Friday, March 20, 2015

அவரைப் போல எவரும் என்றும்!

அவர்கள்: 'ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?'
காவலர்கள்: 'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'
அவர்கள்: 'நீங்களும் ஏமாந்து போனீர்களோ?'
(யோவான் 7:45-46)

இந்த உரையாடல் நடப்பது யூதர்களின் சட்டமன்றம் என்று சொல்லப்படும் 'சேனட்ரின்' என்ற இடத்தில் தாம். பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் என எல்லாரும் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படி ஒரு காவலர் குழுவை அனுப்புகின்றனர். அந்தக் குழு இயேசுவைப் பிடித்துக்கொண்டு வருவதற்குப் பதிலாக, வெறுங்கையினராய் வந்து நின்று கொண்டு 'அவரைப் போல நல்லவர் யாரும் இல்லை!' என்று எதிர்சாட்சி சொல்கின்றனர்.

'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'

காவலர்களின் இந்தச் சான்று 'பேசுவதை' மையப்படுத்தியிருக்கின்றது. 'பேசுவது' என்பது முதல் ஏற்பாட்டில் யாவே கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வார்த்தை. யாவே இறைவன் தான் சீனாய் மலையில் மோசேயுடன் பேசுகிறார். அவரைப் போல வேறு எந்தக் கடவுளும் பேசியதில்லை. அவர் பேசிய வார்த்தைகள் தாம் அவர்களுக்குப் பத்துக் கட்டளைகள் ஆயிற்று. அவரின் வார்த்தைகள் தாம் அவர்களுக்கு பாலைநிலத்தில் உண்பதற்கு மன்னாவும், இறைச்சியும், குடிப்பதற்கு தண்ணீரும் கொடுத்தன. ஆக, கடவுளின் வார்த்தை என்றால் வாழ்வு.

காவலர்களின் சான்று மறைமுகமாகச் சொல்வதும் இதுதான்:

'வாழ்வின் காரணியைக் கொண்டிருக்கும் ஒருவரைச் சாகடிக்கப் பார்க்கிறீர்களே!' என்று கேட்காமல் கேட்கின்றனர்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், காவலர்களின் வேலை தங்களுக்குச் சொல்லப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதுதான். இந்தக் காவலர்கள் கட்டளையை நிறைவேற்றத் தவறியதுமன்றி, இயேசுவைப் பற்றி வாழ்த்தியும் பேசுகின்றனர்.

மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது வாழ்க்கையின் நியதி அல்ல. உண்மைக்கேற்ப நாம் எந்த இடத்திலும் வாழ முடியும். மேலும், இயேசுவைச் சந்தித்தபின் ஒருவர் பொய் பேச முடியாது. உண்மையை மட்டும் தான் பேச முடியும்.

நாம் இயேசுவை இன்றும் சந்திக்கிறோம் தானே? விவிலியத்தில், நற்கருணையில், அண்டை அயலாரில். நாம் மற்றவர்களிடம் போய் என்ன சொல்லப் போகிறோம்?

'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'


1 comment:

  1. விவிலியத்தின் பல இடங்களில் காற்றாகவும்,புயலாகவும், நீராகவும் தன்னை வெளிப்படுத்திய இறைவன் வார்த்தைகளின் மூலமாகவும், தான் 'சத்தியமானவர்' என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த சத்திய வார்த்தைகள் நம்மை வழி நடத்துமேயானால் கண்டிப்பாக நாம் எந்த இடத்திலும் நாமாக இருக்க முடியும்.அன்றாடம் அவரை சந்திக்கும் நாம் அடுத்தவரிடம் என்ன சொல்ல முடியும் அவர் 'சத்தியமயமானவர்' என்பதைத்தவிர? வாழ்வின் எதார்த்தத்தை தந்தை வெகு சாதாரணமாக வெளிக்கொண்டு வந்துள்ள விதம் பாராட்டுக்குரியது....

    ReplyDelete