Friday, March 27, 2015

உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை!

கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், 'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்று சொன்னார். இதை இவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்று சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். (யோவான் 11:49-52)

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை!' என்ற வார்த்தைகளோடு தொடங்குகிறது தலைமைக்குரு கயபாவின் உரையாடல்.

'மத்தவங்களுக்கு எதுவும் தெரியாது, எனக்குதான் எல்லாம் தெரியும்!' என்பது இயல்பாகவே சாமியார்களுக்கு இருக்கும் எண்ணம். 'கடவுள் வேறு துணைக்கு இருப்பதால்' இதை ரொம்ப ஆணித்தரமாகவே சொல்வார்கள்.

'உங்களுக்கு எதுவும் தெரியாது!' என்று சொல்வதன் மூலம் மறைமுகமாகத் தனக்குத் தெரிந்ததை 'உண்மை' எனச் சொல்லுகின்றார் கயபா.

தலைமைக்குரு என்றால் இந்தக்காலத்தில் போப்பாண்டவர் மாதிரி. முதன்மைக்குருக்கள் என்றால் கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் மாதிரி. குருக்கள் என்றால் இப்போ இருக்கிற நம்ம பங்குச்சாமியார் மாதிரி.

என்ன ஒரு பிறழ்வு பாருங்கள்? இயேசு என்ற கடவுள்-மனிதனைக் கொல்லத் துணிவது குருத்துவமும், ஆன்மீகம்தான்.

கயபாவின் இறைவாக்கு ஒரு பொய்யான இறைவாக்கு. ஏனெனில் இயேசு தன் இனத்திற்காக இறப்பதாகச் சொல்கிறார். ஆனால், இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாத ஒரே இனம் இயேசு பிறந்து வாழ்ந்த யூத இனம்தான்.

வேண்டுமானால் இப்படி எடுக்கலாம். சாக்ரடிஸ் அவரின் சமகாலத்து இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, இளைஞர் இனம் காக்கப்பட வேண்டுமானால், சாக்ரடிஸ் கொல்லப்பட வேண்டும் என்று நஞ்சு கலந்த பானத்தை அருந்துவதற்கு உட்படுத்தப்படுகின்றார். அதுபோலத்தான் இயேசு தன் இனம் தன் போதனையால் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக கொல்லப்படுகின்றார்.

ஆக, கடவுளை அழிப்பவர்கள் அவருக்கு அருகில் இருப்பவர்கள்தாம்.

ஒருசில நேரங்களில் எனக்கு இப்படித் தோன்றும். நான் தினமும் கடவுளைப் பற்றி, இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றி, மோட்சம் பற்றி, நரகம் பற்றி ஏதோ ஒரு வகையில் போதிக்கிறேன். ஒருவேளை நாம் இறந்தபின் அப்படியில்லாம் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டால், நான் இந்த மக்களுக்கெல்லாம் 'நம்பிக்கை துரோகம்' செய்தவனாகவும், 'ஏமாற்றியவனாகவும்' மாறிவிடுவேன் அல்லவா?

மனித இனம் ஒரு விந்தையான இனம் - தன் எண்ணத்திற்கு ஒத்துவராத எதையும் அல்லது யாரையும் - அது கடவுளே என்றாலும் - அழித்துவிடத் துடிக்கிறது.



1 comment:

  1. இயேசுவின் முடிவை சாக்ரடிசின் முடிவோடு ஒப்பிட்டிருப்பது யோசிக்க வைக்கிறது.தந்தையே! இன்றைய தங்களின் பதிவு 'கையிலிருப்பதை விட்டு விட்டு வானில் பறப்பதற்கு ஆசை படுவதுபோல்' தோன்றுகிறது.ஆமாம், இன்று தாங்கள் சார்ந்திருக்கும் திருமுறையின் கோட்பாடுகளைத்தானே போதிக்க வேண்டும்? அதைத்தான் செய்கிறீர்களே! பின் எதற்கு நம் மறைவிற்குப்பின் நடக்கப்போகும் விஷயங்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்? 'நம்பிக்கைத் துரோகம்' என்பது தெரிந்தே செய்வது. குழப்பம் வேண்டாமே Father!!!!

    ReplyDelete