Thursday, April 6, 2017

கற்களை எறிய

'அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்' (காண். யோவான் 10:31-42)

'கற்களை எறிதல்' - இது மனித இனம் கண்டுபிடித்த பழங்கால தண்டனை முறை.

'கற்களை எறிந்து கொல்வதும்,' 'கற்களை எறிந்து கொன்றதும்' விவிலியத்தில் மட்டுமல்ல, பண்டைக்கால கிரேக்க, எகிப்திய நூல்களிலும் காணக்கிடக்கின்றன. 'தங்கத்தைக் கொண்டு எறிவதும்,' 'இரும்பைக் கொண்டு எறிவதும்' நாம் கேள்விப்படவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் அவை கிடைத்தற்கரிய உலோகங்கள்.

கற்களைக் கொண்டு எறிதல் மனித வன்மத்தின், வன்முறையின் வெளிப்பாடு.

'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்'

'கனிந்திருக்கும் மரத்தில்தான் கல்லெறி விழும்'

'கல்லெறி தூரம் சென்று பார்த்தேன்'

'கண்ணாடி மாளிகைக்குள் இருப்பவர் கல் எறியக்கூடாது'

என கல்லெறிதலை வைத்து நாம் சொலவடைகளும், பழமொழிகளும் வைத்திருக்கிறோம்.

சின்ன வயதில் நான் பார்த்து, நான் கல் எறிந்தது தெருநாய்களைத்தான்.

1. கல்லால் எறிவது என்பது அடிப்படையில் நம் கையை நீட்டுவது. அதாவது, கல் மனித கையின் நீட்சியாக இருக்கிறது. தூரத்தில் இருக்கின்ற பழத்தை நோக்கி கல் எறியும்போது நான் என் கையை அப்படியே ப்ளுடூத் முறையில் நீட்டுகிறேன். அவ்வளவுதான்.

2. கல்லால் எறிய இலக்கு தேவையில்லை. குருட்டுமருட்டாய் எறிந்தால் ஏதோ ஒரு இடத்தில் படும். மேலும், கற்கள் நிறைய கிடைப்பதால் அவைகள் வீணாகிவிடும் என்ற கவலையும் நமக்கு இல்லை.

3. கல்லால் எறியும்போது நாம் நம் முகம் மறைத்துக்கொள்கிறோம். பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழா நடக்கும்போது மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள்ளேயே சின்ன சின்ன கற்களை தூக்கி எறிந்து விளையாடுவர். கல்லின் அளவு சிறியதாக இருப்பதாலும், கூட்டமாக இருப்பதாலும் கற்களை எறிபவர் தன் முகத்தை எளிதில் மறைத்துக்கொள்ள முடிகிறது.

4. கல்லால் எறிதலில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. வெறிநாய் ஒன்று தெருவில் வருகிறது. அதை விரட்ட வேண்டும். அருகில் சென்று குச்சியை வைத்து மிரட்டினால் அது நம்மேல் பாய்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. 'கூழும் குடிக்க வேண்டும், மீசையிலும் ஒட்டக்கூடாது' என்ற அடிப்படையில் நாம் அந்த நாயை நோக்கி கல்லை எறிகிறோம். நாயும் ஓடிவிடுகிறது. நாமும் தப்பித்துக்கொள்கிறோம்.

5. கல்லால் எறிவதற்கு பெரிய வீரம் தேவையில்லை. கல் மிகச் சிறியது. அதை நாம் நம் உள்ளங்கைக்குள் அடக்கி மறைத்துக்கொள்ளலாம். அதை எளிதாக கையாளலாம். அது நம்மைக் காயப்படுத்துவதில்லை. நாம் யார்மேல் எறிகிறோமோ அவரைத்தான் காயப்படுத்துகிறது. மேலும், எறிபவரின் ஆற்றல், எறிபவருக்கும் எறியப்படுபவருக்கும் இடையே உள்ள தூரம், எறிவதன் வேகம் என அனைத்தையும் பொருத்து, எறிகின்ற கல் மற்றவரின்மேல் தாக்கத்தை உண்டாக்குகிறது.

6. கல்லால் எறியும்போது நாம் மற்றவரின் வட்டத்திற்குள் வன்மையாக, அனுமதியின்றி நுழைகிறோம்.

நிற்க.

கல் எறிதல் ஆராய்ச்சி போதும் என நினைக்கிறேன்.

மேற்காணும் எல்லா காரணிகளும் இயேசுவின் மேல் கல் எறிய யூதர்கள் தயாரானபோது இருந்தது.

தங்கள் கண்களில் விழுந்து தூசியாக, தங்கள் தெருவில் திரியும் வேண்டாத ஒன்றாக இயேசுவைப் பார்த்தார்கள். இயேசுவை நெருங்கவும் அச்சம். அவரை அப்படியே விட்டு வைக்கவும் அச்சம்.

விளைவு, கைகளில் கல்கள்.

இன்று நாம் மற்றவர்மேல் கற்களை எறியாத அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். ஆனால், நம் சொற்களும், பார்வையும், கண்டுகொள்ளாத்தன்மையும்கூட கற்களாக மாற வாய்ப்பிருக்கிறது.

கைகளில் இருக்கும் கற்கள் நம் கைகளையும் அழுக்காக்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக,

கற்கள் தவிர்க்க!


1 comment:

  1. கற்களை எறிவதற்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என நினைப்பதற்குள் தந்தைக்கே புரிந்து விட்டது அது போதுமென்று." தங்கள் கண்களில் விழுந்த தூசியாக,தங்கள் தெருக்களில் திரியும் வேண்டாத ஒன்றாக இயேசுவைப் பார்த்தார்கள்". என்னே ஒரு உண்மையும்,முதிர்ச்சியும் நிறைந்த வார்த்தைகள்! நாம் நம் சொற்கள் மூலம்,செயல்கள் மூலம்,புறக்கணித்தல் மூலம் மற்றவர்மேல் கற்களை எறிகையில் கறைபடுவது அவர்கள் மேனிமட்டுமல்ல....நம் கரங்களும் தான்! மறுக்க முடியாத உண்மை.அதிலும் அந்த இறுதி வரி..."கற்களைத் தவிர்க்க!"... ஒரு கவிதை எனில் மிகையில்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete