு எனது பாராட்டுக்களும்! நன்றிகளும் !

    ReplyDelete
  2. என்ன வார்த்தை சொல்லித் தந்தையைப் பாராட்டுவது இன்றையப் பதிவை இவ்வளவு அழகுறத் தந்தமைக்காக? இந்த 'இலாத்தரன்' தேவாலயத்தை நானும் தரிசித்துள்ளேன் என்ற பெருமையில் மலரும் நினைவுகள் என்னில் பெருக்கெடுப்பதை உணர்கிறேன்.கண்டிப்பாக உரோமை நகருக்குள் நுழையும் எவருமே இந்த தேவாலயத்தைத் தரிசிக்காமல் போக முடியாதுதான்.இதன் பின்னனியில் தந்தை தந்திருக்கும் விஷயங்கள் மகத்தானவை.1. எதற்கு எந்த இடம் கொடுக்க வேண்டுமோ அதற்கு நாம் அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.2. நம் எண்ணங்களும் மேன்மையானதாக இருக்க வேண்டும் கோவிலின் கோபுரம் போல.3. எந்த ஒரு கோவிலானாலும் அது நம் வேர்களையும்,அவற்றின் மூலம் இறைவனோடு நமக்குள்ள உறவையும் நினைவு படுத்த வேண்டும்.ஆனால் ஒரு சந்தேகம்..இறைவனை வழிபடவென்றே தனி ஆலயம் கட்டுவதால் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை எப்படி மறுக்க முடியும்? ஆனாலும் தந்தை இலாத்தரன் தேவாலயம் குறித்து எழுதிய சில வரிகளுக்காக அவரைப் பொறுத்துக் கொள்கிறேன்..." இந்த தேவாலயத்தில் எவ்வளவு பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டாலும்,காலத்தின் கன்னத்தில் வடிந்த கண்ணீர்த்துளியாக, வானிலிருந்து விழுந்த குட்டி நிலவாக இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறது".தான் பார்த்த அனைத்தையும் பிறரும் தெரிந்து கொள்ள தந்தை எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete