Wednesday, November 25, 2015

கழுத்துக்கு வலி

'பின்னர், அரசன் அரண்மனைக்கு திரும்பிச் சென்று,
அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை.
வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை.
உறக்கமும் அவனைவிட்டு அகன்றது.'

(காண்க. தானி 6:11-27)

தன் அமைச்சர்களின் சொல் கேட்டு, தானியேலை சிங்கக் குகையில் அடைத்துவிட்டு, தாரியு அரசன் அனுபவித்த துயரத்தைத்தான் நாம் மேலே வாசிக்கின்றோம்.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு. என்ன?

'போப்பாண்டவர் யார்கூடயாவது ஃபோனில் மணிக்கணக்கில் பேசுவாரா?'

'அவரின் சிறுவயது நண்பர்கள், தோழிகள், உடன் பயின்றோர், உடன் பணிசெய்தோர் இப்படி யாரையாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் அவர் என்ன செய்வார்?'

'நம்ம சி.எம். ஜெயா தன் மனம் விட்டு யாரிடம் பேசுவார்?'

'ஏதாவது நல்லது கெட்டதுக்கு போக முடியுமா?'

'கல்யாண வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியுமா?'

அதாவது, வாழ்க்கையில் நாம் மேலே செல்லச் செல்ல நிறைய விடயங்கள் நம்மை விட்டு மறைந்துவிடுகின்றன. அல்லது அவை 'கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாத ஒன்றாகவே' இருக்கின்றது.

சி.எம். பேசுவது, போப் பேசுவது, பிரசிடென்ட் பேசுவது எல்லாம் பதிவு செய்யப்படும். யாரையும் தனியாக சந்திக்கச் செல்ல முடியாது. கூடவே பாதுகாப்பு அதிகாரிகள், துப்பாக்கி, தோட்டா என எல்லாம் உடன் வரும். யாரையும் இவர்களால் நம்ப முடியாது. இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களே இவர்களைச் சந்திக்க வந்தாலும், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுவர். தாங்கள் விரும்பிய எதையும் வெளியில் வாங்கிச் சாப்பிட முடியாது. எல்லாம் சோதித்தபின்னே தரப்படும்.

இவர்களின் ஆடைகள், அலங்காரங்களுக்குள் மறைந்திருக்கும் இவர்களின் உணர்வு நமக்குக் காட்டப்படுவதே இல்லை. எந்நேரமும் இவர்கள் சிரிக்க வேண்டும். கேமரா முன் நிற்க வேண்டும். பார்த்துப் பார்த்து நடக்க வேண்டும். யோசித்து யோசித்து பேச வேண்டும். தங்கள் மனதிற்கு நல்லது என நினைப்பதை சொல்லவும் முடியாது. செய்யவும் முடியாது.

இப்படிப்பட்ட ஒரு அரசன்தான் நாளைய முதல்வாசகத்தில் இருக்கிறான்.

தானியேல் இப்போது அரசவையில் ஒரு நிரந்தர அமைச்சராக இருக்கிறார். அவரின் பிரசன்னம் பிடிக்காத எதிர்கட்சி அமைச்சர்கள் அவரைப் பற்றி அரசனிடம் புகார் அளிக்கின்றனர். அரசனுக்கு தானியேலும் வேண்டும். தான் போட்ட சட்டமும் வேண்டும். மதில்மேல் பூனையாய் இருந்தவன் ஒருகட்டத்தில் தானியேலை சிங்கக் குகையில் தள்ளிவிடுகிறான். இரவெல்லாம் தூக்கமேயில்லை.

சதாம் உசேனை தூக்கில் போட்ட புஷ் தூங்கியிருப்பாரா?

கலிலேயாவை தூக்கிலிட்ட போப்பாண்டவர் தூங்கியிருப்பாரா?

தங்கள் மனச்சான்றை இவர்கள் எப்படி சமாதானப்படுத்தியிருப்பார்கள்?

பாவம் தாரியு அரசனின் மனச்சான்று கேட்க மறுக்கின்றது.

விடிந்தும், விடியாததுமாய் ஓடுகிறான் குகையை நோக்கி. அங்கே தானியேலை உயிருடன் காண்கிறான்.

'Uneasy lies the head that wears a crown' என்பார் ஷேக்ஸ்பியர் (Henry IV, Part II, Act III, Scene 1).

மணிமுடி கழுத்துக்கு மட்டுமல்ல. மனத்திற்கும் வலி.



6 comments:

  1. "தன் அமைச்சர்களின் சொல்கேட்டு தானியேலின் சிங்கக்குகையில் அடைத்த தாரியு மன்னனின் உணவு உட்கொள்ளவோ,உறங்கவோ அல்லது வேறெந்தக் களியாட்டத்திலும் ஈடுபடுவோ இல்லை" என்கிறது தானியேல் வாசகம்.இதை உள் வாங்கிய தந்தையும் பெரிய பொறுப்பில்,பதவியில் உள்ளவர்கள் துறக்க நேரிடும் வெகு இயல்பான,சாதாரண காரியங்களை நினைத்து ஆதங்கப்படுகிறார்.தப்பு செய்து விட்டு அதற்காக மனம் மறுகுவதும், தங்களையே வறுத்திக்கொள்வதும் 'மனசாட்சி' உள்ள வெகு சொற்பமான தலைவர்கள் தாம். தலையே போனாலும் பரவாயில்லை....அந்த தலையை அலங்கரிக்கும் மணிமுடிக்காக எதையும் செய்யலாம் என நினைப்பவருக்குத் பலர். முதல் பொய்,முதல் கொலை முதல் காட்டிக்கொடுத்தல் ...இவை வேண்டுமானால் மனதை உறுத்தலாம்.ஆனால் அதுதான் வாழ்க்கை என்றான் பிறகு அவர்கள் தாங்கள் இழக்கும் நியாயமான உறவுகளைப்பற்றியோ,சிற்சில சிற்றின்பங்களையோ குறித்துக் கவலைப்படுவதில்லை....கவலைப்படவும் முடியாது என்றே நினைக்கிறேன்.அப்படி எல்லோருமே கோவலனைக் கொலை செய்த பாண்டிய மன்னன் வழியைப் பின்பற்ற நேர்ந்தால் நமக்கு வாரம் ஒரு சி.எம்முக்கு எங்கே போவது? ஆனாலும் அவரவர் அதிலும் பெரும்பதவியல் உள்ளவர் செய்யும் சரி, தப்புக்கு அவரவர் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.அதற்காகத்தான் பெரும் பதவியில் உள்ளவர்கள், திருச்சபையை, நாட்டை வழிநடத்துபவர்கள் போன்றோருக்கு நம் செபம் தேவைப்படுகிறது.அவர்கள் செய்யும் செயல்களை சரியா,தவறா என நியாயத் தராசில் வைத்து அளப்பதை விட்டு அவர்களுக்கு நம் செபத்தால் உதவி செய்வோம்.நல்லதொரு,யோசிக்கத்தூண்டும் ஒரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.உங்களின் அனைத்து பதிவுகளுமே விலைமதிக்க முடியாதவை.ஏனென்றால்,உங்களின் பதிவுக்கு நீங்களே சொந்தக்காரர். இன்றைய உங்களின் பதிவு காலத்தை வெல்லக்கூடிய பதிவு.என் மனதை வருடிய வார்த்தைகள் "மணிமுடி கழுத்துக்கு மட்டுமல்ல. மனத்திற்கும் வலி".இவ்வார்த்தைகள் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.பதவியில் உள்ளவர்கள் ஒரு நாளும் சந்தோசமாக இருப்போம் என்பதை எண்ணக்கூடாது.ஆக,மணிமுடி கழுத்தில் இருக்கும்வரை மனதில் வலி இருக்கத்தான் செய்யும். நல்லதொரு பதிவை தந்த தந்தைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. I loved the quote from Shakespeare, 'Uneasy lies the head that wears a crown'.
    Some unclean heads generate and nurture "lice" too.
    Lies or lice, both aren't healthy for a sitting crown.

    ReplyDelete
  4. இன்று 'நன்றி' சொல்லும் நாள்.'இது மேலை நாட்டுக் கல்ச்சர் அல்லவா' என சிலர் புருவத்தை உயர்த்தலாம்.நாம் உண்ணும் உணவிற்கும்,உடுத்தும் உடைக்கும் அவர்கள் தான் நமக்கு 'மாதிரி' என்றான பிறகு அவர்களிடம் உள்ள 'நல்லதை' எடுத்துக்கொள்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.இன்றையத் திருப்பலி வாசகமும் இந்த உணர்வைத்தான் எடுத்துக்கூறியது.யாருக்கு நன்றி சொல்வது?
    நம்மைப் படைத்துக்காத்து நம்மைத் தன் உள்ளங்கைகளுக்குள் பொதிந்து வைத்திருக்கும் இறைவனுக்கும்,நம்மை இவ்வுலகிற்கு ஈன்றெடுத்த பெற்றோர்,உடன்பிறந்தோர்,உறவினர்,நண்பர்கள்.உபகாரிகள்...மற்றும் நாம் உயிரோடும் நல்ல உணர்வோடும் வாழ்ந்திடத் துணை நிற்கும் அனைத்து அண்ட சராசரங்களுக்கும் நம் நன்றிகள் உரித்தாகட்டும்.அத்துடன் விவிலியத்தையும்,அதன் நுணுக்கங்களையும் நம் உள்ளங்களுக்கும்,இல்லங்களுக்கும் கொண்டுவரும் தந்தைக்கும் இந்நாளில் அனைவரின் பெயரால் " நன்றிகள்". இறைவன் தங்களுக்கு நல்ல உடல்,உள்ள சுகம் தந்து இன்னும் அவரது புகழ் பரப்பும் கருவியாகத் தங்களைப் பயன்படுத்த என் செபங்களும்,வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  5. Fr Yesu and Mrs. PHILO AROCKIA have such a way with words. If Christian Tamil can be this beautiful, arresting, inspiring and enchanting, I pray that the womb Tamil Churches conceive and birth forth many more like Yesu and Philo...

    ReplyDelete
  6. Dear Brenard! Thanks alot for the nice words tho' I'm of the humble opinion that it's only Fr.Yesu who deserves all ur praises & not me.Anything that is said & done with pure genuiness of heart is meant to be beautiful.Am I right? I did enjoy your pun on the words 'Lies or lice' .A word of appreciation to you too for the contribution you make to the Christian Literature. May The Good Lord keep you blessed for all eternity.love...

    ReplyDelete