Sunday, March 8, 2015

சிறு பிள்ளையின் உடல் போல

'சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபோது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறு பிள்ளையைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர்.'

'எனவே, நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல மாறினது.'

(காண்க. 2 அரசர்கள் 5:1-15)

இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் தொழுநோய் பிடித்திருந்த சிரியா நாட்டுப் படைத்தலைவர் நாமான் நலம் பெறுவதே நாளைய முதல் வாசகம்.

இந்தப் பகுதியில் முதலாகவும், இறுதியாகவும் நின்று, இந்தப் பகுதியை பிரித்துக் காட்டும் ஒரு சொல்: 'சிறு பிள்ளை'. 'என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?' என்று நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். இந்த நிகழ்வின் நாயகன் எலிசா அல்லது நாமான் என்று சொன்னாலும், உண்மையான நாயகி இந்தச் சிறு பிள்ளைதான்.

தான் தன் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டிருந்தாலும், தன் நாட்டில் நலம் தரக்கூடிய இறைவாக்கினர் ஒருவர் இருக்கிறார் என்று தைரியமாகத் தன் தலைவியிடம் சொல்கின்றார். என்னே! இந்த இளவலின் நாட்டுப்பற்றும், கடவுள் நம்பிக்கையும்!

ஒரு சிறு குழந்தை தானே சொல்கிறது என்று அதை ரொம்ப சாதாரணமாக எடுக்காமல், 'நீ சொல்றதயும் செஞ்சு பார்ப்போமே!' என்று பயணம் மேற்கொள்ளத் தயாராகின்றார் நாமான். அந்த சிறு பிள்ளையின் வார்த்தையே நம்பும்போதே நாமான் உள்ளத்தளவில் குணமடைந்து விடுகிறார்.

நலம் பெறுவதற்கு வெள்ளி, பொன், பட்டாடை என பரிசுப்பொருட்களோடு கிளம்பும் நாமான் நம்பிக்கைக்குப் பாடம். அதாவது, நாம வேளாங்கண்ணிக்கு ஏதோ வேண்டுதல்க்கு போகும்போது எப்படிப் போறோம்? முதலில் போய் வேண்டுகிறோம். வேண்டியது கிடைத்தபின் ஓராண்டு கழித்து நாம் நேர்ந்து கொண்டதைச் செலுத்தப் போகிறோம். இங்கே நாமானின் நம்பிக்கை நம் நம்பிக்கையைவிட ஒருபடி மேல். முதலில் போவோம். தொழுநோய் சரியாயிடுச்சுனா யார்கிட்டயாவது 'கிப்ட்' கொடுத்தனுப்புவோம் என்று இராமல், கண்டிப்பாக நலம் கிடைக்கும், அதற்கான பரிசை நாம் உடனே கொடுக்க வேண்டும் என்று உடன் எடுத்துச் செல்கின்றார் நாமான். வாழ்வியல் மேலாண்மையில் இது ஒரு நல்ல பாடம். வாழ்க்கை நமக்கு அடுத்த நிமிடம் எதை நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, அந்தந்த நேரத்துக் கடமையை அந்தந்த நிமிடம் நிறைவேற்றிவிடுதல் நலம்தானே.

எலிசா பெரிய மாய மந்திரங்கள் எல்லாம் சொல்லி நலம் தருவார் என்று நாமான் நினைத்திருக்க, 'நீர் போய் யோர்தான் நதியில் குளியும்!' என்று எலியா தன் பணியாளனிடம் சொல்லி அனுப்புகின்றார்.

இந்த இடத்தில் எலியாவின் மனத்திடத்தைப் பாராட்ட வேண்டும். 'காசுக்கு விலைபோகாதவர் எலியா!' சிரியா நாட்டுப் படைத்தலைவன். பெரிய ஆள். அவரை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும். நாளைப்பின்ன நமக்கு ஏதாவது தேவை இருந்தா இவரது சிபாரிசு தேவைப்படும். இந்த நினைப்பெல்லாம் இல்லை இந்தக் கடவுளின் மனிதனுக்கு. கடவுளின் அருளையும், என்னையும் உன் காசால் வாங்க முடியாது என உறுதியாக இருக்கின்றார் எலியா.

எலியாவின் கண்டுகொள்ளாத்தனம் கொஞ்சம் எரிச்சல் தரவே, கோபமாக வீடு திரும்புகிறார் நாமான். அங்கேயும் ஒரு பணியாள் தலையிடுகிறார். 'சும்மா குளிச்சுதான் பார்ப்போமே!' - குளிக்கிறார். நலம் பெறுகிறார்.

'சிறு பிள்ளையின் உடல் போல' ஆகிறது அவரது தொழுநோய் பிடித்த உடல்.

முதலில் உள்ளத்தில் சிறுபிள்ளையாய் இருந்த நாமான், உடலிலும் சிறுபிள்ளையாக மாறுகின்றார்.

நம் வாழ்க்கைப் பயணமும் கூட சிறுபிள்ளையிலிருந்து, சிறுபிள்ளையை நோக்கித்தானே செல்கின்றது. நம் முதிர்வயதில் நிற்க, நடக்க, சாப்பிட என எல்லா இயக்கங்களுக்கும் நாம் பிறரைச் சார்ந்திருக்கத் தொடங்குவதால் ஷேக்ஸ்பியர் முதிர்பருவத்தை இரண்டாம் குழந்தை நிலை என்றே அழைக்கின்றார். நம் உடல் முதிர்ச்சி அடைந்தாலும் உள்ளம் ஏனோ சின்னக் குழந்தையின் உள்ளம் போல ஆகிவிடுகிறது. எல்லாம் புதிதாகத் தெரிய ஆரம்பிக்கிறது.

ஆக, ஒவ்வொரு நாளும் 'காம்ப்ளான்காரன்' சொல்வது போல வேவவவவவகமாக வளராமல், கொஞ்சம் கொஞ்சமாக சிறுபிள்ளையாகக் குறையலாமே!


(இன்று நம் வலைப்பதிவை அலங்கரிக்கும் இளவல் என் தங்(க)கை (மரு)மகள் ஃபிலோ டேன்யா)


1 comment:

  1. தான் கடத்திவரப்பட்டிருந்தும் கூட தன் எதிராளி ஒருவனுக்கு அவனது 'தொழுநோய் தீர் வழிசொல்லும் குழந்தையாகட்டும், குழந்தையின் பேச்சையும்,இறைவனின் கருணையையும் சந்தேகத்திற்கிடமின்றி நம்பி யோர்தான் ந்தியில் மூழ்கி எழும் நாமானாகட்டும்,கடவுளின் அருளை மட்டுமே நம்பி நாமானுக்கு சுகம் பெற வழி சொல்லும் எலியாவாகட்டும்...இவை யாவருமே நாம் நம் அன்றாடம் வாழ்வில் வலம்வரும் மனிதர்கள்தாம்..இவர்களை இனம் காண்போம்; இவர்கள் மூலம் இறைவனின் அருளைப்பெறுவோம்.அதென்ன, சிறுபிள்ளையாக்க் குறைவது? புரியவில்லையே!!!

    ReplyDelete