Wednesday, April 26, 2023

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய இறைமொழி

வியாழன், 27 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 8:26-40. யோவா 6:44-51

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் 'வாழ்வுதரும் உணவு நானே' பேருரை தொடர்கிறது. 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என்னும் சொற்களை மேற்கோள் காட்டி, 'கடவுள் ஈர்த்தாலொழிய யாரும் தன்னிடம் வர இயலாது' என்கிறார் இயேசு. 

கடவுளால் ஈர்க்கப்படுதல் என்னும் சொல்லாடலை காந்தம் மற்றும் இரும்பு என்னும் உருவகம் வழியாகப் புரிந்துகொள்ளலாம். தனக்கு அருகே வரும் இரும்பைக் காந்தம் உடனடியாகத் தன்னிடம் ஈர்த்துக்கொள்கிறது. ஈர்க்கப்பட்ட இரும்பு காந்தத்தின் தன்மையை ஏற்று, தனக்கு அருகில் இருக்கும் மற்ற இரும்பையும் ஈர்த்துக்கொள்கிறது. இதுதான் கடவுள் நம்மை ஈர்க்கும் முறை.

அலகை அல்லது சாத்தானும் நம்மை ஈர்க்கிறார். ஆனால், அவருடைய ஈர்ப்பு 'கருந்துளை ஈர்ப்பு' (ஆங்கிலத்தில், 'ப்ளாக்ஹோல் அட்ராக்ஷன்') போன்றது. கருந்துளையால் ஈர்க்கப்படுகின்ற பொருள் தன் இருத்தலை இழந்துவிடுகிறது. 

கடவுளால் நான் ஈர்க்கப்படுமாறு நான் அவருக்கு அருகில் இருக்கிறேனா? என் இரும்பு தன் தன்மையை இழக்காமல் இருக்கிறதா? 

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர் பிலிப்பு எத்தியோப்பிய திருநங்கை அமைச்சருக்கு இறைவாக்கை எடுத்துரைத்து பின்னர் திருமுழுக்கு வழங்குகிறார். கடவுளால் ஈர்க்கப்பெற்ற பிலிப்பு திருநங்கை அமைச்சரைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார். 

திருநங்கை அமைச்சர் எவ்வாறு கடவுளால் ஈர்க்கப்படுகிறார்?

எத்தியோப்பிய அரசி கந்தகியின் நிதியமைச்சராக இருக்கிறார் திருநங்கை ஒருவர். 'கந்தகி' என்பது எத்தியோப்பிய அரசியின் பெயர் என்று சொல்வதைவிட, பட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 'கந்தகி' என்ற சொல்லுக்கு 'அரசியான அம்மா' என்ற பொருளும் உண்டு. 'அலி,' 'அண்ணகர்,' 'திருநங்கை' என்று நாம் எந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தினாலும் பொருள் ஒன்றுதான். அரசர்கள் தங்கள் மனைவியரின் 'நலன்' கருதி, தங்கள் அரண்மனையில் தங்கி பணிபுரியும் அமைச்சர்களாக 'திருநங்கைகளை' மட்டுமே நியமித்தார்கள். நம் கதைமாந்தர் அரசியின் நிதியமைச்சர். ஆக, நன்றாகப் படித்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். படித்தவர் மட்டுமல்ல. பக்திமானும் கூட. எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு வீடு திரும்புகிறார். எருசலேம் சென்று வணங்கக்கூடியவர் ஒரு யூதராகத் தான் இருக்க வேண்டும். மேலும், அவரின் கைகளில் இருப்பதும் யூத இறைவாக்கு நூலின் ஒரு பகுதியே: எசாயா 53:7-8.

இவர் இப்படி வாசித்துக்கொண்டிருக்கும் நேரம், இவரின் தேரை நெருங்கி ஓடுமாறு பிலிப்புவுக்குக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். தேரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு பிலிப்பு ஆற்றல் பெற்றிருக்கின்றார். மேலும், அந்த ஓட்டத்திலும் தேரில் இருப்பவர் என்ன வாசிக்கிறார் என்பதைக் கேட்கவும் செய்கின்றார். திருநங்கை அமைச்சரே இந்த இறைவார்த்தையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவரின் தேரில் உடன் வந்த அவரின் செயலரோ, அல்லது குருவோ, அல்லது லேவியரோ வாசித்து இவர் கேட்டிருக்கலாம்.

'நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா?' என பிலிப்பு கேட்க, 'யாராவது விளக்கிச் சொன்னால்தானே புரியும்' என்கிறார் திருநங்கை அமைச்சர். அத்தோடு, பிலிப்பையும் தன் தேரில் ஏற்றிக்கொள்கின்றார். தொடர்ந்து அந்த இறைவாக்குப் பகுதி பற்றி நிறைய கேள்விகள் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்பு அவர் வாசித்த இறைவார்த்தையில் தொடங்கி, இயேசுவைப் பற்றி எல்லாவற்றையும் அறிவிக்கின்றார். வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடம் வருகின்றது. 'இதோ, தண்ணீர் உள்ளதே. நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா?' எனக் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்புவும், அமைச்சரும் தண்ணீருக்குள் இறங்குகின்றனர். பிலிப்பு அமைச்சருக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார். ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் ஆண்டவர் பிலிப்பை அப்படியே 'தலைமுடியைப் பிடித்து' தூக்கிச் சென்று விடுகிறார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்புகிறார்.

திருநங்கை-அமைச்சர் குழந்தை உள்ளம் கொண்டிருக்கிறார். தனக்குப் புரியாததை புரியவில்லை என ஏற்றுக்கொள்கிறார். தண்ணீரைக் கண்டவுடன் திருமுழுக்கு பெறுகிறார். அவருடைய மனமாற்றம் உடனடியாக நிகழ்கிறது. மனமாற்றம் மகிழ்ச்சி உணர்வாக வெளிப்படுகிறது.

பிலிப்பு தயார் நிலையில் இருக்கிறார். ஆண்டவர் ஓடச் சொன்னவுடன் ஓடுகிறார். தயக்கம் ஏதும் இல்லாமல் உடனடியாக அந்நியர் ஒருவரோடு உரையாடும் துணிவு கொண்டிருக்கிறார். ஆண்டவர் தன் முடியைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போனபோது அமைதி காக்கின்றார்.

இவ்வாறாக, கடவுள் பிலிப்பையும், பிலிப்பு நிதியமைச்சரையும் ஈர்க்கிறார்கள்.

இன்று நம்மைச் சுற்றி நிறைய ஈர்ப்புகள் உள்ளன. பல ஈர்ப்புகள் போலியானவை, அல்லது தீமையானவை. அவற்றை நோக்கி நாம் செல்லும்போது நாம் மறைந்து போகிறோம். 

இறைஈர்ப்பே இனிய ஈர்ப்பு. 

அந்த இயல்புக்குக் கையளிக்கும் நாம் இறைவனின் இயல்பு பெறுகிறோம்.

No comments:

Post a Comment