Tuesday, March 10, 2015

வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

'மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?'
(இணைச்சட்டம் 4:7-8)

நாம் வாழும் இந்த உலகம் அடையாளங்களைக் கொண்டாடுகின்ற உலகம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாம் இருக்க வேண்டும். அடையாளங்களே நினைவில் நிற்கின்றன. 

இணைச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்கள் தங்களை இரண்டு அடையாளங்களோடு ஒன்றிணைத்துப் பார்க்கின்றனர்:

அ. எங்கள் கடவுள் எங்களுக்கு மிகவும் நெருங்கியவர்.

ஆ. எங்களுக்கென்று சட்டங்கள் இருக்கின்றன.

இவற்றில் 'அ' என்பது மேல்நோக்கிய அடையாளம். 'ஆ' என்பது கீழ்நோக்கிய அடையாளம். எங்களுக்கு மேல் இருக்கும் கடவுளோடும் நாங்கள் இணைந்திருக்கிறோம். எங்களோடு இருக்கும் எம் சகோதர, சகோதரிகளோடும் நாங்கள் இணைந்திருக்கின்றோம்.

மேல் நோக்கி எங்களை இணைப்பது கடவுளின் நெருக்கம். கீழ்நோக்கி எங்களை இணைப்பது சட்டதிட்டங்கள்.

கிறிஸ்தவ மதமும் இந்த இரண்டு அடையாளங்களில் யூத மதத்தை ஒத்துப் போகிறது.

உதாரணத்திற்கு, கத்தோலிக்கத் திருஅவையில் 'மனுவுருவாதல்' நிகழ்வில் கடவுள் நம்மோடு என இறங்கி வந்திருக்கிறார் எனக் கொண்டாடும் நாம், நமக்கென்று சட்டதிட்டங்களும் (திருச்சபைச் சட்டம்) வைத்திருக்கின்றோம். 

ஆக, கடவுளின் நெருக்கமும், சட்டதிட்டங்களும் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகின்றன.

இந்தப் பிரித்துக் காட்டுதல் நாம் மற்றவர்களைவிட பெரியவர்கள் அல்லது மேலானவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காகவா? இல்லை. அடையாளங்கள் நம் உள்அடையாளங்களாக மாறி நம் வாழ்வை மாற்ற வேண்டும்.

தவக்காலத்தில் நாம் மையமாக வைத்திருக்கும் சிலுவைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன: மேல் நோக்கி செல்லும் மரம் கடவுளுக்கும், நமக்கும் உள்ள நெருக்கத்தையும், குறுக்கே செல்லும் மரம் நமக்கும், பிறருக்கும் உள்ள பொறுப்புணர்வைத்தானே காட்டுகிறது?


1 comment:

  1. காலத்திற்கேற்றதொரு அழகான பதிவு." அடையாளங்கள் நம் உள் அடையாளங்களாக மாறி நம் வாழ்வை மாற்ற வேண்டும்"....நாம் இக்கருத்தை நடைமுறைபடுத்துகிறோமா?!...யோசிக்க வேண்டிய விஷயம். "சிலுவையின் மேல் நோக்கிச்,செல்லும் மரம் கடவுளுக்கும்,நமக்குமுள்ள நெருக்கத்தையும், குறுக்கே செல்லும் மரம் நமக்கும்,பிறருக்கும் உள்ள பொறுப்புணர்வையும் காட்டுகிறது ".... தகவல் தந்த தந்தைக்கு நன்றிகள்.....

    ReplyDelete