Friday, November 13, 2015

தொந்தரவு

ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தும்

தன் தாயிடம்,

'டுவெண்டி ஃபோர் அவர்ஸ் சதா ட்ரபுள் குடுத்துகிட்டே இருக்க நீ!'

என்று கடிந்து கொள்வார் எம்.ஆர். ராதா.

தொந்தரவு -

ஒருவர் மற்றவருக்குச் செய்வது. இது நடக்கு இருவர் அல்லது இருவருக்கு மேல் அவசியம். எனக்கு நானே தொந்தரவு கொடுக்க முடியுமா? முடியாது. அடுத்தவர்தான் கொடுக்க முடியும். அல்லது நான்தான் அடுத்தவருக்குக் கொடுக்க முடியும்.

ஒரு புள்ளியில் தொடங்கும் வேலை மற்றொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நகர்தலை மற்றவர் இடைநிறுத்தினால் அதற்குப் பெயர் தொந்தரவு.

ஆங்கிலத்தில் 'disturb' என்கிறோம். இதன் இலத்தீன் மூலம் 'dis-turbare'. Turbain என்பது ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை தடுப்பது அல்லது நிறுத்துவதுதான் dis-turb.

a. சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை.

உதாரணத்திற்கு, இப்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்யும் கனமழை. இந்தக் கனமழையினால் நம் பயணம், பணி தடைபடுகிறது. ஆனால், இது தவிர்க்க முடியாத தொந்தரவு.

b. சில தொந்தரவுகள் தவிர்க்க கூடியவை.

நாம் படிக்கும் இடத்தின் அருகில் 'செல்லாத்தா, செல்ல மாரியாத்தா' என்று லவுட் ஸ்பீக்கரில் பாட்டு ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொந்தரவை தவிர்க்க நான் என் அறையின் கதவுகளை அடைக்கலாம். அல்லது வேறு இடத்திற்கு நானே மாறிச் செல்லலாம்.

c. சில தொந்தரவுகள் நாமாக ஏற்படுத்திக் கொள்பவவை.

முக்கியமான ப்ராஜக்ட் ஒர்க் செய்து கொண்டிருக்கும்போது, ஸ்கைப் அல்லது வாட்ஸ்ஆப் ஆன் செய்து வைத்து அந்த ஸ்க்ரீனில் ஒரு கண், கணிணி ஸ்க்ரீனில் மறு கண் என இருப்பது.

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 18:1-8) தொந்தரவு கொடுக்கும் ஒரு கைம்பெண்ணைப் பார்க்கிறோம். யாருக்குக் கொடுக்கிறார்? நீதியற்ற நடுவருக்கு. எதற்காக? தனக்கு நீதி வேண்டி.

இந்த நடுவர் 'கடவுளுக்கும் அஞ்சுவதில்லை', 'மனிதரையும் மதிப்பதில்லை'.

இருந்தாலும் தொந்தரவின் பொருட்டு அடிபணிகிறார்.

இந்தப் பெண்ணின் தொந்தரவுக்குப் பின் இருப்பது நம்பிக்கை. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையுடன் தட்டும் எந்தக் கதவும், மீண்டும் மீண்டும் தட்டப்படும்போது, கண்டிப்பாக திறக்கப்படும்.

இந்தப் பெண் தன்னிடம் ஒன்றுமில்லாத ஒருநிலையில், தன் கையறுநிலையில் நடுவர்மேல் நம்பிக்கை கொள்கிறார்.

இந்தப் பெண்ணின் நம்பிக்கை எப்படி இருக்கிறது தெரியுமா?

ஆற்றுத் தண்ணீரில் அமிழ்த்தப்படும் ஒருவன் தன் தலையை முட்டிக்கொண்டு மூச்சுக்காற்றுக்கு வெளியே வருவானே அப்படியிருக்கிறது.

தொந்தரவும் நல்லதே!

2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."தொந்தரவு" என்ன ஒரு இனிமையான பதிவு.இந்த நேரத்தில் தான் நாம் பொறுமையாக நம்மை கையாள வேண்டும் .தொந்தரவுகள் நம்மை பக்குவப்படுத்தவும் பதப்படுத்தவுமே.என்னை நெருடிய வரிகள் இந்தப் பெண்ணின் தொந்தரவுக்குப் பின் இருப்பது நம்பிக்கை. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையுடன் தட்டும் எந்தக் கதவும், மீண்டும் மீண்டும் தட்டப்படும்போது, கண்டிப்பாக திறக்கப்படும். நாமும் கடவுளை நோக்கி நம்மை படைத்தவரை நோக்கி நம்பிக்கையுடன் கூக்குரலிட்டாள் கண்டிப்பாக கதவுகள் திறக்கப்படும் என்றும், நன்றாக ஜெபிக்க வேண்டும் என்றும் தந்தை கூறுகிறார்.தந்தைக்கு எனது நன்றியும் பாராட்டுகளும் !!!

    ReplyDelete
  2. தொந்தரவுகளில் பலவகை....ஆம்...தந்தை குறிப்பிடும் தவிர்க்கக்கூடிய,தவிர்க்க முடியாத தொந்தரவு தவிர ஒரு மூன்றாவது தொந்தரவும் இருக்கிறது.தொந்தரவு கொடுக்கிறோம் என்று தெரிந்தும் கொடுப்பது...ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடைந்தே தீரவேண்டும் என்று.நாம் பார்க்கும் கைம்பெண் தான் நீதி கேட்டு வருபவன் யார்., அவன் பின்னனி என்ன என்பதை விடத் தனக்கு என்ன வேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்.காரணம் தன் கையறு நிலையிலும் அந்த நீதியற்ற நடுவர் தனக்கு நீதி வழங்குவார் எனும் நம்பிக்கை.விவிலியம் சொல்கிறது..." நீதியற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால் தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும்,பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?".. எத்தனை ஆறுதலான வார்த்தைகள்! சுமைசுமந்து வருவோர் சாய்ந்து கொள்ள ஒரு 'சுமை தாங்கி' போன்று நாம் நிலைதடுமாறி நிற்கையில் நம்மைக் கரம் பிடித்துத்தூக்கி விட நம் இறைவன்! நமக்கென்ன கவலை ...அவரைப்பற்றிக்கொள்வதைத் தவிர? ' Disturb' என்ற வார்த்தையின் மூலத்தை( dis- turbare) தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete