Friday, November 20, 2015

அர்ப்பணத் திருநாள்

'அந்த மரம் மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது. அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான். அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான். அதன் மேல் அவன் உணவு சமைக்கிறான். இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான். பின்னர் குளிர்காய்ந்து, 'வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!' என்று சொல்லிக் கொள்கிறான். எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி, 'நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்' என்று மன்றாடுகிறான்.' (எசாயா 44:15-17)

எமில் டர்கெய்ம் என்னும் சமூகவியலார் எழுதிய 'கடவுள் தோன்றிய கதை' என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு சில இடத்தை, ஒரு சில பொருளை, ஒரு சில நபரை நாம் தூயவர் என்று உயர்த்தி வைக்கிறோம்.

இந்தத் தூய்மை அவைகளுக்கு அல்லது அவர்களுக்கு எங்கிருந்து வருகின்றன?
அவைகள் அல்லது அவர்கள் அந்தத் தூய்மையை தன்னகத்தே கொண்டிருக்கிறார்களா? அல்லது மனித மனத்தில் தோன்றும் 'உணர்வினால்' அவைகள் அல்லது அவர்கள் தூயவர்களாகத் தெரிகின்றார்களா?

பொருட்களை நாம் நகர்த்துகிறோம். ஆனால் சில நேரங்களில் பொருட்கள் நம்மை நகர்த்துகின்றன - சிலுவை, பைபிள், ஓஸ்தி, நற்கருணைப் பெட்டி, மாதா சுரூபம், தீர்த்தம் - இவைகள் நம்மை நகர்த்தக் காரணம் என்ன?

வேற்று தெய்வங்களை உருவாக்குபவர்களை நையாண்டி செய்யும் எசாயா மேற்காணும் உருவகத்தைப் படைக்கின்றார். இந்த உருவகத்தில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது. என்ன உண்மை? ஒரே மரம் தான். அந்த மரத்தின் ஒரு பகுதியை நெருப்பு மூட்டி குளிர்காயவும், அடுத்த பகுதியை இறைச்சி சமைக்கவும், அடுத்த பகுதியை சிலை செய்யவும் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலை மட்டும் திடீரென மதிப்பு பெறுவது எப்படி?

நாளை தூய கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருநாளைக் கொண்டாடுகிறோம். யூத மரபில் பெண் குழந்தைகளை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பது கிடையாது. இருந்தாலும் விவிலியத்திற்குள் வராத 'யாக்கோபின் நற்செய்தி' என்ற திரைமறைவு நற்செய்தியில், சுவக்கீன், அன்னம்மாள் தங்கள் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுத்தார்கள் என்றும், பெற்றெடுத்த மகளை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக்கினார் என்றும், தான் 'வயதுக்கு வரும் வரை' மரியாள் அங்கே வளர்ந்தார் என்றும் இந்த நற்செய்தி குறிப்பிடுகிறது.

'முதியவர் குழந்தை பெறுதல்' அல்லது 'குழந்தைப் பேறு இல்லாதவர் குழந்தை பெறுதல்' என்பது விவிலியத்தில் வழங்கப்பெறும் ஒரு இலக்கிய நடை. நீதித்தலைவர்கள் நூலில் வரும் சிம்சோன், வரலாற்று நூல்களில் வரும் சாமுவேல் எல்லாம் இப்படிப் பிறந்தவர்கள்தாம். ஆக, மரியாளின் பிறப்பையும் இந்த இலக்கிய நடையில் யாக்கோபு எழுதியிருக்கலாம்.

மரியாளை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது அவருக்கு முக்கியமோ என்னவோ, அது நமக்கும், நம் கிறிஸ்தவத்திற்கும் முக்கியம்.

அதாவது, அவர் எல்லாரையும் போல இருந்தாலும், கொஞ்சம் உயர்த்தப்பட்டு தூய்மையான இடத்தில் அவரை நாம் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் தூய்மையான கடவுள் அவரிடம் பிறந்தார் என்ற லாஜிக் சரியாக வரும்.

ஆக, தூய்மை என்பது மனிதர்களாகிய நாம் ஒரு பொருளுக்கும், ஒரு நபருக்கும் கொடுப்பது. இதற்கு எதிர்ப்பதமாக தீட்டு என்பதை பொருட்களுக்கும், நபர்களுக்கும் கொடுப்பது நாம்தான். இதை நாம் தனிநபராகச் செய்வதில்லை. நாம் சார்ந்திருக்கும் குழுதான் செய்கிறது. 'கிறிஸ்தவர்கள்' என்ற குழுவில் நாம் இருப்பதால் பைபிள் நமக்கு புனித நூலாக இருக்கிறது. இதுவே நாம் 'இந்துக்கள்' அல்லது 'இசுலாமியர்கள்' என்னும் குழுவில் இருந்தால் நாம் 'கீதை' அல்லது 'குரானைத்தான்' புனித நூல் என்று சொல்வோம். ஆக, எந்த நூலும் புனிதம் என்றும் தீட்டு என்றும் இல்லை. நாம் எந்த தளத்தில் நிற்கிறோமோ, அதுதான் புனிதம்-தீட்டை நிர்ணயம் செய்கிறது.

அப்படியென்றால் இயல்பாகவே தூய்மை, தீட்டு என்பது பொருட்களில், நபரில் இல்லையா? - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் இருக்கிறதா? என்பது போல ஒரு போட்டியை வைத்தால்தான் சரியாகும்.

நிற்க.

நாளை நாம் கொண்டாடும் மரியாளின் அர்ப்பணத் திருநாள் சொல்வது என்ன?

நாம் கடவுளுக்கென ஒன்றை அல்லது ஒருவரைத் தள்ளி வைக்கும்போது, அவர் அதை அல்லது அவரைப் புனிதப்படுத்தி நமக்கே தருகின்றார்.

நாம் அன்றாடம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியிலும் இதைப் பார்க்கலாம்: நாம் கொடுக்கும் அப்ப, ரசத்தை கடவுள் நமக்கே தன் திருமகனின் உடல், இரத்தம் என்று கொடுத்துவிடுகிறாரே.

5 comments:

  1. நாளை நாம் நினைவு கூறவிருக்கும் மரியாளின் 'அர்ப்பண நாள்' நமக்கு உணர்த்தும் பல அழகான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் தந்தை.வெட்டப்பட்ட ஒரு மரத்தை மனிதன் தீ மூட்டவும்,அடுப்பெரிக்கவும்,உணவு சமைக்கவும்.இறைவனின் சிலை வடிக்கவும் என்று பயன்படுத்தினாலும்,அந்த இறைவனின் உருவத்திற்குத் தரும் முக்கியத்துவத்தைப் பிற பொருட்களுக்குத் தருவதில்லை.அது போலவே தான் இறைவனும் மரியாளைத் தன் குமாரனைப் பெற்றெடுக்கும் பெட்டகமாக ஆதியிலேயே தேர்ந்தெடுத்திருந்ததால் அவர் மனிதரில் எல்லாம் உயர்த்தப் பட்டுத் தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.கண்டிப்பாக இறைவன் ஒருவரை,ஒரு விஷயத்தைப் புனிதப்படுத்தும் போது அவரையும்,அவற்றையும் திருப்பி நமக்கே தருகிறார் என்பதை நாம் தினம் உட்கொள்ளும் அப்ப,இரச விஷயத்தில் உணர்கிறோம் என்பது அழகான விஷயமே! கண்டிப்பாகப் புனிதமும்,தீட்டும் கண்டிப்பாக யாரிலும்,எந்தப்பொருளிலும் இல்லை; அது நிற்பவரின் தளத்தையும் பார்வையையும் பொறுத்தது என்பது நாம் அனுபவத்தில் கண்டுணர்ந்த விஷயமே! இன்றையப் பதிவின் அனைத்து விஷயங்களும் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கடினமாய் இருப்பினும்,ஏற்றுக்கொள்ள முடியாதவை அல்ல.மரியாளின் அர்ப்பண தினமான நாளைய தினம் நம்மையும் இறைவனின் பராமரிப்புக்குள் அர்ப்பணிக்கும் தினமாக இருக்கட்டும்.தந்தைக்கும்,மற்ற அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு வணக்கமும் திருவிழா வாழ்த்துக்களும்.இன்றைய நாளில் எங்கள் அனைவரின் அர்ப்பணத்திர்காகவும் சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தந்தைக்கு வணக்கம் மற்றும் அர்ப்பண திருநாள் வாழ்த்துக்கள். நாம் கடவுளுக்கென ஒன்றை அல்லது ஒருவரைத் தள்ளி வைக்கும்போது, அவர் அதை அல்லது அவரைப் புனிதப்படுத்தி நமக்கே தருகின்றார்.மிக மிக அழகான மற்றும் அர்த்தமுள்ள வரிகளும் கூட.இந்த மேற்கூறிய வரிகளுக்கு அருள்நிலையில் உள்ள நம் எல்லோரையும் தள்ளப்பட்டு பார்ப்போம்.தந்தை கூறியிருக்கும் இந்த வரிகள் நம் வாழ்க்கையிலும் ஒரு புனிதத்தை ஏற்ப்படுத்தும் கண்டிப்பாக.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  4. அருட்சகோதரிக்குத் திருவிழா வாழ்த்துக்களும்,நன்றிகளும்.கண்டிப்பாக இந்த உலகம் நம்மைத் தள்ளி வைக்கும் போதுதான் நம்மில் உள்ள புனிதம் நமக்குப் புரிய வருகிறது என்பது நானும் அறிந்து கொண்ட உண்மை.அர்ப்பண வாழ்வில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள அத்தனை அருட்பணியாளர்களுக்கும்,அருட்சகோதரிகளுக்கும் என் செபங்களும்,வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete