Thursday, March 26, 2015

நீங்கள் தெய்வங்கள்!

அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார்.
யூதர்கள் மறுமொழியாக, 'நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்' என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளதல்லவா?
(யோவான் 10:31-34)

யோவான் நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு இலக்கிய உத்தி: 'மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்' - அதாவது 'தவறாகப் புரிந்துகொள்ளுதல்'. இந்த உத்தியை இயேசு மற்றவர்களுடன் பேசும் போது பயன்படுத்துவார். இயேசு ஒன்றைச் சொல்வார். ஆனால், மற்றவர் வேறொன்றாக அதைப் புரிந்துகொள்வார்.

இரண்டு சிறிய உதாரணங்கள்:

எ.கா. 1: இயேசுவும், யூதர்களும்

'இந்தக் கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்' என்கிறார் இயேசு. ஆனால், அதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள் வேறு மாதிரியாகப் புரிந்து கொள்கிறார்கள்: 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?' (யோவான் 2:19-20)

எ.கா. 2: இயேசுவும், சமாரியப் பெண்ணும்

இயேசு சமாரியப் பெண்ணிடம் 'கடவுளின் கொடை என்னும் தண்ணீரைப'; பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது சமாரியப் பெண்ணின் கேள்வி என்னவாக இருக்கிறது தெரியுமா? 'ஐயா! தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை. கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?' (யோவான் 4:10-11)

தவறான புரிதலின் நகைச்சுவை வழியாக சரியான புரிதலுக்கு இட்டுச்செல்வதுதான் இந்த உத்தியின் நோக்கம்.

நாளைய நற்செய்தியில் இயேசு தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டார் என்ற காரணத்துக்காக அவர்மேல் கற்களைத் தொடுக்கத் தயாராகின்றனர் யூதர்கள்சிலர்.

இயேசு அப்படியே ப்ளேட்டை மாற்றிப் போடுகின்றார். 'உங்கள் விவிலியத்திலும் 'நீங்கள் கடவுள்' என்று சொல்லப்பட்டுள்ளதே!' என்று அவர்களை அவர்கள் பக்கமே திருப்பி விடுகின்றார்.

'நீங்கள் தெய்வங்கள். நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்!' (திபா 82:6) என்னும் இறைவாக்கைத்தான் இயேசு மேற்கோள் காட்டுகின்றார்.

நாளைய நற்செய்தி நமக்கு இரண்டு பாடங்களைச் சொல்கின்றது:

அ. புரிந்து கொள்ளுதல். மற்றவரின் பேச்சை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோமா? அல்லது நம் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் நம் எதிர்செயல் எப்படி இருக்கும்?

ஆ. தத்வமசி. 'நீயே கடவுள்!' என்னும் சந்தோக்ய உபநிடதத்தின் (6.8.7.) தத்துவமும்; இதுதான். ஆக, கருத்தியல் அடிப்படையில் - அன்பு, கருணை, நம்பிக்கை, இரக்கம் - என்ற அடிப்படையில் எல்லா மதங்களும் ஒன்றுதான். செயல்பாடு மற்றும் வழிபாட்டில் தான் பிரச்சினைகள் வருகின்றன. ஆக, நம் உள்ளத்தையே அல்லது நம் உடலையே கடவுளாகவும், அப்படியே மற்றவர்களின் உள்ளத்தையும், உடலையும் பார்க்கின்ற மனப்பங்கு பிறந்தால் எத்துணை நலம்!


2 comments:

  1. " A true religious is one who respects the feelings of the other religions".....யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அமைதியில் சிந்தித்தால் நமக்கே புரியும் நம்மில் பலர் மற்ற மதங்களையும், மனங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை.சேருமிடம் ஒன்றென்றால் செல்லும் வழித்தடங்களும் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? நாம் வணங்கும் தெய்வம் யாராயினும் அந்த தெய்வத்தை நம் அயலானிலும் பார்க்க ஆரம்பித்தால் கண்டிப்பாக நம் மதங்களும்,மனங்களும் நம் கைப்பிடிக்குள் வந்துவிடும்.....

    ReplyDelete
  2. Anonymous3/27/2015

    Dear Yesu today's reflection was good. it was useful for the sermon. Thanks

    ReplyDelete