இன்றைய (16 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 18:35-43)
இது என்ன?
'பார்வையற்ற ஒருவர் பார்வை பெறும் நிகழ்வை' நாம் ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா என்னும் மூன்று நற்செய்தி நூல்களிலும் வாசிக்கின்றோம். மூன்று இடங்களிலும் இயேசு எருசலேம் நகருக்கு அருகில் இருக்கும்போதுதான் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அறிகுறி அல்லது வல்ல செயலை நாம் ஓர் உருவகம் அல்லது உவமை என எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், முன்பின் தெரியாத பார்வையற்ற ஒருவர் இயேசுவை, 'தாவீதின் மகன்' எனக் கண்டுகொண்டு அறிக்கையிடுகின்றார். ஆனால், இயேசுவுக்கு அருகில் இருக்கின்ற சீடர்கள் அவரைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர்.
லூக்கா நற்செய்தியாளரின் பதிவில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
'மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த பார்வையற்ற அந்த இனியவர், 'இது என்ன?' என்று கேட்கின்றார்.'
'இது என்ன?' என்று கேட்கின்றார்.
இந்தக் கேள்வி அவரது வாழ்வின் போக்கையே மாற்றிப் போடுகின்றது. இனி அவர் இரந்து உண்ணத் தேவையில்லை. இனி அவரை யாரும் அதட்ட மாட்டார்கள்.
கிரேக்கத்தில், 'ட்டி எய்யே டூட்டோ?' ('இது என்னவாய் இருக்கிறது?' அல்லது 'இது என்னவாய் இருந்தது?') என்பதுதான் இந்தக் கேள்வியின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
இதுவரை அவர் கேள்வியுறாத ஒரு நிகழ்வு தன் முன் நடந்ததாக அவர் உணர்ந்திருக்கலாம்.
அல்லது தன் உள்ளுணர்வால் அவர் உந்தப்பட்டிருக்கலாம்.
அல்லது காத்திருந்த தன் காதலன் தன்னைக் கடந்து சென்ற காதலியைத் தன் உள்ளத்தில் உணர்ந்திருக்கலாம்.
அல்லது வெற்றுப் பாத்திரம் ஏந்திக் கொண்டிருந்த ஒருவன் தன்னைக் கடந்து ஓர் அட்சய பாத்திரம் கடந்து செல்வதைத் தன் மனத்தில் உணர்ந்திருக்கலாம்.
அல்லது தன்னைப் படைத்தவர் தன் படைப்புப் பொருளைக் கண்டுகொள்ளாமல் கடந்து போகிறார் என அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால், கடந்து போகிறார். கடந்து போகிறது கூட்டம்.
நிற்கின்றார் அவர்.
ஒரே நொடியில் ஒரு முடிவை எடுக்கின்றார்.
'இது என்ன?' என்று கேட்கின்றார்.
இந்தக் கேள்வியை அவர் கேட்டவுடன், கேட்கப்பட்டவர்கள் தயங்கியிருப்பார்கள்.
'டேய்! நீ ஏன் கேள்வி கேட்கிறாய்?' 'எது நடந்தால் உனக்கென்ன!' என்ற நிலையில் அவரை அதட்டியிருப்பார்கள்.
'இது என்ன?'
இந்தக் கேள்வி நமக்கு இரண்டு நிலைகளில் எழலாம்:
ஒன்று, ஏதாவது ஒன்றைக் குறித்து நமக்குத் தெளிவில்லாத போது இந்தக் கேள்வி எழலாம்.
இரண்டு, 'இதுவரை எனக்கு நடந்தது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், இது என்ன?' என்ற ஓர் ஆச்சரியத்தில் எழலாம்.
இந்தக் கேள்வியை நாம் கேட்கும்போது பலர் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், இங்கே காணும் கூட்டம், ஒரே வேளையில் படிக்கல்லாகவும் தடைக்கல்லாகவும் இருக்கின்றது.
'நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார்' என்று சொல்கிறார்கள். இந்தச் செய்த அந்த நபருக்கு உதவியாக இருந்திருக்கும்.
ஆனால், 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' என்று அவர் கத்தியபோது, அவரை அதட்டுகின்றனர்.
நாம் கேள்வி கேட்கும்போது மற்றவர்கள் நமக்கு விடையளிக்கலாம், அல்லது விடையளிப்பது போல விடையைத் தவிர்க்கலாம், ஆனால், விடையை அளிக்க மறுக்கலாம்.
ஆனாலும், 'இது என்ன?' என்ற தேடல் இருந்தால் விடை கண்டிப்பாய்க் கிடக்கும்.
மேலும், இயேசு அவரிடம், 'நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' எனக் கேட்டவுடன், 'ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்கிறார்.
இரண்டு விடயங்கள் இங்கே நமக்கு ஆச்சரியம் தருகின்றன.
முதலில், தனக்கு எது தேவை என்ன என்பதை அவர் அறிந்தவராக இருக்கிறார். இன்று எனக்கு எது தேவை என்பது எனக்குத் தெளிவாக இருக்கிறதா? கடவுளிடம் இறைவேண்டல் செய்கின்றோம். நம் விண்ணப்பங்களில் தெளிவு இருக்கிறதா? அல்லது சாதாரண மொழிப் பரிமாற்றங்களில், எனக்கு எதை தேவை என்பதை நான் உணர்கின்றேனா?
இரண்டு, 'நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்கிறார் அந்த நபர். அவர் ஏற்கெனவே பார்வை பெற்றிருந்தவர் என்பது சிலரின் கருத்து. ஆனால். இயேசுவைத் தாவீதின் மகன் எனத் தன் மனக்கண்களால் கண்டுகொண்டது முதல் பார்வை. இப்போது அவரைத் தன் உடற்கண்களால் பார்க்க விரும்புகிறார். முதல் பார்வை தெளிவானால் இரண்டாவது பார்வை மிகவும் எளிதாகும்.
நிற்க.
இன்று, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது, நம்மைச் சுற்றி மக்கள் கடந்து போகும்போது, 'இது என்ன?' என்று கேட்போம். இந்த ஒற்றைக் கேள்வி நம் கடந்தகால வாழ்க்கையை மாற்றிவிடும். புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும்.
'இது என்ன?' என்ற கேள்வி அடுத்தவர்களின் அந்தரங்கத்தை ஆராய்வதற்கு நாம் எழுப்ப வேண்டாம். என் அந்தரங்கத்தில் அது எழ வேண்டும். அடுத்தவர்களைக் கடிந்துகொள்வதற்காக அல்ல, என்னை நானே கடிந்துகொள்வதற்காக எழ வேண்டும்.
இந்த பதிவு, பதிவுசெய்யப்பட்ட,இடத்தை, நேரத்தை,நபரை, .….நான் ஆத்மார்த்தமாக, வணங்குகிறேன்.🙏
ReplyDeleteஎன் அந்தரங்கத்தை நான் தெரிந்து கொள்ள...என்னை நானே அறிந்து கொள்ள....கடிந்து கொள்ள நான் என்னையே கேட்க வேண்டிய ஒற்றைக் கேள்வியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.....இந்த ஒற்றைக்கேள்வி என் கடந்த கால வாழ்க்கையை மாற்றிவிடும்....புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் எனும் எதிர்பார்ப்பில்.என் ஊனக்கண்களால் காண முடியாத “ தாவீதின் மகனை” என் ஞானக்கண்களால் காணச் செய்த திரு.கருணாநிதி அவர்களின் மகனுக்கு என் நன்றிகள்! இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!
ReplyDeleteYou have used all sort of figure of speech and illuminated this prose,as a poem👍
ReplyDelete