Thursday, November 19, 2015

தண்ணீர் வடியட்டும்

'சினிமாக்களிலும், நாடங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவது போல, நிஜ வாழ்விலும் காட்சிகள் நொடிப் பொழுதில் மாறித்தான் போகின்றன...

...எப்பேர்ப்பட்ட வசதி உள்ளவர்களையும் ஒரு நொடிப் பொழுதில் பிச்சைக்காரர்கள் ஆக்கி ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறானே...

ஒரு சில விஷயங்களை நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது நிஜவாழ்வில் நடந்துவிடுகிறது...

மழைவெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல. ஆனால் நம்மை நம்பி நம்மோடு இருப்பவர்களுக்கு தேவையானதைக் கொடுக்க வழியில்லாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் மழைமீது கோபம் வந்தது...'

சென்னை வாசகி அருணா எஸ்.சண்முகம் அவர்கள் எழுதியதாக ஆனந்த விகடன் செய்திகள் இணையதளத்தில் வலம்வரும் பதிவு இது.

நொடிப்பொழுதில் காட்சிகள் மாறிவிட்டன சென்னையில் - இதுதான் இவரின் பதிவின் மையம்.

கடந்த நான்கு நாட்களாக முதல் வாசகம் என நாம் மக்கபேயர் நூலின் சோகமான பகுதிகளை வாசித்துக் கொண்டிருந்தோம் - சிறை, வெட்டு, குத்து, கொலை, மரண தண்டனை, ரத்தம், கண்ணீர், அழுகை - இப்படி இருந்தது நாளை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது?

இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

அழிந்து கிடந்த எருசலேம் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டுவிட்டது.

இன்னும் சில நாட்களில் மழைநீரெல்லாம் வடிந்து மக்கள் தாங்கள் இருந்த வீட்டை மீண்டும் தேடிவந்து, அதை புதுப்பித்து, அல்லது புதிதாய்க் கட்டி மறுபடியும் குடிபோகும்போது ஒரு உணர்வு வரும். என்ன உணர்வு? இப்போ வெள்ளத்தை வரச்சொல்லுங்க பார்க்கலாம்! என்பது போல ஒரு பெருமிதம் வரும். யாரும் என்னை வெற்றிகொள்ள முடியாது என்கிற ஒரு தன்னம்பிக்கை உணர்வு வரும்.

இனி இவர்கள் வெறும் மண்தான். வெறும் சாம்பல்தான். இப்படித்தான் இஸ்ராயேல் மக்கள் அழிந்துவிட்டார்கள் என உலகம் நினைத்தது.

ஆனால், இதோ புதிய ஆலயம். இதோ மறுபடியும் அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

'மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது. வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது.'

அவர்களின் அழுகை, கண்ணீர் மறைந்துவிட்டது.

சென்னையின் தண்ணீர் சீக்கிரம் வடியட்டும்...


3 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.இந்தப்பதிவை மிகவும் அழுத்தம் திருத்தமாக படைத்திருக்குறீர்கள்.என்ன தான் அந்நிய நாட்டில் இருந்தாலும் தன் மக்களின் நிலையை பார்த்து இரக்கம் கொள்ளும் கருணை உள்ளம் உங்களுக்கு கடவுள் தந்திருக்கார்.அதற்காக நன்றி.கண்களில் வடிந்து கொண்டிருக்கும் மக்களின் கண்ணீர் மறைந்து பழைய நிலைக்கு திரும்பி வர இறைவனை வேண்டுவோம்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.!

    ReplyDelete
  2. தன் கையில் கிடைக்கும் எதையுமே உருமாறச் செய்யும் ஒரு மந்திரவாதியைப்போல கிடைக்கும் கருப்பொருளைக் கவிதையாக வடிக்கும் நயம் தந்தைக்கே உரியது.மக்கபேயர் நூலின் பல சோகமான பக்கங்களை தண்ணீரால் த்த்தளித்துக் கொண்டிருக்கும் தலைநகரோடு ஒப்பிடுகிறார் தந்தை.இஸ்ரேல் மக்களை வெறும் மண் என்றும்,சாம்பல் என்றும் நினைத்த மக்களின் முன்பாக ஒரு புதிய ஆலயம் கட்டி அவர்களைப் பெருமித்த்தோடும்,தன்னம்பிக்கையோடும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கிறார் இறைவன்.நாமும் கூட நம் இனத்தாலேகூட பல சமயங்களில் இழிநிலைக்கு ஆளாக்கப்படலாம்.அந்நேரங்களில் இறைவனை நோக்கிப் பார்க்கும் நம் கண்கள் மட்டுமே நம்மை அழிவிலிருந்து காப்பாற்றும்." மழைவெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல;ஆனால் நம்மை நம்பி நம்மோடு இருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க வழியில்லாமல் நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும் போதுதான் மலைமீது கோபம் வந்தது" வாசகி அருணாவின் வரிகள் நாசுக்காக இருப்பினும் நம் அரசியல் வாதிகளுக்கு சாட்டையடி.பொதுவாக சங்க இலக்கியங்களில் கவிஞர்கள் ஒரு நாட்டை வாழ்த்தும்போது " நீர் உயர" என்றுதான் வீழ்த்துவார்கள்.ஆனால் இன்று " சென்னையில் தண்ணீர் வடியட்டும்"என்று தந்தை வாழ்த்தியிருப்பது நாம் வாழும் காலத்தின் அவலத்தையும்,நம்மை ஆள்பவர்களின் தன்னலத்தையும் மட்டுமே காட்டுகிறது.யோசிக்க வைக்கும் ஒரு பதிவைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  3. மன்னிக்கவும்....மழை என்பது தவறுதலாக மலை என்று பதிவாகியுள்ளது.

    ReplyDelete