Tuesday, March 17, 2015

செலக்டிவ் அல்சைமர்

சீயோனோ, 'ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார். என் தலைவர் என்னை மறந்து விட்டார்' என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்'
(காண்க எசாயா 49:8-15)

நான் புனேயில் மெய்யியல் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் குருமடத்தில் கார்லோஸ் என்ற அருட்தந்தை இருந்தார். அவருக்கு வயது 75. அல்சைமர் நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று, 'இந்தக் கப்பல் எப்போ புறப்படும்?' என்று கேட்பார். 'யார் கதவையாவது திறந்து தன் அறையென நினைத்துத் தூங்கிவிடுவார்'. 'இரவில் புத்தகங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு தான் பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு வகுப்பறைக்குப் போவார்'. இவரின் நடவடிக்கைகள் அவ்வப்போது நகைச்சுவையாக இருந்தாலும், முதுமையில் ஒருவர் அனுபவிக்கும் வலி என்று பார்க்கும் போது அவர்மீது அனுதாபமே வரும். ஆனால், என்னதான் மறதி இருந்தாலும் அவர் புலமைபெற்ற திருச்சபைச்சட்டத்தில் என்ன சந்தேகம் என்று கேட்டாலும் அழகாகத் தீர்த்து வைப்பார். மேலும் அவர் திருப்பலி நிறைவேற்றும்போது செபங்களையெல்லாம் மிகச் சரியாகச் சொல்வார். இந்த இரண்டிலும் மறதி இவரிடம் தோற்றுத்தான் விட்டது. கொஞ்சநாள் அடைச்சுப் பார்த்தாங்க. கொஞ்சநாள் ஆள்வச்சி கண்காணிச்சுப் பார்த்தாங்க. ஒருகட்டத்துல அவரைக் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை. ஒருநாள் மதிய உணவிற்கு ஆளைக்காணோம். 'எங்கே?' என்று எல்லாரும் தேட, எங்கள் கல்லூரி ஆலயத்தில் பீடத்திற்கும், நற்கருணைப்பேழைக்குமான இடையில் விழுந்து இறந்து கிடந்தார். நெற்றியில் காயம். ரத்தம். படிக்கட்டில் ஏற முடியாமல் அல்லது ஏறும்போது நிலை தவறி விழுந்திருக்கிறார் போலும். இன்றைக்கு அவருடைய நினைவு நாள்.

மறதி!

மறதி மற்றும் இல்லையென்றால் நாம் எல்லாரும் பைத்தியமாகிவிடுவோம் என்று சொல்வார்கள். காலம் செல்லச் செல்ல சில அனுபவங்கள், ஆட்கள், பெயர்கள் நம் நினைவை விட்டுச் சென்று கொண்டே இருக்கின்றார்கள். இது ஒரு தவறு அல்ல. இது ஒரு எதார்த்தம்.

சிலரை நாம் மறக்க நினைக்கின்றோம். சிலரை காலப்போக்கில் மறந்துவிடுகிறோம்.

நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நினைவில் வைத்துக்கொள்கிறோம். நாம் விரும்பாத எல்லாம் காற்றலையில் அழிக்கப்பட்டு விடுகிறது.

நாளைய முதல் வாசகத்தில் இறைவன் தன் நினைவை இரண்டு நிலைகளில் முன்னிறுத்துகின்றார்.

பால் குடிக்கும் குழந்தையை அதன் தாய் மறந்தாலும்,
பத்து மாதம் சுமந்து பெற்ற மகவை அதன் தாய் மறந்தாலும்...

இரண்டிலும் தாய்-சேய் உறவுதான் அடிப்படையாக இருக்கிறது. ஒரு தாய்க்கு எந்நிலையிலும் தன் குழந்தையைப் பிடிக்காமல் போவதில்லை (சில விலக்குகள் இருக்கலாம்!). அப்படிப்பட்ட நிலை வந்தாலும் கடவுள் நம்மை விரும்பாமல் இருக்க மாட்டார் என்பதே இதன் செய்தி.

இன்று கடவுள் நம்மை மறக்கிறார் என்று ஆராய்வதை விட நாம் கடவுளை மறக்கிறோமா என்று கேட்கலாம். வெகு எளிதாகவும், வெகு வசதியாகவும் இன்று கடவுளை நாம் மறந்துவிடுகிறோம்.

'செலக்டிவ் அல்சைமர்' என்றுகூட இதைச் சொல்லலாம்.

ஆலயத்தில் இருக்கும் ஒருமணி நேரம் தவிர மற்ற நேரங்களில் நான் அவரைப் பல நேரங்களில் மறந்துதான் போயிருக்கிறேன்.


1 comment:

  1. 'மறதி'...முதுமையின் பல அவலங்களில் இதற்கு முக்கிய பங்குண்டு.அதைவிட மோசமாக இருக்கிறது தந்தை குறிப்பிடும் 'அல்சைமர்'. கேள்விப்படாத ஒன்றெனினும் அதன் வலியை,தாக்கத்தை புரிந்து கொள்ளவும், உணரவும் முடிகிறது.தந்தை கார்லோஸின் இளவயது 'பிடிப்புகள்' ( priorities) அவரை இறுதி மூச்சுவரை கொண்டு சென்றுள்ளன. அவரது ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும்! மற்றபடி இறைவனுக்கும் நமக்குமுள்ள உறவு கண்டிப்பாக 'தாய்- சேய்' உறவுதான்.தாயை மறந்து எத்தனை நாள் சேய் தனியே உலவ முடியும்? தாயிடம் திரும்பி வந்துதானே ஆகவேண்டும்? பல நேரங்களில் நாம் அவரை மறந்து போகிறோம் என்று சொல்லும் போதே அவரை நினைக்கத்தானே செய்கிறோம்? அப்புறம் எதற்கு தேவையில்லாத குற்ற உண்ர்வு? Be cool Father! Be relaxed!!!

    ReplyDelete