Saturday, March 21, 2015

இதோ! இவங்கதான்!

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42அ)

அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)

கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான் 12:20-23)

இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?

'அந்திரேயா!'

நற்செய்தி நூல்களில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தமானவர்களில் ஒருவர் அந்திரேயா. யோவான் நற்செய்தியில் மட்டும்தான் இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின் பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம் ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்' என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி, செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப் பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்' செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின் விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ் போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக் கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.

ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத் தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும் நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம் நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும் அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறார்.

இது ஒரு பெரிய கொடை. ஒரு சில கல்யாண வீடுகளில் பாருங்களேன். வெகுசில மனிதர்கள் எல்லாரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பர். பந்தி பரிமாறுபவர், இலை எடுப்பவர், தாம்பூலம் கொடுப்பவர், வெளியில் நிற்கும் வாட்ச்மேன் என எல்லாரோடும் இலகுவாகப் பேசிக்கொண்டிருப்பர். இது எப்படி சாத்தியம்?

உறவில் நான் அண்மையில் கற்றுக்கொண்ட ஒன்று இதுதான். இது ஒரு நல்ல பாடமும்கூட.

'நான் என்னை எப்போது மறக்கிறேனோ அப்போதுதான் மற்றவர்கள் என் கண்ணில் தெரிவார்கள்!'

என் படிப்பு, என் அருட்பணி நிலை, என் குடும்பம், என் விருப்பு-வெறுப்பு, என் பலம்-பலவீனம் என என்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் எனக்கு மற்றவர்கள் தெரிய மாட்டர்கள். ஒரு வீட்டுக்கே போறேன்னு வையுங்க. அங்க போனவுடன் அந்த வீட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் நம் நினைவிற்கு வரவேண்டும். அங்க போய் உட்கார்ந்து கொண்டு, 'நான் ரொம்ப படிச்சவன்! நான் ஒரு சாமியார்! எனக்கு எல்லாம் தெரியும்!' என்ற பெருமித நினைப்பில் இருந்தாலோ, அல்லது 'இந்த சோஃபா செட் என்கிட்ட இல்லையே!' 'இவங்க எல்.சி.டி. டிவி என்னோடதட விட பெருசா இருக்கே!', 'இந்த பெயிண்டிங் என்ன விலை இருக்கும்?', 'இந்தக் காரை மாதிரி நாமும் வாங்கணும்!' என்று என்னிடம் இல்லாதவைகளை நினைத்துக் கொண்டு, நான் சந்திக்கும் நபரோடு என்னை ஒப்பீடு செய்து கொண்டு என்னிடம் உள்ள குறைகளை நான் பட்டியலிட்டுக் கொண்டிருந்தாலோ என்னால் அவர்களோடு இயல்பாக பேச முடியுமா? எந்த நொடிப்பொழுதில் நான் என்னையே மறக்கிறேனோ அப்போதுதான் என் கண்முன் அமர்ந்திருக்கும் அவர்கள் என் இதயத்தில் பதிவார்கள். அப்போதுதான் அறிமுகம் அனுபவமாக முதிர்ச்சியடையும்.

இது நல்ல பாடம் தான!

'என்னோட யாருமே பேச மாட்றங்க!' என்று புலம்பும் நாம், நாமாக எத்தனை பேரிடம் சென்று பேசியிருக்கிறோம்?

இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும். இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த மனமாற்றம், கோயில் இடிப்பு, பலாத்காரம், கொள்ளை போன்ற பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம் பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கலாமே!

என் வாழ்வில் என்னை முதன்முதலாக சிலவற்றிற்கு அறிமுகம் செய்து வைத்த சில நல்ல உள்ளங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்:

'இதுதான் உலகம்!' என்று என்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய என் அம்மா திருமதி. மரிய செல்வம்.
'இதுதான் பள்ளிக்கூடம்!' என்று கல்விக்கு அறிமுகப்படுத்திய என் அப்பா திரு. கருணாநிதி.
'இதுதான் ஊர்!' என்று அறிமுகப்படுத்திய என் அய்யாமை திருமதி. லட்சுமி அம்மாள்.
'இதுதான் காதல்!' என்று பிஞ்சுக்காதலை விதைத்த திருமதி. டயானா.
குருத்துவ அருட்பணி பயிற்சியில் காலடி எடுத்து வைத்தபோது 'குருத்துவம் என்றால் இதுதான்!' என்று அறிமுகப்படுத்திய அருட்தந்தை. மரிய அருள் செல்வம்.
'இதுதான் மதுரை!' என்று முதன்முதலாக அறிமுகப்படுத்திய என் பாட்டி திருமதி. பாக்கியத்தாய்.
'இதுதான் வங்கிக் கணக்கு!' என்ற வங்கி தொடர்புக்குள் அறிமுகம் செய்து வைத்து என் நண்பர் அருட்தந்தை. ஜூலியான்ஸ்.
'இதுதான் இசை!' என்று வாக்மேனுக்கு என்னை அறிமுகப்படுத்திய நண்பர் அருட்தந்தை. மோட்சராசன்.
'இதுதான் கம்ப்யூட்டர்!' என்று அறிமுகப்படுத்திய அருட்தந்தை. கிளைவ்.
'இதுதான் ஆசிரியப்பணி!' என்று அறிமுகப்படுத்திய அருட்தந்தையர். பிரிட்டோ பாக்கியராஜ் மற்றும் அமல்ராஜ்.
'இதுதான் குருத்துவம்!' என்ற அறிமுகப்படுத்திய என் பாசமிகு பேராயர்கள்.
'இதுதான் அமெரிக்க டாலர்!' என்று என் உலகை விரித்துக் காட்டிய என் கண்ணம்மா.
'இதுதான் இத்தாலி!' என அறிமுகப்படுத்திய என் பங்குத்தந்தை அருட்தந்தை. அத்திலியோ.
'இதுதான் தியாகம்!' என்று சொல்லாமல் சொல்லிக் காட்டிய என் வலேரியா.
'இதுதான்டா எங்க ஊர்!' என்று அறிமுகப்படுத்திய என் குட்டிப்பாப்பா.

புதிய மொழி, புதிய உறவு, புதிய நட்பு, புதிய உணவு, புதிய உடை என்று என்னை புதியவற்றிற்கு அறிமுகம் செய்து வைத்த அனைத்து 'அந்திரேயாக்களுக்கும்'...

... என் நன்றிகளும்! வாழ்த்துகளும்!




1 comment:

  1. என்னே ஒரு உணர்ச்சிப் பிழம்பான பதிவு! பார்க்கும் எதையும்,யாரையும் தங்களுக்குப் பாடம் புகட்டும் ஒரு ஆசிரியனாய் பார்த்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதும்,அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதும் தங்களின் மிகப்பெரிய 'பலம்.' " நான் என்னை எப்போது மறக்கிறேனோ அப்போதுதான் பிறர் என் கண்களுக்குத் தெரிவார்கள்"... மிகப் பெரிய வாழ்க்கை இரகசியம்.எல்லோரது வாழ்க்கையிலும் 'அந்திரேயாக்கள்' வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.நாம் தான் அவர்களை இனம் காண்பதில்லை.தந்தை தான் சந்தித்த 'அந்திரேயாக்களைப்' பற்றி பெருமளவு'நன்றிப்பெருக்குடனும்', சிறிதளவு 'வலி'யோடும் பகிர்ந்துள்ளது கண்களைக் கசியவைக்கிறது.'அவருக்காக' நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு வலியும்,இழப்பும் அதன் பயனை நமக்கு நூறாகவும்,ஆயிரமாகவும் திருப்பித்தரும் என்பதில் ஐயமில்லை.நாமும் கூட நம் வாழ்க்கையின் திசைகளை மாற்றிய ' அந்திரேயாக்களை' இனம் காணுவோம்; அவர்களுக்காக இறைவனிடம் நன்றிகூறுவோம்.தந்தையே! இறைவனின் ஆசீர் தங்களுக்குத் தங்குதடையின்றி கிடைக்கட்டும்! அவரின் திருமுக ஒளி தங்களை என்றென்றும் நனைக்கட்டும்!!!பாராட்டுக்கள்!!!

    ReplyDelete