Monday, April 24, 2023

புனித மாற்கு

இன்றைய இறைமொழி

செவ்வாய், 25 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

புனித மாற்கு

1 பேதுரு 5:6-14. மாற்கு 16:15-20.

மாற்கு மற்றும் நற்செய்தி

இன்று நாம் நற்செய்தியாளரான புனித மாற்குவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவரை இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேது 5:5-14), பேதுரு, 'என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்' என எழுதுகிறார்.

இவர் பேதுருவின் சீடர் என்பதும், இயேசு பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்யத் திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் இவர் என்பதும், இவருடைய இல்லத்தின் மேல்மாடியில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார் என்பதும், இந்த இல்லத்தின் மேலறையில்தான் திருத்தூதர்கள்மேல் தூயஆவி பொழியப்பட்டது என்பதும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் மாற்கு என்பதும், இவருடைய நற்செய்தியே முதலில் எழுதப்பட்ட நற்செய்தி என்பதும் மரபுவழிச் செய்தி. இவர் யோவான் மாற்கு எனவும் அறியப்படுகிறார்.

மாற்கு மற்றும் அவருடைய நற்செய்தி நமக்கு வழங்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

(அ) இரண்டாம் வாய்ப்பு

பவுலுடன் அவருடைய முதல் தூதுரைப் பயணத்தில் இணைந்து செல்கின்ற மாற்கு சில நாள்களில் அவரிடமிருந்து விலகி எருசலேம் வருகிறார். மீண்டும் அவர் பவுலுடன் இணைய முயன்றபோது பவுல் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இரண்டாம் தூதுரைப் பயணத்திலும் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால், திமொத்தேயுவுக்கு எழுதுகிற திருமடலில், 'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்குவை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' (காண். 2 திமொ 4:11) என்று பவுல் மாற்குவைப் பற்றி நற்சான்று கூறுகிறார். தனிப்பட்ட விடயமோ, அல்லது உடல்நலக்குறைவோ, அல்லது புரிதலின்மையோ எதனால் மாற்கு பவுலிடமிருந்து பிரிந்துசெல்கிறார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், மீண்டும் பவுல் தனக்காக ஏங்கும் அளவுக்கு மாற்கு நடந்துகொள்கிறார். வாழ்வின் முதல் வாய்ப்புகள் நம்மை விட்டுப் போகும்போது, அல்லது நாம் அறிந்தோ அறியாமலோ அவற்றை நிராகரிக்கும்போது நாம் கவலைப்படத் தேவையில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. எல்லாம் ஒரு நாள் சரி செய்யப்படும்.

(ஆ) செயல்பாடு

மாற்கு நற்செய்தி 'கர்ம மார்கா' (செயல்வழி மீட்பு) என்னும் கொள்கையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பர் ஆய்வாளர்கள். ஏனெனில், இயேசு செயல்கள் ஆற்றிக்கொண்டே இருப்பார் மாற்கு நற்செய்தியில். இயேசுவின் சொற்கள் குறைவாக இருக்கும். ஆனால், செயல்கள் அதிகமாக இருக்கும். இயேசு நிறைய நடப்பார், நிறைய நபர்களைச் சந்திப்பார், நிறைய வல்ல செயல்கள் செய்வார். காலை, மாலை என இயேசுவின் வாழ்வு செயல்களால் நிறைந்திருக்கும். இச்செயல்களை இயேசு தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பார். இரணடு விடயங்கள் இங்கே தெளிவாகின்றன: ஒன்று, நம் சொற்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆக, சொற்கள் குறைத்து செயல்கள் வளர்ப்பது நலம். இரண்டு, நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் நம் கட்டுக்குள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி யோசித்து நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கத் தேவையில்லை. ஆக, நிறைய தொடர் செயல்களை (ஆங்கிலத்தின், 'ரொட்டின்') வளர்த்துக்கொள்வது நல்லது.

(இ) உடனே

'உடனே' என்னும் சொல்லாடல் மாற்கு நற்செய்தியில் 41 முறை பயன்படுத்தப்படுகிறது. இயேசு உடனே படகேறினார், உடனே அவர்களை அழைத்தார், அவர்கள் உடனே அவரைப் பின்பற்றினார்கள் என அனைத்துச் செயல்களும் 'உடனடியாக' (ஆங்கிலத்தில், 'இம்மீடியட்லி') நடந்தேறுவதாகப் பதிவு செய்கிறார் மாற்கு. இயேசு செயலாற்றுபவர் மட்டுமல்ல, மாறாக, உடனே செயலாற்றுபவர். மாற்கு நற்செய்தியை எழுதிய காலத்தில் உலக முடிவு (கிரேக்கத்தில், 'பருஸியா') உடனடியாக நிகழவிருப்பதாக மக்கள் எதிர்நோக்கியிருந்ததால், மாற்குவும் அதே வேகத்தை தன் நற்செய்தியில் பிரதிபலித்திருக்கலாம். உடனே செயலாற்றுதல் ஒரு நல்ல பண்பு. காலதாமதம், தள்ளிப்போடுதல் போன்றவை இதனால் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, அதீத சிந்தனை தவிர்க்கப்படுகிறது.

(ஈ) நற்செய்தி என்னும் இலக்கியக்கூறு

'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' (மாற் 1:1) என்று தன் நூலைத் தொடங்குகிறார் மாற்கு. இங்கே 'நற்செய்தி' (கிரேக்கத்தில், 'இவாங்கெலியோன்') என்னும் புதிய சொல்லை, இலக்கியக்கூற்றைப் பயன்படுத்துகிறார் மாற்கு. அதாவது, முழுவதும் வரலாறு அல்ல, அதே வேளையில் முழுவதும் கதையும் அல்ல. மாறாக, வாசிப்பவர் தான் வாசிப்பதற்கு பதிலிறுப்பு செய்யத் தூண்டும் ஓர் இலக்கிய வடிவம். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வாசிப்பு ஒரு வரலாற்று வாசிப்பாகவோ, அல்லது கதைகள் வாசிப்பாகவோ அமைய முடியாது. வாசிப்பின் இறுதியில், 'இந்த இயேசு எனக்கு யார்?' என்னும் கேள்வியை வாசகர் எழுப்பி, அதற்கு விடையையும் காணவேண்டும்.

(உ) துன்பம் என்னும் வாழ்வியல் எதார்த்தம்

மாற்கு நற்செய்தி முழுவதும் துன்பம் இழையோடி நிற்கிறது. இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியனாகக் காட்டப்படுகின்றார். மாற்கு (மற்றும் பேதுரு) குழுமம் பல துன்பங்களை எதிர்கொண்டது (காண். முதல் வாசகம்). துன்பங்களால் வருந்தி நின்ற குழுமத்திற்கு, நம் தலைவராம் இயேசுவும் நம் நிலையில்தான் இருந்தார் என்று சொல்வதன் வழியாக, அவர்களுக்கு ஆறுதல்கூறி, எதிர்நோக்கு வழங்குகிறார் மாற்கு. நம் ஆண்டவராகிய இயேசு நம் துன்பங்களில் பங்கேற்றவர் என்னும் செய்தி நமக்கு வலிமை தருகிறது.

(ஊ) மெசியா ரகசியம்

'இயேசு யார்?' என்னும் கேள்வி மாற்கு நற்செய்தியின் முதல் பகுதியில் மறைபொருளாகவே இருக்கும். இறுதி வரை இயேசு மெசியா என்னும் இரகசியம் காப்பாற்றப்படும். அதாவது, மறைபொருளாகவே அதை நகர்த்துகிறார் இயேசு. இதுதான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம். அந்த தூரமே அவர்மேல் பயத்தையும் வியப்பையும் நமக்குத் தருகிறது. பயமும் வியப்பும் இருக்கும் வரைதான் கடவுள் கடவுளாக நிற்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இறுதிச் சொற்களை வாசிக்கிறோம். இயேசு விண்ணேறி கடவுளின் வலப்பக்கம் அமர்கிறார். ஆனால், அங்கிருந்து கீழே திருத்தூதர்களின் சொற்களைச் செயல்களால் உறுதிப்படுத்துகிறார். மறைந்தவாறே தம்மை வெளிப்படுத்துகிறார் கடவுள். இந்த வெளிப்படுத்தலுக்கு நாம் தரும் பதிலிறுப்பே நம்பிக்கை.

நிற்க.

இன்றைய நாளில் மாற்கு நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசிக்க முயற்சி செய்வோம்.


No comments:

Post a Comment