Thursday, May 25, 2023

உமக்கு எல்லாம் தெரியுமே!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 26 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 25:13-21. யோவா 21:15-19.

உமக்கு எல்லாம் தெரியுமே!

இயேசுவின் இறுதிச் சொற்கள் என்று நாம் நினைக்கும்போதெல்லாம் பெரும்பாலும் சிலுவையில் அவர் மொழிந்த ஏழு சொற்களையே நாம் நினைவுகூருகிறோம். ஆனால், உயிர்ப்புக்குப் பின் அவர் மொழியும் சொற்களும் நினைவுகூரத்தக்கவை.

உயிர்ப்புக் காலம் நிறைவுபெற இரண்டு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியில் இயேசு மொழியும் இறுதிச் சொற்களை இன்றும் நாமும் கேட்கிறோம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் நடைபெறும் உரையாடலே இயேசுவின் இறுதி உரையாடலாக இருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) 'நீ என்னை அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல். (ஆ) பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு. (இ) பேதுருவின் இரண்டாம் அழைப்பு.

அ. நீ என்னை அன்பு செய்கிறாயா?

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், பேதுருவைத் தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? என்பதற்கு இப்படியாகப் பதில் தரப்படுகிறது. பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். இங்கே, 'அன்பு' என்ற வார்த்தை, கிரேக்கத்தில் இரண்டு வார்த்தைகளாக உள்ளது: முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, 'அகாப்பாவோ' (தன்னலமற்ற அன்பு) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், 'ஃபிலயோ' (நட்பு அல்லது உறவுசார் அன்பு) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு. மேலும், 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' (காண். யோவா 15:15) என்னும் இயேசுவின் முந்தைய சொற்களோடு இணைந்து செல்வதாகவும் இருக்கிறது இச்சொல்.

ஆ. நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: 'உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.' இது பேதுருவின் இறுதிநாள்கள் மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். 'என்னால் இது இயலாது' என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

இ. 'என்னைப் பின்தொடர்'

இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். பின்தொடர்தல் என்பது பேதுரு இனி தன் வேலைகளை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல. இறக்கும் வரையிலும்!

இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) ஒவ்வொரு நாளும் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து, 'நீ என்னை அன்பு செய்கிறாயா?' 'நீ என்னோடு நட்பு பாராட்டுகிறாயா?' எனக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதில் தர வேண்டும். 'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே' என்னும் சரணாகதியே சிறப்பானது.

(ஆ) கைகளை இறுக்கி மூடிக்கொண்டே பிறக்கும் நாம், வாழ்க்கை முழுவதும் கைகளைத் திறந்து கொடுக்க மிகவும் கஷ்டப்படுகிறோம். கைகளைத் திறந்து கொடுக்க, அல்லது விரித்துக்கொடுக்க நிறையத் துணிச்சல் தேவை. துணிச்சலைவிட வாழ்க்கையை விளையாட்டு போல எடுத்துக்கொள்ளும் பக்குவம் தேவை. 

(இ) பின்தொடர்பவரின் பார்வை முழுவதும் அவருக்கு முன்செல்பவர்மேல்தான் இருக்கிறது. நம் பார்வையை மற்றவற்றிலிருந்து திருப்பி இயேசுவின்மேல் வைத்தலும், கவனச்சிதறல்கள் குறைத்தலும் பின்தொடர்வதை எளிமையாக்கும்.


No comments:

Post a Comment