Wednesday, November 4, 2015

காணாமற்போவதன் சுகம்

உரோம் நகர் மெட்ரோவில் 'காணவில்லை' என்ற விளம்பரம் அடிக்கடி ஒட்டப்படும். அதிகமாக நாய்க்குட்டிகள் அல்லது பூனைக்குட்டிகள் காணவில்லை என்ற விளம்பரம்தான் இருக்கும். எப்போவாவது பாட்டி அல்லது தாத்தா காணவில்லை என்று சுவரொட்டிகள் இருக்கும்.

மனிதர்கள் ஏன் காணாமற்போகிறார்கள்?

போர், வன்முறை, இடம்பெயர்தல், பயணம், இயற்கைச் சீற்றம் - இவற்றால் காணாமற்போகிறவர்கள் பலர்.

ஆனால், சிலர் விரும்பி தாங்களே காணாமற்போகிறார்கள்.

குணமாக்க முடியாத நோய், எதிர்கொள்ள முடியாத பிரச்சினை என்ற நேரங்களில் தற்கொலைக்கு மாற்றாக மனித மனம் கையிலெடுக்கும் ஆயுதம்தான் காணாமற்போதல்.

இப்படி காணாமற்போகிறவர் மற்றவரைத் தேட வைத்துத் தண்டிக்கிறார். மற்றவரைத் தேட வைத்து தன் பழி தீர்க்கிறார்.

'நீ எனக்கு வேணும்!' என்று தன்னையே அவர் தேட வைக்கிறார்.

தேடுபவருக்கு தேடுதல்தான் தண்டனை.

'அன்பு மகனே. நாங்கள் உன்னை ஏற்றுக்கொள்கிறோம். நீ விரும்பியதைச் செய்ய அனுமதிக்கிறோம். தயவு செய்து திரும்பி வா. இப்படிக்கு, உன்னைத் தேடி பசி, தாகமுற்றுக் கிடக்கும் உன் பெற்றோர்'

இப்படி ஒரு விளம்பரத்தை தினத்தந்தியின் விளம்பரப்பகுதியில் பார்த்திருக்கிறேன்.

அப்படி அந்த மகன் செய்ய விரும்பியது என்ன? அவர்கள் தடுத்ததற்காக இந்தப் பெற்றோர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

நாம் தவறவிட்ட ஒன்று கிடக்கும் வரை நம் மனம் வேறு எதிலும் லயிப்பதில்லை.

ஆக, 100 ஆடுகளில் 1 தவறினாலும், 10 திராக்மாக்களில் 1 தவறினாலும் நம் மனம் எஞ்சிய 99 அல்லது 9ல் நிலைகொள்வதில்லை. வேறு வேலை பார்க்க முடிந்தாலும் நம்மால் முடிவதில்லை. நம் மனம் காணாமற்போனதைச் சுற்றியே வருகிறது.

பொருளுக்கே இப்படித் தவிக்கிறோம் என்றால், உயிருக்கு எப்படித் தவிப்போம்?

இந்த எல்லா சோகமும் ஒரே நொடியில் மறைந்துவிடுகிறது - காணாமற்போனது கிடைத்தவுடன்.

இனி ஒருபோதும் உன்னைத் தொலைப்பதில்லை என்று நாம் அதனிடம் சொல்கின்றோம். அதுவே நம் அன்பிற்குரியவராக இருந்தால் அவரின் மனம் புண்படாமல் நாம் நடந்து கொள்கிறோம். காணாமற்போன நாட்களில் என்ன நடந்தது என்று ஆவலாய் விசாரிக்கிறோம். அவரை நாம் தண்டிப்பதில்லை. கண்டிப்பதில்லை. அவர் கிடைத்ததே போதும் என நினைத்துவிடுகிறோம்.

சில நேரங்களில் மற்றவைகளின் அல்லது மற்றவர்களின் மதிப்பு தெரிய நாம் அவைகளை அல்லது அவர்களைத் தொலைக்க வேண்டும்.

அவர்கள் இருக்கின்றபோது இல்லாத அருமை அவர்கள் இல்லாதபோது நம்மை அழவைத்துவிடுகிறது. நாம் எந்த அளவிற்கு அவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்த்திவிடுகிறது.

என் அன்பிற்குரியவர் காணாமற்போய்விட்டால், யாரைப் பார்த்தாலும் அவரைப் போலவே தெரிகிறது. எந்தக் குரலும் அவர் குரல்போல இருக்கிறது. எந்தத் தொலைபேசி அழைப்பும் அவரிடமிருந்தா என பார்க்கத் தோன்றுகிறது.

மனித தேடலே இப்படியென்றால், கடவுளின் தேடல் எப்படி இருக்கும்?

இந்தக் கேள்விக்கு விடைதான் நாளைய நற்செய்தி வாசகம் (லூக் 15:1-10).


6 comments:

  1. தந்தைக்கு வணக்கம். என்ன ஒரு ஆழமான பதிவு "காணாமற்போவதன் சுகம்".இதில் என்னை தொட்ட வார்த்தைகள் அவர்கள் இருக்கின்றபோது இல்லாத அருமை அவர்கள் இல்லாதபோது நம்மை அழவைத்துவிடுகிறது. நாம் எந்த அளவிற்கு அவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்த்திவிடுகிறது.நிறைய நேரங்களில் வெளிநாட்டு போன் வரும் போதெல்லாம் என் குருவோட போனா இருக்குமோ என்று நினைத்ததுண்டு.அதற்காக அழுததெல்லாம் கிடையாது .ஏனென்றால் நமக்கு பிடித்தவர்கள் நம் நினைவில் இருக்கு போது நாம் ஏன் அழவேண்டும்? சில நேரங்களில் தேடும் கடவுளை நாம் அன்பு செய்யும் மனிதரிலும் நம்மை நல வழியில் தயார் படுத்தும் மனிதரிலும் காணலாம்.அந்த தேடலின் சுகமே தனி.தந்தைக்கு நன்றிகளும்! பாராட்டுகளும்!!

    ReplyDelete
  2. என்னை நெகிழ வைக்கும் பதிவு.இந்த நொடியில் எனக்குத் தேவைப்பட்ட ஒரு பதிவும் கூட.எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு." கண்டா எருஞ்சு வரும்; காணாட்டாத் தேடி வரும்".. என்று.ஒரு பொருளோ,ஒரு மனிதரோ நம் பார்வை விழும் இடத்தில் இருக்கையில் அதன் அல்லது அவர்களின் நமக்குமதிப்பு தெரிவதில்லை என்பது ஒரு புறமிருக்க, நாம் கேளாமலே அதீதமாக்க் கிடைக்கும் ஒரு விஷயத்திலும் நம் மனது இலயிப்பதில்லை. எல்லாவற்றிற்கும்.....கொடுப்பதற்கும் சரி, எடுப்பதற்கும் சரி அளவு கோல் தேவைப்படுகிறது. ஆனால் அளந்து அளந்து கொடுப்பது சரியா என்றால் அதுவும் சரியில்லை என்று மனது சொல்கிறது.பின் என்ன தான் செய்ய? சிறிது நேரம் இந்தப் பொருட்களையும்,மனிதரையும் நினைத்து ஓலமிடுவதை விட்டு " ஒரு போதும் உனைப்பிரியா நிலையான உறவொன்று வேண்டும் எனக் கேட்போமா? "... இந்த உறவிற்கு முன் ஒரு ஆடு என்ன தொண்ணூற்றி ஒன்பது ஆடுகளும் காணாமல் போயினும் கூட நம்மிடம் உள்ள நிலையான இறை உறவு நம்மைக் காக்குமில்லையா? அந்த உறவுக்காக வேண்டுவோம். உறவின் அருமை பற்றி சிலாகித்த தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
    Replies
    1. அம்மா, உங்களை ஒரு பெண் தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். தந்தையின் பதிவிற்கு நீங்கள் போடும் கமெண்ட் ரொம்ப நன்றாக இருக்கிறது . மதுரை தமிழ் செம்மையா கலை கட்டுது. இப்படிக்கு அருட்சகோதரி. கலை. உங்களுக்கு எனது ஜெபத்தை உரித்தாக்குகிறேன்.

      Delete
  3. அன்புமிக்க அருட்சகோதரிக்கு என் வணக்கமும்,நன்றியும்.உங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.தந்தையின் பாலம் கட்டும் திறமையைப் பாராட்டும் ஒரு சிறு அணிலின் முயற்சி இது.அவ்வளவே! என் தமிழுக்குச் சொந்தம் சங்கம் வளர்த்த மதுரை அல்ல; தமிழ் வளர்த்த தஞ்சை என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.ஆண்டவன் நம்மை,நமது முயற்சிகளை ஆசீர்வதிப்பாராக! உங்களின் ஜெபத்துக்கு என் நன்றிகள்.அன்புடன்.......

    ReplyDelete
  4. இந்த பதிவை நான் வாசித்த அதே வேளையில், என் மனைவி முக்கியமான ஒரு பொருளை (Army related ID) தேடிக்கொண்டிருந்தாள். எப்போதும் அவசியப்படாத அது, காணாமல் போய்விட்டது என்பதை அறிந்த அவள் பட்ட பாடு என்னையும் வேதனை பட வைத்தது.
    விடு, பொறுமையாக நாளை தேடலாம் என்று நான் சொன்னதைக் கூட காத்து கொடுத்து கேட்க அவள் தயாராக இல்லை.
    காணாமல் போன பொருளுக்காக வருந்துவதா, அதை நினைத்து வருந்தும் என் மனைவியை எண்ணி வருந்துவதா?
    ஆனால், அது கிடைத்ததும் அவள் முகத்தில் மலர்ந்த நிம்மதியை பார்க்கணுமே...
    சகோதரி ஃபிலோமினாவைப் போல எழுத்து வன்மை என்னிடம் இல்லையானாலும், ஆர்வம் மட்டும் குறையவில்லை...
    தத்தமது மேலான கருத்துக்களை பதிவிடும் அனைவருக்கும் நன்றி ~ அருத்தந்தைக்கும்...
    இறை ஆசீர் வேண்டி செபிக்கிறேன்!

    ReplyDelete