Monday, November 30, 2015

மரபு மீறல்

நேற்று காலை என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரையாடல் 'இறந்தவர்களை எரிக்கலாமா? கூடாதா?' என்று மாறியது. இறந்தபின் உடல் தானம், இறந்தபின் உடலை எரித்தல் இந்த இரண்டிலும் அவர்களுக்கு என்றும் மாற்றுக் கருத்துதான்.

அதாவது, இறந்தவர்களைப் புதைத்தல் என்பது கிறிஸ்தவத்தில் காலங்காலமாக இருந்து வரும் மரபு. மரபு மீறல் அவசியமா? மரபு மீறல் எதற்காக?

நேற்று மத்திய ஆப்பிரிக்கா நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் பாங்குவி நகரத்தில் உள்ள பேராலயத்தில் சிறப்பு யூபிலி ஆண்டின் புனிதக் கதவுகளைத் திறந்து வைத்தார். மேலும் இந்த நகரத்தை அமைதியின் ஆன்மீக நகரம் என்று பெயரிட்டார்.

இது ஒரு மரபு மீறல்? எப்படி?

கத்தோலிக்க திருஅவை தொடங்கிய நாளில் இருந்து யூபிலி ஆண்டில், ரோமில் உள்ள தூய பேதுரு பேராலயத்தின் புனிதக் கதவுகள்தாம் முதலில் திறக்கப்படும்.

இதுவரை திருச்சபையின் யூபிலி ஆண்டின் மையம் ரோமாக இருந்தது. இன்று அது மாறி ஆப்பிரிக்காவின் ஒரு நகரத்துக்குப் போய்விட்டது. ஆக, மையம் விளிம்பாகிவிட்டது. விளிம்பு மையமாகிவிட்டது. இந்த மரபு மீறல் மையத்தில் இவ்வளவு நாள் இருந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இவ்வளவு நாள் விளிம்பில் இருந்தவர்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்.

திருத்தந்தையின் இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அதாவது, இவ்வளவு நாள் இருந்த திருத்தந்தையர்கள் யோசிக்காததை, அல்லது யோசித்தும் செய்யாததை இவர் செய்திருக்கிறார்.

'நான் யாரையும் ப்ளீஸ் பண்ணத் தேவையில்லை' என்று நினைப்பவர்கள்தாம் மரபு மீற முடியும்.

இந்த மனப்பாங்கு நம் திருத்தந்தைக்கு அதிகம் உண்டு. இதை நான் இவரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

நிற்க.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேவராயநேரி பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் சரவணன். நரிக்குறவ சமூகத்தைச் சார்ந்த இவர் சாலைவிபத்தில் சிக்கி கோமா நிலைக்கு (மூளைச்சாவு) சென்றுவிட்டார்.

இவரின் இதயம் மற்றும் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் அவர் இறந்தும் வாழலாம் என ரவிக்கு சொல்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு ரவியின் உறவினர்களும், சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 'நம் மரபில் இது சாத்தியமே இல்லை' என்கின்றனர் பெரியவர்கள்.

ஆனால், ரவி துணிந்து தன் மகனின் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருகின்றார். உடனடியாக சரவணின் இதயம் ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவசியத்தில் இருந்த ஒருவருக்கு பொருத்தப்படுகிறது.

ரவியின் மரபு மீறல் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது.

இன்று நம்மைக் கட்டியிருக்கும் மரபின் சங்கிலிகள் ஏராளம்.

ஏதாவது ஒன்றை நாம் இனங்கண்டு அதை அறுக்க முயற்சிக்கலாமே!

இந்த மரபு மீறலையே நாளைய முதல் வாசகமும் (எசாயா 11:1-10) பதிவு செய்கிறது:

'ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக் குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை வழிநடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.'

Sunday, November 29, 2015

படிக்கட்டு

நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாள்.

இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அண்ணனா? தம்பியா? என்று தெரியவில்லை.

'நம்பிக்கை கொள்ளாமல் எப்படி மன்றாடுவார்கள்?

கேள்வியுறாமல் எப்படி நம்புவார்கள்?

அறிவிக்கப்படாமல் எப்படி கேள்வியுறுவார்கள்?

அனுப்பப்படாமல் எப்படி அறிவிப்பார்கள்?'

(காண் உரோ 10:9-18)

நாளை முதல் வாசகத்தில் பவுல் பயன்படுத்தும் இலக்கிய நடையின் பெயர் 'படிக்கட்டு' (Staircase Rhetoric). அதாவது, முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தை அடுத்த வாக்கியத்தின் இறுதி வாக்கியமாக இருக்கும். இது ஒரு வகையான பேச்சு நடை. இந்த நடையில் ஒருவர் பேசும்போது, பேசுபவரும் தான் பேச வேண்டியதை மறந்துவிடாமல் பேசுவார். கேட்பவரும் எளிதில் நினைவில் கொள்வார்.

நாங்கள் திருத்தொண்டராகும்போது நடைபெற்ற சடங்கிலும், ஆயர் எங்கள் கையில் விவிலியத்தைக் கொடுத்து இதே போல ஒரு படிக்கட்டு நடை வாக்கியத்தைச் சொல்வார்:

'வாசிப்பதை நம்பு.

நம்புவதை போதி.

போதிப்பதை வாழ்ந்துகாட்டு'

இதில் நடை 'கண்ணாடியின் பிம்பம்போல' திரும்பி நிற்கிறது. ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தை அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக இருக்கிறது.

இவ்வகை நடையில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு வார்த்தை புரண்டாலும் அர்த்தம் கிடைக்காமல் போய்விடும்.

திருத்தூது பணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சீடர்களின் பணி மட்டுமல்ல.

ஒவ்வொருவரும் படிக்கட்டு போல வரும் இந்தப் பணியில் நமக்கு உரிய அளவில் திருத்தூது பணி செய்வது அவசியம்.

'தீமைகளை விலக்கி, நன்மைகளைக் கற்றக்கொள்வது' என தனிநபர் வாழ்வு சார்ந்ததும் திருத்தூதுப்பணியே.


Saturday, November 28, 2015

சூரியகாந்தி

நேற்று இரவு 'சூரியகாந்தி' (1973) திரைப்படம் பார்த்தேன்.

மோகன் (முத்துராமன்) ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் மூத்த மகன். எல்லாவற்றிலும் தானே முதல்வனாக இருக்க வேண்டும் என்ற மேட்டிமை மனப்பான்மை (superiority complex) இவருக்கு உண்டு. இவரும் ராதாவும் (ஜெயலலிதா) காதலில் விழுகின்றனர். காதல் திருமணமாகக் கனிகிறது. தன் குடும்பத்தை நடுத்துவதற்குப் போதாத சிறு வருவாய் தரும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார் மோகன். ராதா மற்றொரு கம்பெனியில் விற்பனைப் பிரிவில் சேர்ந்து மேலாளராக உயர்கின்றார். அவரே குடும்பத்தின் தேவைகளையும் நிறைவேற்றத் தொடங்குகிறார். ராதாவின் புகழும், பொருளும் உயர்வது கண்டு அவரை வெறுக்கிறார் மோகன். மோகனின் தங்கை சுசிலாவின் திருமணத்தை ராதாவே முடிவு செய்கிறார். அதற்கான பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார். விளம்பரத்தின் வழியாக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் மோகன், ராதாவைவிட அதிகம் சம்பாதித்து திருமணத்தை தானே நடத்த முயல்கின்றார். திருமணத்தை யார் நடத்தி வைக்கிறார்? யார் யாரைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்? என்ற கேள்விகளின் விடையில் மறைந்திருக்கிறது திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்.

'சூரியகாந்தி' - இந்த திரைப்படத்தின் தலைப்பிற்கான விளக்கம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் தரப்படுகிறது.

சூரியனின் திசை நோக்கி தன் முகத்தை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் சூரியகாந்தி மலர். கணவனின் முகம் நோக்கி தன் முகம் திருப்புபவளே மனைவி.

இது சரியா? அல்லது தவறா? என்பதுதான் படம் பார்வையாளர்களுக்கு வைக்கும் கேள்வி.

மூன்று கதாபாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. அவைகளை இங்கே பதிவு செய்கிறேன்.
மோகன் (முத்துராமன்): எல்லாவற்றிலும் தானே முதல்வனாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இவர் மனதில் ஆழமாக பதிந்து அதுவே காலப்போக்கில் தாழ்வு மனப்பான்மையாக உருவாகிவிடுகிறது. உளவியிலில் சொல்வார்கள். தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை மறைக்க மனிதர்கள் தங்களையே superior என்று காட்டிக்கொள்வர். இதை அப்படியே மோகன் கதாபாத்திரத்தில் நாம் பார்க்கிறோம். தன் மனைவி தன் வேலையை விட வேண்டும், தான் சொல்வதன்படிதான் நடக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

கற்பகம் காலனி ஓனர் (எம்.ஆர். ராதா). 'எனக்கு பணத்தாசை உண்டுதான். ஆனால் நான் நியாயத்தை மதிப்பவன்.' இவரே திரைப்படத்தின் இறுதிக்காட்சியை அலங்கரிக்கிறார். ராதாவின்மேல் மோகன் வைத்திருக்கும் தவறான எண்ணத்தைச் சுட்டிக் காட்டி, மோகனின் 'நான்' என்ற ஈகோவின் தோலுரிக்கின்றார்.

பூரணி (மனோரமா). திருமணம் முடித்த சில மாதங்களிலேயே இவரின் கணவர் இவரை விட்டுவிட்டு பம்பாய் சென்றுவிட இன்று வரை காத்துக்கொண்டே இருக்கிறார். இவர் புறணி பேசுவார். ஆனால் பொய் பேசுவதில்லை. அடுத்தவர் என்ன செய்கிறார்? என்று பார்ப்பதும், அதை மற்றவர்களிடம் சொல்வதும்தான் இவரது வேலை. அதாவது, தன்னிடம் இருக்கும் அழுக்கை மறைக்க எல்லார் சட்டையிலும் அழுக்கு இருக்கிறது என்று சொல்வதுபோல இருக்கிறது இவரின் செயல்பாடு.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ச்சமூகத்தில் இருந்த ஆண்-பெண் சமநிலை, பெண்களின் படிப்பு, வேலை, துணிச்சல், வரதட்சனை, ஏழ்மை, நடுத்தர வர்க்கத்தின் கஷ்டம், காதல், திருமணத்திற்கு முன் உறவு, சந்தேகம் என அனைத்தையும் 150 நிமிடங்களில் நம் கண்முன் கொண்டுவந்து தெறிக்க விடுகிறது 'சூரியகாந்தி'.



Friday, November 27, 2015

நான்கு நண்பர்கள்

நேற்று எங்கள் பங்கில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

நேற்று நடத்தவேண்டியது என் பொறுப்பு. பதின்பருவத்திற்கான சிறப்பு ஆராதனையாக இருந்தது இது.

ஆகையால், நான் நட்பு என்ற தலைப்பை எடுத்தேன்.

சீராக் 6:5-17 ஐ மையமாக வைத்து சிந்தித்தோம்.

சீராக் நான்கு வகையான நண்பர்களைப் பற்றிப் பேசுகின்றார்:

அ. தன்னலம் தேடும் நண்பர்கள்
ஆ. பகைவர்களாய் மாறும் நண்பர்கள்
இ. சேர்ந்து விருந்துண்ணும் நண்பர்கள்
ஈ. நம்பிக்கைக்குரிய நண்பர்கள்

இவற்றில் நான்காம் நண்பர் குழுவினரே சிறந்தவர் என்கிறார். இவர்கள் 'இதைப்போன்றவர்கள்' என்று நான்கு அடைமொழிகளைச் சொல்கின்றார்:

பாதுகாப்பான புகலிடம்
புதையல்
பெருஞ்செல்வம்
நலமளிக்கும் மருந்து

இத்தகைய நண்பரைப் பெறுபவர் யார் என்று தொடர்ந்து சொல்கின்றார்:

'ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பு பேணுவர்!'

ஆக, நம் அன்றாட வாழ்வின் நட்பிற்குக் கூட ஆண்டவரைப் பற்றிய அச்சம் தேவைப்படுகிறது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் மனதில் இருக்கும் போது நாம் தன்னலத்தோடு இருப்பதில்லை. பகைமை பாரட்டுவதில்லை. இன்பத்தில் உடனிருந்துவிட்டு, துன்பத்தில் தூரமாகிவிடுவதில்லை. நாம் நண்பர்களைப் பொருட்களாகப் பயன்படுத்துவதில்லை.

மேலும், இந்த இடத்தில் அகுஸ்தினாரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டலாம்:

தன் உயிர் நண்பனின் இறப்பால் வருந்தி அழுது கொண்டிருக்கும் அவர் இப்படி எழுதுகிறார்:

'உன்னில் தங்கள் நண்பர்களையும்,
உனக்காக தங்கள் பகைவர்களையும்
அன்பு செய்வோர் பேறுபெற்றோர்!
உன்னில் அவர்கள் தங்கள் நண்பர்களைக் காண்பதால்
நண்பர்களின் இறப்பும் அவர்களைக் காயப்படுத்துவதில்லை.
ஏனெனில் இறந்த நண்பர்கள் இறவாத உன்னில் என்றும் இருக்கின்றார்களே!'

இன்று தமிழ் ஈழக் கனவான தாயகக் கனவிற்காக மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரர் தினத்தைக் கொண்டாடுகிறோம். இவர்களைப் பிரிந்த நண்பர்கள் எப்படி இவர்களின் இழப்பைத் தாங்குகிறார்கள்? தாயகக் கனவில்தானே. இந்தக் கனவுதான் இறந்தவர்களையும், இருப்பவர்களையும் ஒன்றே பிணைக்கிறது.

கௌதம புத்தரும் நான்கு வகையான நல்ல நண்பர்களைப் பற்றிச் சொல்கின்றார் (in Sigalovada Sutta):

அ. உதவும் நண்பர்கள் (Helping)
ஆ. தொடரும் நண்பர்கள் (Enduring)
இ. உருவாக்கும் நண்பர்கள் (Mentoring)
ஈ. பரிவுகாட்டும் நண்பர்கள் (Compassionate)

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா' (திரைப்படம்: அவன்தான் மனிதன், 1975) பாடல் கேட்டிருக்கிறீர்களா?

இரண்டு வரிகள் இங்கே சிந்திக்கத்தக்கவை:

'பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே'

'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா'



Thursday, November 26, 2015

கனவுகள்

உசிலம்பட்டியில இருந்து மதுரை கோரிப்பாளையம் வரை பஸ்ல போனீங்கன்னா, ரெண்டு பக்கமும் கண்ணுக்குக் குளிர்ச்சியா ப்ளக்ஸ் போர்டு பார்த்துக்கொண்டே போகலாம்.

'குபுகுபு பாய்ஸ்', 'டெரர் டெவில்ஸ்' என டைட்டிலே தெறிக்கும்.

இந்த பொங்கலுக்கு வச்சா அடுத்த பொங்கல் வரைக்கு எடுக்க மாட்டாங்க.

ஒரே மாதிரி கோட், ஒரு மாதிரி வேஷ்டி-சட்டை, வாயில் அரிவாள் என ரகளை செய்வார்கள்.

இப்போ கொஞ்சம் டிரெண்ட் மாதிரி, சிங்கம், புலிகளையும் புடிச்சி அதுல இவங்க மொகத்த மார்ஃபிங் செஞ்சு படுத்துறாங்க.

நாளைய முதல் வாசகத்தை வாசிக்கும்போது இந்த ப்ளக்ஸ் போர்டுகள் தான் நினைவிற்கு வருகின்றன. தானியேல் தன் கனவில் நான்கு விலங்குகளைக் காண்கின்றார்:

1. கழுகின் இறக்கைகளை உடைய சிங்கம்
2. கரடி
3. வேங்கை அல்லது புலி வித் நான்கு இறக்கைகள்
4. அனாமிகா - ரொம்பவே டெரரா. கொம்பில் மனிதக் கண்கள்

முடிவு என்னன்னா? இந்த விலங்குகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. மானிட மகன் தோன்றுகின்றார்.

இந்த நான்கு விலங்குகளும் நான்கு வகை அரசுகளைச் சித்தரிக்கலாம். அல்லது கோரத்தைக் காட்டும் உருவகங்களாக இவை இருக்கலாம்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களின் எல்லா நூல்களின்மேலும் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. அதிலும் 'கனவுகளின் விளக்கம்' (...) என்ற நூலில் எல்லாக் கனவுகளும் ஒரு செக்ஸிஸ்ட் அர்த்தம் கொடுக்கின்றார் அவர். அதாவது, நம் மனதில் இருக்கும் வன்முறை மற்றும் பாலுணர்வு என்னும் இரண்டுதாம் நம் கனவுகளில் வருகிறதாம்.

தானியேலின் கனவு அவர் காலத்தில் இருந்த வன்முறையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
கனவுகள் ஆச்சர்யமானவை.

கனவுகள் தூய அகுஸ்தினாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

நாம் இரவில் காணும் கனவுகளில் வெறும் 5 சதவிகிதம்தான் அடுத்த நாள் நம் நினைவில் நிற்கிறது என்கிறார் உளவியலாளர்கள்.

அதிக கனவுகள் இரவில் வந்தால் நாம் அடுத்த நாள் மிகவும் சோர்வாக எழுந்திருக்கிறோம். ஏனெனில் இரவு முழுவதும் மூளை ஆக்டிவ்வா இருப்பதால்.


Wednesday, November 25, 2015

கழுத்துக்கு வலி

'பின்னர், அரசன் அரண்மனைக்கு திரும்பிச் சென்று,
அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை.
வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை.
உறக்கமும் அவனைவிட்டு அகன்றது.'

(காண்க. தானி 6:11-27)

தன் அமைச்சர்களின் சொல் கேட்டு, தானியேலை சிங்கக் குகையில் அடைத்துவிட்டு, தாரியு அரசன் அனுபவித்த துயரத்தைத்தான் நாம் மேலே வாசிக்கின்றோம்.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு. என்ன?

'போப்பாண்டவர் யார்கூடயாவது ஃபோனில் மணிக்கணக்கில் பேசுவாரா?'

'அவரின் சிறுவயது நண்பர்கள், தோழிகள், உடன் பயின்றோர், உடன் பணிசெய்தோர் இப்படி யாரையாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் அவர் என்ன செய்வார்?'

'நம்ம சி.எம். ஜெயா தன் மனம் விட்டு யாரிடம் பேசுவார்?'

'ஏதாவது நல்லது கெட்டதுக்கு போக முடியுமா?'

'கல்யாண வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியுமா?'

அதாவது, வாழ்க்கையில் நாம் மேலே செல்லச் செல்ல நிறைய விடயங்கள் நம்மை விட்டு மறைந்துவிடுகின்றன. அல்லது அவை 'கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாத ஒன்றாகவே' இருக்கின்றது.

சி.எம். பேசுவது, போப் பேசுவது, பிரசிடென்ட் பேசுவது எல்லாம் பதிவு செய்யப்படும். யாரையும் தனியாக சந்திக்கச் செல்ல முடியாது. கூடவே பாதுகாப்பு அதிகாரிகள், துப்பாக்கி, தோட்டா என எல்லாம் உடன் வரும். யாரையும் இவர்களால் நம்ப முடியாது. இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களே இவர்களைச் சந்திக்க வந்தாலும், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுவர். தாங்கள் விரும்பிய எதையும் வெளியில் வாங்கிச் சாப்பிட முடியாது. எல்லாம் சோதித்தபின்னே தரப்படும்.

இவர்களின் ஆடைகள், அலங்காரங்களுக்குள் மறைந்திருக்கும் இவர்களின் உணர்வு நமக்குக் காட்டப்படுவதே இல்லை. எந்நேரமும் இவர்கள் சிரிக்க வேண்டும். கேமரா முன் நிற்க வேண்டும். பார்த்துப் பார்த்து நடக்க வேண்டும். யோசித்து யோசித்து பேச வேண்டும். தங்கள் மனதிற்கு நல்லது என நினைப்பதை சொல்லவும் முடியாது. செய்யவும் முடியாது.

இப்படிப்பட்ட ஒரு அரசன்தான் நாளைய முதல்வாசகத்தில் இருக்கிறான்.

தானியேல் இப்போது அரசவையில் ஒரு நிரந்தர அமைச்சராக இருக்கிறார். அவரின் பிரசன்னம் பிடிக்காத எதிர்கட்சி அமைச்சர்கள் அவரைப் பற்றி அரசனிடம் புகார் அளிக்கின்றனர். அரசனுக்கு தானியேலும் வேண்டும். தான் போட்ட சட்டமும் வேண்டும். மதில்மேல் பூனையாய் இருந்தவன் ஒருகட்டத்தில் தானியேலை சிங்கக் குகையில் தள்ளிவிடுகிறான். இரவெல்லாம் தூக்கமேயில்லை.

சதாம் உசேனை தூக்கில் போட்ட புஷ் தூங்கியிருப்பாரா?

கலிலேயாவை தூக்கிலிட்ட போப்பாண்டவர் தூங்கியிருப்பாரா?

தங்கள் மனச்சான்றை இவர்கள் எப்படி சமாதானப்படுத்தியிருப்பார்கள்?

பாவம் தாரியு அரசனின் மனச்சான்று கேட்க மறுக்கின்றது.

விடிந்தும், விடியாததுமாய் ஓடுகிறான் குகையை நோக்கி. அங்கே தானியேலை உயிருடன் காண்கிறான்.

'Uneasy lies the head that wears a crown' என்பார் ஷேக்ஸ்பியர் (Henry IV, Part II, Act III, Scene 1).

மணிமுடி கழுத்துக்கு மட்டுமல்ல. மனத்திற்கும் வலி.



Tuesday, November 24, 2015

வேறோர் கை

ஆங்கிலத்தில் 'the writing on the wall' என்று ஒரு சொலவடை (idiom) உண்டு.

இதற்கு இரண்டு அர்த்தங்கள்:

அ. ஒளிவு மறைவு இல்லாதது. எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. எகா. Jeya is the CM of TN is a writing on the wall.

ஆ. கெட்டது நடக்கப் போகும் என்ற ஒரு எச்சரிக்கை. எகா. It is the writing on the wall that the Dravidian parties will fail miserably in the forthcoming poll.

இந்த சொலவடை உருவாவது நாளைய முதல்வாசகத்தில்தான் (காண். தானி 5:1-28).

நெபுகத்னேசர் இறந்துவிட்டார். அவரது மகன் இப்போது ஆட்சி செய்கிறான். தன் அப்பா எருசலேம் ஆலயத்திலிருந்து திருடி வந்த பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில், தானும், தன் மனைவியரும் மது அருந்துகின்றனர். இப்படி மது அருந்திக் களித்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு எதிரே இருந்த சுவற்றில் ஒரு மனிதக் கை தோன்றி, விரல்களே பேனா போல மாறி எழுதத் தொடங்குகிறது.

(ஒருவேளை இதிலிருந்துதான் டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் அல்லது ஆப்பிள் iபென்சில் உருவாகியிருக்குமோ!)

அந்த வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்ல தானியேல் அழைக்கப்படுகிறார்.

அப்பா இறந்து மகன் ஆட்சிக்கு வந்துவிட்டான்.

ஆனால் தானியேல் மட்டும் இன்னும் இளமையாகவே காட்டப்படுகின்றார். தானியேலின் நூல் முழுவதும் அவருக்கு ஒரே வயது இருப்பதுபோலவே காட்டப்பட்டுள்ளது. எல்லாருக்கும் வயசானாலும் ரஜினி காந்துக்கு வயசாகாதுல. அது மாதிரி.

மேனே, தேகேல், பார்சின் (முடித்தார். நிறுத்தார். பிரித்தார்)

இந்த மூன்று வார்த்தைகள்தாம் எழுதப்பட்டாலும், தானியேலின் விளக்கம் என்னவோ ரொம்ப நீளமாக இருக்கிறது.

இவற்றில் இரண்டாம் உருவகம் எனக்குப் பிடித்திருக்கிறது.

'நீர் தராசில் நிறுக்கப்பட்டீர். எடையில் மிகவும் குறைந்துள்ளீர்'

வாழ்க்கையில ஒன்னு கவனிச்சீங்களா. நம்ம ஒன்னு வாங்கணும்னு நினைச்சா அந்தப் பொருள் நம்ம கண்ணுல பட்டுக்கொண்டே இருக்கும். கடந்த வாரம் எனக்கு ஒரு 'வெயிங் ஸ்கேல்'  வாங்கணும் என்று ஆசை. எந்தப் பக்கம் திரும்பினாலும் வெயிங் ஸ்கேல்தான் கண்ணுக்குத் தெரியுது.

நேற்று என் நண்பி ஒருத்தி தான் புதிதாக வெயிங் ஸ்கேல் ஒன்று வாங்கியிருப்பதாகவும், ஆன்லைனில் மலிவு விலையில் கிடைத்ததாகவும் சொன்னாள். மலிவாக கிடைத்தால் சரியான எடை காட்டாது என்று அவளிடம் சொன்னேன். நம் எடை அதிகரித்தால் நமக்கு இயல்பாகவே தெரிந்துவிடும். நம் காலணி, ஆடைகள், ஏன் நடக்கும் வேகம் எல்லாமே நம் எடை கூடியிருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று நமக்குச் சொல்லிவிடும். அப்புறம் எதுக்கு ஸ்கேல்?

கடவுளின் தராசு மேடையில் பாவம் இந்த அரசன் எடைகுறைந்த குழந்தையாக இருக்கிறான்.

கடவுள் உடலின் எடையை நிறுப்பாரா? அல்லது உள்ளத்தின் எடையை நிறுப்பாரா?

வழக்கமாக எடை கூடினால்தான் ஆபத்து.

ஆனால் இங்கே என்னவொரு விந்தை. எடை குறைந்தால்தான் ஆபத்து.

ஆக, நமக்கு எடை கூடினால் கவலைப்பட வேண்டாம்.

இந்த அரசனிடம் அப்படி என்ன குறைந்தது?

கடவுளுக்குரிய பாத்திரத்தை மதுக் கோப்பையாக மாற்றினான்.

இதுதான் அவன் செய்த பெரிய தவறு. இதுதான் அவனது எடையைக் குறைத்தது.

அதாவது, 'மேன்மையானதை மேன்மையானதாக வைக்கத் தவறுவது' பெரிய குற்றம்.

கடவுளுக்கு அருகில் இருப்பது கடவுளுக்கு அருகில்தான் இருக்க வேண்டும். கடவுளின் நியாயம் சரிதானே.

'சொன்னது நீ தானா' (திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம், 1962) என்று தொடங்கும் பாடல் நினைவிற்கு வருகிறது.

அதில் ஒரு வரி வரும்:

'தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா'

எருசலேம் ஆலயத்தில் இருந்த கடவுளின் பாத்திரத்தை அரசனின் கை தொட்டதுதான் அரசனின் எடைக்குறைவுக்கு காரணம்.

வேறோர் கை தொட்டால், கடவுளின் கை வந்து நம் முன் எழுதும்!


Monday, November 23, 2015

இரும்பு களிமண்

'ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள். ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.' (காண். தானி 2:31-45)

'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது' (திரைப்படம்: சூரியகாந்தி, 1973) என்று தொடங்கும் கண்ணதாசன் பாடலில் பின் வரும் வரிகள் வரும்:

'வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உன்னை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது'

To listen to the song please click here: பரமசிவன் கழுத்தில்

நாளைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கும் நெபுகத்னேசர் அரசனின் கனவில், நாம் இரும்பும், களிமண்ணும் கலப்பதாகப் பார்க்கின்றோம்.

அதாவது, சிறிய சக்கரமும், பெரிய சக்கரமும் இணைந்து இருப்பது போல.

(இந்த இடத்தில் ஒரு டவுட்டு. டிராக்டரில் ஒரு சக்கரம் பெரியதாகவும், மற்ற சக்கரம் சிறியதாகவும் இருக்கிறது. அப்புறம் எப்படி பாஸ் அது ஓடுது! யோசிக்க வேண்டிய விஷயம்)

நம்ம கண்ணதாசன் சொன்னது போலவே எடுத்துக்கொள்வோம்.

இரும்பு இரும்போடுதான் கலக்கும்.
களிமண் களிமண்ணோடுதான் கலக்கும்.
பெரிய சக்கரம் பெரிய சக்கரத்தோடுதான் பொருந்தும்.
சிறிய சக்கரம் சிறிய சக்கரத்தோடுதான் பொருந்தும்.

இந்த நேரத்தில் நாம் யார் யாரோடு உறவில் இருக்கிறோம் என்றும், எந்த உறவு பொருந்தும், எந்த உறவு பொருந்தாது என்றும், யார் உயர்ந்தோர், யார் தாழ்ந்தோர் என்றும் எண்ணிப் பார்க்கக் கூடாது.

இறைவனின் படைப்பில் எல்லாரும் உயர்ந்தோரே. நம் குணநலன்களால் நம்மையே நாம் தாழ்வானவர்கள் ஆக்கிக்கொள்கிறோம் சில நேரங்களில்.

இரும்போடு கலக்கும் களிமண், தானும் இரும்பு போல உறுதியாக வேண்டும் என நினைத்தால் அது தவறில்லையே. அதைவிடுத்து, தன்னைப்போல இரும்பையும் உருக்கிவிட்டால்தான் ஆபத்து.

என் நட்பு வட்டத்தில் எப்போதும் என்னைவிட உயர்ந்தவர்களையே நான் வைத்துக்கொள்வது உண்டு. ஏனெனில் அப்போதுதான் அவர்களைப்போல உயர முடியும்.

மனிதரில் இருக்கும் இறையியல்பு கூட களிமண்ணோடு கலக்கும் இரும்பு போலத்தானே.

ஒவ்வொரு பொழுதும் நாம் இறையியல்பில் வளரும்போது களிமண் தானாகவே கரைந்துவிடுகிறது.


Sunday, November 22, 2015

இரண்டும் இரண்டும் ஐந்து

நேற்று இரவு 'இரண்டும் இரண்டும் ஐந்து' என்ற இரானிய மொழி குறும்படம் பார்த்தேன்.

இதைப் பார்க்கத் தூண்டியது இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கும் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை.

ஒரு வகுப்பறையின் கரும்பலகையோடு படம் தொடங்குகிறது. மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் வகுப்பறைக்குள் வருகிறார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர். 'வணக்கம்'. அந்நேரம் தலைமையாசிரியரின் அறிவிப்பு வகுப்பறையின் ஸ்பீக்கரில் ஒலிக்கிறது: 'மாணவர்களே, இன்றிலிருந்து எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அது பற்றி உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.' அனைவரும் அமர, கரும்பலகைக்குச் செல்லும் ஆசிரியர், '2+2=5' என எழுதுவார். வகுப்பில் சலசலப்பு ஏற்படும். 'சைலன்ஸ்' என்று அதட்டுவார். பின் தான் எழுதியதை சத்தமாகச் சொல்வார். சொல்வதை மாணவர்கள் திரும்பச் சொல்ல வேண்டும் என்பார். ஒரு மாணவன் எழுந்து, 'இரண்டும், இரண்டும் நான்கு' என்பான். ஆசிரியர் அதட்ட, அவனும், 'இரண்டும், இரண்டு ஐந்து' என சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவான். பின்னால் ஒரு மாணவன் கையை உயர்த்துவான். 'இரண்டும், இரண்டும் நான்கு' என்பான். ஆசிரியருக்குக் கோபம் வந்துவிடும். வேகமாக வெளியே போய் மேல்வகுப்பு மாணவர்கள் மூன்று பேரை அழைத்து வருவார். மறுபடியும் போர்டில் '2+2=?' என எழுதி, 'எத்தனை?' என்று கேட்பார். அவர்கள் 'ஐந்து' என்பார்கள். 'பார்த்தாயா, நம் பள்ளியின் பெஸ்ட் ஸ்டூடன்ஸ் இவர்களே 'ஐந்து' என்றுதான் சொல்கிறார்கள் என்பான். ஆனால் இந்த மாணவன் போர்டில் 'நான்கு' என எழுதுவான். உடனே துப்பாக்கி குண்டுகள் அவன் நெற்றியில் பாய அப்படியே சுருண்டு விழுந்து இறந்துவிடுவான். வந்திருந்த மேல் வகுப்பு மாணவர்கள் அவனை அப்புறப்படுத்துவார்கள். போர்டில் படிந்திருந்த இரத்தத்தை அழித்துவிட்டு, '2+2=5' என ஆசிரியர் மறுபடி எழுதி, 'எல்லாரும் இதை உங்கள் நோட்டில் காப்பி செய்யுங்கள்' என்பார்கள். எல்லாரும் அப்படியே காப்பி செய்வார்கள். கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் மாணவன் மட்டும், 'ஐந்தை' இரப்பரால் அழித்துவிட்டு, 'நான்கு' என எழுத படம் முடிந்துவிடும்.

இந்தக் குறும்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்: Two Plus Two Equals Five

இந்தக் குறும்படம் சொல்லும் கருத்துக்கள் இரண்டு:

1. எல்லாரும் ஒத்துக்கொள்வதாலோ, மேலான சிந்தனையாளர்கள் சொல்வதாலோ பொய் ஒருபோதும் உண்மை ஆகிவிடாது.

2. உண்மைக்காக வாழ்ந்த ஒருவன் உயிர்விட்டாலும், அந்த இரத்தம் இன்னொருவனை உண்மைக்காக வாழ உருவாக்கும்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். தானி 1:1-6, 8-20) இந்தப் போராட்டம்தான் இருக்கிறது.

உண்மையான கடவுள் யார்? நெபுகத்னேசரின் கடவுளா அல்லது தானியேலின் கடவுளா?

உண்மைக்காக தானியேல் அனுபவிக்கும் துன்பங்களின் தொடக்கமே இந்த வாசகம்.

உண்மை சில நேரங்களில் உறங்கினாலும், ஒருநாளும் அழிந்துவிடுவதில்லை.

இல்லையா?

Saturday, November 21, 2015

அமைதியின் அரசர்

நானிருந்த தேனியில நாளைக்கு திருவிழா.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

2011ஆம் ஆண்டு நடந்த அந்தத் திருவிழா இன்னும் மனதில் நீங்காமல் நிற்கிறது.

தேனி காணிக்கை அன்னை அருட்சகோதரிகள் பள்ளி வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கிறிஸ்து அரசர் பவனியாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டார்.

'உலக மீட்பர் ஆலயம்' - இதுதான் தேனி பங்கு ஆலயத்தின் பெயர்.

அந்தத் திருவிழாவைவிட, திருவிழாவையொட்டிய நிகழ்வுகள்தாம் ஆச்சர்யமானவை.

வருவாரா, வருவாரா என்று காத்திருந்து கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக வந்திறங்கிய அருட்பணியாளர்.

வருமா, வருமா என்று காத்திருந்து கடைசி நிமிடத்தில் வந்த கரண்ட்.

எல்லாமே அன்று சர்ப்ரைசாக இருந்தது.

நற்கருணை ஆராதனையோடு பவனி நிறைவுபெற்றது.

'இவர்தான் எங்கள் அரசர்' என்று ஊரறிய அவரை எடுத்துக்கொண்டு வந்ததும், ஊரே அவருக்கு மரியாதை செலுத்தியதும் மெய்சிலிர்க்க வைத்தது.

நம் ஊரில் காணப்படும் இந்த இறைநம்பிக்கையும், பக்தியும் தான் இன்று நம்மைத் தாங்கி பிடிக்கிறது.

கடந்த வாரம் தீவிரவாதத்தாக்குதல் பாரிசில் நடத்தப்பட்டவுடன், டுவிட்டரில் அவர்கள் இட்ட முதல் பதிவு, 'பாரீசுக்காக செபியுங்கள்' என்பதுதான். ஆலயங்களையும், செபங்களையும் கேலிப்பொருளாக்கி கார்ட்டுன் வரையும் அவர்களின் அறிவும் கூட அந்த நொடியில் இறைவனைத்தான் தேடியது. 'இறைவன் இல்லை' என்று சொல்லிய மெய்யியலார்கள் உருவானது பிரான்சில்தான்.

ஆனால், நாம் வைத்திருக்கின்ற பிடி தளரும்போது, அதைவிட பெரிய பிடி ஒன்று நமக்கு அவசியமாகிறது. அதுவே கடவுளாக இருந்துவிட்டால் இன்னும் நமக்கு பாதுகாப்பு.

அமைதியின் அரசர் இயேசு நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறையமைதி அருள்வாராக!


Friday, November 20, 2015

அர்ப்பணத் திருநாள்

'அந்த மரம் மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது. அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான். அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான். அதன் மேல் அவன் உணவு சமைக்கிறான். இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான். பின்னர் குளிர்காய்ந்து, 'வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!' என்று சொல்லிக் கொள்கிறான். எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி, 'நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்' என்று மன்றாடுகிறான்.' (எசாயா 44:15-17)

எமில் டர்கெய்ம் என்னும் சமூகவியலார் எழுதிய 'கடவுள் தோன்றிய கதை' என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு சில இடத்தை, ஒரு சில பொருளை, ஒரு சில நபரை நாம் தூயவர் என்று உயர்த்தி வைக்கிறோம்.

இந்தத் தூய்மை அவைகளுக்கு அல்லது அவர்களுக்கு எங்கிருந்து வருகின்றன?
அவைகள் அல்லது அவர்கள் அந்தத் தூய்மையை தன்னகத்தே கொண்டிருக்கிறார்களா? அல்லது மனித மனத்தில் தோன்றும் 'உணர்வினால்' அவைகள் அல்லது அவர்கள் தூயவர்களாகத் தெரிகின்றார்களா?

பொருட்களை நாம் நகர்த்துகிறோம். ஆனால் சில நேரங்களில் பொருட்கள் நம்மை நகர்த்துகின்றன - சிலுவை, பைபிள், ஓஸ்தி, நற்கருணைப் பெட்டி, மாதா சுரூபம், தீர்த்தம் - இவைகள் நம்மை நகர்த்தக் காரணம் என்ன?

வேற்று தெய்வங்களை உருவாக்குபவர்களை நையாண்டி செய்யும் எசாயா மேற்காணும் உருவகத்தைப் படைக்கின்றார். இந்த உருவகத்தில் ஒரு பெரிய உண்மை இருக்கிறது. என்ன உண்மை? ஒரே மரம் தான். அந்த மரத்தின் ஒரு பகுதியை நெருப்பு மூட்டி குளிர்காயவும், அடுத்த பகுதியை இறைச்சி சமைக்கவும், அடுத்த பகுதியை சிலை செய்யவும் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலை மட்டும் திடீரென மதிப்பு பெறுவது எப்படி?

நாளை தூய கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருநாளைக் கொண்டாடுகிறோம். யூத மரபில் பெண் குழந்தைகளை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பது கிடையாது. இருந்தாலும் விவிலியத்திற்குள் வராத 'யாக்கோபின் நற்செய்தி' என்ற திரைமறைவு நற்செய்தியில், சுவக்கீன், அன்னம்மாள் தங்கள் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுத்தார்கள் என்றும், பெற்றெடுத்த மகளை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக்கினார் என்றும், தான் 'வயதுக்கு வரும் வரை' மரியாள் அங்கே வளர்ந்தார் என்றும் இந்த நற்செய்தி குறிப்பிடுகிறது.

'முதியவர் குழந்தை பெறுதல்' அல்லது 'குழந்தைப் பேறு இல்லாதவர் குழந்தை பெறுதல்' என்பது விவிலியத்தில் வழங்கப்பெறும் ஒரு இலக்கிய நடை. நீதித்தலைவர்கள் நூலில் வரும் சிம்சோன், வரலாற்று நூல்களில் வரும் சாமுவேல் எல்லாம் இப்படிப் பிறந்தவர்கள்தாம். ஆக, மரியாளின் பிறப்பையும் இந்த இலக்கிய நடையில் யாக்கோபு எழுதியிருக்கலாம்.

மரியாளை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது அவருக்கு முக்கியமோ என்னவோ, அது நமக்கும், நம் கிறிஸ்தவத்திற்கும் முக்கியம்.

அதாவது, அவர் எல்லாரையும் போல இருந்தாலும், கொஞ்சம் உயர்த்தப்பட்டு தூய்மையான இடத்தில் அவரை நாம் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் தூய்மையான கடவுள் அவரிடம் பிறந்தார் என்ற லாஜிக் சரியாக வரும்.

ஆக, தூய்மை என்பது மனிதர்களாகிய நாம் ஒரு பொருளுக்கும், ஒரு நபருக்கும் கொடுப்பது. இதற்கு எதிர்ப்பதமாக தீட்டு என்பதை பொருட்களுக்கும், நபர்களுக்கும் கொடுப்பது நாம்தான். இதை நாம் தனிநபராகச் செய்வதில்லை. நாம் சார்ந்திருக்கும் குழுதான் செய்கிறது. 'கிறிஸ்தவர்கள்' என்ற குழுவில் நாம் இருப்பதால் பைபிள் நமக்கு புனித நூலாக இருக்கிறது. இதுவே நாம் 'இந்துக்கள்' அல்லது 'இசுலாமியர்கள்' என்னும் குழுவில் இருந்தால் நாம் 'கீதை' அல்லது 'குரானைத்தான்' புனித நூல் என்று சொல்வோம். ஆக, எந்த நூலும் புனிதம் என்றும் தீட்டு என்றும் இல்லை. நாம் எந்த தளத்தில் நிற்கிறோமோ, அதுதான் புனிதம்-தீட்டை நிர்ணயம் செய்கிறது.

அப்படியென்றால் இயல்பாகவே தூய்மை, தீட்டு என்பது பொருட்களில், நபரில் இல்லையா? - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் இருக்கிறதா? என்பது போல ஒரு போட்டியை வைத்தால்தான் சரியாகும்.

நிற்க.

நாளை நாம் கொண்டாடும் மரியாளின் அர்ப்பணத் திருநாள் சொல்வது என்ன?

நாம் கடவுளுக்கென ஒன்றை அல்லது ஒருவரைத் தள்ளி வைக்கும்போது, அவர் அதை அல்லது அவரைப் புனிதப்படுத்தி நமக்கே தருகின்றார்.

நாம் அன்றாடம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியிலும் இதைப் பார்க்கலாம்: நாம் கொடுக்கும் அப்ப, ரசத்தை கடவுள் நமக்கே தன் திருமகனின் உடல், இரத்தம் என்று கொடுத்துவிடுகிறாரே.

Thursday, November 19, 2015

தண்ணீர் வடியட்டும்

'சினிமாக்களிலும், நாடங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவது போல, நிஜ வாழ்விலும் காட்சிகள் நொடிப் பொழுதில் மாறித்தான் போகின்றன...

...எப்பேர்ப்பட்ட வசதி உள்ளவர்களையும் ஒரு நொடிப் பொழுதில் பிச்சைக்காரர்கள் ஆக்கி ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறானே...

ஒரு சில விஷயங்களை நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது நிஜவாழ்வில் நடந்துவிடுகிறது...

மழைவெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல. ஆனால் நம்மை நம்பி நம்மோடு இருப்பவர்களுக்கு தேவையானதைக் கொடுக்க வழியில்லாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் மழைமீது கோபம் வந்தது...'

சென்னை வாசகி அருணா எஸ்.சண்முகம் அவர்கள் எழுதியதாக ஆனந்த விகடன் செய்திகள் இணையதளத்தில் வலம்வரும் பதிவு இது.

நொடிப்பொழுதில் காட்சிகள் மாறிவிட்டன சென்னையில் - இதுதான் இவரின் பதிவின் மையம்.

கடந்த நான்கு நாட்களாக முதல் வாசகம் என நாம் மக்கபேயர் நூலின் சோகமான பகுதிகளை வாசித்துக் கொண்டிருந்தோம் - சிறை, வெட்டு, குத்து, கொலை, மரண தண்டனை, ரத்தம், கண்ணீர், அழுகை - இப்படி இருந்தது நாளை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது?

இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

அழிந்து கிடந்த எருசலேம் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டுவிட்டது.

இன்னும் சில நாட்களில் மழைநீரெல்லாம் வடிந்து மக்கள் தாங்கள் இருந்த வீட்டை மீண்டும் தேடிவந்து, அதை புதுப்பித்து, அல்லது புதிதாய்க் கட்டி மறுபடியும் குடிபோகும்போது ஒரு உணர்வு வரும். என்ன உணர்வு? இப்போ வெள்ளத்தை வரச்சொல்லுங்க பார்க்கலாம்! என்பது போல ஒரு பெருமிதம் வரும். யாரும் என்னை வெற்றிகொள்ள முடியாது என்கிற ஒரு தன்னம்பிக்கை உணர்வு வரும்.

இனி இவர்கள் வெறும் மண்தான். வெறும் சாம்பல்தான். இப்படித்தான் இஸ்ராயேல் மக்கள் அழிந்துவிட்டார்கள் என உலகம் நினைத்தது.

ஆனால், இதோ புதிய ஆலயம். இதோ மறுபடியும் அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

'மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது. வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது.'

அவர்களின் அழுகை, கண்ணீர் மறைந்துவிட்டது.

சென்னையின் தண்ணீர் சீக்கிரம் வடியட்டும்...


Wednesday, November 18, 2015

இயேசு அழுதார்

'இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார்'

(காண் லூக் 19:41-44)

'புதிய உலகை தேடி போகிறேன்' என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?

அதில் அழகான வரி ஒன்று உண்டு:

'தோளில் ஏறினாய் என்னை இன்னும் உயரமாக்கினாய்'

அதாவது, இறந்து தன் மகனைப் பிரிந்து செல்லும் தாய், தனக்கும் தன் மகனுக்கும் இருந்த உறவை சுருக்கிச் சொல்வதாகவும், இனி எல்லா நேரமும் அவனைக் காணப்போவதாகவும் பாடும் பிரியாவிடைப் பாடலே இது.

தன் குழந்தையை தோளில் ஏற்றுவது வழக்கமாக அப்பாக்களின் செயல்தான். ஆனால், இங்கே அதைத் தாய் செய்கிறாள். ஆக, அம்மையும், அப்பனுமாக இந்தக் குழந்தைக்கு இருந்திருக்கிறாள் தாய்.

தோளில் குழந்தை ஏறும்போது வழக்கமாக பாரம் தாங்காமல் கால்கள் தானாகவே வளையும். ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல், 'நீ என்மேல் ஏறி நின்றதால் என் உயரம் அதிகமானது' என்கிறாள் தாய்.

கவிஞரின் கற்பனைத் திறனுக்கு ஒரு சபாஷ்.

இங்கே தாயின் உயரம் மட்டுமல்ல. குழந்தையின் உயரமும் கூடத்தான் செய்கிறது.

ஒருவரின் வலி இருவரின் உயரத்தைக் கூட்டுகிறது.

நாம் வடிக்கும் கண்ணீர் கூட நம் இதயத்தின் நீட்சிதான். கண்ணீரின் வழியாக நம் இதயம் தன் உயரத்தை தானே கூட்டிக் கொள்கிறது. உள்ளுக்குள் தெரியாமல் இருக்கும் மென்மையை, கண்ணீர் எல்லாருக்கும் தெரியப்படுத்துகின்றது.

நாளைய நற்செய்தியில் எருசலேமுக்காக கண்ணீர் வடிக்கும் இயேசுவைப் பார்க்கின்றோம்.

எருசலேமின் கோவிலைப் பார்க்கின்ற இயேசு கண்ணீர் வடிக்கின்றார்.

எருசலேமின் கோவிலில்தான் யாவே இறைவனின் திருப்பெயர் உறைந்திருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். அதாவது, இறைவன் தங்களோடு இருந்தும், அமைதிக்கான வழியை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை!'

மக்களின் அறியாமையை முன்னிட்டு கடவுள் கண்ணீர் வடிக்கின்றார்.

ஆக, 'நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை' என்ற செய்தியை நாம் மற்றவர்களுக்கு எளிதாக சொல்லிவிடும் வழி கண்ணீர்.

இந்தக் கண்ணீர் துடைக்கப்படுவது எப்போது?

அடுத்தவர் புரிந்துகொள்ளப்படும்போது.

எருசலேம் இயேசுவின் கண்ணீரைத் துடைத்ததா?

இல்லை.


Tuesday, November 17, 2015

முந்தியின் முடிச்சு

'நான் என்ன முந்தியிலயா முடிச்சு வச்சிருக்கிறேன்!'

என் அய்யாமை லட்சுமி அம்மாவிடம் காசு கேட்கும்போதெல்லாம் அவர் இப்படித்தான் சொல்வார். ஆனால், தன் முந்தியின் நுனி முடிச்சை அவிழ்த்துக் காசைக் கொடுத்துவிடுவார்.

அவர் காசை முடிந்து வைத்தே அவரின் முந்தி நுனி சுருக்கமாக இருக்கும். முந்தியில் முடிய வெட்கப்படும் சிலர் கைக்குட்டையில் முடிந்து அதைத் தங்களின் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்கள் - குறிப்பாக ஆண்கள். முந்தியில் நாணயங்களைத்தான் முடிய முடியும். நோட்டுக்களை முடிந்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. மேலும் உடலின் வியர்வையால் நோட்டுக்கள் நனைந்துவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
முந்தியின் முடிச்சு - ஒரு பாதுகாப்பு பெட்டகம்.

நெல்வயலில் இறங்குமுன் கழற்றப்படும் மெட்டி, கைவிரலின் மோதிரம், வீட்டுச் சாவி, புகையிலை, பாக்கு, பணம் என எல்லாம் முடியப்படுவது முந்தியில்தான்.

முந்தியின் முடிச்சு எளிதாக அவிழ்வதில்லை. மேலும், அவை நம் உடலை உரசிக்கொண்டே இருப்பதால் அவைகள் தவறவும் வாய்ப்பில்லை.

'உன் வீட்டுக்காரரை உன் முந்தியில் முடிசு;சுக்கோ!' என்று தாய் தன் மகளுக்கு அறிவுரை கொடுப்பதும் இதனால்தான்.

மனிதர்கள் காசை சேகரித்து வைக்கத் தொடங்கியதின் முதற்படி இதுவாகத்தான் இருக்கும். முதலில் முந்தி, அடுத்து சுருக்குப் பை, அடுத்து பர்ஸ், அடுத்து ஏடிஎம் அட்டை என வளர்ந்து கொண்டிருக்கிறது.

முந்தியோடு நிறுத்திக் கொள்தல் பொருளாதாரத்தின் முதல்படியே.

அப்படி முந்தியோடு முடிந்து வைத்து, தன் பொருளாதார வளர்ச்சியை தானே நிறுத்திக் கொண்ட ஒருவரைத்தான் நாளைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:11-28) நாம் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் தாலந்து எடுத்துக்காட்டுக்கும் (25:14-30) மூன்று முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன:

1. மத்தேயு, 'தாலந்து' என குறிப்பிடுவதை, லூக்கா 'மினா' எனக் குறிப்பிடுகிறார். 60 மினாக்கள் சேர்ந்ததுதான் ஒரு தாலந்து.

2. மத்தேயுவில் மூன்று பேருக்கு, ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. லூக்காவில் பத்து பேருக்கு, ஆளுக்கு ஒன்று வீதம் பத்து மினாக்கள் கொடுக்கப்படுகின்றன.

3. மத்தேயுவில் மூன்றாம் நபர் தாலந்தை நிலத்தில் புதைக்கிறார். லூக்காவில் மூன்றாம் நபர் கைக்குட்டையில் முடிகிறார். மேலும் முதல் நபர் ஒன்றை பத்தாகவும், இரண்டாம் நபர் ஒன்றை ஐந்தாகவும் பெருக்குகின்றார். மற்ற ஏழுபேர் தங்கள் மினாக்களை என்ன செய்தார்கள் என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களில் எது இயேசு சொன்னது என்பது குழப்பமாக இருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களிலும், மூன்றாம் நபர் கண்டிக்கப்படுகிறார்.

எதற்காக? அவரின் சோம்பலுக்காகவும், அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பெருக்காததற்காகவும்.

டாடா மோட்டார்ஸ் விளம்பரத்தில் அழகாக ஒரு வரி வரும்:

'நமக்கு உள்ளிருந்து நம்மை இயக்குவதே நம்மை மேன்மையானவராக்குகிறது!'

அதாவது, நம் கைகளில் எத்தனை மினாக்கள் இருப்பதைப் பொறுத்து அல்ல நம் மேன்மை. மாறாக, அந்த மினாக்களைப் பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் இருக்கவும் வைக்கின்ற நம் உள்மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்.

ரூபிக்ஸ் க்யூப் பார்த்திருப்பீர்கள்.

இதில் உள்ள நிறங்களை அந்தந்த பகுதியில் சரியாகச் சேர்க்க 43,252,003,274,489,856,000 வழிமுறைகள் உள்ளன.

ஒரு கையடக்க க்யூபே இத்தனை வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றால், கைக்குள் அடங்காத நம் மனித வாழ்க்கைக்கு எத்துணை வழிமுறைகள் இருக்கும்.

ஒரு வழிமுறை தவறாய்ப்போனாலும், அல்லது ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டாலும், அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே.


Monday, November 16, 2015

குட்டையாய்

'ஏனெனில் சக்கேயு குட்டையாய் இருந்தார்.' (காண் லூக்கா 19:1-10)

குருமடத்தில் பயின்றபோது எப்போதெல்லாம் இந்த வாசகம் வாசிக்கக் கேட்பேனோ, அப்போதெல்லாம் ரொம்ப கூச்சமாக இருக்கும். 'குட்டையாய்' இருத்தல் எனக்கு அப்போது பிடிக்கவில்லை. நான் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், இந்த வாசகம் வாசித்தபின் சாப்பாட்டு அறையில் சில 'வளர்ந்தவர்கள்' என்னைப் பார்த்து, 'இன்று உன்னுடைய வாசகம்' என்று கேலி செய்திருக்கிறார்கள். சிலர் என்னை 'சக்கேயு' என்றும் அழைப்பார்கள்.

குட்டையாய் இருப்பது பற்றி இப்போது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படி வருத்தம் இல்லை என்று சொல்ல முடியும்?

பாலசந்தரின் 'இரு கோடுகள்' தத்துவம்தான். ஒரு கவலையைவிட பெரிய கவலை வந்துவிட்டால் இந்த ஒரு கவலை சின்னதாகிப்போய்விடும்.

அப்படி என்ன இப்போ பெரிய கவலை என்று கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை.

நான் குட்டையாகப் பிறந்ததற்கு நான் பொறுப்பல்லவே.

ஜீன்களின் தவறுக்கு நான் என்ன செய்ய முடியும்?

சக்கேயுவும், இயேசுவும் ஒரே வயதினராகத்தான் இருந்திருக்க வேண்டும். குட்டையாய் இருந்தாலும் ஆளு ரொம்ப கறாரான ஆள். குட்டையாய் இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப கறாரானவர்கள் என்பதற்கு வரலாறும் சான்று பகர்கிறது: நெப்போலியன், சார்லி சாப்ளின், ஹிட்லர், தொன் போஸ்கோ.

அவர் பெரிய புத்திசாலியாகவும் இருந்திருக்க வேண்டும். உரோமையர்களுக்கு கீழ் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமன்று.

இயேசுவைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொள்கிறார்.

அதற்கான தடைகளை தானே வெல்கின்றார்.

இயேசுவைக் கண்டவுடன் மெய்மறந்து போகின்றார்.

பாதியைக் கொடுக்கிறேன். நாலு மடங்கு கொடுக்கிறேன். என அப்படியே எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கின்றார்.

சக்கேயுவின் துணிச்சல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

கடவுளுக்கு கொடுப்பது என்று சொல்வதைவிட, அவர் 'அள்ளி வீசுகிறார்' என்றே சொல்வேன்.

நான் புனித நாடுகள் பயணத்தின்போது எரிக்கோவில் இருக்கும் சக்கேயு ஏறிய மரத்திற்குச் சென்றேன். அந்த இடத்தில் வளரும் மரம் இன்னும் குட்டையாகவே இருப்பது ஆச்சர்யம்.

குட்டையும், குட்டையும் சேர்ந்தது நிறைவான மீட்பிற்கு வழிவகுத்தது.


மீண்டும் பார்வை

'மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்!'

(திபா 119:134)

கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய வரலாற்றில் மிக சோகமான நாளாகக் கடந்து போனது.

பிரான்சு நகரின் பாரிசு நகரில் 8 இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்புக்களால் ஐரோப்பாவே கண்ணீருடன் நிற்கிறது.

இழந்த உயிர்கள். அவர்களுக்காக காத்திருக்கும் உறவுகள். காயம்பட்டவர்கள். கைகால் இழந்தவர்கள். உயிர். உடைமை. உறவு. இவ்வாறு பல இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு.

இறைவனின் பெயரால் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டது என்று நினைக்கும்போது இறைவன்மேல் கோபம் வருகிறது.

'ப்ரே ஃபார் ஃப்ரான்ஸ்'

இப்படி டுவிட்டரில் ஒரு ஹேஸ்டேக் வருகிறது.

எந்தக் கடவுளிடம் செபிக்க?

'உங்கள் பக்தர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!' என்று அல்லாவிடமா?

அல்லது

'உங்கள் பக்தர்களைக் காப்பாற்றுங்கள்!' என்று இயேசுவிடமா?

யார் இவர்கள்? யார்மேல் இவர்களுக்குக் கோபம்?

தங்களின் கோபத்தை ஒன்றுமறியாத மூன்றாம் நபரிடம் காட்டுவது என்ன நியாயம்?

யாரைப் பயமுறுத்துவதாக நினைக்கிறார்கள்?

இந்தப் பயமுறுத்தலால் இவர்கள் சாதித்துவிட்டது என்ன?

பழிக்குப் பழி என்றால்,

கண்ணுக்குக் கண் என்று எடுத்துக் கொண்டே போனால்

வெறும் காலணிகள்தான் மிஞ்சும்.

மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதருக்குள் நடக்கும் போராட்டத்திற்கே விடைதெரியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்க, நம் சொந்த இனத்தை அழிக்க, அவர்களுக்கு எதிராக போராட நாம் ஏன் துணிய வேண்டும்?

'மனிதர் மனிதருக்குச் செய்யும் தீங்கு' பற்றி நாளைய திருப்பாடல் (119) நமக்குச் சொல்கிறது. மனித இனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பண்பு மனிதரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

நம் நாளைய செபம் 'ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்!' என்று நற்செய்தி வாசகத்தில் இருப்பதுபோல இருக்கட்டும்.

என் அருகில் இருப்பவரை நிறத்தை, மதத்தை, இனத்தை, மொழியைக் கடந்து என்னைப்போல ஒருவராக நான் மீண்டும் பார்க்க வேண்டும் என்று கேட்போம்!

Friday, November 13, 2015

தொந்தரவு

ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தும்

தன் தாயிடம்,

'டுவெண்டி ஃபோர் அவர்ஸ் சதா ட்ரபுள் குடுத்துகிட்டே இருக்க நீ!'

என்று கடிந்து கொள்வார் எம்.ஆர். ராதா.

தொந்தரவு -

ஒருவர் மற்றவருக்குச் செய்வது. இது நடக்கு இருவர் அல்லது இருவருக்கு மேல் அவசியம். எனக்கு நானே தொந்தரவு கொடுக்க முடியுமா? முடியாது. அடுத்தவர்தான் கொடுக்க முடியும். அல்லது நான்தான் அடுத்தவருக்குக் கொடுக்க முடியும்.

ஒரு புள்ளியில் தொடங்கும் வேலை மற்றொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நகர்தலை மற்றவர் இடைநிறுத்தினால் அதற்குப் பெயர் தொந்தரவு.

ஆங்கிலத்தில் 'disturb' என்கிறோம். இதன் இலத்தீன் மூலம் 'dis-turbare'. Turbain என்பது ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை தடுப்பது அல்லது நிறுத்துவதுதான் dis-turb.

a. சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை.

உதாரணத்திற்கு, இப்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்யும் கனமழை. இந்தக் கனமழையினால் நம் பயணம், பணி தடைபடுகிறது. ஆனால், இது தவிர்க்க முடியாத தொந்தரவு.

b. சில தொந்தரவுகள் தவிர்க்க கூடியவை.

நாம் படிக்கும் இடத்தின் அருகில் 'செல்லாத்தா, செல்ல மாரியாத்தா' என்று லவுட் ஸ்பீக்கரில் பாட்டு ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொந்தரவை தவிர்க்க நான் என் அறையின் கதவுகளை அடைக்கலாம். அல்லது வேறு இடத்திற்கு நானே மாறிச் செல்லலாம்.

c. சில தொந்தரவுகள் நாமாக ஏற்படுத்திக் கொள்பவவை.

முக்கியமான ப்ராஜக்ட் ஒர்க் செய்து கொண்டிருக்கும்போது, ஸ்கைப் அல்லது வாட்ஸ்ஆப் ஆன் செய்து வைத்து அந்த ஸ்க்ரீனில் ஒரு கண், கணிணி ஸ்க்ரீனில் மறு கண் என இருப்பது.

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 18:1-8) தொந்தரவு கொடுக்கும் ஒரு கைம்பெண்ணைப் பார்க்கிறோம். யாருக்குக் கொடுக்கிறார்? நீதியற்ற நடுவருக்கு. எதற்காக? தனக்கு நீதி வேண்டி.

இந்த நடுவர் 'கடவுளுக்கும் அஞ்சுவதில்லை', 'மனிதரையும் மதிப்பதில்லை'.

இருந்தாலும் தொந்தரவின் பொருட்டு அடிபணிகிறார்.

இந்தப் பெண்ணின் தொந்தரவுக்குப் பின் இருப்பது நம்பிக்கை. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையுடன் தட்டும் எந்தக் கதவும், மீண்டும் மீண்டும் தட்டப்படும்போது, கண்டிப்பாக திறக்கப்படும்.

இந்தப் பெண் தன்னிடம் ஒன்றுமில்லாத ஒருநிலையில், தன் கையறுநிலையில் நடுவர்மேல் நம்பிக்கை கொள்கிறார்.

இந்தப் பெண்ணின் நம்பிக்கை எப்படி இருக்கிறது தெரியுமா?

ஆற்றுத் தண்ணீரில் அமிழ்த்தப்படும் ஒருவன் தன் தலையை முட்டிக்கொண்டு மூச்சுக்காற்றுக்கு வெளியே வருவானே அப்படியிருக்கிறது.

தொந்தரவும் நல்லதே!

Thursday, November 12, 2015

ஒரே கட்டிலில்

'ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.'

(காண் லூக்கா 17:26-37)

நாளைய நற்செய்தி வாசகத்தில் உலகத்தின் இறுதிநாட்கள் பற்றியும் மானிட மகனின் இரண்டாம் வருகை பற்றியும் இயேசு சொல்வதை லூக்கா பதிவு செய்திருக்கின்றார்.

இருவர் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விட்டுவிடப்படுகிறார்.

இருவரையும் எடுத்துக்கொள்ளலாமே! அல்லது இருவரையும் விட்டுவிடலாமே!

விட்டுவிடப்பட்ட ஒருவர் என்ன செய்வார்?

இந்தச் சொல்லாடல்களை நாம் உருவகமாக பார்க்கலாம். எப்படி?

ஒருவர் இல்லாத பெரிய படுக்கை...உறவு வெறுமை.

ஒருவர் இல்லாத மாவரைக்கும் வேலை...உழைப்பு வெறுமை.

ஒருவர் இல்லாத வயல்...ஊர் வெறுமை.

ஆக, உறவு, உழைப்பு, ஊர் - என எதுவுமே இல்லாமல் எல்லாம் அழிந்துவிடும்.

'லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்!' என்கிறார் இயேசு.

சாகப்போற நேரத்துல இன்னொருத்தன் பொண்டாட்டியை நினைக்கணுமா?

இன்றும் நாம் சாக்கடல் பகுதிக்கு செல்லும்போது லோத்தின் மனைவி உப்புச் சிலையாகி நிற்பதைக் காண முடியும்.

இந்தப் பொண்ணு அப்படி என்ன பெரிய தப்ப செஞ்சுட்டா?

திரும்பிப் பார்க்குறது ஒரு குத்தமா?

ஆம்.

எப்போ?

கடவுள் ஒரு புதிய வாழ்க்கையை லோத்தின் குடும்பத்தார்க்கு வாக்களித்து, அவர்கள் பாவத்தின் விளைநிலமாம் சோதோம், கொமோராவை விட்டு அவர்களை வெளியேற்றிக் கொண்டுவரும்போது, 'அந்த ஊருக்கு என்ன ஆச்சு!' அப்படின்னு நின்னு பார்ப்பது தவறுதானே.

டைமுக்கு ஏது ரீவைண்டிங் பட்டன்?

பெரிய ஆடியோ தகடு, சிறிய பிலிம் கேசட், எம்பி3 சிடி, ஐபாட் என மியூசிக் மாறிக்கொண்டே வருகிறதே.இதற்கு என்ன ரீவைண்டிங் பட்டன்.

இந்த உலகம் முடிந்ததா, அடுத்த உலகம்.

இதுதான் கடவுளின் காலச்சக்கரம்.

சொல்வதற்கு எளிதாக இருக்கிறதுதான்.

ஆனால், நடக்கும்போதுதான் தெரியும் இதன் வலியும், வெறுமையும்!

Wednesday, November 11, 2015

இங்கே அங்கே

'இதோ, இங்கே! அதோ, அங்கே!'

இறையரசு எங்கே இருக்கிறது?

மற்றும்

மானிட மகன் எங்கே இருக்கிறார்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தருகிறோம் என்று சொல்பவர்கள், 'இதோ, இங்கே! அதோ, அங்கே!' என்று உங்களை அலைக்கழிக்கலாம். ஆனால் நீங்கள் அவர்கள் பின்னே செல்லாதீர்கள் என்கிறார் இயேசு.

'உங்கள் நடுவே இருக்கிறது!'

இந்தப் பதிலை நாம் கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும்.

இறையரசு பற்றிய கேள்வியை கேட்பவர்கள் பரிசேயர்கள். இந்தப் பதிலை நாம் அப்படியே எடுத்தால், 'இறையரசு பரிசேயர்கள் நடுவே இருக்கிறது!' என்பது போல ஆகிவிடும்.

நாளைய முதல் வாசகதத்தில் ஞானம் என்ற வார்த்தைக்கு அழகான மணிமகுடம் சூட்டி, அதை 'ஆற்றல், அறிவு, தூய்மை, தனித்தன்மை, நுண்மை, உயிர், தெளிவு' என அதில் முத்துக்களை பதிக்கின்றார் சாலமோன்.

இந்த மதிப்பீடுகள் எங்கே இருக்கிறதோ, அங்கே இறையரசு இருக்கும் என்று நாம் சொல்லலாமே!


Tuesday, November 10, 2015

இது ஓகே வா?

'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' (காண். லூக்கா 17:11-19)

இயேசு பத்து தொழுநோயாளர்களை குணமாக்கும் நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எங்கள் குருமடத்தில் நடந்த ஒரு நாடகம்தான் நினைவிற்கு வரும். இந்த நிகழ்வை அப்படியே மேடைநாடகமாக நடித்தபோது, இயேசுவாக நடித்த மாணவன், 'பத்துப் பேர்களின் நோய்களும் நீங்கவில்லையா? மற்ற பதினோரு பேர் எங்கே?' என்று கேட்டுவிட்டான்.

பத்து – ஒன்பது – ஒன்று என்று எல்லாம் இணைந்து பதினொன்று ஆகிவிட்டது.

நாளைய நற்செய்தியின் முக்கிய கேள்வி: நமக்குத் தேவையானது எது? human approval அல்லது divine approval.

மனிதர்கள் சொல்லும் O.K. (Oll Korrekt = All Correct) வா? அல்லது கடவுள் சொல்லும் O.K. வா?

நாம் அணியும் ஆடை, எடுக்கும் முடிவு, பேசும் பேச்சு என எதை எடுத்தாலும், எல்லாம் முடிந்தவுடன் நம்;கு அருகில் இருப்பவரிடம், 'இது ஓகே வா?' என்று கேட்கிறோம். அவர் 'ஓகே' சொன்னால் நாம் திருப்தியடைகிறோம். அப்படி அவர் 'ஓகே' சொல்ல மறுத்தால் நாம் சோர்ந்துவிடுகிறோம். நம்மையே திருத்திக்கொள்ள விழைகிறோம். இந்த நிகழ்வுகளில் அடுத்தவர்தான் என்னுடைய அளவுகோலாக இருக்கிறார்.

முதல் ஏற்பாட்டு சட்டத்தின்படி தொழுநோய் ஒருவருக்கு நீங்கப்பெற்றாலும், குருக்கள்தாம் 'ஓகே' என்று சர்டிபிகேட் கொடுக்க வேண்டும்.

பத்து தொழுநோயாளர்கள். ஒருவர் சமாரியர். மற்ற ஒன்பது பேர் யூதர்கள்.

தொழுநோய் பிடித்த இந்த சமாரியர் இரண்டு நிலைகளில் 'ஓகே' மறுக்கப்பட்டிருக்கிறார். எப்படி? ஒன்று, அவர் சமாரியர் (அதாவது, தூய்மை இல்லாதவர்), இரண்டு, தொழுநோய் பிடித்தவர் (ஆக, தள்ளிவைக்கப்பட்டவர்). இவர் இப்போது நலம் பெற்றாலும் யூதக் குருக்களிடம் செல்ல முடியாது. ஏனெனில், யூதர்களுக்கு மட்டும்தான் அவர்கள் குருக்கள். ஆக, அவர் இயேசுவிடம்தான் வந்தாக வேண்டும்.

இப்போ பிரச்சினை என்னவென்றால், யாரை என் குருவாக ஏற்றுக்கொள்வது? இதுதான் இந்த சமாரியரின் கேள்வி. இயேசுவையா? மனிதர்களையா?

இவர் இயேசுவைத் தேர்ந்து கொள்கின்றார். திரும்பி வருகின்றார்.

சில நேரங்களில் கடவுள் நம்மை வேண்டுமென்றே தூரம் அனுப்புகின்றார். எதற்காக? அந்தத் தூரத்திலிருந்து நாம் திரும்பி வருவதற்காகத்தான்.

ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டிலும், அந்த மகன் தன் தந்தையின் அன்பையும், இரக்கத்தையும் உணர சில காலம் தூரமாக இருக்க வேண்டியிருந்தது. அந்தத் தூரத்தில்தான் அவன் 'பன்றிகளா' 'தந்தையா' என்ற முடிவை எடுக்கின்றான்.

'உமது நம்பிக்கை உமக்கு நலம் தந்தது!'

அதாவது, கடவுள் ஓகே சொன்னால் போதும் என்ற நம்பிக்கையே நமக்கு நலம் தருகிறது.

இன்று பல நேரங்களில் நாம் அடுத்தவர்கள் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக நம்மையே மாற்றிக்கொண்டே இருக்கின்றோம். இதில் கடைசியில் நம் இயல்பு என்ன என்பதும், நம் ஆசாபாசாங்கள் எவை என்பதும் நமக்கு மறந்துவிடுகின்றன. மேலும் மனிதர்களின் ரசனைகள் மாறிக்கொண்டே இருப்பவை. இன்று நான் கறுப்பு ஆடை அணிவது எனக்கு அடுத்திருப்பவருக்கு பிடிக்கிறது என்று நான் கறுப்பு நிறத்தில் ஆடை அணிகிறேன் என வைத்துக்கொள்வோம். இன்னும் ஒரு மாதத்தில் அவருக்கு வெள்ளைதான் பிடிக்கிறது என்றால் நான் என் அலமாரியைக் காலி செய்து அனைத்தையும் வெள்ளையாக மாற்ற வேண்டும்.

ஒரே கேள்வி:

இன்று யார் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?

கடவுள் ஓகே சொன்னால் மட்டும்போதும் என நினைத்தால் நானும் இப்போதே அவரிடம் திரும்பிச் செல்வேன்.

அதுவே நலம்தரும் நம்பிக்கை.

Monday, November 9, 2015

அரிதாள்

'கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்.
அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்'
(காண். சாஞா 2:23-3:9)

நாளை நாம் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

பருப்பு விலை ஏறிப்போச்சு. இட்லி, பலகாரம் செய்யும் ஆர்வம் இறங்கிப் போச்சு.

சீனப் பட்டாசுக்களால் சிவகாசி பட்டாசு மார்க்கெட் சரிஞ்சு போச்சு.

பட்டாசு வாங்கி வந்தாலும் இடைவிடாத மழையும், காற்றும், புயலும் நம் கனவுகளையெல்லாம் 'டமால்' ஆக்கிடுச்சு.

கார்த்தி 'சென்னை சில்க்ஸ்'க்கு கூப்பிடுறாரு. கமல் 'போத்தீஸ்'க்கு வாங்க, 'அபிமானம்' அப்படி, இப்படி என பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் சொல்றாரு. இவங்கள நம்பி போனா, ரெண்டாயிரம், மூவாயிரம் கையில் இல்லாம டிரஸ் எடுக்க முடியாது.

இதையெல்லாம் பார்க்குறப்ப, பேசாம கிருஷ்ணன் நரகாசுரனை கொல்லாமல் கொஞ்சம் கருணை காட்டி மன்னிச்சு விட்டிருக்கலாம் என்றே தோணுது.

நாளைய முதல் வாசகத்தின் மையமும் 'ஒளி' என்ற வார்த்தைதான்.

நாளைய வாசகம்தான் அடக்கத் திருப்பலிகளில் வழக்கமாக வாசிக்கப்படும் முதல்வாசகம். ஒட்டுமொத்த மனித வாழ்வையும் பெறும் 10 வசனங்களில் சொல்லி விடுகிறார் சாலமோன். இறவாமைக்கு கடவுள் மனிதர்களைப் படைக்கிறார். ஆனால் பாவத்தால் இறப்பு வந்துவிடுகிறது. இருந்தாலும், நம் நல்வாழ்வால் மீண்டும் நாம் இறவாமையை அடைந்துவிடலாம்.

வாழ்விற்கும், சாவிற்குமான, ஒளிக்கும், இருளுக்குமான போராட்டத்தில், வாழ்வு மற்றும் ஒளி வெற்றிபெறவதையே தீபஒளித் திருநாளும் நமக்குச் சொல்கிறது.

இந்த வெற்றி கடவுளர்களுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே சாத்தியம்.

'அரிதாள் நடுவே தீப்பொறி போல பரந்து சுடர்விடுவார்கள்' என்னும் சொற்றொடர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

அரிதாள் என்பது நன்றாகக் காய்ந்த வைக்கோல் அல்லது அரியப்பட்ட புல் அல்லது அரியப்பட்ட சோளம் அல்லது கம்பந்தட்டை. கேஸ் அடுப்பு வராத அந்த நாட்களில் இவைதான் அடுப்பின் நெருப்புக்கு ஸ்டார்ட்டர். இவைகள் எரியத் தொடங்கியபின்தான் பெரிய விறகு மற்றும் சுள்ளிகளை வைப்பார்கள். இந்த அரிதாள் எளிதில் தீப்பிடிக்கக் காரணம் அவைகளின் மென்மை மற்றும் வறட்சி. மென்மையாய் மட்டும் இருந்து காய்ந்து போகாமல் இருந்தால் வெறும் புகைதான் வரும். நெருப்பு வராது. மேலும் அரிதாள்கள் அடுப்பில் தாங்கள் எரிந்தாலும் தங்களுக்குப் பின் வரும் விறகுகளுக்கு தங்கள் நெருப்பை விட்டுச் செல்கிறார்கள். நம்மைவிட்டு நமக்கு முன் செல்லும் நம் அன்பிற்குரியவர்களும் அவர்களின் நெருப்பை நம்மிடம் விட்டுத்தானே சென்றிருக்கிறார்கள்.

விவிலியம் ஒரு இலக்கியம் என்ற அடிப்படையிலும்கூட மேலோங்கியே நிற்கிறது. சின்ன உருவகம் எவ்வளவு அழகான பொருளை உள்ளடக்கியுள்ளது!

இறப்பில் கூட நம் பண்பு இவைதாமே: மென்மை மற்றும் வறட்சி. மென்மை ஏனென்றால் வன்மையான நம் உடலைவிட்டு நாம் பிரிகின்றோம். வறட்சி ஏனென்றால் நாம் எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றோம்.

'இறப்பிற்குப் பின் மறுவாழ்வு இல்லை' என்று நான் அடிக்கடி வாதாடுவதுண்டு. ஆனால் இந்த நாட்களில் நான் வாதாடியது தவறு என்றே உணர்கிறேன். இந்த நாட்களில் நிலைவாழ்வின் மேலுள்ள நம்பிக்கை அதிமாகவே இருக்கிறது. நம் உடல்தான் அழியக்கூடியதே தவிர, நம் ஆன்மா அழிவதில்லை. ஏனெனில் நம் மனம் அல்லது உயிர் அல்லது ஆன்மா உடலையும் தாண்டிச் செல்ல வல்லது.

இறப்பிற்குப் பின் வரும் மென்மை மற்றும் வறட்சி என்ற பண்புகளை நாம் இருக்கும்போதே பெறுவது எப்படி? என்ற கேள்விக்கு விடையாக வருவதுதான் நாளைய நற்செய்தி வாசகம் (லூக் 17:7-10). நாம் பணியாளர்கள். அதுவும் பயனற்ற பணியாளர்கள்.

இந்த உலகில் நாம் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ, வயல்வெளியிலிருந்தோ திரும்பினாலும், நாம் நம் களைப்பை முன்வைக்கக் கூடாது. தொடர்ந்து பணி செய்ய வேண்டும். இது கொஞ்சம் முதலாளித்துவ சிந்தனையாக இருந்தாலும், இதுதான் நம் வாழ்வின் நிதர்சனமான உண்மை.

பருப்பு விலை ஏறினாலும், இறங்கினாலும்,
மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும்,
நம் உள்ளத்தில் ஒளி அணைந்துவிடவேண்டாம்!

நம் வாழ்வின் அன்றாட இருள் களையவும்,
வாழ்ந்தபின் நிலையான இருள் கலையவும்
இறைவன் அருள்கூர்வாராக!

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

Sunday, November 8, 2015

கோவில்

நாளை உரோமையின் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருநாளைக் கொண்டாடுகிறோம்.

உலக மீட்பர் ஆலயம் எனப்பெயரிடப்பட்டு, திருமுழுக்கு யோவான் மற்றும் திருத்தூதர் யோவான் என்ற இரு யோவான்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது இந்த ஆலயம்.

இதுதான் கத்தோலிக்க திருஅவையின் தாய் ஆலயம். முதன்மை ஆலயம். உலகின் எல்லா ஆலயங்களுக்கும் தலைமை ஆலயம். திருத்தந்தை விசுவாச பிரகடனம் செய்யும் சிறப்பு இருக்கை இங்குதான் இருக்கிறது.

பண்டைக்கால உரோமையில் சுற்றுச்சுவர் இருந்து, அதில் 12 நுழைவாயில்கள் இருந்திருக்கின்றன. நான்கு முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான யோவான் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது இந்தக் கோவில். இந்நுழைவாயில் வழியாக வரும் அனைவரும் இந்த ஆலயத்தைப் பார்க்காமல் உரோமிற்குள் செல்லவே முடியாத என்பது போல இதன் அமைப்பு இருக்கிறது. பல நூற்றாண்டு இடைவெளிகளில் இதில் பல பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டாலும், காலத்தின் கன்னத்தில் வடிந்த கண்ணீர்த் துளியாக, வானிலிருந்து விழுந்து குட்டி நிலாவாக இன்றும் மின்னிக் கொண்டிருக்கிறது.

கோவில் கட்டுவது என்பது மனிதர்களின் தொடக்க காலம் முதல் இருக்கிறது. ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் நமக்கு முந்தைய மனித இனம்கூட கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தது எனவும், அதற்கான ஆதராங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைப்பதாகவும் ஜெர்மனியின் பான் நகர மியூசியத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எல்லா இடத்திலும் கடவுளைப் பார்க்கலாம் என்பதெல்லாம் இன்று நாம் சொல்லிக் கொள்ளும் பொய்ச்சாக்கு. அல்லது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் போலிச்சாக்கு.

ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறதுதானே.

நாம் சாப்பிட்ட இடத்திலே என்றாவது பாத்திரம் கழுவுகிறோமா?

அல்லது

எல்லாம் என் வீடுதான் என்று சமையலறையில் நாம் குளிக்கிறோமா?

இல்லை.

கோவில் என்பது முதலில் ஒரு இடம். இடத்தை நாம் தூய்மை என்ற வார்த்தையைக் கொண்டே பிரிக்கிறோம். மாடுகள், நாய்கள், கோழிகள் வாழ்வதற்கான இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏன்? அவற்றின் தூய்மை நம் தூய்மையை விட குறைந்தது. (மாடு தூய்மை குறைவு என்று சொல்வது மோடி அரசில் தேசத்துரோகம் என்றும் கண்டிக்கப்படலாம்!) கடவுள் இருக்கும் இடத்தில் நாம் வாழ்வதில்லை. ஏனெனில் அவரின் தூய்மையைவிட நம் தூய்மை குறைந்தது. (அப்படியென்றால் கடவுளின் இல்லத்தில் வாழ்வோர் பெற்றிருக்க வேண்டிய தூய்மை அவர்கள்மேல் சுமத்தப்படும் பெரிய பொறுப்பு).

கோவில் - எந்தக் கோவில் என்றாலும், இலாத்தரன் என்றாலும், மீனாட்சி என்றாலும் நமக்கு நினைவுபடுத்துவது மூன்று:

அ. எது எதற்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமோ, அது அதற்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆ. கோபுரம் உயர்ந்திருப்பது போல நம் எண்ணம் உயர வேண்டும்.

இ. நம் வேர்களை மறக்கக் கூடாது - ஒவ்வொரு கோவிலும் நமக்கு முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற பாதச் சுவடு. அந்தச் சுவட்டில் ஏறி நின்றுதான் நாம் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு கோடும் கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்குமான இணைப்புக் கோடு.


'0' விலிருந்து

இன்று நாள் முழுவதும் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன் நின்று எங்கள் பங்கின் ஏழை மக்களுக்கான உணவுப்பொருட்களை அங்கே வருபவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். என்னோடு மோனியா, டினா மற்றும் கார்மேலா. எல்லாருக்கும் ஆரஞ்சு டிரஸ். எங்கள் பங்கின் பெயர் போட்டது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. எதிர்பார்த்ததைவிட நிறையப்பேர் கொடுத்தார்கள். வெறுங்கையோடு போனோம். ஒரு அறை நிறைய பொருட்களைப் பெற்று வந்தோம். இடையில் உணவு இடைவெளிக்கு மட்டும் ஆள் மாறினோம். இன்றைய அனுபவம் இனிய அனுபவமாக இருந்தது.

கொடுத்தல் - பெறுதல்.

இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அடிக்கடி எனக்கும், என் அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு வருவதுண்டு.

யார் கொடுக்கலாம்? யார் பெறலாம்?

'ஈகோ' இல்லாதவர்கள்தாம் கொடுக்கவும், பெறவும் முடியும்.

அதாவது, எனக்குதான் எல்லாம் என்று நினைப்பவர்கள் கொடுக்க முடியாது. எனக்கெதுக்கு எல்லாம் என்று நினைப்பவர்கள் பெற முடியாது.

இன்று மக்கள் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் இருந்த புன்னகையும், அதை வாங்கி, வாங்கி வண்டியில் அடுக்கிய எங்கள் தன்னார்வத் தொண்டர்களின் புன்னகையும் அப்படியே என் மனதில் பதிந்து விட்டன.

கொடுத்தவர்களும், பெற்றவர்களும் தங்களைப் பற்றி நினைக்கவே இல்லை. அவர்கள் நினைவில் நின்றவர்களெல்லாம் என்றோ ஒருநாள் பங்குக் கோவிலை நாடி உதவி கேட்டு வரும் ஏழைகள். அவர்களுக்காக இவர்கள் வெயிலில் (இன்று கொஞ்சம் வெயில் அதிகம்!) கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்?

இன்றைய என் அனுபவத்தோடு நாளைய நற்செய்தியின் கைம்பெண்ணை இணைத்துப் பார்க்கிறேன்.

அவரின் கொடுத்தலைப் பற்றி எழுதுகின்ற லூக்கா, 'அவர் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் போட்டார்,' 'அவர் தன் பிழைப்புக்கென்று வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டார்' என இரண்டு அடைமொழிகளாகப் பதிவு செய்கின்றார்.

இந்தப் பெண்ணிடம் இனி ஒன்றுமில்லை.

இனி இவள் தொடங்குவது '0'விலிருந்து.

சில நேரங்களில் கடவுள் நம்மை மொத்தமாகக் காலி செய்து அவரின் கைகளில் போடச் சொல்கின்றார். எதற்காக? நம்மை புதிய மனிதராக, பழையவைகளைக் களைந்துவிட்டு வாழ அழைப்பதால்தான்.

பெட்ரோல் நிரப்பும் இடங்களில் மீட்டர் '0'வில் இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள் என எழுதியிருப்பார்கள்.

நம் வாழ்க்கை என்ற வண்டியும் சில நேரங்களில் தடுமாறும்போது, வறண்டுபோய் நிற்கும்போது, '0'வில் இருக்கிறதா என சரிபார்த்து, இறைவனை நிரப்ப வைக்கலாமே!



Saturday, November 7, 2015

தூய முத்தம்

இன்று மாலை ரோசாப்பாட்டிக்கு நன்மை கொடுக்கப் போயிருந்தேன்.

ரோசாப்பாட்டி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட துறவற சபைக்கு திருப்பலி கருத்திற்காக பணம் அனுப்புவார். ஒவ்வொரு மாதமும் திருப்பலி நிறைவேற்றியபின் அந்த சபையில் உள்ள பொறுப்பு தந்தை இவருக்கு நன்றிக் கடிதம் அனுப்புவார். கடந்தமாதம் பொறுப்பேற்றிருக்கும் அருட்தந்தை ஒருவர் இவருக்கு எழுதும் கடிதத்தில் எழுதியிருந்த 'கரிஸ்ஸிமா ரோசா' ('அன்பிற்கினிய ரோசா' அல்லது 'மிகுந்த அன்பிற்கினிய' அல்லது 'என் இதயத்துக்கு நெருக்கமான', 'என் வாஞ்சைக்குரிய ரோசா' என மொழிபெயர்க்கலாம்) என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப வாசித்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

சிரித்து முடித்துவிட்டு, 'ஒவ்வொரு அருட்பணியாளரும் இப்படி ஒவ்வொருவரையும் பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு அன்பு செய்தால் எத்துணை நலம்!' என்றார்.

நாளைய முதல் வாசகத்துடன் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலை வாசித்து முடிக்கின்றோம். கடிதத்தை நிறைவு செய்கின்ற பவுல் நிறையப் பேருக்கு நன்றி சொல்கின்றார். நிறையப் பேரின் சுகம் கேட்டு எழுதுகின்றார். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி எழுதுகின்றார்.

'தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்!' - இதுதான் கடிதத்தில் இறுதி கிளாசிக்.

தூய முத்தம் என்றால் என்ன?

கடிதத்தின் நிறைவைக் கூர்ந்து கவனித்தாலே இதன் அர்த்தம் விளங்கிவிடும்.

பவுல் கடிதத்தை உரோமை திருச்சபைக்கு எழுதுகின்றார். ஏறக்குறைய 300 முதல் 500 பேர் உள்ள சபையாக, அல்லது 100 முதல் 200 பேர் உள்ள சபையாக இறைமக்கள் இருந்திருப்பார்கள். இந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட வேண்டியது. அதில் 11 பேரின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு எழுதுகின்றார் பவுல். இந்த 11 பேரின் பெயர்களை மட்டும் வாசிக்கும்போது மற்ற 89 பேர் என்ன நினைப்பார்கள்? 'என்னடா என் பெயர் வரலையே?' அப்படின்னு நினைச்சாலோ, அல்லது தங்கள் பெயரை எழுதாததால் பவுல் மீது கோபப்பட்டாலோ, அல்லது இந்த 11 பேரின் மேல் பொறாமைப்பட்டாலோ சபையில் பிரிவினை வருந்துவிடுமே! இதை பவுல் எதிர்நோக்காதவரா?

பவுலின் நிதர்சனமான நன்னயம் அல்லது தெளிந்த நீரோடை போன்ற அன்புதான் இங்கே துலங்குகிறது. இப்படிப்பட்டவர்கள்தாம் உள்மனச்சுதந்திரத்துடன் இருக்க முடியும். இதை அனுபவித்த சபையினர், 'ஏய் விடுங்கப்பா, உங்க பேரு வரலைன்னா என்ன? பவுலைப் பற்றி நமக்குத் தெரியாதா? அவர் மனசுல நம்ம எல்லாருக்கும் இடமிருக்குப்பா!' என்ற பெரிய மனதுடன் எடுத்திருப்பார்கள்.

முத்தம் கொடுப்பது நம் மரபில் கொஞ்சம் 'தபு'வோடே பார்க்கிறோம்.

எனக்கு முந்தையை தலைமுறையினர் முத்தம் கொடுத்து நான் பார்த்ததேயில்லை. அந்தத் தலைமுறையில் வந்த 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலின் முத்தக்காட்சியில் கூட, சிவாஜி வெறும் உதட்டை மட்டும் துடைத்துக்கொள்வதாகக்தான் காட்டுவார்கள். முத்தம் கொஞ்சம் தூரமாகவே வைக்கப்பட்டது. இன்றைய தலைமுறையினர் ஃபோனில் கொடுக்கும் முத்தங்களிலிருந்து, நேரில் கொடுக்கும் முத்தம் வரை கொஞ்சம் முன்னேறித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள்.

முத்தம் கொடுத்து வாழ்த்துவது இன்றுவரை உரோமையில் (இத்தாலியில்) உள்ள பண்பு. ஜெர்மனியில் விரைப்பாக நின்று கையை நீட்டுவார்கள். இத்தாலியில் சரி என்று படுவது, இந்தியாவிற்கு தவறு என்று படும்தான்.

ஒன்று மட்டும் கத்துக்கலாம் நம்ம பவுல்கிட்ட.

இயல்பா இருங்க. இயல்பா இருக்கிறது இயல்பா வெளிப்படுத்துங்க.


Thursday, November 5, 2015

முன்மதி

பிரமிளா முக்கிய கதாபாத்திரமாக நடித்த, கே. பி. அவர்கள் இயக்கிய 'அரங்கேற்றம்' (1973) திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?

ஏழ்மை, பெண்ணியம், சாதிய ஏற்றத்தாழ்வு, பணம், படிப்பு என எல்லாவற்றையும் அழகாக அரங்கேற்றியிருக்கிறார் கே.பி.

'வழிகள் இலக்கை நியாயப்படுத்த முடியுமா?' (Do means justify the end?) - இதுதான் இந்தத் திரைப்படம் எழுப்பும் முக்கிய கேள்வி.

அதாவது, நான் 12ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவது என்பது என் இலக்கு என வைத்துக்கொள்வோம். இந்த இலக்கு நல்லது. எல்லாராலும் வரவேற்கத்தக்கது. ஆனால், நான் இந்த இலக்கை அடைய பிட் அடித்தோ, அல்லது கள்ள ஆட்டம் ஆடியோ முயற்சிக்கிறேன். இந்த வழிகளைக் கொண்டு என் இலக்கை அடைந்தும் விடுகிறேன். நான் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் வந்து, 'நீ தவறான வழிகளில்தான் இதை அடைந்தாய்' என என்னிடம் சொல்கிறீர்கள். நான் உங்களிடம், 'வழி எப்படி இருந்தாலென்ன இலக்கை அடைந்தாயிற்றல்லவா!' என்கிறேன்.

இதில் யார் சரி?

'வழிகள் இலக்கை நியாயப்படுத்த முடியாது' என்ற உங்கள் வாதமா?

'வழிகள் இலக்கை நியாயப்படுத்தலாம்' என்ற என் வாதமா?

இதன் முதுகில் ஏறிக்கொண்டே வரும் அடுத்த கேள்வி:

'நியாயம் அல்லது நியாயம் இல்லை என்பதை யார் முடிவு செய்வது?' 'நானா?' 'மற்றவரா?'

இதே கேள்விகளை நாளைய நற்செய்தி வாசகமும் (லூக் 16:1-8) எழுப்புகிறது:
தன் தலைவனின் சொத்துக்களையெல்லாம் 'கையாடல்' செய்து தன் வாழ்க்கையை செட்டில் செய்து கொள்கிறான் அநீதியான வீட்டுக்கண்காணிப்பாளர். 'ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்' என்று இயேசு அவரைப் பாராட்டவும் செய்கின்றார்.

நாளைய நற்செய்தி எப்படி கையாடல் செய்வது என்பதையோ, கையாடலை நியாயப்படுத்துவது என்பதையோ சொல்லவில்லை.

முன்மதி - இந்த ஒன்றைத்தான் சொல்கிறது.

2000 வருடங்களாக கிரேக்க மற்றும் இலத்தீன் இலக்கியங்கள் நான்கு மதிப்பீடுகளை முதன்மையானவை என்று சொல்கின்றன: முன்மதி (prudence), திடம் (courage), மட்டுசதம் (temperance), நீதி (justice).

'இப்போது என்ன?' என்பதை யோசிக்காமல் 'அடுத்து என்ன?' என்று யோசிப்பவர்தான் முன்மதியாக இருக்க முடியும்.

முன்மதி நம்ம பிராக்டிகல் வாழ்விலும் செயல்படுத்த வேண்டிய ஒன்றுதான்:

ஃபோன் கொண்டு போகும் போது உடன் சார்ஜர் கொண்டு போவது.

நீண்ட பயணத்திற்கு மாத்திரைப் பை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது.

டாக்டரைப் பார்க்கும் போது கடந்த முறை கடைப்பிடித்த மெடிக்கல் ஃபைல் கொண்டு செல்வது.

வண்டியில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெட்ரோல்.

பர்சில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம்.

ஏடிஎம் அட்டைகளை கொஞ்சம் குறைவாக தேய்ப்பது.

கடன் அட்டைகளை பயன்படுத்தாமல் இருப்பது.

வீட்டில் எக்ஸ்ட்ரா சிலிண்டர்.

பாத்ரூமில் எப்போதும் நிரப்பி வைக்கும் பக்கெட்.

இப்படி முன்மதியோடு நாம் இருந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

வரப்போகும் அல்லது வரலாம் என்று எதிர்பார்த்து, வரப்போகும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள நம்மையே ஆயத்தப்படுத்துவது - இதுதான் முன்மதியின் வரையறை.

இதற்காக எல்லாமே கெட்டதாக நடக்கும் என அதீத பயம் கொண்டு எதிர்நோக்குவதும் ஆபத்து.

'எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்' என்று ஓய்ந்திருப்பதும் ஆபத்து.

கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார்தான் பாஸ்...ஆனா நம்ம பைக்கை நாம்தான் பூட்டி வைக்கணும்.

Wednesday, November 4, 2015

காணாமற்போவதன் சுகம்

உரோம் நகர் மெட்ரோவில் 'காணவில்லை' என்ற விளம்பரம் அடிக்கடி ஒட்டப்படும். அதிகமாக நாய்க்குட்டிகள் அல்லது பூனைக்குட்டிகள் காணவில்லை என்ற விளம்பரம்தான் இருக்கும். எப்போவாவது பாட்டி அல்லது தாத்தா காணவில்லை என்று சுவரொட்டிகள் இருக்கும்.

மனிதர்கள் ஏன் காணாமற்போகிறார்கள்?

போர், வன்முறை, இடம்பெயர்தல், பயணம், இயற்கைச் சீற்றம் - இவற்றால் காணாமற்போகிறவர்கள் பலர்.

ஆனால், சிலர் விரும்பி தாங்களே காணாமற்போகிறார்கள்.

குணமாக்க முடியாத நோய், எதிர்கொள்ள முடியாத பிரச்சினை என்ற நேரங்களில் தற்கொலைக்கு மாற்றாக மனித மனம் கையிலெடுக்கும் ஆயுதம்தான் காணாமற்போதல்.

இப்படி காணாமற்போகிறவர் மற்றவரைத் தேட வைத்துத் தண்டிக்கிறார். மற்றவரைத் தேட வைத்து தன் பழி தீர்க்கிறார்.

'நீ எனக்கு வேணும்!' என்று தன்னையே அவர் தேட வைக்கிறார்.

தேடுபவருக்கு தேடுதல்தான் தண்டனை.

'அன்பு மகனே. நாங்கள் உன்னை ஏற்றுக்கொள்கிறோம். நீ விரும்பியதைச் செய்ய அனுமதிக்கிறோம். தயவு செய்து திரும்பி வா. இப்படிக்கு, உன்னைத் தேடி பசி, தாகமுற்றுக் கிடக்கும் உன் பெற்றோர்'

இப்படி ஒரு விளம்பரத்தை தினத்தந்தியின் விளம்பரப்பகுதியில் பார்த்திருக்கிறேன்.

அப்படி அந்த மகன் செய்ய விரும்பியது என்ன? அவர்கள் தடுத்ததற்காக இந்தப் பெற்றோர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

நாம் தவறவிட்ட ஒன்று கிடக்கும் வரை நம் மனம் வேறு எதிலும் லயிப்பதில்லை.

ஆக, 100 ஆடுகளில் 1 தவறினாலும், 10 திராக்மாக்களில் 1 தவறினாலும் நம் மனம் எஞ்சிய 99 அல்லது 9ல் நிலைகொள்வதில்லை. வேறு வேலை பார்க்க முடிந்தாலும் நம்மால் முடிவதில்லை. நம் மனம் காணாமற்போனதைச் சுற்றியே வருகிறது.

பொருளுக்கே இப்படித் தவிக்கிறோம் என்றால், உயிருக்கு எப்படித் தவிப்போம்?

இந்த எல்லா சோகமும் ஒரே நொடியில் மறைந்துவிடுகிறது - காணாமற்போனது கிடைத்தவுடன்.

இனி ஒருபோதும் உன்னைத் தொலைப்பதில்லை என்று நாம் அதனிடம் சொல்கின்றோம். அதுவே நம் அன்பிற்குரியவராக இருந்தால் அவரின் மனம் புண்படாமல் நாம் நடந்து கொள்கிறோம். காணாமற்போன நாட்களில் என்ன நடந்தது என்று ஆவலாய் விசாரிக்கிறோம். அவரை நாம் தண்டிப்பதில்லை. கண்டிப்பதில்லை. அவர் கிடைத்ததே போதும் என நினைத்துவிடுகிறோம்.

சில நேரங்களில் மற்றவைகளின் அல்லது மற்றவர்களின் மதிப்பு தெரிய நாம் அவைகளை அல்லது அவர்களைத் தொலைக்க வேண்டும்.

அவர்கள் இருக்கின்றபோது இல்லாத அருமை அவர்கள் இல்லாதபோது நம்மை அழவைத்துவிடுகிறது. நாம் எந்த அளவிற்கு அவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்த்திவிடுகிறது.

என் அன்பிற்குரியவர் காணாமற்போய்விட்டால், யாரைப் பார்த்தாலும் அவரைப் போலவே தெரிகிறது. எந்தக் குரலும் அவர் குரல்போல இருக்கிறது. எந்தத் தொலைபேசி அழைப்பும் அவரிடமிருந்தா என பார்க்கத் தோன்றுகிறது.

மனித தேடலே இப்படியென்றால், கடவுளின் தேடல் எப்படி இருக்கும்?

இந்தக் கேள்விக்கு விடைதான் நாளைய நற்செய்தி வாசகம் (லூக் 15:1-10).


Tuesday, November 3, 2015

அறிவுப்பூர்வமான

'செவ்வாய்க்கிழமைகளில் மோரியோடு'  (Tuesdays with Morrie) என்ற நூலில் வரும் மோரி அடிக்கடி சொல்லும் வாக்கியம் என்ன தெரியுமா?

'அன்பு ஒரு அறிவுப்பூர்வமான செயல்' (Love is a rational act).

நம் வழக்கமான புரிதலில் அன்பை ஒரு உணர்வு என்றுதான் பார்க்கிறோம். சில நேரங்களில் அதை நாம் பிறரன்புச் செயல்களில் வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதை அறிவுப்பூர்வமான செயலாக நாம் நினைப்பதில்லை.

ஆனால் உட்கார்ந்து யோசித்தால் நாம் அன்பு செய்வதிலும் அறிவு முக்கியமான இடம் வகிக்கிறது. அறிவு இடம்பெறாத அன்பு வெறும் உணர்வும், உணர்ச்சியாகவும் முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

நாளைய நற்செய்தியில் (லூக் 14:25-33) சீடத்துவம் பற்றி வாசிக்கின்றோம்.

சீடத்துவம் என்பதும் இயேசுவைப் பின்பற்றுவது என்பதும்கூட அன்பைப் போலவே 'ஒரு அறிவுப்பூர்வமான செயல்.'

வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவரைப் பின்பற்றுவது இயலாது.

ஒருவர் அமர்ந்து, ஆய்ந்து இந்த முடிவை எடுக்க வேண்டும்.

இயேசு இப்படி அமர்ந்து ஆராய்வதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கின்றார்:

அ. கோபுரம் கட்டுபவர்
ஆ. போருக்குச் செல்பவர்

இந்த இரண்டு பேரும் தங்கள் இலக்கின் இறுதியை முதலில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் முயற்சிகள் தோல்வியில் முடிவதோடல்லாமல், அவர் கேலிப்பொருளாகவும் மாறிவிடுகின்றார்.

'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்' என்று நாளைய முதல் வாசகத்தில் (உரோ 13:8-10) அறிவுறுத்தும் பவுல், 'ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்கிறார்.

இன்று நான் எடுக்கும் முடிவு இதுதான்.

நான் கோபுரம் கட்டப்போவதில்லை. போருக்கும் செல்லப்போவதில்லை.

ஆனால் நான் அவரைப் பின்பற்ற 'ஆம்' என்று சொல்லிவிட்டேன். இந்தப் பயணத்தில் என்மேல் இருக்கும் ஒரே கடன் அன்பு. என் அன்பிற்குரியவர்களிடம் நான் பேசும் சொற்களை, செய்யும் செயல்களை, நிகழ்த்தும் பரிமாற்றங்களை கட்டடம் கட்டவும், போருக்கும் செல்லவும் பயன்படுத்தும் அறிவைப் பயன்படுத்தி அமர்ந்து, ஆராய்ந்து செய்வேன்.


Monday, November 2, 2015

மூணு க்ரூப்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 14:15-24) திருமண விருந்து உவமை பற்றிய எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

இந்த உவமையை மாற்கு மற்றும் மத்தேயுவும் தங்கள் நற்செய்திகளில் பதிவு செய்திருந்தாலும், லூக்காவின் பதிவு கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

திருமண விருந்து ரெடி ஆயிடுச்சி. 'நாங்க ரெடி, நீங்க ரெடியா'னு கேட்டு தன் வேலைக்காரர்களை அனுப்புகிறார் அரசன்.

மூணு க்ரூப் மூணுவிதமான பதில்களைச் சொல்றாங்க:

அ. நான் வயல் வாங்கியிருக்கிறேன். கண்டிப்பாய் போய் பார்க்கணும்.
ஆ. நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன். அவைகளை ஓட்டிப் பார்க்கணும்.
இ. எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று. என்னால் வர முடியாது.

மூணாவது காரணம்தான் கொஞ்சம் கிலுகிலுப்பாக இருக்கு. மற்ற ரெண்டு பேரும் ஒர்க்கஹாலிக்ஸ் ஃபெல்லோஸ்.

இந்த அரசன் தன் விருந்துக்கு வேறு ஆட்களை அழைத்துக் கொள்கிறான்.

மத்தேயு நற்செய்தி அரசன் கொஞ்சம் கோபக்காரன். விருந்துக்கு அழைத்து வராதவர்களை கொன்றும் விடுகிறான்.

சரி. இப்போ அரசனுக்கு ஒரு கேள்வி.

ஏங்க, நீங்க கூப்பிட்டா நாங்க அப்படியே ஓடி வரணுமா? எங்க வயல், எங்க மாடுகள், எங்க மனைவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு. அப்படி என்ன ஸ்பெசலா விருந்து வைக்கிறீங்க?

இப்படித்தான் இந்த மூன்று குழுவினரும் நினைத்திருப்பார்கள்.

அரசன் கூப்பிட்டால் போகணுமா என்றால் போகணும்தான்.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 12:5-16) ஒரு வசனம் என்னை ரொம்ப தொட்டது:

'விடாமுயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.'

நேற்று எங்கள் பங்கிற்குத் திருப்பலிக்கு வந்த பிரேசில் நாட்டு அருட்பணியாளர் ஒருவர் என்னைப் பார்த்தவுடன், 'இதோ! இவரைப் போல, இந்த வயதினர் மூன்றுபேர்தான் நேற்று குருத்துவத்தை விட்டு விலகிப்போயினர் என் மறைமாவட்டத்தில்!' என்றார். சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார், 'அந்த மூவரும் மிகவும் திறமைசாலிகள். தங்கள் பங்குகளில் நன்றாகப் பணியாற்றியவர்கள். தங்கள் பங்குகளில் இருந்து மூன்று பெண்களோடு போய்விட்டனர். இன்று தங்களின் இளமை, அவர்களின் இளமை எல்லாம் இனிமையாக இருக்கும். ஆனால் நாளை அவர்கள் 'நோஸ்டால்ஜிக்காக' (அதாவது, 'அங்கேயே இருந்திருக்கலாம்' என்று எண்ணும் மனநிலை) மாறிவிடுவார்கள்' என்றார்.

திருமண விருந்துக்குப் போகாமல் வயலுக்குப் போனவரும், ஏர் பிடிக்கப் போனவரும், துணைவியோடு இருந்தவரும் ஒருவேளை நோஸ்டால்ஜிக்காக மாறியிருப்பார்களோ? 'திருமண விருந்துக்கே போயிருக்கலாம்!' என்று அவர்கள் நினைத்து இப்போது வயலினின்று, வீட்டினின்று திரும்பினாலும், மண்டபத்தில் இடமில்லையே. அவர்கள் எங்கே போவார்கள்?

அருள்பணிநிலை ஒரு மலர்ப்படுக்கை அல்ல என்று நான் படிக்கும்போது அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். படுக்கை என்ன, பாதையில்கூட இங்கு மலர்கள் இல்லை.

'கடவுள் கூப்பிட்டுத்தானே போனாய் நீ!' என்று அடிக்கடி மற்றவர்கள் என்னிடம் சொல்வார்கள். ஆனால் எங்களைக் கூப்பிடுபவர்கள் மனிதர்களே. நாங்களாகத்தான் கடவுள் எங்களை அழைப்பதாக நம்பிக் கொள்கிறோம். இறுதிவரை கடவுளின் குரலைக் கேட்காமலேயே அவரின் குரலை எல்லாவற்றிலும் கேட்பதாக நாங்கள் நம்பிக் கொள்கிறோம். அந்த நம்பிக்கையிலேயே எங்கள் வாழ்வை நகர்த்தி விடுகிறோம். 'அருட்பணியாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்', 'கோயில் பூனை பயம் அறியாது' என்றும் சொல்வார்கள். 'நான் கேட்டால் கடவுள் தருவார்' என்று நான் நம்புவதில்லைதான். ஆனால் 'அவரின் குரல் கேட்டு நான் வந்தேன்' என்ற நம்பிக்கையில் நாங்கள் குறைவதில்லை.

அருள்நிலையில் எங்கள் பயணம் தொடக்கத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நாட்கள் நகர, நகர, தொடக்கத்தில் இருந்த வேகம் குறைகிறது. உடல் நோய், மனதில் தோன்றும் வெறுமை, என்ன பணி செய்தாலும் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிற மக்கள். ஒரு கட்டத்தில் பயணத்தை முடித்துக்கொள்வோமா என்றும் எண்ணவைத்து விடுகிறது.

பவுல் சொல்வதுதான் இன்று தேவை: விடாமுயற்சி. ஆர்வமிக்க உள்ளம். இந்த இரண்டும் இருந்தால்தான் ஆண்டவருக்குப் பணி செய்ய முடியும்.

அ. வேகமாக விருந்துக்குப் போய்விட்டு, அங்கே பாதியில் எழும்பி வருவதை விட விருந்துக்குச் செல்லாமல் இருப்பது மேல்.

ஆ. ஒருவேளை விருந்துக்குப் போக முடியாவிட்டால், 'போயிருக்கலாமே!' என்று நடக்காததை நினைத்து ஏங்குவதும் தவறு.

இ. விருந்திலிருந்து பாதியில் எழும்பிப் போனவர்களை கொஞ்சம் இரக்கத்தோடும் நாம் பார்க்கலாமே.

உத்தரிக்கிற நிலை

'இன்று மதியம் முதல் நாளை இரவு வரை ஒப்புரவு அருளடையாளம் பெற்று, நம்பிக்கை அறிக்கை சொல்லி, நற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துக்காக செபித்து, கல்லறையை சந்திப்பவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஒரு ஆன்மாவை மோட்சத்திற்கு விடுவிக்கலாம்'

இன்று காலை 8 மணி திருப்பலியை நிறைவேற்ற வந்த அருட்தந்தை இப்படித்தான் அறிவித்தார்.

எம். ஆர். ராதா வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தது: 'கடவுளோட செக்ரட்டரி மாதிரி பேசுவாணுக!'

'உத்தரிக்கிற நிலை' என நானும் கொஞ்ச நேரம் நம்பினேன்.

அந்த நம்பிக்கை என்னுள் அவர்கள் மேல் பரிவு என்னும் உணர்வை எழுப்பியது.

1. உத்தரிக்கிற நிலையில் இருப்பவர்கள் இறந்துவிட்டார்கள். ஆக, இனி அவர்களுக்கென்று யாருமில்லை. வாழும்போதே சிலர் தங்களுக்கென்று யாருமில்லை என்று வாழ்வது இதைவிட கொடிய உணர்வு. உயிரான மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், ஊர், படிப்பு, பட்டம் எதுவும் இல்லாமல் போகிறார்கள் இறந்தவர்கள். ஒன்றும் இல்லாமல் வந்தவர்கள் ஒன்றும் இல்லாமல்தான் போக வேண்டும் என்பது இயற்கையின் நீதி.

2. இவர்கள் கடவுளைக் கண்டவர்கள். அதாவது, கடவுளைப் பார்த்தபின்தான் 'இன்னும் கொஞ்சம் துன்பம் அனுபவிக்க வேண்டும்' என்று உத்தரிக்கிற நிலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதாவது, பசியோடு வந்தவர்களுக்கு தட்டு நிறைய பிரியாணியைக் காட்டிவிட்டு, 'இப்போ சாப்பிடக் கூடாது' என்று வெளியே அனுப்பப்பட்டவர்கள் இவர்கள்.

3. பாதி வழி வந்தவர்கள். மோட்சத்திற்கான பாதி வழியைக் கடந்துவிட்டவர்கள். இவர்கள் மீதி வழியைக் கடக்க தங்களால் முடியாது. மற்றவர்கள்தாம் உதவி செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் யார்? மகிமை பெற்ற திருச்சபையில் இருக்கும் புனிதர்களா? அல்லது பயணம் செய்யும் திருச்சபையில் இருக்கும் நாமா? நாம்தான். எப்படி? நம் செபத்தினாலும், பிறரன்பு செயல்களினாலும் அவர்களின் குற்றங்களுக்கு நாம் பரிகாரம் செய்வது. இப்படி அடுத்தவரின் மீட்புக்காக பரிகாரம் செய்பவர்கள் புத்த மதத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் 'போதிசத்துவா'. ஆன்மாக்களின் மீட்புக்கு நாம் செபித்தால் நாமும் 'போதிசத்துவாக்களே'.

இப்ப இரண்டு பிரச்சினைகள்:

1. ஒரே ஆன்மாவுக்காக நிறைய பேர் செபித்தால் என்ன நடக்கும்? அதற்கும் திருச்சபை ஆப்ஷன் கொடுக்கிறது: 'யாரும் நினையாத ஆன்மாக்களுக்கு செபிக்கலாம்.'

2. நான் வேண்டும் ஆன்மா மோட்சத்தில் இருக்கிறதா அல்லது நரகத்தில் இருக்கிறதா என்று எனக்கு எப்படித் தெரியும். இது நமக்கு தெரியாது என்பதால்தான் நாம் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செபித்துக் கொண்டே இருக்கின்றோம். இன்று நான் என் அப்பாவை புனிதர் என நினைத்துக் கொண்டாடிவிட்டு, நாளை அவர் உத்தரிக்கிற நிலையில் இருப்பதாகக் கொண்டாடினால் என்னையே நான் முரண்படுத்துவது போல இல்லையா?

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் மூளை சார்ந்தவை. மனம் ஒன்று இருக்கிறது. 

வாழ்வின் மேலானவைகள் இந்த மூளைக்குத் தெரிவதில்லை. மனதிற்குத்தான் தெரியும்.

'புனித உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!'

என்று இன்றைய திருப்பலி நிறைவுபெற்றது.

இவர்கள் புனிதர்கள். ஏனெனில், கடவுளைக் கண்டவர்கள்.

பாதிவழி வந்த இவர்கள் இன்னும் கொஞ்சம் மீதி வழி போக நாம் உதவலாம். 

இதிலும் ஒரு சுயநலம் இருக்கிறது. 

நாளை நாம் பாதி வழி நின்றால் வேறு யாராவது நம்மை மீதி வழி நகர்த்துவார்கள்.