Saturday, March 28, 2015

ஜன்னல் அருகே இடம்

இறங்க வேண்டிய இடம் வரும்போது பேருந்தில் ஜன்னல் அருகே இடம் கிடைப்பது போலத்தான் நம் வாழ்வில் சில உறவுகள் கிடைக்கின்றன. கொஞ்சம் முன்னாலே கிடைத்திருக்கலாமே என்ற ஏக்கத்தைத் தருகின்றன இந்த உணர்வுகள்.

இயேசுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அவரின் இறப்பு நெருங்கும் போதுதான் அவர் சொல்வதன்படி எல்லாமே நடக்கிறது. அவர் ஏறிச்செல்வதற்கு 'யாரும் ஏறாத' கழுதை கிடைக்கிறது. சீடர்களோடு பாஸ்கா கொண்டாட மேலறையில் இடம் கிடைக்கிறது. செபிப்பதற்கு ஒலிவத் தோட்டத்தில் இடம் கிடைக்கிறது. கலிலேயாவைச் சார்ந்த ஒரு வீதியோர போதகருக்கு எருசலேம் தலைமைச் சங்கத்தையும், அந்த சங்கத்தின் தலைவர் தலைமைக்குரு மற்றும் அவரின் சகாக்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உரோமை ஆளுநன் பிலாத்து நேருக்கு நேர் நின்று இவரோடு பேசுகிறார். இப்படி ரணகளத்திலும் இயேசுவுக்கு நல்லதெல்லாம் நடக்கத் தொடங்குகிறது.

இதுல இருந்து என்ன தெரியுது? நம்ம வாழ்வுல எல்லாம் நல்லா நடக்க ஆரம்பிச்சதுன்னா, நம்ம முடிவு நெருங்கிடுச்சுனு சொல்லலாமா? இல்லை! நம் வாழ்வில் கெட்டது என்று எதுவும் இல்லை. எல்லாம் நல்லவற்றின் பிரதிபலிப்பு என்றுதான் நான் நினைக்கிறேன். சில நேரங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? 'நாம சாதிக்கணும்னு காலையில எழுந்திருக்கும்போது, நம்ம கடவுள் நம்மைச் சோதிக்கணும்னு எந்திரிக்கிறாரோ!' என்று தோன்றும். ஆனா, எந்த நேரத்திலும் 'ஜன்னல் ஓர இருக்கை' கிடைக்கும் என்பதுதான் இயேசுவின் பாடுகள் நமக்குச் சொல்லும் பாடம். ஆகையால் தான் சிலுவையில் இறக்காத ஒரு கடவுளை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடிவதில்லை.

நாளை குருத்து ஞாயிறோடு ஆண்டவரின் திருப்பாடுகளின் வாரத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.

இந்த நாற்பது நாள்கள் விரதம் இருக்க நினைச்சு நமக்குத் தெரியாமலேயே சாப்பிட்டுவிட்டாலோ, இறைச்சி சாப்பிடக்கூடாது என நாம் நினைத்திருக்க, நம் நண்பரின் வீட்டு காதுகுத்து ஃபங்ஷனில் 'ஆட்டிறைச்சி குழம்பு' சாப்பிட்டிருந்தாலோ, 'இந்த வாரமாவது ஒழுங்கா இருக்கணும்னு!' யோசித்திருப்போம். அல்லது 'இந்த வாரத்திற்கன்று சிறப்பான' முடிவுகளை எடுத்திருப்போம். எது எப்படி இருந்தாலும் எல்லாமே நல்லா இருக்கட்டும். எல்லாமே நல்லா இருக்கும்!

இயேசு எருசலேம் நகருக்குள் நுழைவதற்குப் பயன்படுத்தப்படும் வாகனம் 'கழுதை'. இயேசுவின் எருசலேம் நுழைவு பற்றி மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். ஆனால் யோவான் இதைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. ஒத்தமைவு நற்செய்தியாளர்களின் பதிவுகளிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த இடத்தில் மத்தேயு செப்பனியா இறைவாக்கினரின் இறைவாக்கைப் பற்றி எழுதுகின்றார். கழுதைக்குட்டியை அவிழ்க்கும்போது மாற்கு நற்செய்தியில் அங்கே நின்றுகொண்டிருக்கும் சிலர் 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' எனக் கேட்கின்றனர். லூக்கா நற்செய்தியில் அதே கேள்வியை கழுதையின் உரிமையாளர் கேட்கின்றார்.

இதுல ரெண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டியவை:

1. 'எல்லாம் என்னோடது!' என்னும் இயேசுவின் சித்தாந்தம். ஏதோ ஒரு வீட்டில் கட்டப்பட்டிருக்கும் கழுதையைத் தன் கழுதை என நினைக்கிறார் இயேசு. யாரோ ஒருவரின் வீட்டின் மேலறையைத் தன் அறை என்கிறார். யாரோ ஒருவர் கொண்டு வந்த அப்பத்தை 'என் அப்பம்' என்கிறார். 'எதுவுமே எனக்கில்லை' என்று சொல்பவரும், 'இது என்னுடையது' என்று எதையும் பற்றிக்கொள்ளாத ஒருவர் மட்டுமே இந்த மிக உன்னதமான நிலையை அடைய முடியும். இந்த எண்ணம் உருவாகக் காரணம் 'கடவுள் என்னைப் பராமரிப்பார்' என்னும் எண்ணம் மட்டுமே.

2. 'எதுவும் என்னோடதில்லை!' என்னும் கழுதை உரிமையாளரின் சித்தாந்தம். இன்னைக்கு நினைச்சுப் பாருங்களேன். நம்ம வீட்டுல நாம பயன்பாட்டிற்கு வைத்திருக்கின்ற ஒன்றை அல்லது இருக்கின்ற ஒன்றை திடீரென்று யாராவது எடுத்துக் கொள்ள வந்தால் நம் செயல்பாடு எப்படியிருக்கும்? 'கழுதையை அவிழ்க்கும் நிகழ்வு' ஒரு சுவராஸ்யமான விஷயம். முதலில் சரியான கழுதையை அடையாளம் காணுவது. இன்னொன்று இன்னொருவருக்காக அவிழ்ப்பது. இன்றைக்கு கிராமங்களுக்குச் சென்றோமென்றால் கழுதை உரிமையாளரின் சித்தாந்தம் கொண்ட மக்கள் நிறைய பேரைப் பார்க்கலாம். இன்னும் எங்க ஊரில் யார் வீட்டுக்குள்ளயாவது நுழைவதற்கு முன் பக்கத்து வீட்டுத் தண்ணீர் தொட்டியில் கூட தண்ணீர் எடுத்து உங்கள் பாதங்களைக் கழுவிக் கொள்ளலாம். நாய்க்குட்டிகளுக்கு எல்லா வீட்டிலம் சாப்பாடு கிடைக்கும். அவசரத்துக்கு பக்கத்து வீட்டுல குழம்பு வாங்கிக்கொள்ளலாம். மேலும் கிராமத்தில் யாரும் காணாமற்போவது இல்லை. வழி தவறி ஒரு குழந்தை சென்றாலும், 'இது யாரோட குழந்தை?' என்று எல்லாரும் கேட்பார்கள். ஒரே மாதிரி நிறத்தில் இரண்டு பூனைகள் இருந்தாலும் தங்கள் பூனை எது என்பதைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

'எல்லாம் என்னோடது!' என்ற இயேசுவின் மனப்பான்மையும். 'எதுவும் என்னோடதில்லை!' என்னும் கழுதை உரிமையாளரின் மனப்பான்மையும் தான் திருப்பாடுகளின் வாரம் எனக்குத் தரும் செய்தியாக நான் உணர்கிறேன்.

இந்த இரண்டு சித்தாந்தங்களிலும் ஆபத்தும் இருக்கின்றது. நம்மைச் சுற்றி நடக்கிற திருட்டு, கொலை, பாலியல் மற்றும் உடல் வன்முறை அனைத்திற்கும் காரணம் 'எல்லாம் என்னோடது! அல்லது எனக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு!' என்னும் மனநிலைதான். 'எதுவும் என்னோடதில்லை!' என்ற மனப்பாங்கு சில நேரங்களில் பொறுப்புணர்வு இல்லாத ஒரு வாழ்வுக்கும் நம்மைத் தூண்டிவிடலாம். ஆக, இந்த ஆபத்துக்களை நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியம்.
'என்னோடது!' - 'உன்னோடது!' என்னும் பேதம்தான் துன்பம்.

'எங்களுடையது!' 'உன்னுடையது!' என்று தலைமைக்குருக்களும், அரசியல் சக்திகளும் பிரித்துப் பார்த்ததால் தான் இயேசுவுக்கு சிலுவைச்சாவு கிடைத்தது.

பாடுகளின் வாரத்திற்குள் நுழையும் நமக்கு நாம் இன்று முதன்முதலில் சொன்னது நினைவிருக்கட்டும்.

இறங்க வேண்டிய இடம் வரும்போது ஜன்னல் அருகே இருக்கை கிடைப்பது போல, நல்லவைகளும் நடக்கும். கொஞ்ச நேரமாவது இருக்கையில் அமர்ந்து விட்டு இறங்குவோம்!



1 comment:

  1. ஜன்னலோர இருக்கை பற்றிய தங்களின் விளக்கம் மட்டுமல்ல...அந்தப்படமும் கூட ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.கிராமத்து மக்களின் மூச்சுக்காற று கூட அடுத்தவருக்கு 'மகரந்தம்' வீசும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.'இது என்னுடையது' எனச் சொல்வதற்கும்,'எதுவுமே எனதில்லை' என்று சொல்வதற்கும் ஒரு முதிர்ச்சி தேவை. அந்த முதிர்ச்சிக்குள் நம்மை அழைத்துச்செல்வதுதான் இந்த வாரச் சடங்குகள்.அந்தச் சடங்குகள் ஓரளவிற்காவது நம் உடலையும்,மனத்தையும் மாற்றுமா?? கண்டிப்பாக இறைவன் அருளோடு மாற்றிக்காட்டுவோம்........

    ReplyDelete