Monday, March 13, 2023

நீதியும் இரக்கமும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 14 மார்ச் 2023

தவக்காலம் 3ஆம் வாரம்

தானியேல் 3:25,34-43. மத்தேயு 18:21-35.

நீதியும் இரக்கமும்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கமும் இறுதியும் அறிவுரைப் பகுதிகளாக அமைகின்றன. வாசகத்தின் தொடக்கத்தில் 'எழுபது முறை ஏழு' மன்னிக்குமாறு பேதுருவுக்கு அறிவுரை வழங்குகிறார் இயேசு. வாசகத்தின் இறுதியில் அனைவரும் ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டும் என இயேசு அழைப்பு விடுக்கிறார். இவ்விரு அறிவுரைப் பகுதிகளுக்கும் இடையே விண்ணரசு பற்றிய உவமை ஒன்று உள்ளது.

அரசர் ஒருவர் தன் பணியாளர் ஒருவரின் பெரிய கடனை மன்னிப்பதும், அந்தப் பணியாளர் தன் சக பணியாளரின் சிறிய கடனை மன்னிக்க மறுப்பதும்தான் உவமையின் உட்கூறு. அரசன் எவ்வளவு பெரிய கடனையும் மன்னிக்கலாம். ஏனெனில், பணம் அவருடையது அல்ல. அவர் சம்பாதித்ததும் அல்ல. பணியாளனுக்கு சிறிய கடனும் பெரிய சுமை. ஏனெனில், பணம் அவனுடையது. இன்னொரு பக்கம், முதல் முறை மன்னித்த அரசன் இரண்டாம் முறை பணியாளனை ஏன் மன்னிக்கவில்லை? மன்னிப்பு என்பது நிபந்தனைக்கு உட்பட்டதா? அல்லது சகப் பணியாளரின் கடனை அரசன் இவனுக்குத் திரும்பக் கொடுத்திருக்கலாமே? இக்கேள்விகள் நமக்கு நெருடலாக இருக்கின்றன.

விண்ணரசைப் பற்றி இந்த உவமை சொல்வது என்ன? விண்ணரசில் உறுப்பினராக மாறுபவரின் மேன்மையான பண்பு மன்னிப்பு. மன்னிக்கும்போது நாம் முழுவதுமாக நம்மையே கொடுக்கிறோம். நீதியிலிருந்து இரக்கம் நோக்கி நம்மை நகர்த்துகிறது மன்னிப்பு. மன்னிப்பு மற்றவர்கள்முன் நம் வலிமையை இழக்கச் செய்தாலும், இறுதியில் நம்மை வலிமை உள்ளவர் ஆக்குகிறது. மன்னிப்பு நம் உள் மனக் கட்டின்மைக்கு வழிவகுக்கிறது.

முதல் வாசகத்தில், அசரியாவின் இறைவேண்டலை வாசிக்கிறோம். இறைவேண்டலின் சாரம் இதுதான்: ஆண்டவராகிய கடவுள் மக்களை நீதியின்படி தண்டிக்காமல், இரக்கம் காட்டி மன்னிக்கிறார்.

இரு வாசகங்களையும் இணைத்துப் பார்ப்போம்:

நீதி கணக்குப் பார்க்கிறது. இரக்கம் கைகளைத் திறந்து கொடுக்கிறது.

நீதி தன்னைத் தானே பார்க்கிறது. இரக்கம் மற்றவர்களைப் பார்க்கிறது.

நீதி உணர்வு மூளையிலிருந்து பிறக்கிறது. இரக்கமோ இதயத்தில் ஊற்றெடுக்கிறது.


No comments:

Post a Comment