இன்றைய (28 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:34-36)
வந்தே தீரும்!
வரப்போகும் இறுதிநாள் பற்றி அறிவுறுத்துகின்ற இயேசு, அந்த நாளின் வருகையின் தவிர்க்க இயலாத நிலையை முன்வைத்து இரண்டு எச்சரிக்கைகளையும், ஓர் அறிவுரையையும் வழங்குகின்றார்.
இரு எச்சரிக்கைகள்:
(அ) மந்தம் அடையாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்
எவற்றால் உள்ளம் மந்தம் அடையும்? குடிவெறி, களியாட்டம், மற்றும் உலகக் கவலைகள். வேறு எந்த எண்ணமும் நமக்குள் நுழையாத வண்ணம் இவை அந்த இடத்தில் அமர்ந்து கொள்கின்றன. இவற்றால் நமக்கு சோர்வும் நடுக்கமும் ஏற்படுமே தவிர வேறொன்றும் ஏற்படாது. ஆக, தாங்களும் அகலாமல், மற்ற நல்ல எண்ணங்களும் உள்ளே வர இயலாத நிலையில், இவை நம் உள்ளத்தை மந்தம் அடையச் செய்கின்றன.
(ஆ) கண்ணியைப் போல சிக்க வைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்
கவனமற்ற கால்கள் கண்ணிகளில் சிக்கிக்கொள்கின்றன. கவனக்குறைவு என்பதால் வரும் விளைவு பெரிய ஆபத்தாக முடிந்தவுடன், நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதில்லை. முதலில் கவனமாக இருந்தால் பெரிய ஆபத்து தவிர்க்கப்படலாம்.
ஓர் அறிவுரை:
விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்
லூக்கா நற்செய்தி இறைவேண்டலின் நற்செய்தி என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இறைவேண்டல் என்பது ஒரு செயல் என முன்வைப்பதோடு, அந்தச் செயலால் வரும் பலனும் வரையறுக்கப்படுகிறது. மானிட மகன் முன் ஒருவராய் வல்லவராய் நிறுத்துவது இறைவேண்டல் என்பது லூக்காவின் புரிதலாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 22:1-7), தண்ணீர் மற்றும் ஒளி என்னும் இரு வாழ்வு உருவகங்கள் தரப்பட்டுள்ளன. இவ்விரண்டின் ஊற்றாக செம்மறி எனப்படும் ஆட்டுக்குட்டி இருக்கின்றார். முன்னிருந்த நிலை மறைந்து புதிய நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் வாழ்வு மட்டுமே உண்டு.
ஆக, அழிவும் இறப்பும் சில காலம்தான். இறைவனின் உடனிருப்பில் வாழ்வும் ஒளியுமே நிரந்தரம்.
அந்த நிரந்தரத்துக்குள் நாம் நுழைய நேரத்தை சரியாக அறிதல் அவசியம்.
வரப்போகும் இறுதி நாள் குறித்து ஏகப்பட்ட எச்சரிக்கைகள்...பய உணர்வுகள். இந்த இறுதிநாள் நமக்கு நன்மைபயக்கும் நாளாக இருக்கவேண்டுமெனில் ‘இறை வேண்டலை’ முன்வைக்க வேண்டுமென எச்சரிக்கின்றன இன்றைய வாசகங்கள். அநித்தியமான முன்னிலை குறித்து அஞ்சாமல் நித்தியமான புதுநிலையை வரவேற்க உணர்த்தப்படுகிறோம். ஏனெனில் அந்தப் புது நிலையில் வாழ்வும்,ஒளியும் நிறைந்த இறைவனின் உடனிருப்பு நம்மைத் தாங்கிப் பிடிக்கும் என்கிறார் தந்தை..
ReplyDeleteகொஞ்சம் திகிலூட்டுவது போன்று இருப்பினும்,வரப்போகும் ‘திருவருகைக் காலத்திற்கு’ நம்மைத் தயார் செய்யும் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ஆமென்!
ReplyDelete