எப்போது நிகழும்?
இன்று மதியம் மேலைநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரோடு என் ஆய்வுத்தாள் பற்றி காணொளி செயலி ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்தேன். நேற்றைய தினம் அவர் தன் அம்மாவைப் பார்க்கச் சென்றதாகச் சொன்னார். 'அம்மா எப்படி இருக்கிறார்கள்?' என்று கேட்டபோது, 'நன்றாக இருக்கிறார்கள். அவர்களே சமைக்கிறார்கள். துணிகளைத் தயார் செய்கிறார்கள். காரில் சென்று பக்கத்தில் பொருள்கள் வாங்கிக்கொள்கிறார்கள். அவருக்கு வயது 93' என்றார். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பொருத்தமான நாடுகள் மேலை நாடுகள் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், சாலையில் செல்லும் எவரும் இவர்களுக்காக நின்று உதவிகள் செய்வர்.
நிற்க.
ஆறு மாதங்களுக்கு முன்பாக, Kāma: The Riddle of Desire என்ற ஒரு நாவல் வாசித்தேன். அதில் வரும் கதைமாந்தர் ஒருவர் 'டெத் இன்ஸ்டிங்ட்' (death instinct) ('இறப்பு உணர்வு') என்னும் விநோதமான உணர்வால் துன்புறுவார். 26 வயது நிரம்பிய அந்தப் பெண், தன் வாழ்வில் தனக்கு எல்லாம் கிடைத்து விட்டதாக உணர்வதோடு, தன் வாழ்வு இப்படியே சீக்கிரம் முடிந்துவிட்டால் நலமாயிருக்குமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஏறக்குறைய 36 வயதில் அவர் இறந்துவிடுவார்.
நம் வாழ்க்கையில் நாம் மேற்காணும் இரண்டு உணர்வுகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்:
ஒன்று, வயது என்பது வெறும் எண்தான். ஆக, மேன்மையான மற்றும் நேர்முகமான உணர்வுகளைக் கொண்டு, நம் வேலைகளை நாமே செய்து, யாருக்கும் தீங்கு நினையாது, நம் உறவுகளோடு அல்லது நம் தனிமையோடு நேரத்தைச் செலவழித்து, ஒவ்வொரு நாளையும் இனிமையாக வாழ்தல்.
இரண்டு, என்ன வாழ்ந்து என்ன கண்டோம்? தொடங்கியது அனைத்தும் முடியத்தானே போகிறது. ஏன் தொடங்க வேண்டும்? அழகாக நிற்கின்ற கோவில் நாளைக்கு இடிந்து விழும் என்று இயேசுவே சொல்லியிருக்கின்றார். நாம் சேர்க்கின்ற சேமிப்பு இன்னொருவருக்குப் போகும். நாம் செய்யும் வேலையின் பயனை இன்னொருவர் அனுபவிப்பார். எதையும் புதிதாகச் செய்ய வேண்டும். புதியது ஒன்றும் வாங்க வேண்டாம். யாருடனும் பேச வேண்டாம். உறவாடுகின்ற அனைவரும் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரியத்தானே போகிறார்கள். அப்புறம் எதுக்கு ஒட்டு? உறவு?
மேற்காணும் இரண்டு எண்ணங்களும் நம்மில் இணைந்தே எழுகின்றன. சில நேரங்களில் நாம் பெரிய ஹீரோ மாதிரி உணர்கிறோம். யாரையும் எதையும் சமாளித்துவிடலாம் என்ற மனதைரியத்தோடு இருக்கிறோம். சில நேரங்களில் அதற்கு எதிர்மாறாக, ஜீரோ மாதிரி உணர்கிறோம். சின்ன விடயத்துக்கே அஞ்சுகிறோம். துணிச்சல் சிறிதும் இல்லாமல் இருக்கிறோம்.
'எல்லாம் முடிந்துவிடும்!' என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
அழகமான ஆலயமும் கல்லின்மேல் கல் இராதபடி ஆகிவிடும்!
'எல்லாம் முடிந்துவிடும்!' - என்ற வாக்கியம் ஒரே நேரத்தில் நம்மில் நேர்முகமான மற்றும் எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுகிறது. எப்படி?
'எல்லாம் முடிந்துவிடும்! எனவே, சீக்கிரம் வாழத் தொடங்கு! நன்றாக வாழத் தொடங்கு!'
'எல்லாம் முடிந்துவிடும்! எனவே, வாழ்ந்தால் என்ன? நன்றாக வாழ்ந்தால் என்ன?'
எந்த உணர்வின் அடிப்படையில் நான் வாழ வேண்டும் என்பதை நான்தான் தெரிவுசெய்ய வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று எச்சரிக்கைகளை விடுக்கின்றார்:
(அ) ஏமாந்து போகாதீர்கள் - நிறைய எதிர்பார்ப்புகள் கொள்தல் தவறு. எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது ஏமாற்றம் நிறைய ஏற்பட வாய்ப்புண்டு.
(ஆ) ஏமாற்றுபவர்கள்பின் போகாதீர்கள் - போலியான வாக்குறுதிகள் கொடுப்பவர்கள்பின் போகக் கூடாது. சமய போதகர்கள், கார்ப்பரெட் நிறுவனங்கள், அரசுகள் பல நேரங்களில் போலி வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன(ர்). யாரும் கடவுளர்கள் அல்லர். ஆக, யார் வாக்குறுதிகளையும் நம்பி அவர்கள்பின் செல்லத் தேவையில்லை.
(இ) திகிலுறாதீர்கள் - அச்சம் நம்மை இறுகக் கட்டும் கயிறு. நம்மை அறியாமலேயே அது நம் பாதங்களில் ஏறி, நம் உடலைக் கட்டி, நம் கழுத்தையும் நெறித்துவிடும். ஆக, நம்மைச் சுற்றி நடப்பவை பற்றிய அச்சம் தவிர்த்தல் நலம். ஊடகங்கள் பெரும்பாலும் நிகழ்வுகளை மிகைப்படுத்தியே கூறுகின்றன. தங்களுக்கு ஏற்றாற்போல சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் சொல்கின்றன. ஆக, ஊடகங்களிலிருந்து விலகி இருத்தல் நலம். மற்றொரு பக்கம், வதந்திகள். நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யார் எந்தச் செய்தியைச் சொன்னாலும், அவற்றைக் கேட்டு நாம் அஞ்சுதல் கூடாது. பல நேரங்களில் நமக்குச் செய்திகள் வராமல் இருந்தாலே நம் மனம் கலக்கமற்று இருக்கும்.
தொடங்கியது அனைத்தும் முடியும் என்பது எதார்த்தம்.
முடியும் போது அது முடியட்டும். முடிவதற்கு முன் நாமாகவே முந்திக்கொண்டு முடித்துவிட வேண்டாம்.
93 வயது ஆனாலும், காரை ஸ்டார்ட் செய்தல் நலம். 26 வயதில் முடிவு பற்றி எண்ணுதல் தவறு.
👍👌🤝
ReplyDeleteதொடங்குவதெல்லாம் முடியத்தான் வேண்டும்...உண்மைதான்.”All that starts well,ens well.” கேள்விப்பட்டிருப்போம். “என்ன வயதானால் என்ன? அது வெறும் எண்தானே!” தந்தை அடிக்கடி சொல்லக் கேட்டுள்ளேன். சோர்ந்து போனவர்களுக்கு போன்விட்டா குடித்தது போன்ற உற்சாகத்தைத் தூண்டும் ஒரு சொற்றொடர்.மேன்மையான,நேர்மையான உணர்வுகளைக் கொண்டு,நம் வேலைகளை நாமே செய்து,யாருக்கும் தீங்கு நினையாது,நம் உறவுகளோடு அல்லது தனிமையில் நேரத்தை செலவழித்து இனிமையாக வாழ்தல்...... எத்துணை அழகான விஷயம்!.எழுத்துக்களை அச்சாக்கும்போதே இனிக்கிறதே! அப்படி ஒரு வாழ்க்கை வாழ்பவர்களை நிச்சயம் ஏமாற்றமோ,திகிலோ அண்டாது என சொல்கிறது இன்றைய நற்செய்தி.முடியும் அனைத்தும் அதன் காலத்தில் முடியட்டும்.நாம் ஏன் முந்திக்கொண்டு அதை முடித்து வைக்க வேண்டும்? 93 வயதில் என்னால் காரை ஸ்டார்ட் செய்ய இயலாமல் போகலாம்.ஆனால் என் எதிரில் நிற்பவர் யாரென்று இனம் கண்டு ஒரு புன்முறுவல் பூக்க இயலும்.ஆழ்மனத்தைத் தொட்டுத் தூக்கிவிடும் ஒரு பதிவு! தந்தை நெடுநாள் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்! ஏனெனில் பலர் தங்கள் காரை 93 வயதில் காரை ஸ்டார்ட் செய்ய அவரின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உதவும்.அன்புடன்.....
ReplyDelete