Saturday, November 28, 2015

சூரியகாந்தி

நேற்று இரவு 'சூரியகாந்தி' (1973) திரைப்படம் பார்த்தேன்.

மோகன் (முத்துராமன்) ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் மூத்த மகன். எல்லாவற்றிலும் தானே முதல்வனாக இருக்க வேண்டும் என்ற மேட்டிமை மனப்பான்மை (superiority complex) இவருக்கு உண்டு. இவரும் ராதாவும் (ஜெயலலிதா) காதலில் விழுகின்றனர். காதல் திருமணமாகக் கனிகிறது. தன் குடும்பத்தை நடுத்துவதற்குப் போதாத சிறு வருவாய் தரும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார் மோகன். ராதா மற்றொரு கம்பெனியில் விற்பனைப் பிரிவில் சேர்ந்து மேலாளராக உயர்கின்றார். அவரே குடும்பத்தின் தேவைகளையும் நிறைவேற்றத் தொடங்குகிறார். ராதாவின் புகழும், பொருளும் உயர்வது கண்டு அவரை வெறுக்கிறார் மோகன். மோகனின் தங்கை சுசிலாவின் திருமணத்தை ராதாவே முடிவு செய்கிறார். அதற்கான பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார். விளம்பரத்தின் வழியாக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் மோகன், ராதாவைவிட அதிகம் சம்பாதித்து திருமணத்தை தானே நடத்த முயல்கின்றார். திருமணத்தை யார் நடத்தி வைக்கிறார்? யார் யாரைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்? என்ற கேள்விகளின் விடையில் மறைந்திருக்கிறது திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்.

'சூரியகாந்தி' - இந்த திரைப்படத்தின் தலைப்பிற்கான விளக்கம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் தரப்படுகிறது.

சூரியனின் திசை நோக்கி தன் முகத்தை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் சூரியகாந்தி மலர். கணவனின் முகம் நோக்கி தன் முகம் திருப்புபவளே மனைவி.

இது சரியா? அல்லது தவறா? என்பதுதான் படம் பார்வையாளர்களுக்கு வைக்கும் கேள்வி.

மூன்று கதாபாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. அவைகளை இங்கே பதிவு செய்கிறேன்.
மோகன் (முத்துராமன்): எல்லாவற்றிலும் தானே முதல்வனாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இவர் மனதில் ஆழமாக பதிந்து அதுவே காலப்போக்கில் தாழ்வு மனப்பான்மையாக உருவாகிவிடுகிறது. உளவியிலில் சொல்வார்கள். தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை மறைக்க மனிதர்கள் தங்களையே superior என்று காட்டிக்கொள்வர். இதை அப்படியே மோகன் கதாபாத்திரத்தில் நாம் பார்க்கிறோம். தன் மனைவி தன் வேலையை விட வேண்டும், தான் சொல்வதன்படிதான் நடக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

கற்பகம் காலனி ஓனர் (எம்.ஆர். ராதா). 'எனக்கு பணத்தாசை உண்டுதான். ஆனால் நான் நியாயத்தை மதிப்பவன்.' இவரே திரைப்படத்தின் இறுதிக்காட்சியை அலங்கரிக்கிறார். ராதாவின்மேல் மோகன் வைத்திருக்கும் தவறான எண்ணத்தைச் சுட்டிக் காட்டி, மோகனின் 'நான்' என்ற ஈகோவின் தோலுரிக்கின்றார்.

பூரணி (மனோரமா). திருமணம் முடித்த சில மாதங்களிலேயே இவரின் கணவர் இவரை விட்டுவிட்டு பம்பாய் சென்றுவிட இன்று வரை காத்துக்கொண்டே இருக்கிறார். இவர் புறணி பேசுவார். ஆனால் பொய் பேசுவதில்லை. அடுத்தவர் என்ன செய்கிறார்? என்று பார்ப்பதும், அதை மற்றவர்களிடம் சொல்வதும்தான் இவரது வேலை. அதாவது, தன்னிடம் இருக்கும் அழுக்கை மறைக்க எல்லார் சட்டையிலும் அழுக்கு இருக்கிறது என்று சொல்வதுபோல இருக்கிறது இவரின் செயல்பாடு.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ச்சமூகத்தில் இருந்த ஆண்-பெண் சமநிலை, பெண்களின் படிப்பு, வேலை, துணிச்சல், வரதட்சனை, ஏழ்மை, நடுத்தர வர்க்கத்தின் கஷ்டம், காதல், திருமணத்திற்கு முன் உறவு, சந்தேகம் என அனைத்தையும் 150 நிமிடங்களில் நம் கண்முன் கொண்டுவந்து தெறிக்க விடுகிறது 'சூரியகாந்தி'.



2 comments:

  1. தந்தை ஒரு 'ரிலாக்ஸ்ட்' மூடில் இருப்பது போலத் தெரிகிறது.....அவர் 'சூரிய காந்தி ' திரைப்படம் பார்த்ததும்,அதில் தான் அறிந்து கொண்டதைத்,தெரிந்து கொண்டதைத் தன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் விதமும்.நானும் பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படத்தை....அந்த காலத்தில் பட்டயைக் கிளப்பிய ஒரு படம்.அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களை இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.இன்னும் சொல்ல வேண்டுமானால் ஆண்களின் ஏகபோக சொத்தாக இருந்த ' தான்' எனும் அகம்பாவம் இன்று பெண்களின் சொத்தாகவும் மாறியுள்ளது.ஆணோ,பெண்ணோ என்று அடுத்தவரை ...அவரின் சுக துக்கங்களை நமதாகப் பார்க்கிறோமோ அதுவே ஒரு பண்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருக்கும். மற்றபடி "சூரியனின் திசைநோக்கித் திரும்பும் சூரியகாந்தி மலராக கணவனின் முகம் நோக்கித் தன் முகம் திருப்புவளே மனைவி". ...இதைக் கேட்க ஆண்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.ஆனால் இன்றைய நடைமுறையில் சாத்தியமா? யோசிக்க வேண்டிய விஷயம்.வித்தியாசமானதொரு பதிவைத்தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father, Good sharing on Tamil movie 'சூரியகாந்தி' .This movie I have also seen when I was a small one chair play will be conducted for Jeya and Mutthuraman.Jeya will find out her husband.She always had good understanding on him.But She forgot to understand my Tamil people.

    Most of our problems solve when we leave our superiority complex and misunderstanding.

    Superiority complex and misunderstanding is the root cause of every thing.So let us try to give space for others and for their growth with good understanding.

    This Superiority complex and misunderstanding we can find in family life as well us in religious life.
    But Jesus never practiced this type of bad quality in his life at all.He always included others in his life.So he became Son of God.
    Through that only we are christian today.I am proud of Fathers exact writings of today.

    Giving space and allowing others to grow this generous quality I have seen and experienced in My Guru.You always included the people and been very simple.

    Dear Guru, Congrats and I wish you a Happy Advent.Let us sow the seed of Faith during this first week of Advent whomever we meet on our way.

    ReplyDelete