இன்றைய (2 நவம்பர் 2020) திருநாள்
இறந்தோர் நினைவு
இன்று இருப்போர் நேற்று இருந்தோரை நினைவுகூறும் நாள் இந்நாள்.
அவர்கள் நேற்று நம்மோடு, நமக்காக இருந்ததால், இன்றும் என்றும் அவர்கள் என்றும் நம்மோடும் நமக்காகவும் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று நிலைகளில் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர்கள் ஆகிறார்கள்:
(அ) வழி விட்டவர்கள்
வந்தவர்கள் எல்லாம் இங்கே தங்கிவிட்டால் வருபவர்களுக்கு இடம் இராது. நாம் இந்த உலகத்திற்கு வருவதற்கு இவர்கள் நமக்காக வழி விட்டவர்கள்.
(ஆ) வழி காட்டியவர்கள்
தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், நண்பர், உறவினர், நலவிரும்பி, ஆன்மீக வழிகாட்டி எனப் பல நிலைகளில், பல விழுமியங்களை வாழ்ந்து நமக்கு வழிகாட்டியவர்கள் இவர்கள்.
(இ) வழி வருபவர்கள்
நம் வழித்துணையாகவும் இவர்கள் நம்மோடு வருகிறார்கள். நம்மைக் கண்காணிக்கிறார்கள், பாதுகாக்கிறார்கள். நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள்.
நீத்தார் நினைவு கொண்டாடப்படும் இந்நாளில், 'வாழ்வு - இறப்பு' பற்றிய ஆறு விவிலிய உருவகங்களை நாம் புரிந்துகொள்வோம் (இச்சிந்தனை இம்மாதம் 'கத்தோலிக்கு சேவை' எனது படைப்பாக வெளிவருகிறது). இவ்வுருவகங்கள் 'இறப்பு' என்பதை, எப்படி விவிலியக் கதைமாந்தர்களும், அவர்களின் காலச் சூழல் மனிதர்களும் புரிந்துகொண்டார்கள் என்பதைக் காட்டுவதோடு, வாழ்வை நாம் எப்படி அணுக வேண்டும் என்றும் கற்பிக்கின்றன.
1. 'சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கு' (திபா 23:4)
தன் ஆண்டவரை, 'ஆயர்' என அழைக்கின்ற தாவீது அல்லது திருப்பாடல் ஆசிரியர், தன் ஆண்டவரின் பண்புகளை வரையறுத்தபின், முதன்முதலாக, இங்கே, 'நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (திபா 23:4) என்று ஆண்டவரின் உடனிருப்பை அறிக்கையிடுவதோடு, அவரைத் தான் வாழ்க்கைப் பயணத்தின் துணையாகவும் அழைக்கிறார். தாவீது, இங்கே, தன் வாழ்வில் சந்தித்த அனைத்துத் துன்பங்களையும் - நோய், முதுமை, போர் பற்றிய பயம், குற்றவுணர்வு, வன்மம் - 'சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கு' என உருவகமாக அழைத்து, தன் வாழ்விலும், இறப்பிலும் இறைவனின் துணை தன்னோடு இருப்பதால் தான் அச்சம் கொள்வதில்லை என்று துள்ளுகின்றார்.
2. 'மேய்ப்பனின் கூடாரமும் நெசவாளனின் பாவும்' (எசா 38:12)
எசேக்கியா அரசர் நோயுற்றுக் கிடந்தபோது, எசாயா இறைவாக்கினர் வழியாக, ஆண்டவர், 'உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்!' (காண். 2 அர 20:1) – அதாவது, 'இறக்கத் தயாராக இரு!' என்ற செய்தியை அனுப்புகின்றார். ஆண்டவர் எசேக்கியாவின் செபத்தைக் கேட்டு அவரின் வாழ்நாள்களைக் கூட்டுகின்றார். அப்போது நன்றிப்பாடல் பாடுகின்ற அரசர், 'என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன்' (எசா 38:12) என்கிறார். மேய்ச்சல் நிலங்களில் கூடாரம் அமைக்கின்ற மேய்ப்பர்கள் தங்கள் பணி முடிந்ததும், அக்கூடாரத்தைப் பெயர்த்து எடுத்துச் செல்வர். நெசவு நெய்பவர்கள் பாவில் உள்ள ஒரு நூல்சுற்று முடிந்ததும் பாவை அகற்றுவர். ஆக, பணி முடிந்தவுடன் பயணம் உறுதி.
3. 'தறி' (காண். எசா 38:13, யோபு 7:6)
'நெசவாளனின் பாவு' என்ற உருவகத்தைத் தொடர்ந்து, எசேக்கியா, 'தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்' (காண். எசா 38:13) என்கிறார். மேலும் யோபு, 'என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன' (காண். யோபு 7:6) எனப் புலம்புகிறார். முதலில், மனித வாழ்க்கை 'தறியிலிருந்து' அறுத்தெறியப்படுகிறது. இரண்டு, 'தறியின் ஓடுகட்டை போல' அது விரைந்தோடி முடிகிறது. நூல் முடிந்தவுடன் ஓடுகட்டையும் அகற்றப்படும். ஒரே உருவகம் இரு பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டாலும், மனித வாழ்க்கையின் வேகத்தையும், வாழ்க்கைப் பயணம் முடிவுபெறக் கூடியது என்பதையும் இது உணர்த்துகின்றது.
4. 'போர்' (காண். சஉ 8:8)
'தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனால் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது' (காண். சஉ 8:8) என்கின்ற சபை உரையாளர், 'சாவை' 'போருடன்' ஒப்பிடுகின்றார். போர் செய்யும் இரு அரசர்களில் ஒருவர் விலகினால், அல்லது ஒருவர் மற்றவருக்கு நிறைய பொன் அல்லது நிலம் கொடுத்தால் போர் நின்றுவிடும். ஆனால், சாவுப் போர் அப்படிப்பட்டது அல்ல. நாம் அதிலிருந்து விலகவோ, இலஞ்சம் கொடுத்து தப்பிக்கவோ முடியாது. 'போர்' என்ற இதே உருவகத்தை, யோபு நூலில், 'மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம்தானே?' என, 'வாழ்வின்' உருவகமாக நாம் வாசிக்கின்றோம்.
5. 'மலரும் நிழலும்' (காண். யோபு 14:2)
'உண்மையில் மானிடர் புல்லே ஆவர், புல் உலர்ந்து போகும், பூ வதங்கி விழும்' (காண். எசா 40:7-8) என்னும் இறைவாக்குப் பகுதியிலும், 'பூ' என்ற உருவகம் மனிதர்களின் நிலையாமையைக் குறிக்கிறது. யோபு நூலின் ஆசிரியர், மலரின் மலர்தல் நிலையிலிருந்து தொடங்கி அதன் உலர்ந்த நிலையையும், நிழலின் நீண்ட நிலையில் தொடங்கி அதன் குறுகிய நிலையையும் முன்மொழிவதன் வழியாக, மனிதர்களின் பிறப்பு, குறுகிய வாழ்க்கை, மற்றும் முடிவுத்தன்மையை எடுத்துரைக்கின்றார்.
6. 'தூக்கம்' (காண். யோவா 11:11-14ளூ மாற் 5:39)
'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான். நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்' (யோவா 11:11) என்று இயேசு தன் சீடர்களிடம் சொன்னபோது, அவர்கள், 'தூக்கம்' என்பதை, 'உடல் ஓய்வு' எனப் புரிந்துகொண்டு, 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்' (யோவா 11:12) என வேறு புரிதல்தளத்தில் மறுமொழி பகர்கின்றனர். தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர்பெறும் நிகழ்விலும், 'சிறுமி உறங்குகிறாள்' (மாற் 5:39) என்று இயேசு சொன்னவுடன் குழுமியிருந்தவர்கள் நகைக்கிறார்கள். தன் வல்லசெயல் மேல் நம்பிக்கை கொண்ட இயேசு, இங்கே, இறப்பையும் ஒரு தூக்கமாகவே பார்க்கிறார். தெய்வப்புலவர், 'உறங்குவது போலும் சாக்காடு' (காண். குறள் 339) என்கிறார். 'நல்ல வேலைநாளின் பலன் நல்ல தூக்கம், நல்ல வாழ்க்கையின் பலன் நல்ல நீண்ட தூக்கம்' என்பவை டா வின்சியின் வார்த்தைகள்.
மேற்காணும் ஆறு உருவகங்களும் மனித வாழ்வின் நிலையாமை, கையறுநிலை, இயலாமை, உறுதியற்ற நிலை, இழுபறி நிலை ஆகியவற்றை உணர்த்துவதோடு, நம் வாழ்வை இப்போதே நாம் கொண்டாடவும், இனிமையாக வாழவும், நம்மைப் படைத்தவர் நமக்கு வரையறுத்துள்ள நோக்கத்தை நிறைவு செய்யவும் நம்மைத் தூண்டுகின்றன. 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்' (காண். திபா 90:12) என்ற மோசேயின் இறைவேண்டலும், 'மகிழ்ந்திரு! (கடவுளை) மறவாதிரு!' (காண். சஉ 11:8 – 12:1) என்ற சபைஉரையாளரின் வாழ்வியல் நோக்குவரைவும் நம் இறைவேண்டலாகவும், நோக்குவரைவாகவும் மாறினால் எத்துணை நலம்!
நிற்க.
நித்திய இளைப்பாற்றியை இவர்களுக்கு அருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஒளி இவர்கள்மேல் ஒளிர்வதாக!
உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
“இன்று இருப்போர் நேற்று இருந்தோரை நினைவு கூறும் நாள்” இன்றையத் திருநாளை இதைவிட அழகான வார்த்தைகளால் கூற முடியாது. வழி காட்டியவர்கள், வழிவிட்டவர்கள்,வழி வருபவர்கள் என்று வரையறுக்கப்படும் இவர்கள் நம் வாழ்வையும்,இறப்பையும் எப்படி அணுகவேண்டுமென்பதையும் நமக்குச்சொல்லிச் சென்றுள்ளார்கள் என்கிறார் தந்தை. இப்பொழுது நம் கைகளில் திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை எனும் பெட்டகத்தைக் கொண்டாடத் துவங்குவோம்.இதற்கு மோசே மற்றும் சபை உரையாளர் போன்றவர்களின் வார்த்தைகள் நமக்குத்தூண்டுதலாக இருக்கட்டும்.நம்மை விட்டுப்பிரிந்த நம் இனியவர்களை மட்டுமல்ல....நினைக்கவோ,செபிக்கவோ ஆளின்றித் தவிக்கும் ஆன்மாக்களுக்காகவும் இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவதோடு அவர்களையும் நமக்கு நல்வழி காட்டத் துணைக்கழைப்போம். இறந்தோர் குறித்த பல புதிய விஷயங்களுக்காக தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteயேசு மிக அருமையான பதிவு. சிந்திப்பதற்கும்,செபிப்பதற்கும்.நன்றி.
ReplyDelete