Sunday, May 21, 2023

துன்பம் உண்டு

இன்றைய இறைமொழி

திங்கள், 22 மே 2023

உயிர்ப்புக்காலம் ஏழாம் வாரம்

திப 19:1-8. யோவா 16:29-33.

துன்பம் உண்டு

நேற்றைய நாளில் நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடினோம். இந்த வார வாசகங்கள் அனைத்தும் விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் நமக்கு அனுப்பப் போகின்ற தூய ஆவியார் பற்றிப் பேசுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 19:1-8), மலைப்பாங்கான பகுதியாகத் திகழ்ந்த எபேசு நகரத்துக்கு வருகின்றனர் புனித பவுலும் அவருடைய உடனுழைப்பாளர்களும். சீடர்களைக் கண்டு, 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்க, அவர்களோ, 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே' என்கின்றனர். பல நேரங்களில், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் போதும், அருங்கொடை இயக்க இறைவேண்டல்களின்போது மட்டுமே நாமும் தூய ஆவியார் பற்றி நினைக்கின்றோம். இவர் ஒரு மறக்கப்பட்ட மனிதராகவே இன்றும் நம்மோடு இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய பிரியாவிடை உரையில், 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.

இதில் மூன்று விடயங்கள் உள்ளன:

அ. உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு

'துன்பம்' என்ற வார்த்தைக்கு இங்கே கிரேக்கத்தில் 'த்லிப்ஸிஸ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'த்லிப்ஸிஸ்' என்ற பெயர்ச்சொல் 'த்லிபோ' என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. 'கசக்குவது,' 'பிழிவது,' 'நெருக்குவது,' 'அமிழ்த்துவது' என்பது இதன் பொருள். தானியங்களைக் கசக்குதல், துணியை அல்லது பழங்களைப் பிழிதல், கட்டகளை நெருக்கி அடுக்குதல், தண்ணீருக்குள் ஒன்றைக் கடினப்பட்டு அமிழ்த்துதல் போன்றவற்றைக் குறிக்க இவ்வினைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் அழுத்தம் பார்க்கும் கருவியில் த்லிப்ஸிஸ் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் பழைய சட்டப்படி, குற்றத்தை ஒத்துக்கொள்ளாத ஒருவர் மேல் பெரிய கனத்தை அழுத்திக் கொல்வது வழக்கம். அந்த வழக்கத்தின் பெயரும் 'த்லிப்ஸிஸ்.'

ஆக, இயேசு இங்கே சொல்வது உள்ளம் சார்ந்த ஓர் அழுத்தம். அல்லது அந்த அழுத்தம் தரும் துன்பம். பாம்பாட்டிச் சித்தர் துன்பத்தை இப்படி வரையறுக்கிறார்: 'உன் மனம் உனக்கு வெளியே இருந்தால் அது துன்பம். உனக்கு உள்ளே இருந்தால் அது இன்பம்.' எடுத்துக்காட்டாக, நான் யாரிடமாவது கோபம் கொண்டால், அல்லது யாரையாவது நான் மன்னியாமல் இருந்தால் என் மனம் அவரைப் பற்றி எண்ணிக்கொண்டே இருக்கிறது. இதுதான் துன்பம். இதுதான் அழுத்தம். மாறாக, என் மனம் என்மேல் மையம் கொண்டிருந்தால் துன்பத்திற்கு இடமில்லை.

இந்த வாக்கியத்தில், 'உலகம்' என்பது நம் பொதுவான இல்லம். யோவான் நற்செய்தியில், 'உலகு' என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு: ஒன்று, கடவுளுக்கு எதிராகச் செயல்படும் எதிராளிதான் உலகு. இரண்டு, மனிதர்களின் இயங்குதளம் உலகு. இங்கே இந்த வார்த்தை இரண்டாவது பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆ. எனினும், துணிவுடன் இருங்கள்

துன்பம் போய்விட்டதால் அல்ல, மாறாக, துன்பம் இருந்தாலும் துணிவுடன் இருத்தல் வேண்டும். நம்மில் எழும் துன்பத்தை எதிர்கொள்வதற்காக நம் மனம் இயல்பாக எழுப்பும் ஒரு பாதுகாப்பு உணர்வுதான் துணிவு. துணிவின் எதிரி பயம். துணிவு என்பது பயமற்ற நிலை.

இ. நான் உலகின்மேல் வெற்றிகொண்டுவிட்டேன்

இந்தச் செயல் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார் இயேசு. 'நிக்காவோ' என்றால் வெற்றி. அந்த வெற்றியில் எதிராளி முற்றிலும் தோற்கடிக்கப்படுவான். ஆனால், திரும்ப வரமாட்டான் என்பது பொருள் அல்ல. இயேசு தான் ஏற்கனவே உலகை வென்றுவிட்டதாக சீடர்களுக்கு முன்மொழிகின்றார்.

துன்பம் என்ற எதார்த்தத்தை இயேசு முழுமையாக அழித்துவிட்டதாகப் பொருள் இல்லை. அப்படிச் சொன்னால் அவர் தன்னையே முரண்படுத்துவதாக இருக்கும். ஏனெனில், இன்னும் சில நாள்களில் அவரே சிலுவையில் துன்புறுவார். துன்பம் தனக்கு வந்தாலும் அத்துன்பம் வெற்றிகொள்ளப்படும். ஏனெனில், தம்மைத் தாண்டி எதுவும் தம்மை வருத்திவிடாது என்பது இயேசுவின் புரிதல்.

தூய ஆவியார் பெருவிழாவுக்காக நம்மையே தயாரிக்கும் நாம் இன்றைய நாளில் பின்வரும் கொடைக்காக மன்றாடுவோம்: நம் வாழ்க்கைமேல் நாம் வெற்றி கொண்டவர்களாக வாழ்தல். அதாவது, நமக்கு வெளியே நடக்கும் எதுவும், வெளியே இருக்கும் எவரும் நம்மை வெற்றிகொள்ளாமல் பார்த்துக்கொள்தல். நம் மனத்தை நமக்குள்ளேயே வைத்திருத்தல் என்னும் கொடை!


No comments:

Post a Comment