Wednesday, March 1, 2023

சார்புநிலை, இணைவுநிலை, கூட்டுறவு

இன்றைய இறைமொழி

வியாழன், 2 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

எஸ்தர் 4:17முதல். மத்தேயு 7:7-12.

சார்புநிலை, இணைவுநிலை, கூட்டுறவு

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) மூன்று கட்டளைச் சொற்கள் வழியாக – கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் - இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுத் தருகிறார். (ஆ) கடவுளுடைய நன்மைத்தனம் மற்றும் பேராண்மைமேல் பற்றுறுதிகொள்ளுமாறு அவர்களை அழைக்கிறார். (இ) பொன்விதியை – மற்றவர்களின் கண்ணோட்டம் கொண்டு நம் வாழ்வை வாழ்வதை – கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறார்.

மேற்காணும் மூன்று பிரிவுகளும் ஒன்று மற்றதிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், மூன்றையும் இணைக்கின்ற கூறு ஒன்று உள்ளது. அது என்ன? நம் சார்புநிலையைக் கொண்டாடுவது. தன்மையம் கொண்ட வாழ்வை விடுத்துப் பிறர்மையம் நோக்கியும் இறைமையம் நோக்கியும் நகருமாறு நம்மை அழைக்கிறார் இயேசு. பல நேரங்களில், 'என்னால் தனியாகச் சாதிக்க இயலும்,' 'என்னால் மட்டுமே சாதிக்க இயலும்' என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சற்றே அமைதியாக யோசித்தால் தனியாகச் சாதித்தல் இயலாது என்பதை உணர்கிறோம். ஆக, ஒருவர் மற்றவர்மேலும், இறைவன்மேலும் நாம் சார்புநிலை கொண்டிருத்தல் அவசியம்.

சிந்திப்போம்: 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்.'

கேட்பது என்பது தாழ்வானது எனப் பல நேரங்களில் கருதுகிறோம். 'எனக்கு இது வேண்டும்' என்றும், 'எனக்கு இதைச் செய்துகொடு' என்றும் நாம் மற்றவர்களிடம் கேட்கும்போது நம்மை நொறுங்குநிலைக்கு உட்படுத்துகிறோம். மற்றவர்கள் நம் வேண்டுதலை நிராகரிக்கவும், நாம் விரும்பாததை நமக்குக் கொடுக்கவும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

பல நேரங்களில் நாம் தேடுவதில்லை. ஏனெனில், எதைத் தேடுவது என்பது நமக்குத் தெரிவதில்லை. அல்லது ஒரே நேரத்தில் பலவற்றைத் தேடி அலைந்து நம் ஆற்றலை விரயம் செய்கிறோம். அல்லது 'நான் நானாக இருப்பது போதும்,' 'எனக்கு உள்ளது போதும்' என ஆறுதல் சொல்லிக்கொள்கிறோம்.

மேலும், நாம் தட்டுவதற்கும் தயங்குகிறோம். மற்றவர்களின் கதவுகளைத் தட்டுவது தகாதது என எண்ணுகிறோம். கதவு வரை சென்றுவிட்டுத் தட்டாமல் திரும்புகிறோம். கதவைத் திறப்பதற்காகக் கதவின் அந்தப் பக்கம் ஒருவர் காத்திருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம்.

இறைவேண்டலில் மட்டுமல்ல, நம் சமூக மற்றும் தொழில்சார் பரிவர்த்தனைகள் அனைத்திலும் கேட்டல்-தேடுதல்-தட்டுதல் அவசியம். நாள்கள் நகர நகர நாம் இதைக் கற்றுக்கொள்கிறோம். நமக்குத் தேவையானதெல்லாம் குழந்தைக்குரிய தாழ்ச்சியும் சரணாகதியும்தான்.

இரண்டாவதாக, விண்ணகத்தந்தை நன்மைத்தனமும் பேராண்மையும் நிறைந்த கடவுள் என நமக்குக் கற்றுத்தருகிறார் இயேசு. அவருடைய வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டவர்களாய் அவரை நோக்கி நகர்தல் நலம்.

மூன்றாவதாக, நம் வாழ்க்கையை மற்றவர்களின் பார்வையிலிருந்து வாழப் பழகுதல். அக்கரையிலிருந்து நம்மைப் பார்க்கும்போது அக்கறை உணர்வு தானாக வருகிறது. எடுத்துக்காட்டாக, கோவில் அல்லது கடைக்குச் செல்லும் வழியில் ஒருவர் நம்மை நிறுத்தி உதவி கேட்கிறார். அந்தப் பொழுதில் நாம் அப்படியே அவருடைய இடத்தில் நம்மையும் நம்முடைய இடத்தில் அவரையும் வைத்துப் பார்த்தால் நம்மை அறியாமலேயே நாம் உதவத் தொடங்குகிறோம். 

முதல் வாசகத்தில் எஸ்தர் அரசியின் இறைவேண்டலை வாசிக்கக் கேட்கிறோம். தன் மக்களின் விடுதலைக்காக அரசரிடம் முறையிடச் செல்லுமுன் விண்ணக அரசரிடம் இறைவேண்டல் செய்கிறார் அரசி. ஆக, அவர் அல்லர், மாறாக, கடவுளே மக்களுக்கு விடுதலை தருகிறார். தன்னோடு உடன் வருமாறு கடவுளை அழைக்கிறார் எஸ்தர். குழந்தைக்குரிய மனப்பாங்குடன் தட்டுகிறார், கதவுகள் அவருக்குத் திறக்கப்படுகின்றன. 

இவ்விரு வாசகங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எவை? (அ) சார்புநிலை – கடவுள்மேலும் ஒருவர் மற்றவர்மேலும் கொண்டிருத்தல் நலம். (ஆ) இணைவுநிலை – நாம் இங்கே இருப்பது ஒருவர் மற்றவருடன் போட்டி போட அல்ல, மாறாக, ஒருவர் மற்றவரை நிரப்பிக்கொள்ள. மற்றும் (இ) கூட்டுறவு – கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் - வெற்றியைத் தருகிறதே அன்றி, கோபமும் கூச்சலும் வெற்றி தருவதில்லை.


No comments:

Post a Comment