Sunday, March 1, 2015

அமுக்கிக் குலுக்கி...

'அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்!'

(காண்க. லூக்கா 6:36-38)

நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ எங்க ஊருக்குத் தெற்கே உள்ள களத்தில் மக்காச்சோளம் உரிப்பார்கள். மக்காச்சோளம் உரிக்கும் அந்த எந்திரத்தைப் பார்ப்பதற்காகவே நாங்கள் ஓடுவோம். ஒரு பக்கம் வயலிலிருந்து அறுத்த கதிர்களைக் கொண்டு வந்து போடுவார்கள். மற்றொரு பக்கம் அதை சிலர் உரித்துக் கொண்டிருப்பர். தோலுரித்த மக்காச்சோளங்களை எந்திரத்தில் போட்டு சக்கை தனியாக, சோளம் தனியாக, கூளம் தனியாக வந்து விழுவது ஆச்சரியமாக இருக்கும். என்னைப் போன்ற சிறுவர்களுக்குத் தரப்படும் வேலை கதிர்களைத் தோலுரிப்பது. இப்படி தோலுரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்து விட்டு, அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டே தோலுரித்து வீடு திரும்பும் நேரம் கூலியாக மக்காச்சோளத்தை ஒளக்கில்(!) அளந்து போடுவார்கள். 'கைப்பை' என்ற ஆடம்பரம் எல்லாம் இல்லாத அந்த நாட்களில் போட்டிருக்கும் சட்டையில் ஒரு பட்டனைக் கழற்றிவிட்டு அதில் கொட்டச் சொல்லி ஏந்தி வருவோம். பெண்களின் முந்தானை நிறைய சோளம் கொள்ளும். எங்களின் சட்டைகள் சின்னதாக இருந்ததால் எங்களுக்கு பாதி ஒளக்குதான் வரும். இந்த அநீதியைச் சட்டை செய்யக் கூட நேரம் இல்லாமல் பிஸியாகத் தான் இருந்தோம்.

நாளைய நற்செய்தியில் இயேசு உபயோகிக்கும் ஒரு உருவகம் எனக்கு இந்த நிகழ்வையே நினைவுபடுத்துகிறது.

இந்த உருவகம் ஒரு விவசாய உலக உருவகம். இப்போது புழங்கும் பணம் இல்லாத அந்த நாட்களில் புழக்கத்திலிருந்தது பண்டமாற்று முறை. ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை மாற்றிக்கொள்வது போல, ஒரு சேவைக்கும் அல்லது உழைப்புக்கும் கூட பொருளே மாற்றாகத் தரப்பட்டது. இன்றைக்கு இருப்பது போல ஸ்வைப்-இன், ஸ்வைப்-அவுட் கார்டுகளோ, கண்காணிப்புக் கேமராக்களோ அந்தக் காலத்தில் இல்லை. இன்று இவற்றை வைத்து ஒருவர் எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறார், எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார், வேலை செய்கிறாரா, அல்லது சும்மா நின்று கொண்டிருக்கிறாரா என்று கவனித்து ஒருவரின் வேலையின் அளவை மதிப்பிடுகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேலை முடித்து படி அளக்க வரிசையில் நிற்கும் போது, அளப்பவரின் கைக்கு என்ன வருகிறதோ அதுதான் உழைப்பாளியின் கூலி. 'நான் இவ்வளவு வேலை பார்த்தேன்!' என்று உழைப்பவரால் நிரூபிக்கவும் முடியாது. என்னதான் வேலை பார்த்தாலும் அளப்பவரின் கருணைதான் அவரின் மடியில் விழும் தானியங்களை நிர்ணயிக்கும். மேலும் சில வயல்களில் அளக்கும் படிகளில் ஊழலும் நடக்குமாம். படிக்கு உள்ளே பாதியளவிற்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தால் எப்படி முழுமையாக தானியம் கிடைக்கும். (கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக அருண் ஐஸ்க்ரீமில் 5 ரூபாய்க்கு ஒரு கப் இருந்தது. வாங்கி கையில் வைத்துப் பார்த்தால் பெரிதாக இருக்கும். சாப்பிடும்போது இரண்டு வாய்க்குதான் இருக்கும். சாப்பிட்டு விட்டு கப்பை கவிழ்த்துப் பார்த்தால். மேலிருக்கும் அளவுக்கு கீழேயும் வெற்றிடம் இருக்கும்!)

ஆக, அளப்பவரின் கருணை மற்றும் ஏமாற்றும் குணம் இவற்றைத் தாண்டி அவரின் தாராள குணம் நமக்கு வெளிப்படும் என்று இயேசு சொல்கிறார்.

'நன்றாய் அளப்பது' என்ற வினைச்சொல்லுக்கு இயேசு மூன்று வினையெச்சங்களைப் பயன்படுத்துகிறார்: 'அமுக்கி,' 'குலுக்கி,' 'சரிந்து விழும்படி'.

இதை நாம வாழ்க்கைக்கு எப்படிப் பொருத்துவது?

வாழ்க்கை என்பது நம் கையில் இருக்கும் ஒரு ஒளக்கு(!) அல்லது படி. இதில் நாம் திறன்கள், ஆற்றல்கள், ஆர்வங்கள் அனைத்தையும் போட்டு மற்றவர்களுக்கும், கடவுளுக்கும் அளக்கிறோம். பல நேரங்களில் நாம் நம் வாழ்க்கையை முழுமையாக அளப்பதேயில்லை. 'இதான் முடியும்!' என்று கொஞ்சமா அளந்து போடுகிறோம்.

'இதுதான் என்னோட லிமிட்' என்று நாம் அடிக்கடி சொல்கிறோமே, அது வெறும் பொய். அந்த லிமிட்டுக்கு நாம் செல்ல முடியாது. ஏனெனில் நாம் செல்லச் செல்ல நம் லிமிட் அகன்று கொண்டேதான் செல்லும்.

கிடைக்கும் நேரத்தில் படிப்பதோ, பழகுவதோ, பயணம் செய்வதோ, உறவாடுவதோ, பணி செய்வதோ - எதையும் 'அமுக்கி', 'குலுக்கி'. 'சரிந்து விழும்படி' நன்றாய் அளந்து செய்யலாமே!


2 comments:

  1. எத்துணை தான் கிண்டல்,கேலி, நகைச்சுவையோடு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும் அதையும் விட மேலா காரியத்தில் கண்ணாக சொல்ல வந்ததை அழகா,தெளிவா சொல்லிவிடும் உங்கள் திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.நாம் எந்தப் படியால் அளக்கிறோமோ,அந்தப்படியால்தானே நமக்கும் அளக்கப்படும்?! அப்படியெனில் தாராளமாக நம்மிடமுள்ளதைப் பிறருக்கு 'அமுக்கிக்,குலுக்கி,சரிந்து விழும்படிக் கொடுப்பதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?நம்மிடமுள்ள படியை( ஒளக்கு) அகலப்படுத்துவோம்; ஆழப்படுத்துவோம்.இறைவனின் தாராள குணம் நம்மையும் தாங்கி நிற்கும்...

    ReplyDelete
  2. Anonymous3/02/2015

    நன்றாய் அளப்பது என்ற வினைச் சொல்லுக்கு இயேசு பயன்படுத்திய 3 வினையெச்சங்களை நமது வாழ்வோடு ஓப்பிட்டு நாம் எப்படி இருக்க வேண்டுமென்று விழிப்புணர்வுக்கு கொண்டு வந்த விதம் நன்று.பாராட்டுக்கள்

    ReplyDelete