Saturday, November 28, 2020

நீரே எங்கள் தந்தை!

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

I. எசாயா 63:16-17, 64:1, 3-8 II. 1 கொரிந்தியர் 1:3-9 III. மாற்கு 13:33-37

நீரே எங்கள் தந்தை!

'மேகங்கள் நடுவே வானவில் பார்க்கும்போது
என் இதயம் துள்ளிக் குதிக்கிறது
என் வாழ்க்கை தொடங்கியபோது அப்படித்தான் இருந்தது.
இப்போது நான் வளர்ச்சி பெற்ற மனிதனாக நிற்கிறேன்
எனக்கு வயது முதிர்ந்தாலும்
நான் இறந்து போனாலும்
எனக்கு அப்படித்தான் இருக்கும்.
குழந்தையே மனிதனின் தந்தை.
இயற்கையான பற்றுடன் என் நாள்கள்
ஒன்றோடொன்று இணைக்கப்படுவனவாக!'

(வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், 1802)

'குழந்தையே மனிதனின் தந்தை' ('The child is the father of the man') என்ற வேர்ட்ஸ்வொர்த்தின் சொல்லாடல் இன்று வரை பலருக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், 'நான் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே வளர்ந்தபின்னும் இருப்பேன். நான் குழந்தைப் பருவத்தில் எப்படி வானவில்லை இரசித்தேனோ அப்படியே இறுதி வரை இரசிப்பேன்' என்ற மிக எளிமையான பொருளில்தான் வேர்ட்ஸ்வோர்த் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்.

மனுக்குலத்தின் தந்தையாக வந்த குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட நாம் இன்றுமுதல் நம்மையே தயாரிக்கிறோம். ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியுமே அச்சம் கொண்டிருக்கும் நாம், அவரின் முதல் வருகையை, அந்த வருகை கொண்டுவந்த மகிழ்ச்சியை மறந்துவிடுகிறோம்.

விழித்திருத்தல், பரபரப்பு, எதிர்பாராத அவருடைய வருகை, தயார்நிலை, தயார்நிலையில் இல்லையென்றால் தண்டனை என எந்நேரமும் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பதை விடுத்து, கொஞ்சம் சாய்ந்தே அமர்ந்துகொள்வோம். பரபரப்பில் அல்ல. மாறாக, அமைதியான, ஒய்யாரமான, ஓய்வில்தான் அவருடைய வருகை இருக்கிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 63) அழகான இரண்டு சொல்லாடல்கள் உள்ளன: (அ) 'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை', மற்றும் (ஆ) 'நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்'.

எசாயா இறைவாக்கினர் நூலின் 63ஆம் அதிகாரம், 'குழுமப் புலம்பல்' என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இஸ்ரயேலின் சார்பாகக் கடவுளிடம் பேசும் இறைவாக்கினர், கடவுளை, 'தந்தை' என அழைக்கிறார். 'தந்தை' என்ற சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் பரவலாகப் பயன்பட்டாலும், பழைய ஏற்பாட்டில், பெரும்பாலும் குலமுதுவர்களை (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகப் பகுதியில், 'ஆண்டவரே தந்தை' என அழைக்கிறார் எசாயா. மேலும், 'ஆபிரகாம் எங்களை அறியார். இஸ்ரயேல் (யாக்கோபு) எங்களை ஏற்றுக்கொள்ளார்' என்று தங்களுடைய மூதாதையரின் தந்தையர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார். 

'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்காக ஏங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. கடவுளோடு உறவு நெருக்கத்தில் இருக்கின்ற அவர்கள் தங்களது கடினமான வாழ்க்கைச் சூழலில், தங்கள் கையறுநிலையில் தங்கள் கடவுளிடம், குழந்தைகள் போலச் சரணாகதி அடைகின்றனர். மேலும், தங்களது பிறழ்வுபட்ட வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கின்றனர்: 'நாங்கள் பாவம் செய்தோம் ... நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப் போல உள்ளோம் ... எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள் போலாயின. நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல எங்களை அடித்துச் சென்றன.' தீட்டு, அழுக்கான ஆடைகள், கருகிய இலைகள், காற்றில் அடித்துச் செல்லப்படும் இலைகள் போன்ற உருவகங்கள் (வார்த்தைப் படங்கள்) இஸ்ரயேலின் பரிதாபமான நிலையைக் காட்டுவதுடன், இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒரு தந்தை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. தங்களுடைய மண்ணகத் தந்தையர்களான அரசர்களும், இறைவாக்கினர்களும், குருக்களும் தங்களைக் கைவிட, விண்ணகத்தில் வாழும் என்றுமுள தந்தையை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

'களிமண் - குயவன்' உருவகம் இறைவாக்கினர் இலக்கியங்களில் நிறைய முறை பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுளே தன்னைக் குயவன் என்று முன்வைக்கின்றார். குயவன் கையில் உள்ள களிமண் போல இஸ்ரயேல் தன்னையே கடவுளிடம் கையளிக்கக் கூடாதா? என்று கடவுளும் ஏங்கியுள்ளார். அந்த ஏக்கத்தை இஸ்ரயேல் இங்கு நிறைவு செய்கிறது. 'நாங்கள் களிமண் - நீர் எங்கள் குயவன்' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களின் சரணாகதியைக் காட்டுவதோடு, 'இதோ நாங்கள் உம் கைகளில்! உம் விருப்பம் போல எங்களை வளைத்துக் கொள்ளும்!' என்று இறைவேண்டல் செய்வது போல உள்ளன.

மேலும், 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரோ?' என்ற இறைவாக்கினரின் வார்த்தைகள், கடவுளின் அவசரம் மற்றும் அவசியத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 'வானங்களைப் பிளந்து கடவுள் இறங்கி வந்த நிகழ்வு' ஏற்கெனவே சீனாய் மலையில் நடந்தேறியது. அங்கேதான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், 'நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்' என்று சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தங்களுடைய சிலைவழிபாட்டால் தாங்கள் இழந்த அதே உணர்வை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கமும் அழுகையும் எசாயாவின் வார்த்தைகளில் இருப்பதை நாம் அறிய முடிகிறது. இழந்து போன உறவுகளை அல்லது முறிந்து போன உறவுகளை எண்ணிப் பார்த்து, 'மீண்டும் நாம் சேர மாட்டோமா?' என்று கேள்வி எழுப்புவது நம் வாழ்வியல் அனுபவமும்கூட. 

ஆக, தந்தையை விட்டுத் தூரம் போன மகன், தன் தந்தைக்காக ஏங்குவதோடு, தன் தந்தையின் கையில் தன்னையே சரணாகதியாக்குவதோடு, தன் தந்தை உடனடியாக வந்து தன்னை அள்ளிக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதாக அமைகின்றது இன்றைய முதல் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:3-9), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிரிவினை, பரத்தைமை, சிலைவழிபாடு போன்ற பிரச்சினைகள் பவுலின் கண்களில் விழுந்த தூசி போல அவருக்குக் கலக்கம் தந்தாலும், 'நீங்கள் எல்லா வகையிலும் செல்வரானீர்கள்!' 'உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை!' என்று வாயார வாழ்த்துகிறார். ஏனெனில், பவுலைப் பொருத்துவரையில் இறையருள் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படையானது. கொரிந்து திருஅவையில் பிரிவுகளுக்கும் சண்டை சச்சரவுகளும் இருந்தாலும், இறையருள் அங்கே ஒருபோதும் குறைவுபடுவதில்லை. 

இறையருள் குழுமத்தை இரண்டு நிலைகளில் உறுதிப்படுத்துகிறது: (அ) குழுமம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறது, (ஆ) எந்தவித குறைச்சொல்லுக்கும் குழுமம் ஆளாகாதவாறு கடவுள் இறுதி வரை அதை உறுதிப்படுத்துகின்றார். 

ஆக, குழுமம் என்ற குழந்தையை நிறைவு செய்து இறுதி வரை உறுதிப்படுத்துவது தந்தையாகிய கடவுளின் இறையருளே. 

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (காண். மாற் 13:33-37) இயேசுவின் பாடுகள், மற்றும் இறப்புக்கு முன் வழங்கப்பட்ட சான்று வாக்கியம் போல அமைந்துள்ளது. 'கவனமாயிருங்கள், விழிப்பாய் இருங்கள், விழித்திருங்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயார்நிலையை இது வலியுறுத்துவதாக அமைகிறது. இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது நற்செய்தியாளரின் புரிதலாக இருந்தது. 

தயார்நிலையை ஓர் உருவகம் வழியாக எடுத்துரைக்கிறார்: நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர். அவர் தன்னுடைய வேலைக்காரர்களைப் பொறுப்பாளகளாக்கி, அவர்களை காவல்காக்கச் செய்கின்றார். நெடும் பயணம் என்பது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் அல்லது அவருடைய மறைந்த நிலையைக் குறிக்கிறது. தான் தன் சீடர்குழுவை விட்டுச் சென்றவுடன், அது தூங்கிப் போகலாம், அல்லது மந்த நிலையை அடையலாம் என்ற அச்சம் இயேசுவுக்கு இருந்ததால், 'விழிப்பாய் இருங்கள்' என அவர்களை எச்சரிக்கின்றார். ஏனெனில், சீடர்களின் பொறுப்புணர்வு பெரிது.

ஆக, வேலைக்காரர் அல்லது பணியாளர் என்ற நிலையில் இருந்த சீடர்கள், வீட்டின் பொறுப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதுடன், வீடு முழுவதையும் கவனித்துக்கொள்ளும் கடமையையும் பெறுகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், தங்கள் ஆண்டவரே தங்களுடைய தந்தையாக இருந்து தங்களை நிறைவுசெய்ய முடியும் என எசாயா ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைகின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுள் தந்த இறையருள் அனைத்தையும் அனைவரையும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், பிள்ளைக்குரிய வாஞ்சையுடனும் உரிமையுடனும் சீடர்கள் தங்கள் தந்தையாகிய தலைவருக்காகக் காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக,

'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என அழைத்து, 'உம் கைகளில் களிமண் நாங்கள்' என்று சரணாகதி அடைவதே இந்த ஞாயிற்றின் செய்தியாக இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் சந்திக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் - மரியா, யோசேப்பு, இடையர்கள், ஞானியர், எலிசபெத்து, செக்கரியா, சிமியோன், அன்னா - தங்களையே இறைவனின் கைகளில் சரணாகதி ஆக்கினர்.

ஏனெனில், வரவிருக்கும் குழந்தையே தங்கள் அனைவரின் தந்தை என அவர்கள் அறிந்திருந்தனர்.

இன்றைய வழிபாட்டின் வாழ்வியல் சவால் என்ன?

'நீரே என் தந்தை' என்று பெத்லகேம் குழந்தையிடம் சரணாகதி அடைவது.

இதற்குத் தடையாக இருப்பவை எவை?

நம் தீட்டுகள், பாவங்கள், இலைகள் போலக் கருகிய நம் வாழ்க்கை, காற்றில் அடித்துச் செல்லப்படும் நம் நிலைப்பாடு போன்றவை. இவற்றை நாம் ஏற்றுக்கொண்டாலே போதும் அவர் வானத்தைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வருவார். வருபவர் நம்மை அள்ளி எடுத்து, தான் விரும்பியதுபோலச் செய்துகொள்வார். நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். பணியாளர்களாகிய நம்மைப் பொறுப்பாளர்கள் ஆக்குவார்.

பெத்லகேம் குழந்தையை நாம் கொண்டாடுவதற்கு முன், அந்தக் குழந்தையே நம் தந்தை என அறிதல் நலம்.

'உமது வலக்கை நட்டு வைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!' (காண். திபா 80) என்பது நம் இறைவேண்டலாகட்டும்.

திருவருகைக்கால செபங்களும் வாழ்த்துகளும்!

3 comments:

  1. இதோ நாங்கள் உம் கைகளில்! உம் விருப்பம் போல எங்களை வனைந்துக் கொள்ளும்!'

    இறையருள் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படையானது.

    அவர் வானத்தைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வருவார். வருபவர் நம்மை அள்ளி எடுத்து, தான் விரும்பியதுபோலச் செய்துகொள்வார். நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். பணியாளர்களாகிய நம்மைப் பொறுப்பாளர்கள் ஆக்குவார்.

    நன்றி🙏

    ReplyDelete
  2. பலவிதமான எதிர்மறை உணர்வுகளால்...அச்சங்களால் ஏற்பட்ட பரபரப்பினால் நாற்காலியின் விளிம்பில் இருக்கும் நம்மை ஒய்யாரமாக...ஓய்வாக அமர்ந்து கொள்ள அழைக்கிறார் தந்தை. ஏனெனில் அந்த மனநிலையில் மட்டுமே நாம் ஒரு குழந்தையாகவும்,ஒரு களிமண் உருண்டையாகவும் அவர் கைகளில் தவழமுடியுமாம். ஏகப்பட்ட விஷயங்கள்.....ஒன்றை உள்வாங்குவதற்குள் இன்னொன்று.தந்தையின் அன்பிற்காக ஏங்கும் மகனையும், நம்மை உறுதிபடுத்தும் கிறிஸ்துவின் தந்தை தந்த இறையருள் பற்றியும், தந்தைக்காக வாஞ்சையுடன் காத்திருக்கும் பிள்ளைகள் பற்றியும் எடுத்தியம்புகின்றன இன்றைய வாசகங்கள்.
    தங்களையே இறைவனின் கைகளில் சரணாகதியாக்கிய மரியா,யோசேப்பு,இடையர்கள்,ஞானியர் போன்றவர்களின் வழியில் “ நீரே என் தந்தை” என்று நாமும் பெத்லகேம் குழந்தையிடம் நம்மை சரணாகதியாக்குவோம். ஏனெனில் அக்குழந்தையே நம் தந்தை!
    என் மனம் கொள்ள முடியாத அளவுக்குத் தந்தை செய்திகளை அள்ளித் தந்திருப்பினும் என்றும்போல் என்னைக்கவர்ந்த அந்த இறுதி வரிகள்......
    “ உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!”...அருமை! ஏனெனில் அந்தக்கிளையும், மகவும் நானே என்பதால்!
    பிறந்திருக்கும் ‘ திருவருகைக்காலம்’ தரும் அனைத்து அச்சங்களையும்,கலக்கங்களையும் மறந்து பிறக்கவிருக்கும் நம் தந்தையாகிய பாலகன் தவழ நம் கரங்களை நீட்டிக்கொடுப்போம்.
    தந்தைக்கு திருவருகைத்திருவிழா வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete