Wednesday, November 25, 2020

தலைநிமிர்ந்து நில்லுங்கள்

இன்றைய (26 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:20-28)

தலைநிமிர்ந்து நில்லுங்கள்

இயேசுவின் நிறைவுகாலப் பொதனை தொடர்கிறது.

இறுதிக்காலத்தில் நிகழும் இரண்டு நிகழ்வுகள் பற்றி முன்மொழிகிறார் இயேசு.

ஒன்று, அரசியல் சூழலில் ஏற்படும் போர் மற்றும் குழப்பம்.

இரண்டு, வான்வெளியில் ஏற்படும் மாற்றங்கள்.

இவை இரண்டும் நிகழுமா, நிகழ்கின்றனவா? இவற்றை நேரிடைப் பொருளில் எடுக்கலாமா? இவற்றை இயேசுவே சொன்னாரா? அல்லது நற்செய்தி நூல்கள் எழுதப்படும்போது நற்செய்தியாளர்கள் தங்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளை முற்புகுத்தி எழுதினார்களா? - என்று பல கோணங்களில் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இவற்றை விடுத்து ஒன்றை மட்டும் நாம் பற்றிக்கொள்வோம்:

'நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'

இதுதான் நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலையைக் காட்டுகிறது. அதாவது, நம்மைச் சுற்றி நடப்பவை எப்படியும் இருக்கட்டும். நாம் எப்படி இருக்கிறோம்? என்பதே கேள்வி.

'தலைநிமிர்ந்து நிற்றல்' என்பது போர்க்காலத்தில் வீரர்களுக்குக் கட்டளையிடப் பயன்படும் சொல்.

இதன் பொருள், தயாராய் இருத்தல், எதிரியை எதிர்கொள்தல், போரிடத் துணிதல், புதியது ஒன்றை எதிர்நோக்குதல்.

முதல் ஏற்பாட்டு யோசேப்புடன் பொருத்தி இந்தப் பண்பைப் புரிந்துகொ
ள்வோம்.

தன் சகோதரர்கள் தனக்கு எதிராக இருந்தாலும், தன் தலைவராகிய போத்திபார் தன்னைச் சிறையில் அடைத்தாலும், தன் உடன்கைதிகள் தன்னை மறந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கின்றார். தன் ஆண்டவராகிய கடவுள் தன்னோடு உடனிருப்பதை உணர்கிறார்.

யோசேப்பை தன்னைச் சூழலின் கைதி என ஒருபோதும் கருதவே இல்லை.

நாமும் சூழல் கைதிகள் அல்ல. நம்மைச் சுற்றி நடப்பவை நடுவில் நாம் தலைநிமிர்ந்த நிற்க முடியும்.

தலைநிமிர்ந்து நிற்றவர்கள் ஆட்டுக்குட்டியின் விருந்துக்கு அழைக்கப்பட்டதாக முதல் வாசகம் பதிவு செய்கிறது.

2 comments:

  1. “ நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்.” இன்றையப் பதிவு நம்முன் வைக்கும் செய்தி. சிலசமயங்களில் மமதை பிடித்தவர்கள் கூடத் தலை நிமிர்ந்து நிற்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கே “தயாராய் இருத்தல், எதிரியை எதிர்கொள்தல்,போரிடத்துணிதல், புதியது ஒன்றை எதிர்நோக்குதல்..” இப்படி ஒரு போர்வீரனுக்காகச் சொல்லப்படும் விஷயங்களெனத் தோன்றினாலும் பல நேரங்களில் நாமும் பல விஷயங்களுக்காக ஒரு போராளியாக மாறவேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகிறது. அம்மாதிரி நேரங்களில் நம்மாலும் முதல் ஏற்பாட்டு யோசேப்பு போன்று நம்மை சூழலின் கைதி எனப்பாராமல் நம்மை சுற்றி நடப்பவை என்னவாயிருப்பினும்..நம்மைச் சூழ்ந்து நிற்பவர்கள் நம்மைத் தலை குனியும் நிலமைக்கு ஆளாக்கினாலும் நம்மாலும் “ தலை நிமிர்ந்து நிற்க முடியும்; ஏனெனில் “நாம் கைதிகள் அல்ல” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் தந்தை. அதற்குக் காரணம் அவர்கள் மட்டுமே “ ஆட்டுக்குட்டியின் விருந்தில் பங்கு கொள்ளத் தகுதியுள்ளவர்களாம்.” சிரம் தூக்கி நிற்கும் மக்கள் என்றென்றும் மேன்மக்களே!” என்று இயம்பும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்.

    ReplyDelete