Friday, March 10, 2023

நாம் அவனைக் கொல்வோம்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 10 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

தொடக்கநூல் 37. மத் 21:33-43,45-46.

நாம் அவனைக் கொல்வோம்!

மனிதர்கள் தங்கள் முழு விருப்பத்தோடு, முழு அறிவோடு, எவ்விதக் குற்றவுணர்வுமின்றி தங்கள் சக மனிதர்களைக் கொன்றழிக்கும் நிகழ்வுகளை இன்றைய வாசகங்களில் காண்கிறோம்.

முதல் வாசகத்தில் யோசேப்பு கதையாடலின் முதல் பகுதியை வாசிக்கிறோம். அவரைக் கொன்றழிக்க வேண்டும் என நினைத்த அவருடைய சகோதரர்கள், அவரை விற்றுவிடுகிறார்கள். கதையின் தொடக்கத்திலேயே அவர்களுடைய பொறாமையை நாம் உணர முடிகிறது. அவர்களுடைய தந்தை யாக்கோபு காட்டிய பாரபட்சம் பொறாமை உணர்வைத் தூண்டி எழுப்புகிறது. யோசேப்பு பகிர்ந்துகொண்ட கனவுகளும் அவர்களுடைய கோபத்தை அதிகமாக்குகின்றன. இந்த நிகழ்வின் இறுதியில் கடவுளின் கரமே அனைத்தையும் செய்துவருகிறது என்பதைப் பார்க்கும்போது, யோசேப்பு விற்கப்படுவதற்கு அவருடைய சகோதரர்கள் மட்டுமல்லாமல், யாக்கோபும் கடவுளும்கூட காரணமாகிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில் கொடிய குத்தகைக்காரர் உவமையை வாசிக்கிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நிலக்கிழார்மேல் கோபம் கொள்கிறார்கள். தங்களுக்கு உரிமை இல்லாத தோட்டத்தை உரிமையாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். தோட்டத்திற்கான வாரிசைக் கொன்றழித்தால் தோட்டம் தங்களுடையதாகும் என எண்ணுகிறார்கள். இந்த உவமையைக் கேட்ட பரிசேயர்கள், அந்த உவமை தங்களை நோக்கிச் சொல்லப்பட்டதாக உணர்ந்து வெளியே சென்ற இயேசுவைக் கொன்றழிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

முதல் வாசகத்தில் சகோதரர்கள் சகிப்புத்தன்மை இழக்கக் காரணம் அவர்களுடைய பொறாமை மற்றும் கோபம். இரண்டாம் வாசகத்தில் குத்தகைக்காரர்கள் சகிப்புத்தன்மை இழக்கக் காரணம் அவர்களுடைய பேராசை மற்றும் தன்னலம். இவ்விரு நிகழ்வுகளிலும் நீதி மீறப்படுகிறது, மனித உயிர் அழிக்கப்படுகிறது, வலுவற்ற நபர் வெற்றிகொள்ளப்படுகிறார்.

கிறிஸ்தியல் பார்வையில் வாசிக்கும்போது, முதல் வாசக யோசேப்பும், இரண்டாம் வாசக மகனும் இயேசுவை நமக்கு அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால், இயேசுவின் துன்பம் கடவுளால் விரும்பட்டது என்றும், அவர் நம் பாவங்களுக்காக இறந்தார் என்றும் நாம் கற்பிக்கும் இறையியல் இத்தகைய வாசிப்புக்கு இடறலாக இருக்கிறது.

சாதாரண மனித நிலையில் இவ்விரு வாசகங்களையும் வாசிக்கும்போது, நிகழ்வுகளில் மேலோங்கி நிற்கும் வன்மம் அல்லது வன்முறை நமக்குப் புலப்படுகிறது. சிக்மன்ட் ப்ராய்ட் என்னும் உளவியல் அறிஞர், பாலுணர்வும் வன்முறை உணர்வும் மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் என வரையறுக்கிறார். மற்றவர்களின் துன்பம் கண்டு வருந்தும் நம் உள்ளமே மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்கவும் செய்கிறது. நம் கண்டுகொள்ளாத்தன்மையும் சகிப்புத்தன்மை இழப்பும் வன்முறையின் குட்டிக் குழந்தைகள். வன்முறை நம்மை நாமே அழிக்கிறது. தன் வாலையே தின்று தன்னையே அழித்துக்கொள்ளும் பாம்பு போல வன்முறை கொள்ளும் நாமும் நம்மையே அழித்துக்கொள்கிறோம். 

வன்முறை நம் பார்வையைச் சுருக்குகிறது. தாங்கள் விற்ற யோசேப்பிடமே தாங்கள் திரும்பச் செல்ல வேண்டும் என்பதை அறியவில்லை சகோதரர்கள். மகனைக் கொன்றழித்தாலும் நிலாக்கிழாராகிய தந்தைத் தங்களைப் பழிதீர்ப்பார் என அறியவில்லை குத்தகைதாரர்கள்.

இன்று நாம் மேற்கொள்ளும் தவமும் இறைவேண்டலும் நம் வன்முறை உணர்வைக் கட்டுக்குள் கொண்டுவருவதாக!


No comments:

Post a Comment