இன்றைய (11 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 17:11-19)
அவரோ ஒரு சமாரியர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, தொழுநோயாளர்கள் பத்து பேருக்கு நலம் தருகின்றார். அவர்களில் ஒருவர் மட்டும் திரும்பி வந்து இயேசுவைப் பணிகின்றார். 'மற்ற ஒன்பது பேர் எங்கே?' என்ற கேள்வியைக் கேட்கின்றார் இயேசு.
இயேசுவின் கேள்விக்கான விடையை லூக்கா பதிவு செய்கின்றார்: 'அவரோ ஒரு சமாரியர்'
'மற்ற ஒன்பது பேர் எங்கே?' என்ற இயேசுவின் கேள்விக்கு,
சமாரியர் பின்வருமாறு இயேசுவுக்குப் பதில் தருகின்றார்:
'ஐயா, இயேசுவே எங்களுக்கு இரங்கும்!' என்று நாங்கள் உம்மிடம் வந்தோம். பத்து பேர் கூடி வந்தோம். எங்களின் சிதைந்த முகங்களும் சூம்பிய கைகளும் எங்களை ஒருவர் மற்றவரோடு இணைத்தன. எங்கள் தொழுநோய் எங்களை சகோதரர்கள் ஆக்கியது. நாங்கள் ஒன்றாக உண்டோம், ஒன்றாக உறங்கினோம், ஒன்றாக வழிநடந்தோம்.
ஆனால், நாங்கள் குணம் பெற்ற அந்த நொடியில் எங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் அறிந்தோம். மற்ற ஒன்பது பேரும் தங்களை யூதர்கள் எனச் சொல்லி, 'நீ ஒரு சமாரியன். எங்கள் அருகில் வராதே!' என்று என்னைத் தள்ளி விட்டனர்.
நலமற்ற நிலையில் எங்களிடமிருந்த ஒற்றுமை, நலம் பெற்றவுடன் மறைந்து போனது.
நலமற்ற நிலையில் இணைந்திருந்த நாங்கள், நலம் பெற்றவுடன் பிரிந்து போனோம்.
நிற்க.
சமாரியர் ஒருவர் மட்டும் திரும்பி வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏனெனில், இயேசுவின் சமகாலத்து யூதச் சமூகம் சமாரியர்களை மிகவும் அதிகமாக வெறுத்தது. தன் சக மனிதர்களால் வெறுக்கப்பட்ட ஒருவர் இயேசுவை நாடியிருக்கலாம்.
அல்லது,
'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காட்டுங்கள்' என அனுப்புகிறார் இயேசு. யூத குருக்கள், சமாரியரான தன்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சத்தில் இயேசுவிடம் வருகின்றார்.
பல நேரங்களில், இயேசுவிடம் திரும்பி வந்த சமாரியரை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவர் அனுபவத்த வலியை, அவர் அனுபவித்த நிராகரிப்பை நாம் எண்ணிப்பார்க்க மறுக்கிறோம்.
அவர் திரும்பி வந்ததற்கான காரணம் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், 'மற்ற ஒன்பது பேர் எங்கே?' எனக் கேட்கின்றார்.
'சமூக நீதி எங்கே?' 'சமூக ஒருமைப்பாடு எங்கே?' 'சமூக சகோதரத்துவம் எங்கே?' என்ற கேள்வி, இயேசுவின் கேள்விகளுள் ஒளிந்திருக்கிறது.
சமாரியர் திரும்பி வந்தார், கடவுளைப் புகழ்ந்தார். நல்லது!
இயேசுவும், 'அந்நியராகிய உம்மைத் தவிர' என்று சொல்வது எனக்கு நெருடலாக இருக்கிறது. கடவுளுக்கு யார் அந்நியம்? இயேசுவும் சமாரியரை அந்நியராகப் பார்த்தாரா? அல்லது இயேசு தன் சமகாலத்து மக்களின் புரிதலை வெளிப்படுத்தினாரா? சக தொழுநோயாளர்கள் ஒரு பக்கம், இயேசு ஒரு பக்கம், இதை வாசிக்கும் நாம் ஒரு பக்கம் என நின்று கொண்டு, அந்தப் பக்கம் நிற்கும் சமாரியரை, 'அந்நியராகிய உம்மைத் தவிர' என்று இன்றும் நாம் அந்நியப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம்.
இன்று நம் ஆலயத்தில் ஓர் அருள்பணியாளர் நின்று கொண்டு, அங்கு வருகின்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவரிடம், 'பரவாயில்லையே! தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த நீரும் வரி கொடுக்கிறீர்! கடவுளைப் புகழ்கிறீர்!' என்று சொன்னால் அவருடைய மனம் வருத்தப்படாதா? 'எல்லாரையும் சமமாகப் பார்க்கும் கோவிலிலும் நாங்கள் தாழ்த்தப்பட்டவரா?' என்று அவர் எண்ணமாட்டாரா?
நிற்க.
சமாரியர் இயேசுவிடம் திரும்புவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்க, அவர் திரும்பாமல் தன் வழியே சென்றிருக்கலாம்!
நிற்க.
இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடம் என்ன?
'உம் நம்பிக்கை உமக்கு நலம் தந்தது' என்கிறார் இயேசு.
நலம் நாடி வரும்போது அனைவரும், 'இயேசுவே, தலைவரே!' என அழைக்கின்றனர். ஆனால், நலம் பெற்ற சமாரியர் மட்டுமே இயேசுவை, 'கடவுள்' எனக் கண்டு பணிக்கின்றார்.
சாதாரணமாகத் தெரிந்த ஒரு போதகரில் கடவுளைக் கண்டார் சமாரியர்.
சாதாரணங்களில் கடவுளைக் காணுதல் பெரிய கொடை. அது அருளப்படுகின்ற கொடை.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தீத் 3:1-7), புனித பவுல், இறைமக்கள் குழாமில் இருக்க வேண்டிய நற்பண்புகளைப் பட்டியலிடுகின்றார். 'கடவுளின் நன்மையும் மனித நேயமும்' நமக்கு வெளிப்படுத்தப்பட்ட பின், நாம் மீண்டும் பழைய இயல்புகளைக் கொண்டிருத்தல் முறையன்று.
மேலும், 'அவரோ ஒரு சமாரியர்!' என்று சமூகம் அந்த மனிதர் மேல் முத்திரை குத்தியதுபோல, இன்றும் நாம் பல முத்திரைகளை மற்றவர்கள்மேல் குத்துகிறோம். 'அவரோ ஓர் ஓரினச்சேர்க்கையாளர்!' 'அவரோ விவாகரத்து பெற்றவர்!' 'அவரோ தாழ்த்தப்பட்டவர்!' 'அவரோ இரு மனைவி கட்டியவர்!' 'அவரோ கொலைகாரர்!' 'அவரோ சிறைத்தண்டனை பெற்றவர்!' 'அவரோ வேலையிலிருந்து துரத்தப்பட்டவர்!' 'அவரோ பொய் பேசுபவர்!' 'அவரோ ஏமாற்றுக்காரர்!'
இப்படிப் பல முத்திரைகளை நாம் மற்றவர்கள் மேல் குத்துகின்றோம். அல்லது மற்றவர்கள் குத்தும் முத்திரைகளை ஆமோதிக்கின்றோம். நம் மேலும் பல முத்திரைகள் குத்தப்படுகின்றன.
முத்திரைகளின் அழுத்தம் தாளாமல் கடவுளிடம் செல்ல, அவரும் முத்திரை குத்திவிடுவாரோ என்ற அச்சம் நமக்குச் சற்றே வந்துபோகிறது.
“நலமற்ற நிலையில் எங்களிடமிருந்த ஒற்றுமை நலம் பெற்றவுடன் மறைந்து போனது.”
ReplyDelete“ நலமற்ற நிலையில் இணைந்திருந்த நாங்கள் நலம் பெற்றவுடன் பிரிந்து போனோம்.”
“ பல நேரங்களில் அந்த சமாரியரைக் கொண்டாடும் நாம் அவர் அனுபவித்த வலியை மறந்து விடுகிறோம்.”
அனைத்து வரிகளுமே பிறரின் வலிபோக்க வழி சொல்லும் வாரத்தைகள்.என் மேல் குத்தப்படும் முத்திரையின் வலியை மட்டுமல்ல... எனக்கடுத்திருப்பவரின் மேல் குத்தப்படும் முத்திரைகளின் வலியையும் உணருகையில்
மட்டுமே என் படைத்தவரிடம் செல்ல நான்
தகுதி பெற்றவள். யோசிக்க வைக்கும் தந்தை.... யோசனைகளை ஏற்பதில் என்ன தவறு? மனத்தைக் கரைக்கும் வார்த்தைகளுக்காக தந்தைக்கு நன்றிகள்!!!