Thursday, March 5, 2015

அவன் என்னைப் போல இல்லை!

ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாக இருக்கிறான்!

(காண் தொடக்கநூல் 37:3-4,12-13,17-28)

கடந்த ஞாயிறன்று ஈசாக்கையும், இயேசுவையும் உருவகப்படுத்திப் பார்த்து அவர்களிருவருக்குமிடையே ஏழு ஒற்றுமைகளைக் கண்டுபிடித்தோம். ஈசாக்கைத் தொடர்ந்து முதல் ஏற்பாட்டில் நாம் காணும் இயேசுவுக்கான மற்றொரு உருவகம் யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்புக்கும், இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?

1. தன் தந்தையால் மிகவும் அன்பு செய்யப்பட்ட மகன் யோசேப்பு - வானகத் தந்தையினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட ஒரே மகன் இயேசு.

2. யாக்கோபு தன் மகன் யோசேப்புக்கு அழகு வேலைப்பாடுகள் மிகுந்த ஓர் அங்கியைச் செய்து கொடுக்கிறார் - வானகத் தந்தை தன் மகன் இயேசுவுக்கு 'மனித உடல்' என்னும் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியைச் செய்து கொடுக்கிறார்.

3. தங்கள் தொழிலே கதி என்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன் சகோதரர்களைத் தேடிச் செல்கின்றார் யோசேப்பு - பாவமே கதி என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த மானிட சகோதரர்களைத் தேடி வருகின்றார் இயேசு.

4. தன் சொந்த சகோதரர்களின் பொறாமைக்கு ஆளாகின்றார் யோசேப்பு - தன்னுடன் வாழ்ந்த தன் சொந்த மக்களின் பொறாமைக்கு ஆளாகின்றார் இயேசு.

5. தன்னோடு உண்டு, உறங்கிய சகோதரர்களே யோசேப்பை இஸ்மயேலரிடம் விற்கத் துணிகின்றனர் - இயேசுவோடு உண்டு, உறங்கிய யூதாசே அவரைத் தலைமைக் குருக்களிடம் விற்கத் துணிகின்றார்.

6. யோசேப்புக்கு பேசப்பட்ட விலை இருபது வெள்ளிக்காசுகள் - இயேசுவுக்கு பேசப்பட்ட விலை முப்பது வெள்ளிக்காசுகள்.

7. யோசேப்பின் ரத்தம் என்று காட்டுவதற்காக ஓர் ஆட்டைக் கொல்கின்றனர் சகோதரர்கள் - இயேசு இறக்கும் நேரம் பாஸ்காப்பலிக்கான ஆடுகளைக் கொல்கின்றனர் ஆலயக் குருக்கள்.

8. 'இவன் கதை முடிந்தது' என்று நினைத்தவர்களுக்கு, யோசேப்பு 'எகிப்தின் ஆளுநராவார்' என்று தெரியவில்லை. 'இவன் கதை முடிந்தது' என்று நினைத்தவர்களுக்கு இயேசு 'உயிர்த்தெழுந்து வானகம் ஏறிச்செல்வார்' என்று தெரியவில்லை.

நாளைய முதல் வாசகத்தைப் பாருங்களேன்.

விறுவிறுப்பு, குழப்பம் - இந்த இரண்டு செயல்கள் தான் யோசேப்பின் சகோதரர்களிடம் மேலோங்கி இருக்கின்றன.

யோசேப்பு தூரத்தில் வருவதைக் கண்டவுடன், அவர்களின் மூளை பல்வேறு யோசனைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறது:

'இவன் கனவு காண்பவன்'

'இவனைத் தீர்த்துக் கட்ட வேண்டும்'

'இவனைக் கொல்வோம்'

'வேண்டாம். குழியில் தள்ளுவோம்'

'இல்லை. இப்போது சாப்பிடப் போவோம்'

'அங்க பாரு! ஒரு ஒட்டகக் கூட்டம் வருது!'

'ஆமா! வாங்க அவனைக் குழியிலிருந்து தூக்கி வந்து இவங்களுக்கு வித்துடுவோம்!'

'இவனுக்கு எவ்வளவு தருவீங்க!'

'இருபது வெள்ளிக்காசுகள்!

'இந்தாங்க! இவன வச்சிக்கோங்க!'

'டே...டே...அவன் சட்டையைக் கழத்துங்கடா....அதுல ஏதாவது ரத்தத்தைச் சிந்தி நம்ம அப்பன், அந்தக் கிழவன்ட்ட போய்க் காட்டுவோம்...'

'ஆமான்டா...நல்ல ஐடியா...டேய்...ஒட்டகத்துல இருந்து கீழே இறங்குடா...சட்டையக் கழத்துடா...'

இப்படி விறுவிறுப்பான சிந்தனைகள், குழப்பமான செயல்கள் என யோசேப்பின் சகாப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றனர் சகோதரர்கள்.

இடையில யூதாவின் கரிசணை வேறு: 'இவன் நம்மைப் போல ஒருவன்!'

இதுதான் இந்தக் கதையின் திருப்புமுனை. 'இவனும் என்னைப் போல ஒருவன்!' என்பது அவர்களின் வெற்றுச்சொல்லாக மட்டுமே இருந்தது. ஆனால், ஆழ்மனதில் 'இவன் என்னைப் போல இருப்பதில்லையே!' என்று பொறாமையும், கோபமும்தான் இருந்தது.

நம் குடும்ப உறவில் தொடங்கும் வன்முறையிலிருந்து, உலக வன்முறை அனைத்திற்கும் காரணம் ஒன்றுதான்: 'அவன் நம்மைப் போல இல்லை!'

ஒருவன் மாறுபட்டு சிந்தித்தால், மாறுபட்டு செயல்பட்டால் நம் மனம் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உடனடியாக அவரைத் தீர்த்துக்கட்டி விட்டால் அவர் நம் கண்களை உறுத்துவதில்லை. தீர்த்துக்கட்ட முடியாதபோது நாம் வெறும் வாய்ச்சண்டையோ, அல்லது மௌனமோ காத்து அவரிடமிருந்து தொடர்பைத் துண்டித்துக்கொள்கிறோம். அல்லது அவருக்கு எதிராக ஒரு கூட்டத்தை நாமாகக் கூட்டிக்கொண்டு அவருக்குத் தொந்தரவுகள் கொடுத்து அவரின் மன அமைதியைக் கெடுத்து அவரை ஒரு நடைபிணமாக ஆக்கிவிடுகிறோம்.

இதற்கு ஒரே மாற்று: 'பரந்த குணம்!'

'எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியுமா? அவனுக்கு எல்லாம் இருந்தால் இருக்கட்டும். அவன் அனுபவிக்கட்டும். மகிழ்ந்திருக்கட்டும். என்னால் முடிந்தால் நானும் அவரைப் போல ஆவேன். அல்லது அமைதி காப்பேன்!' என கொஞ்சம் பெரிய மனதிருந்தால் போதும். எல்லாம் நலமாகிவிடும்.


1 comment:

  1. நான் வேலை பார்த்த பள்ளியில் "Joseph's multicoloured coat" என்ற ஆங்கில நாடகம் பார்த்ததிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த கதாநாயகன் இன்றைய பதிவில் வரும் பழைய ஏற்பாட்டு 'யோசேப்பு'.அவருக்கும் இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமையை அழகாகச் சித்தரித்திருக்கிறீர்கள்.கூடவே வரும் செய்தி...மிக அழகானது.நாம் நிமிர்ந்து பார்க்கும் நிலையில் உள்ள ஒருவரை 'அப்படியே' ஏற்றுக்கொள்ள பரந்த மனம் வேண்டும்தான்.ஆனால் அது அவ்வளவு எளிதா என்ன? " உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்ற வரிகளை நினைவு கொள்வோம்...எல்லாம் சரியாகிவிடும்....

    ReplyDelete