Thursday, March 12, 2015

நீர் தொலையில் இல்லை

'அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம். 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்றார்' (காண்க. மாற்கு 12:28-34)

இறையாட்சி, விண்ணரசு, இறையரசு என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றோம். 'இந்தக் குடும்பம் இறையரசின் குடும்பமாக' இருக்க வேண்டும் என நாமே செபம் கூட செய்திருக்கின்றோம். பல்வேறு சூழல்களில் இதைப் பயன்படுத்தியும் இருக்கின்றோம்.

இதன் பொருள் என்ன?

மன்னராட்சி, மக்களாட்சி, மிலிட்டரி ஆட்சி போல இது ஒரு வகை ஆட்சியா?

இந்த ஆட்சிநிலைகளுக்கும், இறையாட்சிக்கும் என்ன வித்தியாசம்?

முதல் ஏற்பாட்டில் மக்கள் தங்களால் ஏற்படுத்தப்பட்ட அரசர்கள் தங்களைக் காக்க முடியாத நிலை வந்தபோது கடவுளையே அரசராக ஏறெடுத்துப் பார்க்கின்றனர். 'தாவீதின் அரியணை என்றென்றும் நிலைத்திருக்கும்' என்ற இறைவாக்கை நிறைவேற்ற மெசியா ஒருவர் வருவார் எனக் காத்திருக்கின்றனர். ஆனால் மெசியாக வந்தவர் தாவீதின் வழி வந்தாலும், அரியணை இன்றி வந்ததால் பலரால் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைவிட ஒரு விநோதம். இயேசு தன்னை அரசன் என்று அறிக்கையிட்டதும் இல்லை.

அப்படியென்றால் இறைவனின் அரசு வராதா?

இறைவனின் அரசுக்கு வேறு அர்த்தங்கள் உள்ளனவா?

'காலம் நெருங்கிவிட்டது. இறையரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்புங்கள். நற்செய்தியை நம்புங்கள்' என்று தன் பணிவாழ்வைத் தொடங்குகிறார் இயேசு. இயேசுவின் வருகைதான் இறையரசு என்றால், இயேசுவும் ஆள்வோரின் பார்வையில் ஒரு தோல்வியாக இறந்து போகின்றார். இப்போது இயேசு அரசராக மீண்டும் வருவார் என்று காத்திருக்கத் தொடங்கிவிட்டோம்.

கடவுளின் அன்பை உணர்ந்து, அந்த அன்பை மற்றவருக்குத் தரத் தயாராக இருக்கும் ஒரு இளைஞரை இன்று இயேசு, 'நீ இறையாட்சிக்குத் தூரமாய் இல்லை!' என்கிறார். இன்னும் நெருக்கமாக வர என்ன செய்ய வேண்டும்?

அன்பு செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!'


3 comments:

  1. "எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிப்பதும்,அதே இயல்போடு நம் அயலானையும் நேசிப்பதுமே பலிகளில் எல்லாம் சிறந்த பலி" என இன்றையத் திருப்பலியில் வாசிக்கக் கேட்டோம். தன் அறிவை வெளிக்காட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு இயேசுவிடம் கேள்வி எழுப்பிய ஒருவனைப் பார்த்து " நீ இறையாட்சிக்குத் தூரமாய் இல்லை " என சொல்வாரேயானால் ஏன் நம்மைப்பார்த்து சொல்லமாட்டார்?அன்பு செய்வதும்,பெறுவதும் மிக அழகான விஷயங்கள்.அதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? கொடுப்போம்; குறையின்றி பெறுவோம்.தந்தையிடம் ஒரு கேள்வி: மீட்பின் வரலாறே இயேசு இறந்து உயிர்த்தெழுதலில் தானே உள்ளது? பின் எப்படி அவர் 'ஒரு தோல்வியாக இறந்து போகிறார் என்று கூற முடியும் அது ஆள்வோரின் பார்வை என்றாலும் கூட?'....

    ReplyDelete
  2. Jesus' resurrection is victory to Christians alone. To those who do not believe in that Jesus' death is a defeat.

    ReplyDelete
  3. Thank u for your prompt reply Father! God bless us!

    ReplyDelete