Sunday, April 30, 2023

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

இன்றைய இறைமொழி

திங்கள், 1 மே 2023

உயிர்ப்புக் காலம் நான்காம் வாரம்

தொழிலாளரான புனித யோசேப்பு

திப 9:1-20. யோவா 6:52-59.

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் குறித்து இடறல்படுகிற அவருடைய சமகாலத்தார் அவரை 'தச்சரின் மகன்' என அழைக்கிறார்கள். இச்சொல்லாடைலைப் பயன்படுத்தி அவருடைய ஊரார் அவரை ஏளனம் செய்துவிட்டதாக எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆனால், இந்தச் சொல்லாடலே யோசேப்பு என்னும் மாமனிதரை தொழிலாளர்கள், உழைப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடக் காரணமாக அமைகிறது.

நம் தாய்த் திருஅவை இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பை வழிபாட்டில் இரு நாள்கள் கொண்டாடி மகிழ்கிறது: ஒன்று, மார்ச் 19, யோசேப்பு புனித கன்னி மரியாவின் கணவர். இரண்டு, மே 1, யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர். இன்றைய நாளின் திருநாளை 1955ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பயஸ் ஏற்படுத்தினார்.

1. உழைப்பு: சாபம், வரம்

உழைப்பு என்பதை விவிலியம் மானுட குலத்தின் சாபமாகவும் பார்க்கிறது, வரமாகவும் பார்க்கிறது. விலக்கப்பட்ட கனியை உண்டதற்காக நம் முதற்பெற்றோரைக் கடிந்துகொள்ளும் ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், 'உன் வாழ்நாளெல்லாம் வருந்தி நிலத்தின் பயனை உழைத்து நீ உண்பாய்' என மொழிகிறார் (காண். தொநூ 3:17). இதன் பின்புலத்தில்தான் சபை உரையாளரும் உழைப்பும், உழைப்பின் பயனும் வீண் எழுதுகிறார்: 'நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின்மீதெல்லாம் வெறுப்பு கொண்டேன் ... என் உழைப்பும் வீணே ... நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்து போனேன் ... உழைப்புக்காக ஒருவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம். வேலையில் தொந்தரவு. இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே' (காண். சஉ 2:18-23). ஆனால், நேர்முகமாகவும் நாம் உழைப்பைக் காண்கிறோம். 'ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்' (காண். தொநூ 2:15). இங்கே, ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்குத் தருகிற அழைப்பே உழைப்பு என்னும் புரிதல் தெரிகிறது. 

2. உழைப்பின் இன்றியமையாமை

உழைப்பு நமக்கு மூன்று நிலைகளில் அவசியமாகிறது: 

ஒன்று, உழைப்பு நமக்கு அடையாளம் தருகிறது. மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், தணிக்கையாளர் என நாம் செய்யும் பணிகளால் அடையாளப்படுத்தப்படுகிறோம். இந்த அடையாளங்களை நாம் இழக்கும்போது நாம் மிகவும் கவலைப்படுகிறோம். எடுத்துக்காட்டாக, ஆசிரியப் பணி நிறைவு செய்கிறவர், இனி தம்மால் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாதவராக இருக்கிறார்.

இரண்டு, உழைப்பின் வழியாக நம் திறன்களை நாம் வெளிக்கொணர்கிறோம். நம்மை நாமே நிறைவு செய்கிறோம். இதில் என்ன அழகு என்றால், நாம் நிறையத் திறன்களை வளர்க்க, வளர்க்க, நாமும் நிறைவுபெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

மூன்று, உழைப்பின் வழியாக மானுடத்திற்கான, இயற்கைக்கான நம் பங்களிப்பை நாம் செலுத்துகிறோம். மானுடத்தையும் இயற்கையையும் மேம்படுத்துகிறோம்.

3. யோசேப்பு உழைப்பாளர்

(அ) யோசேப்பு ஆண்டின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'தந்தையின் இதயத்தோடு' (பாத்ரிஸ் கோர்தே) என்னும் மடலில், 'யோசேப்பு உழைக்கிற தந்தை' என எழுதுகிறார். தாம் செய்த தச்சுத்தொழில் வழியாக தம் குடும்பத்திற்குத் தேவையானவற்றை வழங்குகிறார். அவரிடமிருந்தே இயேசு உழைப்பின் மதிப்பையும், மாண்பையும், மகிழ்ச்சியையும் கற்றுக்கொள்கிறார் எனப் பதிவு செய்கிறார் திருத்தந்தை. இவ்வாறாக, தம் செயலால் இயேசுவுக்கு முன்மாதிரி காட்டுகிறார் யோசேப்பு.

(ஆ) தச்சுத்தொழிலுக்கான கூர்மை. தொழில்கள் அனைத்தும் தனித்தன்மை பெற்றவை எனினும், தச்சுத்தொழிலுக்கென்று தனித்திறமை அவசியம். மரத்தைப் பார்ப்பது, மதிப்பிடுவது, சரியான பக்குவத்தில் வேலைக்கு எடுப்பது, தேவையற்றதை நீக்குவது, வழுவழுப்பாக்குவது என அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். மேலும், நம் வீட்டில் பயன்படுத்தும் மரப் பொருள்கள் நம்மை இயற்கையோடு இருப்பதான ஓர் உணர்வைத் தருகின்றது.

(இ) யோசேப்பு நேர்மையாளர் என மத்தேயு பதிவு செய்கிறார். இந்த நேர்மை அவருடைய தொழிலிலும் மிளிர்ந்தது. தச்சுத்தொழில் செய்பவர் சரியான நேரத்தில் பொருளை முடித்துக்கொடுக்க வேண்டும். குறிப்பாக, நம் ஊரில் வீட்டின் நிலைக்கால் செய்யும் தச்சர் சரியான நேரத்தில் அதை முடித்துக்கொடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். யோசேப்பு தனித்திறமை கொண்டவராக இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.

4. வாழ்க்கைப் பாடங்கள்

(அ) தம் உழைப்பின்மேல் தாம் கொண்ட நம்பிக்கையால்தான் அன்னை கன்னி மரியாவை தம் மனைவியாக ஏற்றுக்கொள்ள முன்வருகிறார் யோசேப்பு. இன்று நம் குடும்பங்களில் உழைப்பு மிகவும் அவசியம். அன்பு அல்ல, உழைப்பே குடும்பத்தை அடுத்த நிலைக்கு (பொருளாதார அளவில்) மேம்படுத்தும். உழைப்பு மிகுந்திருக்கும் குடும்பத்தில் அன்பும் மிகுந்திருக்கும். நாம் செய்கிற எந்த வேலையிலும் அர்ப்பணமும் பொறுப்புணர்வும் கொண்டிருத்தல் நலம்.

(ஆ) நம் வேலை நமக்கு அடையாளம் தந்தாலும், அந்த அடையாளத்தோடு நாம் நம்மையே மிகவும் இணைத்துக்கொள்வது தவறு. அப்படி இணைத்துக்கொண்டால், அத்தகைய அடையாளம் இல்லாதவர்களை நாம் மதிப்புடன் நடத்தத் தவறிவிடுவோம். குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர் போன்றவர்கள் உழைக்க இயலாதவர்கள். ஆனால், பயனற்றவர்கள் அல்லர். உழைக்க இயலாதவரும் தன்னகத்தே தன்மதிப்பையும் மாண்பையும் கொண்டிருக்கிறார். 

(இ) நமக்குக் கீழே வேலை பார்ப்பவர்களை, அல்லது மற்ற பணியாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்கள் நம் உடலின் நீட்சிகள். நம் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பெண் நம் கரத்தின் நீட்சியே தவிர, அவர் தாழ்வானவர் அல்ல. முடிதிருத்துநர், சலவை செய்பவர், தெருக்களைச் சுத்தம் செய்பவர் என அனைவரும் நம் நீட்சிகள். 

(ஈ) இறுதியாக, உழைப்பு சிலகாலம்தான் என்பதை நாம் உணர வேண்டும். 70 ஆண்டுகள் வாழ்கிற வாழ்க்கையில் நாம் 25 முதல் 55 வயது வரை என வெறும் 30 ஆண்டுகள்தாம் உழைக்கிறோம். இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் உள்ள ஓய்வையும் நாம் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால்தான், உழைப்பைப் பற்றிப் பேசுகிற இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர், 'ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!' எனப் பாடிவிட்டு, தொடர்ந்து, 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்' என மன்றாடுகிறார்.

உழைப்பின் திருநாள் வாழ்த்துகள்.


No comments:

Post a Comment