Friday, March 6, 2015

உமக்கு நிகரான இறைவன் யார்?

'உமக்கு நிகரான இறைவன் யார்?'

(மீக்கா 7:18-20)

"Only thing man is proud of having small is cellphone!"'

மொபைல்போனைத் தவிர மற்ற எல்லாமே நாம் பெரிதாகவே வைத்துக்கொள்ள விரும்புகிறோம்: பெரிய வீடு, பெரிய கடை, பெரிய மனிதர், பெரிய க்ரவுண்ட், பெரிய டிவி என்று பெரிய, பெரிய என விரும்பும் நாம், நாம் கும்பிடும் கடவுளும் பெரிதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். கடவுள் 'பெரிதாக' இருந்தால் மட்டும் போதாது. 'எல்லாரையும் விட பெரியவராக இருக்க வேண்டும்!' - இதுவே நம் விருப்பம். இதுவே நம் வெறி. இதற்காக நாம் எதையும் செய்வோம். யாரையும் கொல்வோம்.

ஒரே கடவுள் தான் இருக்கின்றாரா, அல்லது நிறையக் கடவுளர்கள் இருக்கிறார்களா? நிறையக் கடவுளர்கள் இருக்கிறார்கள் என்றால் எந்தக் கடவுள் உண்மையானவர்? எல்லாக் கடவுளர்களும் உண்மையானவர்கள் என்றால் எந்தக் கடவுள் பெரியவர்?

விவிலியத்தில் கடவுளர்களின் பிரசன்னம் குறித்து இரண்டு வகை கருத்தியல்கள் உள்ளன:

1. மோனோதெயிசம் (ஒருகடவுள் கொள்கை). இந்தக் கொள்கையின்படி 'கடவுள் ஒருவரே. அவர் தான் யாவே இறைவன்!'. இதன் படி வேறு கடவுள் இருக்கிறார் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

2. மோனோலேட்ரி (ஒருவழிபாட்டுக் கொள்கை). இந்தக் கொள்கையின்படி நிறையக் கடவுள்கள் இருக்கிறார்கள். அல்லது இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு இறைவனை அல்லது கடவுளை மட்டுமே வழிபட வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிரபலமான 'சிகாகோ உரையை' வாசித்துக் கொண்டிருந்தேன். இந்தியத்திருநாடு எல்லா மதங்களுக்கும் தன் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாகவும், இந்து மதம் எத்தனை மதங்கள் வந்தாலும் தன் இயல்பை இழக்காமல் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் எனவும், மறைப்போதகம் இல்லாமல் உலகின் பல நாடுகளில் வேரூன்றி நிற்கும் மதமும் இந்து மதம் எனவும் அழகாகப் பேசியுள்ளார். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் இந்துத்துவம் விவேகானந்தரின் கனவைவிட பிறழ்வுபட்டே நிற்கிறது.

நேற்று பாஸ்கா மந்திரிப்புக்காக ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கிறிஸ்தவர் வீடுதான். கதவைத் திறந்தவரும் கிறிஸ்தவர் தான். 'இப்போ என்ன ப்ளஸ்ஸிங்?' என்று கேட்டார். 'பாஸ்கா!' என்றேன். 'ஓ! தவக்காலம் தொடங்கிவிட்டதா? பாஸ்கா வந்துவிட்டதா?' என்று கேட்டார். போப்பாண்டவர் ஆயராக இருக்கும் ரோம் நகரத்தில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிபிசி ஐரோப்பிய நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்தது. மக்கள் கண்களில் படும் அடையாளங்களை எடுத்து எது மக்கள் மனதில் பதிந்திருக்கிறது, எதன் அர்த்தம் மக்களுக்குப் புரிந்திருக்கிறது என்பதுதான் ஆய்வின் மையம். 'எம்' என்றால் மெக்டொனால்டு என்பதுதான் முதலிடம் பெற்றது. 'சிலுவை' என்றால் கிறிஸ்தவம் என்பது எட்டாம் இடம் பெற்றது. ஆக, சிலுவையையே பார்த்திராத அல்லது கோவிலுக்கே வராத 'கிறிஸ்தவர்கள்' நிறையப்பேர் இருக்கவே செய்கிறார்கள்.

ஒருபக்கம் கடவுளைப் பற்றிய அக்கறையில்லாத நிலை. மறுபக்கம் கடவுளைச் சண்டைப்பொருளாக்கும் நிலை.

'உமக்கு நிகரான இறைவன் யார்?' என்று கேட்பதற்கு காலத்திற்குட்பட்ட பதில் ஒன்றும் இல்லை.


1 comment:

  1. " இறைவன்"... கற்றறிந்தவர்களும் முழுப்பொருள் காண முடியா ஒரு புதிர்தான் இந்த வார்த்தை.கடவுள் பெரியவரா,சிறியவரா என்ற வினாவை விட ' அவர் எனக்கு யார்' என்ற கேள்விக்கு என் மனது சொல்லும் பதில் எனக்கு திருப்தியளித்தால் அவர் தான் 'என் கடவுள்'.பாவம்,புண்ணியம் பற்றித் தெரியும் முன்னரே பள்ளிப்பருவத்தில் " நாமே உன் கடவுள்; நம்மைத்தவிர உனக்கு வேறே கடவுள் இல்லை" என்று கற்றது பசுமரத்தாணியாய்ப் பதிந்து போனதால் எனக்கு இதைப்பற்றிய குழப்பம் வந்ததே இல்லை. இன்று வாழ்க்கையில் பல நிலைகளைக் கடந்து வந்த பிறகு என் மனம் சொல்லுகிறது...' வயிற்றுப்பசி என்று வந்தவனுக்கு உணவையும்,வாழ்வில் அடுத்து என்ன என்று குழம்பியவனுக்கு நம்பிக்கையையும்' ஊட்டும் யாருமே கடவுள் தாம்.நாமும் கூட அப்படி ஒரு கடவுளாக இருந்துவிட்டுப் போகலாமே! ஏன் வெட்டி வாக்குவாதம்? தந்தையின் 'ஹாஸ்ய உணர்ச்சிக்கு ஒரு வரைமுறையே இல்லை.நீங்கள் போட்டிருக்கும் படத்தைத்தான் குறிப்பிடுகிறேன்....

    ReplyDelete