Tuesday, April 4, 2017

அடிமை - மகன்

'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை.
அடிமைக்கு நிலையான இடம் இல்லை.
மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.'

(யோவான் 8:31-42)

ஜென் புத்தமதத்தில் கதை ஒன்று உண்டு.

காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் சீடன் ஒருவனைக் குரங்கு ஒன்று பற்றிக்கொள்ளும்.

'குரங்கு என்னை பற்றிக்கொண்டது. என்னை விட மறுக்கிறது' என தன் குருவைப் பார்த்து கத்தினான் சீடன்.

'நன்றாகப் பார். குரங்கு உன் கையை விட்டு நிறைய நேரம் ஆகிவிட்டது. நீதான் அதன் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்' என்றார் குரு.

ஞானம் பெற்றான் சீடன்.

பாவத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவிற்கு வருவது மேற்காணும் இயேசுவின் வார்த்தைகள்தாம்.

இந்த வார்த்தைகளில் அடங்கியுள்ள இறையியல் பெரிது.

அ. நான் எதை என் பழக்கமாக கொண்டிருக்கின்றேனோ, அது கொஞ்ச நாளில் என்னை பழக்கிவிடுகிறது.

'அடிமை' என்றால் என்ன பொருள்.

'அடிமை' தலைவருக்கு முற்றிலும் கீழ்ப்படிவார். அதுபோலவே, பாவம் செய்பவரும் தான் செய்யும் பாவத்திற்கு தன்னையே சரணாகதி ஆக்குவார்.

'அடிமைக்கு' சம்பளம் உண்டு. நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் சிறு சிறு சம்பளம் இருக்கிறது.

'அடிமை' தானாக எதையும் செய்ய முடியாது. பாவமும் ஒருவரை அப்படி மாற்றிவிடும் ஆற்றல் கொண்டிருக்கிறது. ஆகையால்தான், குடிப்பழக்கம் கொண்டிருக்கும் ஒருவர் தான் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை குடிப்பதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஆ. பாவம் என்னிடம் அடிமை போல இருக்கிறதா? அல்லது மகன் போல இருக்கிறதா?

அடிமை போல இருந்தால் நான் அதை வெளியே விரட்டிவிடலாம். மகன் போல தங்கிவிட்டால் அது இன்னும் அதிக குட்டி குட்டி பாவங்களைப் பெற்றெடுக்கும்.


3 comments:

  1. பாவத்தையும் அடிமையையும் ஒப்பிட்டு கூறிய கருத்துக்கள் மிகவும் பாராட்டுதற்குரியது.

    ReplyDelete
  2. பாவத்தையும் அடிமையையும் ஒப்பிட்டு கூறிய கருத்துக்கள் மிகவும் பாராட்டுதற்குரியது.

    ReplyDelete
  3. காலத்திற்கு ஏற்ற அழகான பதிவு.ஒரு எளிமையான ஜென் கதையின் மூலம் பாவத்தின் தன்மை பற்றி விளக்குகிறார் தந்தை." நான் எதை என் பழக்கமாக்க் கொண்டிருக்கிறேனோ,அது கொஞ்ச நாளில் என்னைப் பழக்கி விடுகிறது"... யோசிக்கையில் இதிலுள்ள அபாயம் நன்றாகவே புரிகிறது." பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை.;அடிமைக்கு நிலையான இடமில்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடமுண்டு"..... இவ்வரிகளில் உள்ள இறையியல் பெரிது என்கிறார் தந்தை.அதனால் தானோ என்னவோ அந்த 'மகனை'க் குறித்த விளக்கம் எனக்கு சரியாகப்புரிபடவில்லை. எனினும் காலத்தின் தேவையறிந்து கொடுத்த பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete