Saturday, November 21, 2020

விண்ணரசுக்கான அக்கறை

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்

I. எசேக்கியேல் 34:11-12,15-17 II. 1 கொரிந்தியர் 15:20-26,28 III. மத்தேயு 25:31-46

விண்ணரசுக்கான அக்கறை

'வீடற்ற இயேசு' அல்லது 'இயேசு வீடற்றவர்' என்னும் கருத்துருவை மையமாக வைத்து, திமோத்தி ஸ்மால்ஷ் என்ற கனடா நாட்டவர் 2013ஆம் ஆண்டு உருவாக்கிய வெண்கல உருவமானது இன்று உலகின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு மர பெஞ்சில், ஒரு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு கூனிக் குறுகிப் படுத்திருக்கும் நபரின் பாதங்களில் சிலுவையின் ஆணிகள் பதிந்த தடங்கள் இருக்கின்றன. அவருடைய ஒரே ஒரு கண் மட்டும் திறந்திருப்பது போல வைக்கப்பட்டுள்ள தோற்றம் காண்பவரின் மனத்தை உருக்குவதாக இருக்கின்றது. இந்த உருவம் நிறுவப்பெற்ற இடங்களில் எல்லாம் பல வித்தியாசமான விமர்சனங்கள் எழுந்தன. இயேசுவைக் கேலி செய்வது போல இது உள்ளது என்றனர் சிலர். சிலர், மத்தேயு நற்செய்தியின் இறுதித் தீர்ப்பு பகுதியை எங்களுக்கு நினைவூட்டுகிறது என்றனர். சிலர் இந்த உருவத்தின் காலடிகளில் அமர்ந்து செபிக்கவும், அங்கே மெழுகுதிரிகள் ஏற்றவும் தொடங்கினர். 

வீடற்ற இயேசுவைத் தொடர்ந்து, இன்று நாம், ஆடையற்ற, பசியுற்ற, தாகமுற்ற, உடல்நலமற்ற, சுதந்திரமற்ற பல இயேசுக்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். 

விண்ணரசுக்கான தயாரிப்பு, செயலாற்றுதல் என்று கடந்த இரண்டு வாரங்கள் சிந்தித்தோம். அந்த வரிசையில், விண்ணரசுக்கான அக்கறை இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்துள்ளது. மண்ணிலிருந்து விண்ணுக்கு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நாம் செல்ல வேண்டுமெனில் அக்கறை அவசியம் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தின் தொடக்கமாகிய இன்று நாம் இயேசு கிறிஸ்துவை அனைத்துலகுக்கும் அரசராகக் கொண்டாடி மகிழ்கின்றோம். தன் அரசநிலை அல்லது அரசாட்சி சின்னஞ்சிறியவர்கள்மேல் கொள்ளும் அக்கறையில் அடங்கியுள்ளது என்று மொழிகின்ற கிறிஸ்து அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களுள் ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார். 

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசே 34:11-12,15-17) நம் சிந்தனையைத் தொடங்குவோம். எருசலேமின் அழிவுக்கான காரணம் என்ன என்பதை அடிக்கடி நினைத்துப் பார்க்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், 'இஸ்ரயேலர்களின் ஆயர்களாகிய' தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று பழிசுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் தங்கள் மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களை மேய்ந்தனர். வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை இட்டுச் செல்லாமல் அழிவுக்குரிய சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச் சென்றனர். இன்றைய வாசகத்தில் நல்ல ஆயன் என்னும் புதிய தலைவரைப் பற்றி எசேக்கியேல் பேசுகின்றார். இந்த நல்லாயன் ஆண்டவராகிய கடவுளே. 

நல்லாயனாகிய ஆண்டவராகிய கடவுள் மூன்று பணிகளைச் செய்கின்றார்: ஒன்று, சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் சென்று கூட்டிச் சேர்க்கின்றார். இங்கே, 'சிதறுண்ட ஆடுகள்' என்னும் சொல்லாடல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாகச் சொல்வது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற விடுதலை வாழ்வைக் குறிக்கின்றது. இரண்டு, காயத்திற்குக் கட்டுப் போட்டு, நலிந்தவற்றைத் திடப்படுத்துகின்றார். சொந்த நாட்டிலேயே அலைந்து திரிந்தவர்களும், பாபிலோனிய அடிமைத்தனத்தால் சிதைந்து போனவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆண்டவராகிய கடவுள், அவர்களின் உடல் காயங்களுக்கும், விரக்தி, சோர்வு, மரண பயம் என்னும் உள்ளத்தின் காயங்களுக்கும் மருந்திடுகின்றார். அவர்களைத் திடப்படுத்தி வலுவூட்டுகின்றார். மூன்று, நீதியுடன் மேய்த்து, நீதி வழங்குகின்றார். 'கொழுத்ததையும் வலிiயுள்ளதையும் அழிப்பேன்' என்னும் எச்சரிக்கை, இஸ்ரயேலின் ஆயர்கள் தங்கள் ஆடுகளைப் பேணிக்காக்கத் தவறியதற்காக, கடவுள் அவர்களுக்கு நீதியுடன் அருளும் தண்டனையை அவர்கள் ஏற்றாக வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலும், ஒவ்வோர் ஆடும் வலுவற்றதாய் இருந்தாலும், அதற்குரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பது ஆண்டவராகிய கடவுளின் விருப்பமாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:20-26,28), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் இறுதிப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை, வழிபாட்டில் பிறழ்வு, சிலைகளுக்குப் படைத்தவை, பாலியல் பிறழ்வு போன்ற மேய்ப்புப்பணி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வரையறுத்த பவுல், இறுதியாக, இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லை என்று வாதிட்ட சிலருக்கு விடையளிக்கும் நோக்குடன் இறுதிக்கால நிகழ்வுகள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றார்.

இறந்தோர் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. கிறிஸ்து வரும்போது இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் உயிர்பெறுவர். 'கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிடுவார்.' எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசிப் பகைவனாக இருக்கின்ற இறப்பும் அழிக்கப்படும். இறப்பு அழிக்கப்படுவதன் வழியாக, படைப்பு தன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுப் புதுப்பிக்கப்படும். அனைத்தின் மேலும் கிறிஸ்து ஆட்சி செலுத்துவார். இதனால், 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.' கிறிஸ்து செய்த மீட்புச் செயல், இறப்பின்மேல் வெற்றி, படைப்பில் ஏற்பட்ட ஒழுங்குநிலை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மீண்டெழுந்த நெருக்கம் அனைத்தையும், 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்' என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாகச் சொல்லிவிடுகின்றார். ஆக, பாவம் அழித்த அமைதியையும், ஒழுங்கையும் கிறிஸ்து மறுபடியும் கொண்டுவருகின்றார்.

இறுதிக்கால நிகழ்வுகளை எடுத்துரைப்பதன் வழியாக, பவுல், நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கை பொருளற்றது அல்ல என்றும், நம் செயல்கள் அனைத்தும் இறுதி நிகழ்வுக்கு நம்மைத் தயாரிப்பவை என்றும் முன்மொழிகின்றார். இவ்வாறாக, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வு வழியாகவும், குழும வாழ்வு வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மத்தேயு நற்செய்தியில் வரும் இறுதி உவமையே இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 25:31-46). 'ஆட்டுக்கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குபவராக' இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் வருகின்றார். எசேக்கியேலின் இறைவாக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின் பின்புலமாக உள்ளது. 

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்: (அ) 'அரியணை' - 'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. மேலும், 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம். மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. (ஆ) 'அரசன்' - 'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு  (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார். (இ) 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை' - 'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,இயேசுவே தன் வாயால் தன்னை 'அரசர்' என்று அழைப்பது இந்த நிகழ்வில் மட்டுமே: இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்:  ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (காண். யோவா 2:48-49). இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார். நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசர்' என்று சொல்லவில்லை.

இந்த அரசர் நீதி வழங்குபவராக தன்னையே அறிமுகம் செய்கின்றார். இவருடைய முதன்மையான பணி நீதி வழங்குவது. இந்த நீதி மனிதர்களின் வெற்றிகள் அல்லது முயற்சிகளை மையமாக வைத்து வழங்குப்படுவதல்ல. மாறாக, மனிதரின் ஆறு முதன்மையான தேவைகளுக்கு அவர்கள் செய்யும் பதிலிறுப்புகளின் அடிப்படையில் நடக்கிறது. உணவு, தண்ணீர், விருந்தோம்பல், உடை, உடல்நலம், மற்றும் சுதந்திரம் என்னும் ஆறும் மனிதரின் அடிப்படைத் தேவைகள். தனக்கு அருகிருப்பவரின் மேற்காணும் தேவைகளை நிறைவேற்றியவர் ஆசிபெற்றவர் என அழைக்கப்படுகின்றார். அப்படிச் செய்ய மறுத்தவர்கள் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். முழுமனித ஆளுமையும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகின்றது. 'உணவு, தண்ணீர், உடை, மற்றும் உடல் நலம்' ஆகிய நான்கும் உடல்சார்ந்த தேவைகள். 'விருந்தோம்பல், மற்றும் தனிமை போக்குதல்' போன்றவை உளவியல் அல்லது ஆன்மிகத் தேவைகள். 

உவமை இத்தோடு நின்றுவிடவில்லை. மானிட மகன் என்னும் அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார். 'மிகச் சிறியோர்களாகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்ற மானிட மகனின் வார்த்தைகள் கிறிஸ்தவ அறநெறியின் சாரத்தை அடையாளம் காட்டுகின்றன. நலிந்தவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுமே புதிய வழிபாடு என முன்மொழியப்படுகிறது. 

ஆக, 

தன் மந்தையின் மேல் அக்கறை காட்டாத ஆயர்களை அகற்றுகின்ற கடவுள், அக்கறை காட்டும் ஆயராகத் தன்னையே முதல் வாசகத்தில் முன்வைக்கின்றார்.

தங்களுடைய தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வின்மேல் நம்பிக்கையாளர்கள் காட்டும் அக்கறை, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்' நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லும் என்பது பவுலின் அறிவுரையாக இருக்கின்றது.

சின்னஞ்சிறியவர்களுக்கு அக்கறை காட்டுவதும், அவர்களின் உடல் மற்றும் உள்ளம்சார் தேவைகளை நிறைவேற்றுவதும் நம்மை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்பது நற்செய்தி வாசகத்தின் செய்தியாக இருக்கிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

அ. கறையும் அக்கறையும்

தொலைக்காட்சி விளம்பரங்களில், 'கறை நல்லது' என்ற வாசகத்துடன் சலவைத் தூள் அறிமுகப்படுத்தப்படுவதண்டு. அங்கே முதன்மைப்படுத்தப்படுவது கறை என்றாலும், அந்தக் கறையைப் போக்கும் சலவைத்தூளின் அக்கறைதான் மையம். இன்று நாம் பல நேரங்களில் மற்றவர்களின் கறைகளைப் பார்த்துவிட்டு அவர்கள் மேல் அக்கறை காட்ட மறுக்கின்றோம். பசி, தாகம், ஆடையின்மை, வீடின்மை, நோய், சிறைவாசம் ஆகியவற்றை மற்றவர்களின் சாபங்கள் அல்லது பாவங்கள் என்னும் கறைகள் என நினைத்து ஒதுங்கிவிடுகின்றோம். ஆனால், அவர்களின் கறைகளே நாம் அவர்கள்மேல் கொள்ளும் அக்கறைக்கான அழைப்பாக இருத்தல் வேண்டும்.

ஆ. அக்கறையின் வகைகள்

மூன்று வகை அக்கறை இருக்கின்றது: போலியான அக்கறை - ஆடு நனைவதைக் கண்டு வருந்தும் ஓநாயின் அக்கறை, வியாபாரத்தனமான அக்கறை - பெருநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள்மேல் காட்டும் அக்கறை, ஆயனுக்குரிய அக்கறை. இந்த மூன்றாவது வகை அக்கறையே மேன்மையானது. ஆடுகள் தன் ஆயனுக்கு எந்த நிலையிலும் பதிலன்பு காட்ட இயலாது என்றாலும், ஆயனே தான் விரும்பி தன் ஆடுகள்மேல் அக்கறை காட்டுகின்றார். அவருடைய அக்கறையால் ஆடுகள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுகின்றன, நலம் பெறுகின்றன, நீதி பெறுகின்றன. இன்று நான் எனக்கு அடுத்திருப்பவர் மேல் காட்டும் அக்கறை எந்த வகையைச் சார்ந்தது.

இ. கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்

ஆன்மிக வளர்ச்சியின் உச்சகட்டம் என நான் இதைத்தான் நினைக்கிறேன். அனைத்திலும் அனைத்துமாய் கடவுள் நிறைந்திருப்பதை நான் கண்டால் அதுவே என் உச்சகட்ட நிறைவு அனுபவம். இந்த அனுபவம் கிடைத்துவிட்டால் என்னில் எந்த எதிர்மறை உணர்வும் எழாது. நான் யாருக்கு எதிராகவும் எதையும் செய்ய மாட்டேன். அனைவரின் நலனையும் அமைதியையும் மட்டுமே விரும்புவேன். இந்த நிலை அடைவதற்கு ஒவ்வொரு பொழுதும் நானே அனைத்திலும் அனைத்துமாய்க் கடவுளைக் காணுதல் வேண்டும்.

இறுதியாக,

இன்று நாம் காட்டும் அக்கறை என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்ற தன்னல நோக்கத்திற்காக நாம் மற்றவர்கள் மேல் அக்கறை காட்டுதல் தவறு. ஏனெனில், அந்த நிலையில் நாம் அடுத்தவர்களைப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்குவோம். மாறாக, என்னில் இருக்கிற இறைவன் எல்லாரிலும் எல்லாமுமாய் என்ற எண்ணத்தில் அக்கறை காட்டத் தொடங்கினால், இக்கரையே நமக்கு அக்கரைதான். அங்கே, 'அவர் பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். எனக்குப் புத்துயிர் அளிப்பார்' (பதிலுரைப்பாடல், திபா 23).

3 comments:

  1. மண்ணிலிருந்து விண்ணுக்கும்,இக்கரையிலிருந்து அக்கரைக்கும் நாம் செல்ல வேண்டுமாயின் நமக்கு வேண்டியது ‘அக்கறை’ மட்டுமே என நெத்தியில் அடித்தாற்போல் சொல்லும் வாசகங்கள் இன்றைக்குரியவை.இயேசு அரசராயிருப்பினும் வலுவற்ற ஆட்டையும் பேணிக்காக்கும் ஒரு நல்லாயன் என்பது நம் ஆறுதல்.
    சின்னஞ்சிறுவர்களுக்கு அக்கறை காட்டுவதும்,அவர்களின் உடல்,உள்ளம் சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதும் நம்மை அக்கரைக்கு அழைத்துச் செல்லுமென்பது ஒரு அழகான விஷயம்.இப்படி நாம் இக்கரையிலிருந்து அக்கரை சேர அழகான பல டிப்ஸ்களைத் தரும் தந்தை அனைத்திலும் நிறைந்த கடவுளை அடையும் உச்சகட்ட அனுபவத்தையும் கூறத்தவறவில்லை. யாரிடமும் எதிர்மறை உணர்வு காணாதிருப்பதே அதற்கு வழி என்கிறார்.இறுதியாக நம்மக்களின் ஓலமான ‘ கறை’,‘அந்தக்கறை’ என்பதை ஓரங்கட்டி இக்கரையிலிலிருந்து அக்கரைக்கு செல்வது ஒன்றும் கடினமில்லை; என்னைச் சுற்றியிருப்பவரின் ‘கறை’ நீக்கப்பாடுபடுவதே என் ‘கறை’ போக்கும் வழி என்கிறார். இக்கரையின் கறையெல்லாம் நீங்கி நாம் அக்கரையை அடையும்போது “ “அவர் பசும்புல்வெளிமீது எனை இளைப்பாறச்செய்வார்; அமைதியான நீர்நிலைக்கு எனை அழைத்துச்செல்வார்; எனக்குப்புத்துயிர் அளிப்பார்”
    கறை போக்குவது ஒன்றே இக்கரையினின்று அக்கரைக்கு நம்மை இட்டுச்செல்லும் வழி என எனுத்துச்சொல்லும் வாசகங்களைத் தனக்கே உரிய பின்புலங்களுடன் தந்திருக்கும் தந்தைக்கு நன்றிகளும்! ஞாயிறு வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. “ வீடற்ற இயேசு” எனும் கருத்தை வெளிக்கொணரும் அந்த உருவம் பற்றிய துணுக்கு என நெஞ்சிலும் ஆணி அடித்து விட்டது.

    தந்தைக்கும்,அனைவருக்கும் ‘ கிறிஸ்து அரசர்’ பெருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete